இந்தியா-சீனா பதற்றம் குறித்து தத்தம் போக்கில் முகநூலில் விமர்சனங்கள் பதிவிட்டு வருகின்றனர். இவர்கள் பாஜக-காங்கிரஸ் கட்சிகளின் பேச்சாளர்கள்போல் கோதாவில் இறங்கி வாக்குவாதம் செய்வது நகைச்சுவையாக இருக்கிறது. சீனாவுடன் மோதக்கூடாது ‘சப்பமூக்கன் நல்லா கம்பு சுத்த தெரிஞ்சவன் டோய்’ என்றும், சீனா இந்தியாவுடன் மோதக்கூடாது ‘வெள்ளைத் தொப்பி ஆட்சி இந்தியாவுல இல்லை. இப்போ இருக்கிறது ஒரே நேரத்துல கம்பு, கத்தி, சுருள் எல்லாம் சுத்தத் தெரிஞ்சவிங்க டே’ என்று இப்படியான சுவாரசியமானப் பதிவுகளும் மீம்களும் போய்க்கொண்டு இருக்கின்றன.
‘எல்லையில் இறந்தவர்களில் (ஹவில்தார்) சிப்பாய் தமிழனுக்கு மட்டும்தான் நாம் வீரவணக்கம் சொல்லணும். அவனுடைய படைப்பிரிவின் (கர்னல்) உயர் அதிகாரி தமிழல்லாத தென்னிந்தியனாக இருந்தாலும் முக்கியத்துவம் தராதே’ என்ற ரீதியில் மொழி/மண்டல காழ்ப்பும் எதிர்ப்பும் உள்ளது. இப்படியான சிந்தனை இருந்தால் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கொண்டாட்டம் தான். தம்மாதுண்டு நேபால் ராஜ்ஜியமே இந்தியாவை துணிந்து எதிர்க்க நம் அண்டை நாடுகள் ஊக்கத்தைத் தந்துள்ளன. அதற்கு என்ன காரணம்? அவர்களுக்கு ஆதரவாகப் பேசும் நம் எதிர் கட்சிகள்தான்!
இது போதாதென்று பொழுது போகாத முகநூல்வாசிகள் பலர் இந்திய இராணுவத்தில் ஏதோ உயர் பதவி வகித்து, தளவாடங்கள் வாங்கி இயக்கி, இளநிலையாளர்களுக்குப் பயிற்சியும் தந்ததுபோல் நம் இராணுவ பலத்தைக் குறைகூறி வருகின்றார்கள். நம் பிரதமருக்கு அனுபவமும் ராஜதந்திரமும் போதாது என்ற பாணியில் இந்தச் சாமானியர்களுடைய நினைப்பு இருப்பதைப் பார்த்தால் சிரிப்பை அடக்க முடியாது. ‘வரைபடத்தில் லடாக் எங்குள்ளது என்பதையே அறியாத தமிழ்நாட்டு அரசியல் பிரமுகர்கள் இங்குள்ள நிலைமையைக் குறை கூறுவது வெட்கம்’ என்று கடந்த ஆண்டு லடாக்கின் பாராளுமன்ற உறுப்பினர் லோக் சபையில் பேசினார். அது சவுக்கடி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக