இப்பதிவை நான் எழுதத் தூண்டியது எது? முகநூல் நண்பர் ஒருவரின் கமென்ட் "எங்கள் வீட்டில் மழை காலத்தில் தானாய் உருவாகும் தவளைகள்... ஆச்சரியம் தான்."
நம் சித்தர்கள் எல்லோரும் கற்பம் உண்டபின் வாசியில் நிலைத்து பூமிக்கடியில் சமாதியில் இருந்ததை நாம் அறிவோம். சமாதிவிட்டு வரும்வரை அவர்கள் பலகாலங்கள் அப்படியே நிலைத்திருப்பார்கள். அவர்களைப்போலவே சில வகையான தவளைகள், மீன்கள் இப்படிச் செய்கிறது.
அதிக வெப்பம் அல்லது உறைபனி காலங்களில் பூமிக்கு அடியில் பதுங்கு குழி அமைத்து தவளைகள் தங்கிடும். அதிக நீரை உறிஞ்சிக் கொண்டபின் அங்கேபோய் பதுங்கும். தன் உடலிலுள்ள மேல்தோல் மற்றும் கொழுப்பை அது உணவாகக் கொண்டு உயிர்வாழும். நடமாட்டம் இல்லாததால் சக்தி வீணாகாது.. எப்போது பருவமழை பொழிகிறதோ, பூமிக்குள் நீர் ஊடுருவத் தொடங்குமோ அப்போது அதை உணர்ந்துகொண்டு பூமிக்கு மேலே வந்து இயல்பு வாழ்க்கை மேற்கொள்ளும். நாம் எதைச் செய்ய சித்த நிலையில் பிரயத்தனப் படவேண்டுமோ அதை இவை சாதாரண இயல்பாகச் செய்கிறது. சில மாதங்கள் சமாதியில் இருந்துவிட்டு (Hibernation) வருவது எத்தகைய பேறு!
அதுவரை தவளைகள் இல்லாத நிலத்தில், மழை பெய்ததும் இரண்டு சாமத்தில் திடீரென தவளைகள் எப்படி கபகபவென வந்தது என்று ஆச்சரியப் படுவோம். அதுபோல் மீன்களும் குளம் வற்றும்போது கனமாக சேறு பூசிக்கொண்டு உள்ளேபோய் பதுங்கும். அதன் நுரையீரலில் அதிகப்படியான பிராண வாயுவை தேக்கிக்கொண்டு தவளையைப் போலவே செயல்படும். இயற்கையின் சிருஷ்டி அலாதிதான்!
அதுவரை மீனாய் /தவளையாய் இருந்த மச்சமுனி/ மண்டூக ரிஷியார் கூட்டம் சமாதியில் இருந்துவிட்டு பூமிக்கு மேலே வருகிறார்களோ என்னவோ... யார் அறிவார்? பூமிக்குள்ளிருந்து வெளிவரும்போது அதைக் காண்பது சாப-பாவ விமோச்சனமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக