நான் சிறுபிள்ளையாய் இருந்தபோது கோடை விடுமுறையில் ஊருக்குப் போவோம். மிகவும் வயதான எங்கள் கொள்ளுபாட்டி உடல் முடியாமல் இருந்தார். ஆங்கில மருந்து பழக்கமில்லை என்பதால் அப்போது முசிறியைச் சேர்ந்த வயதான வைத்தியர் ஒருவர் வருவார். நான் அவர் பின்னாடியே சென்று அவர் கைப்பெட்டியில் என்ன வைத்துள்ளார் என்று மோப்பம் பிடித்து விடுவேன்.
உள்ளே வந்து உட்கார்ந்து பெட்டியைத் திறப்பார். கோலிகுண்டு போல் கருநீலம்/வெள்ளை நிறத்தில் ரசமணிகள், சிறு வைரக்கற்கள் போல் ஏதோ இருந்தது. அதுபோக சூரணங்கள், மருந்து குளிகைகள் இருந்தது. அதோடு ருத்திராட்ச மாலை, மந்திரிக்க மஞ்சள் துணி, தகடுபோல் ஏதோ இருந்தது.
முதலில் நாடி பரீட்சை செய்துவிட்டு ரசமணி கொண்டு சிகிச்சை தந்தார். பிறகு நாடி பார்த்தார். கொஞ்சம் பொறுத்து மந்திரம் சொல்லிக்கொண்டு துணியில் 'டப்டப்' என்று போட்டு மந்திரித்தார். அதன் பிறகு நாடி பார்த்தார். கடைசியில் ஒரு முடிவுக்குவந்து குளிகை மருந்தும்-சூரணமும் தந்தார். மணி-மருந்து, மந்திரம்-மருந்து, அல்லது ஏதேனும் ஒன்று கூட சிகிச்சையாக இருக்கும்.
இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், ஒவ்வொரு உபாயத்தையும் பிரயோகம் செய்து முடிவில்தான் மருந்து அவசியபட்டால் தந்தார். இன்று ஒருவனுக்கு மன நோய் உள்ளதா, பேய் பிடித்ததா என்று ஆங்கில மருத்துவரால் கண்டுபிடிக்க முடியாத நிலை. அது காத்துதான் என்று தெரியாமல் மருந்து மாத்திரையை விழுங்குச் சொல்வோர் உண்டு. ஆகவே, பழைய முறைதான் சிறந்தது. உண்மையாகவே இது ஒரு நல்ல holistic approach என்பேன்.
நான் பள்ளிக்கூடம் படிக்கும்போது, தேள்கடி, காணாகடி போன்றவற்றுக்கு என் தாத்தா சில மந்திரங்கள் எனக்குச் சொல்லிக்கொடுத்தார். அப்போது நான் கேட்பேன் "தாத்தா, மந்திரம் போதும்னா அப்போ எதுக்கு மருந்து?" என்றேன். அதற்கு அவர், 'டேய், விஷக்கடிக்கு முதல்ல எது கடிச்சது என்று பார்க்கணும், அதுக்கு மூலிகை முறிவு மருந்து தரணும், அது வேலைசெய்யும்போது மந்திரம் சொல்லணும்' என்பார். முதலில் கடிவாயில் உப்பு, வெங்காயம், நவச்சாரம் போன்றதை வைத்து தேய்க்க சற்று எரிச்சல் வேதனை குறையும். இதுபோல் இன்னும் எவ்வளவோ கை மருந்துகள். விபூதி செய்யும் போது வில்வம் மற்றும் சில மூலிகைகள் கலந்தே செய்வார்கள். திருநீறும் மருந்துதான்! இன்றைக்கு வாசனை கலந்த சாம்பலும் ரசாயன பொடியுமே உள்ளது. நான் விபூதியை வாயில் போட்டுக்கொண்டு பல வருடங்கள் ஆகிறது.
அந்த மந்திரம், "பட்டையில் கிடக்கும் தேள், பரமசிவனைத் தீண்டும் தேள், கொட்டும் தேள், கருந்தேள் செந்தேள்; உடும்பும் தேளுமாய் ஒருபனை ஏற, உடும்பேறிப்போக குருவே நீ சுவாஹா'. அந்த மருந்து எது? வெள்ளாட்டு சிறுநீரில் ஊறவைத்த வெள்ளெருக்கு வேரை காயவைத்தபின் இடித்து வஸ்திரகாயம் செய்து சூரணமாக்குவது. அதை மூன்று வேளை தேனில் குழைத்து நாக்கில் தடவவேண்டும். அதுவே விஷப்பாம்பு கடித்தால் சிரியாநங்கை இலை சூர்ணம் தருவார்கள். கசப்பு சுவை தெரிந்தால் அது விஷப்பாம்பு இல்லை என்று தீர்மானம். கசப்பு சுவை தெரியாதிருந்தால் பாம்புதான். கசப்பு சுவை வரும் வரை மருந்து தரவேண்டும். நான் இன்றுவரை இதை பிரயோகம் செய்ததில்லை.
ஆக, என்னை அறியாமலே என்னுள் சித்தவைத்திய அணுகுமுறைகளில் ஈடுபாடு சிறுவயதிலேயே வந்தது. எல்லாம் அந்த வைத்திய சித்தரின் சித்தம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக