ஊருக்கு ஊர் பகுத்தறிவு நாத்திகம் குறையாது என்பது மகான்களின் தீர்க்கதரிசனம். நாமும் இதன் ஆதிக்கத்தை தொன்றுதொட்டு பார்த்து வருகிறோம். இங்கே தமிழகத்தில் ஒரு கி.வீரமணி போலவே ஆந்திரத்தில் பாபு கொக்கிநேனி என்பவர் கருப்பு சட்டை கட்சியை சேர்ந்தவர். நாத்திக பிரச்சாரகர், மனித உரிமைக்குழு உறுப்பினர், சமூக ஆர்வலர் என்ற அடையாளங்களைப் பெற்றவர்.
மெய்யாக மகான்கள் யாரும் மகான்கள் இல்லை. சராசரி மனிதனே. கற்பனையில் நினைத்ததை எல்லாம் தீர்க்கதரிசன நூல் என்று எழுதிட அதையே ஊர் உலகம் நம்புகிறது. இதை என்னவென்று சொல்ல? அவர் எதிர்கால நிகழ்வுகளை படம்பிடித்து சொன்னாராம். என்ன அபத்தம்! அப்படிஎன்றால் Nostradamus ஏன் வணங்கப்படும் மகானாகவில்லை? இறைவனையும் இறையருள்பெற்ற மகான்களின் மூளையையும் ஆய்வு செய்ய வேண்டும். ஆதிசங்கரர், ராமானுஜர், வீரப்பிரம்மம், ராகவேந்திரர் எல்லோருமே சராசரி மனிதர்கள். ஏதோ சமூகப்பணி செய்தார்கள் என்று சொல்லலாம். மற்றபடி அவர்கள் போற்றத்தக்க வகையில் ஏதும் செய்யவில்லை. சித்த புருஷர்கள், மகான்கள் என்றெல்லாம் சொல்வது கற்பனையே! இந்த ரீதியில் அங்கே இந்த ஆள் கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்.
ஸ்ரீ வீரப்பிரம்மேந்திரர் என்ற ஆந்திர மாநில மகானைப்பற்றி அவர் அவதூறு பேசுவது சற்றும் அடுக்காது. இதுவே இந்த லட்சணம் என்றால் நம் சித்தர்களைப் பற்றி அவர் ஏதும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். இப்படியெல்லாம் ஒரு கான்சப்ட் உள்ளதா என்று ஆய்வு செய்யவேண்டும் என்கிறார்.
இவர்களுடைய சக்திகள், மகிமைகள் யாவையும் அறிந்த சாட்சிகள் என்னைப்போல் பலருண்டு என்பது கொக்கிநேனி அறியவில்லை. அவ்வப்போது ஆங்கிலம் பேசி தன் நிலையை ஸ்திரப்படுத்தி அதை அறிவியல்தனமாக சித்தரிக்க முயல்கிறார். திராவிட கழகம் தொடங்கிய இயக்கம் ஈவேரா என்ற ஜாபாலி பெரியார்களால் ஆசிர்வதிக்கப்பட்டு இன்று அது விஷமாகப் பரவியுள்ளது. ஆக, பகுத்தறிவு பேசி நாத்திகம் பரப்பியது இன்றுவரை தமிழர்கள் அல்ல என்பதைச் சொல்லவே இப்பதிவு. தெய்வீகத் தமிழை பேசுபவன் நாத்திகனாக இருக்க வாய்ப்பில்லை. ஏதோவொரு மதத்தின்பால் தெய்வத்தின் மேல் நம்பிக்கை கொள்வான்.
என் நண்பர் ஒருவர் "நாத்திகம் தவறான மூட பழக்கங்கள் களைய உதவியது. உதாரணம்: உடன் கட்டை ஏறும் வழக்கம், தேவ தாசி முறை ஒழிப்பு, பெண் அடிமை ஒழிப்பு... என்னைப் பொறுத்த வரை 50:50 நாத்திகம்:ஆத்திகம் வேணும்" என்றார்.
அதற்கு நான் " உடன்கட்டை, பால விவாகம் ஆகியதை ஒழித்த ராஜாராம் மோகன் ராய், நாத்திகர் அல்ல. பிரம்ம சமாஜ் நிறுவியவர். ஓமந்தூரார் காலத்தில் தேவதாசி முறையை ஒழிக்க வித்திட்டது முத்துலட்சுமி ரெட்டி என்ற ஆத்திக மருத்துவர். Reforms என்ற அளவில் செய்யப்படும் எல்லாவற்றையும் நாத்திகத்தோடு இணைக்கக்கூடாது. பகுத்தறிவு என்பது மெய்ஞானம். இன்றைக்கு அது நாத்திகம் என்ற பொருள்படுகிறது." என்றேன்.
"தென்னகத்தில் நாத்திகம் பெருகும்" என்று காலக்ஞான நூலில் அன்றே மகான் சொன்னார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக