'உன் வெற்றி உன் கையில்'... முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஊக்கம் தர இதைத்தான் சொல்வார்கள். நாமும் சில சமயங்களில் சொல்வோம். ஆனால் அது உண்மையல்ல என்பதை நாம் அனுபவத்தில்தான் தெரிந்து கொள்கிறோம். 'பாத்து பாத்து ஆய்வு செய்தபின் திட்டமிட்டு ஆரம்பித்த தொழில்தான், இப்படி அடிவாங்கும்னு நினைக்கலை...பெருத்த நஷ்டம்... எல்லாம் நேரம்தான்' என்று புலம்புவார் சிலர். 'ஏதும் தெரியாமலே ஃபுளுக்ல ஆரம்பிச்சேன்... இப்போ பிசினஸ் பட்டய கிளப்புது... இதை எதிர்பார்கவே இல்லை.. எல்லாம் நேரம்தான்' என்று சொல்லி மகிழ்வோரும் உண்டு.
நாம் செய்யும் முயற்சிகள் எல்லாமே வெற்றி அடைகிறதா? இல்லை. வெறும் அதிர்ஷ்டம் மட்டும் கைகொடுத்தால் போதுமா? போதாது. அப்போது உழைப்பு, தன்னம்பிக்கை, போராடும் சக்தி, விவேகம், புத்தி திறமை எல்லாமே போதிய விகிதாசாரத்தில் இருந்தால் எல்லாமே வெற்றிதான். ஆனால் இதெல்லாம் சரியாக இருந்தால் தோல்வி என்பது வரக்கூடாதே? மேலே உரையாடலில் 'எல்லாம் நேரம்தான்' என்பது எதைக் குறிக்கும்? விதி, ஊழ்வினைப்பயன், கிரக சஞ்சாரம், அதிர்ஷ்டம், என்று பல பெயர்களில் சொல்லலாம்.
ஆக, என்னதான் திட்டமிட்டு புத்திசாலித்தனமாக செயல் பட்டாலும், ஒரு செயலில் நாம் வெற்றி பெறுவோமா இல்லையா என்பதை காலம்தான் தீர்மானிக்கிறது. 'நாட்டாமை, தீர்ப்ப மாத்தி எழுது' என்று அவன்மீது கோபப் படலாம். அதைத்தாண்டி ஏதும் செய்ய இயலாது. அதற்காக தினமும் டிவியில்/செய்தித்தாளில் ராசிபலன் பார்த்துவிட்டு அதன்படி வேலைசெய்வது முட்டாள்தனம். உழைப்பதில் கடினம் / எளிமை என்றெல்லாம் ஏதுமில்லை. மூளையும் உடலும் இசையும்வரை நன்கு உழையுங்கள். நாம் எவ்வளவு நேரம் உழைத்தோம் என்பது பெரிதல்ல, அது ஆக்கபூர்வமாக இருந்ததா என்பதுதான் முக்கியம். மற்றவரோடு அளவீடு வைத்துக்கொண்டு ஒப்பிட முடியாது.. யானையின் தீனியையும் போடும் லத்தியையும் பார்த்துவிட்டு பூனையும் ஆசைபட்டால் எப்படி? பூனையின் வேகத்தையும் துடிப்பையும் பார்த்துவிட்டு யானையும் அப்படியே செய்ய எண்ணினால் ஆபத்துதான். நாம் எல்லோருமே ஒரு தனித்துவத்தோடுதான் இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
யதார்த்தமான கேள்வியைக் கேட்கிறேன்... மகாத்மா காந்தியைவிட சிறந்த அஹிம்சாவாதியும் வாய்மை போற்றுவோரும் இல்லையா? கர்நாடக சங்கீத இசையில் எம்.எஸ்.சுப்புலட்சுமியைவிட சிறந்த பாடகி இல்லையா? நடிப்பில் சிவாஜி கணேசனைவிட வேறு சிறந்த நடிகர்களே இல்லையா? புகழ்பெற்ற விஞ்ஞானி எடிசனைவிட வேறு சிறந்த கண்டுபிடிப்பாளர்களே இல்லையா?
நிச்சயம் உண்டு! உண்டு! அவர்களின் விதிப்பயன் அவர்களை வெளியுலகிற்கு அறிமுகம் செய்யாமல் இருந்து விட்டது. அப்படியே தெரிந்தாலும் பெரிய அளவில் வரவேற்பு கிட்டவில்லை. வரவேற்பு இருந்தாலும் ஏதோவொரு தலையீட்டில் தொடர் ஆதரவு இல்லை. இவர்கள் பட்டை தீட்டாத வைரங்கள். அப்படியே பட்டை தீட்டியிருந்தாலும் அதன்மீது வெளிச்சம் பட்டால்தானே ஒளிர முடியும்? இவர்கள் வாங்கிவந்த வரம் அப்படி.. யாரை நொந்துக்கொள்ள? எல்லாம் நேரம்தான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக