வெளியூரிலிருந்து வாசகர் ஒருவர் அழைத்தார். இதற்கு முன்னமே மின்னஞ்சல் மூலம் தொடர்பில் வந்தவர். சற்றே மன சஞ்சலத்துடன் பேசினார். “போன மாதம் நான் மனக்கஷ்டத்தில் இருந்தேன். அப்போ உங்களுடைய கட்டுரையைப் படிச்சுட்டு வெச்சேன். அதன் பிறகு அந்நேரம் பார்த்து நீங்க போன் பண்ணிப் பேசினது ரொம்ப ஆறுதலா இருந்துச்சு. உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி வந்துச்சு. நான் மனவருத்தப்படுவது உங்களுக்குத் தெரியுது போலனு புரிஞ்சிகிட்டேன். நேத்தைக்கு மேலுக்கு முடியாம இருந்தேன். உங்க பதிவைப் படிச்சு முடிச்சேன். உங்க நெனப்பாவே இருந்தேன். நீங்க இன்னும் கால் செய்யலையேனு ஏக்கத்துல நான் இப்ப செஞ்சேன்.
காலையில என் கனவுல எங்க வீட்டுக்கு வந்தீங்க. என் உடல்நலம் விசாரிச்சு எங்களோடு பேசிட்டுப் போகும்போது உங்களுக்கு ஏதாவது பரிசு தரணும்னு பீரோவிலேர்ந்து சில சால்வைகளை எடுத்துக்காட்டி இதுல எது புடிச்சிருக்கோ எடுத்துக்கங்கனு சொன்னேன். நீங்களும் சிரிச்சுகிட்டு பச்சை நிறத்தை எடுத்துகிட்டு கனிவா பாத்தீங்க. எனக்கு ஒரே சந்தோசம்” என்றார்.
இதென்ன புதுக்கதையா இருக்கு? ஓஹோ.. இப்படி வேற ஆளாளுக்கு நம்மளைப்பத்தி பில்டப் தந்து வெச்சிருக்காங்களா என்று சிரித்துக் கொண்டேன். அவரை நான் பார்த்ததில்லை. முன்னொரு சமயம் அவர் என்னுடைய மற்ற புத்தகங்களின் விபரம் கேட்டிருந்தார். அப்போது மின்னஞ்சல் அனுப்பியபின் பேசியதோடு சரி. அவர் மனம் சங்கடப்பட்ட அந்நேரம் பார்த்து நான் செய்து விட்டேன் போலிருக்கிறது. காக்கா உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாய்ப் போச்சு.
அவருக்கு எழுபது வயது இருக்கும். சோடா கம்பனி வைத்திருந்தாராம். மகன் வீட்டில் வசிக்கிறார். என் கட்டுரைகளையும் நூல்களையும் ஆழ்ந்துப் படித்து அதை நான் முன்னின்று அவருடன் உரையாடுவதாகவே பாவித்துக் கொண்டுள்ளார். ஆர்வம், ரசிப்பு, பக்தி, நம்பிக்கை என்ற நிலைகளைத் தாண்டி ஆழ்மனதில் மூட எதிர்பார்ப்பை வளர்த்துக் கொண்டுள்ளார் என்பதை நினைத்தால் என்ன சொல்வது? ஆண்டவா!
இது போதாதென்று அவர் சிந்தனையிலும் கனவிலும் என்னை உலாவச்செய்து இறைவன் விளையாடுகிறான். பாதகமில்லாமல் எல்லாம் நன்மையில் முடிந்தால் சரி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக