பணம் ஈட்ட வேண்டும் என்ற குறிக்கோள் எல்லோர்க்கும் உண்டு. அதன் அளவு என்ன, எத்தனைக் காலத்திற்குள் ஈட்ட என்பது மட்டுமே மாறுபடும். என் நண்பர் ஒருவர் மாதம் ரூபாய் 1.50 லட்சம் வாங்குகிறார், ஆனால் எப்போதும் ஏதோ வேதனையிலேயே இருப்பார். இன்னொருவர் ஒருவர் 9000 வாங்குகிறார் பரம சந்தோஷமாக உள்ளார். இது எதை வைத்து முடிவாகிறது?
வாழும் பாங்கு! குடும்ப பொறுப்புகள், அத்தியாவசிய செலவுகள், வட்டி கட்டுதல், கேளிக்கை, ஆடம்பரம், மற்றும் ஊதாரிச் செலவுகளைப் பொறுத்தே இதன் அளவீடு மாறுகிறது. எது அதிகமாக எது குறைவாக இருக்கவேண்டும் என்பது தனிநபர் விருப்பத்தையும் சூழலையும் சார்ந்தது. அதற்காக எல்லோராலும் வயிற்றையும் வாயையும் கட்டமுடியுமா? குடும்பப் பொறுப்புகளைத் தட்டிக்கழிக்க முடியுமா? ஊரார் மெச்சவேண்டும் என்பதற்காக பகட்டு வாழ்க்கை வாழ முடியுமா? நான் நடுத்தரமா/பணக்காரனா என்பதை சமூகத்திற்குக் காட்டி எனக்கு என்ன ஆக வேண்டும்? "சார், தேவையான பணம் சம்பாதிச்சிட்டீங்களே இனி எதுக்கு பிசினெஸ் செய்யறீங்க?" என்று கேட்டால் "இனி பணம் வந்து எனக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால் பிசினெஸ் பிடிச்சிருக்கு, நாலு பேருக்கு வேலை கொடுக்கிறேன்" என்று சொல்லுவதும் உண்டு.. ருசிகண்ட பூனை உருட்டுமாம் பானை!
பணம் ஒன்றே குறிக்கோளாக இருக்கும்போது நம் புத்தியும் இயல்பும் மாறிவிடுகிறது. 'அவன் முன்ன மாதிரி இல்ல... எப்போ பார்த்தாலும் பணம்பணம்னு அலையறான்' என்று சிலர் சொல்வதை நாம் பார்த்துள்ளோம். இந்த போக்கில் தான/தர்மம் செய்வது சந்தேகம்தான். சிலர் நன்கொடை அளிப்பதற்காக பகுதிநேர வேலைகள் செய்வதும் பார்த்துள்ளேன். சரி, தனக்கென வாழ்வது எப்போது? குடும்பத்தின் மீதும் சமூகத்தின் மீதும் அக்கறை வேண்டியதுதான், ஆனால் எப்போதும் அதே சிந்தனையாகவே இருந்தால், நம் இலட்சியம் சிதறும். பணம் வேண்டியதுதான், அதுவே எல்லாம் ஆகாது. ஒருபக்கம் ஆன்மிகம்/தர்மநெறி பாடாய் படுத்தும். இன்னொருபக்கம் எப்படியேனும் பொருளீட்டி செல்வந்தனாக வேண்டும் என்ற எண்ணமும் வரும். இதில் ஏதேனும் ஒன்றில் முழுதுமாக அல்லது இரண்டிலுமே மத்திம நிலையோதான் சரிப்படும். எளிமையாக வாழப் பழகிக்கொள்வோம். சுமை குறைவு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக