ஒருநாள் காலையில் காக்கைக்குச் சோறு வைக்க மாடிக்குச் சென்றேன். சுற்று முற்றும் எங்கும் தென்படவில்லை புறாக்கள்தான் இருந்தன. என் பார்வையை சுழல விட்டேன். பக்கத்துத் தெருவில் உள்ளே தள்ளியிருந்த மார்வாடி வீட்டுத் தண்ணீர் தொட்டிக்கு மேலே ஒன்று அமர்ந்திருந்தது. அது என்னை நோக்கி இல்லாமல் அத்தெருவை நோக்கி வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தது.
‘இந்தப் பக்கம் திரும்பிப்பாரு... ஓடியா..’ என்று மனதில் நினைக்க, சட்டென அது என்னை நோக்கித் திரும்பிப் பார்த்து வேகமாய் பறந்துவந்து உட்கார்ந்து உண்ணத் தொடங்கியது. பரவாயில்லையே என்று நினைத்துக் கொண்டேன்.
அன்று அலுவலகம் செல்லப் புறப்படும்போது தெருவில் ஒரு பெண்மணி பரட்டைத் தலையுடன் ரெக்சின் குப்பைப் பைகளை வைத்துக்கொண்டு மெள்ள நடந்து போவதைப் பார்க்க நேர்ந்தது. ‘நாம் இறங்கிப்போகும் சமயம் இவள் குடிக்கத் தண்ணீர் கேட்கப் போகிறாள்’ என்று மனதில் பட்டது. மாடியிலிருந்து இறங்கி வீட்டின் காம்பவுண்டு கேட்டை மூடிக்கொண்டு போகும்போது அவள் எதிர்பட்டாள். திடீரென பாட்டிலை எடுத்துக் காட்டி ‘குடிக்க தண்ணி வேணும்’ என்றாள். ‘அந்தக் குழாயில போய் பிடிச்சிக்கோங்க’ என்று காம்பவுண்டுக்குள்ளே காட்டினேன்.
சற்று தூரம் போனபின் தெருவின் முனையில் ஒரு முதியவர் அமர்ந்திருந்தார். இந்த ஆளு நம்மளை டைம் கேட்கப் போகிறாரோ வேறென்னத்தைக் கேட்பாரோ என்று நினைத்தேன். நான் விறுவிறுவென நடந்து போகும்போது ‘தம்பி, மணி என்னப்பா? என்று கேட்டார். ‘பத்தடிக்க அஞ்சு நிமிஷம்’ என்று சொல்லிவிட்டுப் போனேன்.
பிரதான சாலையைக் கடக்க சிக்னலில் நின்றிருந்தேன். நம்ம பழைய கம்பனி நண்பர்கள் ஒருத்தரும் நம்ம கண்ணுல தென்படலையே என்று நினைத்தேன். அப்போது ‘ஹாய்... சந்துரு, வாட் எ சர்ப்ரைஸ்! எப்படி இருக்கீங்க?’ என்று ஆணின் குரல் என்னை விசாரித்தது. அவர் புராஜக்ட் பிரிவில் வேலை பார்த்தவர். ‘ஓ.. இங்கே எங்கே...?’ என்றேன். ‘இல்லை.. ஒரு வேலையா கிளயண்டைப் பார்க்க வந்தேன்... உங்களைப் பார்த்து ரொம்ப வருஷமாச்சு’ என்றார். அதற்குள் பச்சை விளக்கு ஒளிர ஹாரன்கள் ஒலிக்க அவர் கையசைத்தபடி நகர்ந்தார்.
இன்னைக்கு என்ன? நாம
நினைத்ததெல்லாம் அக்கணமே எப்படி நடக்குது? என்று நினைத்தபின் சும்மா
இருந்துவிட்டேன். அதன்பின் அதற்கான விடை
இன்னொருநாள் எனக்குப் புலப்பட்டது. தூங்கி
எழும்போது மூச்சுக்கலை ஒட்டமும், பஞ்சபட்சி தரிசனமும், ஜாதகத்தில் சந்திரனின்
சஞ்சாரமும் அதற்குக் காரணம் என்பது புரிந்தது. சரம் பயிலவும் பஞ்சபட்சி ஆருடம்
பார்க்கவும் எனக்கு விருப்பமில்லை. எது எப்படியோ நன்மை நடந்தால் மகிழ்ச்சியே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக