தபால்காரரின் 'க்ளிங்...க்ளிங்' சைக்கில் பெல் சப்தம் வீட்டு கேட் அருகே அழுத்தமாகக் கேட்டால் சற்று எட்டிப் பார்ப்போம். 'சார், போஸ்ட்' என்றதுமே நாம் துள்ளி குதித்து ஓடிப்போய் வாங்கியது நினைவிருக்கும்.
போஸ்ட்கார்டு 15 பைசா விலையில் விற்றபோது நாம் எல்லோருமே கடிதம் எழுதியிருப்போம். அது மேலே தொடங்கி பக்கவாதத்தில் கோணிக்கொண்டு எப்படியோ ஒரு தினுசாக எழுதி முடித்திருப்போம். சிலர் சுவாரஸ்யமாக எழுதியெழுதி மேற்கொண்டு இடம் போதாமல் விலாசத்தின் மீது 'புலி' முத்திரைஅருகேயும் கொசுறு எழுதுவது உண்டு. அதெல்லாம் ஒரு தமாஷ் தான்! கோடை விடுமுறையில் நமக்கு பள்ளிக்கூடத்திலிருந்து 'Promotion' கார்டு வரும்.
என் நியாயவாதி சிவில் எஞ்சினியர் தாத்தா எழுதினால் தபால் கார்டின் முன்புறம் கார்டின் மஞ்சள் நிறம் தெரியாத அளவிற்கு அதில் நீல எறும்புகள் ஊருவதுபோல் மேலிருந்து பின்பக்க அடிபாகம்வரை வீணாக்காமல் எழுதி முடிப்பார். அதையே சாதாரணமாக எழுதினால் அது ஒரு இன்லண்டு கவர் அளவுக்கு சங்கதி கொள்ளும். இதையெல்லாம் பொறுமையுடன் அவ்வளவு நிதானமாக எழுத நேரம் ஒதுக்கிக் கொண்டார்கள். அதை ஒரு கலையாகவே பாவித்தனர். நான் கல்லூரி முடித்தபின்னும் நிறைய தபால் கடிதங்கள் எழுதியதுண்டு.
முன்பெல்லாம் அரசு உயர் அதிகாரிகள் வீடுகளில் landline தொலைபேசி இருந்தது, பிறகு நம் எல்லார் வீடுகளிலும் அது நுழைய மெல்ல தபால்களும் குறைந்தது. பிறகு 2003 காலகட்டத்தில் செல்போன் விலையும் ரீசார்ஜ் விலையும் குறைந்ததும் நம் எல்லோர் கைகளிலும் புழங்கியது. இது SMS காலம் என்பதால் தந்தி telegraph சேவை நிறுத்தப்பட்டது. இப்போது நாம் தபால் கடிதம் எழுதுவது அடியோடு நின்றது. வேறு வழியின்றி பதிவுத்தபால் /ஸ்பீட் போஸ்ட் /பார்ஸல்/ சஞ்சிகைகள் மட்டும் உள்ளது.. பொங்கல் வாழ்த்து SMS போய்விடுகிறது.
ஈமெயில் அனுப்புவது வசதிதான். மின்னஞ்சல் வந்தாலும் வந்தது முறையாக கடிதம் எழுதும் முறையும் ஒழிந்தது. இன்று அநேகமாக நாம் எல்லோரும் எழுதும் மின்னஞ்சல் கடித முறை தவறான முறைதான். மேலேதான் Sub இருக்கே அது என்ன உள்ளே டியர் சார், கீழே ஒரு Sub, Ref என்று தெரியாதோர் கேட்பதுண்டு. எழுதி முடிக்கும்போது எல்லோருமே பொத்தம் பொதுவாக Regards என்று போடுவதால், யாருக்கு எப்படிப்பட்ட sign off / farewell phrase சொற்றொடர் போடவேண்டும் என்பதே மறந்துவிட்டது.
'தபால்காரரே, தபால் வந்திருக்கா?' என்ற குரல் கேட்கப்போவதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக