பரம்பரையில் முந்தைய மூன்று தலைமுறைகளின் பித்ரு சாபம், பிரம்மஹத்தி தோஷம், சர்ப்ப தோஷம், கோசாபாம் இவை அனைத்தையும் தன் ஊழ்வினைப் பயனாக ஒருவனே சுமைதாங்கியென தாங்கிப்பிடித்து பங்காளிகளையும் வம்சத்தையும் காப்பது என்பது நினைத்துப்பார்க்க முடியாத நிலை. அவனால் எந்தவொரு சாதனையையோ ஆக்கபூர்வமான செயலையோ செய்திருக்க முடியுமா? செய்ய முடிந்தது. எப்படி?
பிறந்தது முதல், சிவசக்தியே களத்தில் இறங்கி பிறப்பெடுத்த அவ்வான்மாவை ஒவ்வொரு நொடியும் காத்துருளினர். பஞ்சபூதம் அடங்கிய அத்தேகம் குற்றமற்றது என்பதால் பிரதோஷ காலத்தில் ஜனிக்கவைத்து அவ்வான்மாவை அதில் அடைத்தார். அவன் தன் செயல்களை முடிக்க சிவசித்தர்களை போதகராக, சமயக் குரவராக, வைத்தியராக, அனுபூதியாக அவன் கூடவே இருந்து வழிகாட்ட பணித்தார். அவன் மகானும் அல்ல, ஞானியும் அல்ல. ஆனால் நினைத்தபொழுதில் அவனுக்காக ரூபமாக, அரூபமாக வருவார்கள். நித்திய தரிசனத்தில் இருப்பவன். ஆனால் தான் யார் என்று சுயம்தேட ஆர்வமில்லாதவன். பிரம்மரந்திர வாசலை திறக்கவோ, ஆறாதார சக்கரத்தின் உயர் பீடத்தில் சச்சிதானந்த ஒளியையோ தரிசிக்க விழையாதவன். சதாசிவமே சீவனாய் அவன் மூச்சில் கலந்துள்ளார். வாலை காயத்ரியே அவ்வப்போது அறிய வேண்டிய ஞானத்தை அளிக்கிறாள். அவன் ஆன்மிக நூல்களை தேடிப்பிடித்து படிப்பவனும் அல்ல.
அனுபவித்த இத்தனைக்கால ஊழ்வினையை சுவடின்றி துடைத்திட பரபிரம்மம் நினைத்துள்ளார். ஆன்மாவுக்கு ஊழ்வினையிலிருந்து விடுதலைத் தந்து, கர்ம பலாபலன் கட்டுகளை அவிழ்த்து, அவனை அடுத்தநிலை பரிபூரண ஆனந்தத்தில் நிலைநிறுத்தவுள்ளார். ஊழ்வினைகள் மிச்சமின்றி நீங்குவதே வீடுபேறு அடைய வைக்கும் தகுதிநிலை. அவன் வாசியோகியும் அல்ல தவசித்தனும் அல்ல. அவன் சிவசக்தியின் புதல்வன்... நம்மைப்போல் ஒருவன்! அவனே நான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக