About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 28 ஜூன், 2020

படையும் நடுங்கும்!

நாகங்கள் நமக்குக் கட்டுப்படுமா? கட்டுப்படும்! அதற்குச் சில விதிவிலக்குகள் உள்ளன. ஒரு சமயம் நானும் நண்பரும் பொன்னேரியை அடுத்துள்ள தேவதானம் ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயிலுக்குச் சென்றோம். வரும்போது அகஸ்தீஸ்வரர் கோயிலுக்கும் சென்று தரிசித்தோம். தரிசனம் முடிந்து புறப்படும்போது மாலை 6 ஆகிவிட்டிருந்தது. பின் கார்த்திகை மாதம் என்பதால் சீக்கிரமே இருட்டிவிட்டது.

பொன்னேரி கூட்டு ரோடு சந்திப்பைத் தாண்டியதும் நண்பருடைய காரில் மின்னேற்றியை இயக்கும் என்ஜின் பெல்ட் அறுந்துபோனது. பத்தடிதூரம் தள்ளிக்கொண்டு போய் அருகே சாலையோரம் இருந்த திறந்தவெளி மெக்கானிக் கடையில் வந்து நிறுத்தினோம். சுற்றியும் வெறும் புதர் மண்டிக்கிடந்தது. பழுது நீங்கும்வரை அங்கே ஓடாத சில வண்டிகளின் அருகாமையில் நின்றிருந்தேன். சுமார் முக்கால் மணிநேரம் ஆனது அப்போது அப்பணியாளரிடம் ‘திறந்த வெளியில இது பத்திரமா?’ என்று கேட்டேன்.
அவர் ‘சார், இங்கே நாகப்பாம்புங்க சகட்டு மேனிக்கு இருக்கு, தினம் ரெண்டு அடிச்சுப் போடுவோம். இல்லாங்காட்டி விரட்டி விடுவோம். எப்படியாச்சும் இங்கே வந்திரும். ஆனால் இம்மா நேரமா ஒண்ணுகூட இன்னாண்ட வந்து நடமாடவே இல்ல. ஆச்சரியமா இருக்கு சார். மண்புழு சைசுக்கு குட்டிங்களும் இருக்கும்.. அதையும் காணோம்’ என்றார். அவர் சொன்னதைக் கேட்டு நான் சிரித்துக் கொண்டேன். ‘அதையெல்லாம் அடிக்காதீங்க ஜென்மத்துக்கும் பாவம் போகாது.. வேம்பு, சிறியாநங்கை, மஞ்சள், சேர்த்து மிக்ஸில அரைச்சு அதுல கொஞ்சம் பச்சைக் கற்பூரம் போட்டு தண்ணீர்ல கரைச்சு தெளியுங்க. பக்கத்துல வரவே வராது.. தினம் காலையில ஒருவாட்டி சோம்பல் இல்லாம செய்யுங்க’ என்றேன். ‘அப்படியா சார்? இதுவரை எனக்குத் தெரியலையே’ என்றார்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த என் நண்பர், ‘நல்லவேளை, இருட்டுல நாம நிக்கிற இடத்துல இதுவரைக்கும் எதுவும் கால்மேலே ஏறலை’ என்றார். ‘நீங்க வேற, நம்ம எதிரி இங்கே எங்கேயோ இருக்கான் போலிருக்குனு அதுங்களுக்கு உணர்வு வந்திடுச்சாக்கும்..’ என்று சொல்லிச் சிரித்தேன். நான் சொன்னது அவருக்கு விளங்கவில்லை, தமாஷ் செய்தேன் என்று நினைத்தார்.
ஒருவருக்குக் கருட ரேகை அமைப்பின் சாயல் இருந்தாலோ அல்லது அவரது ஆரா ஒளிவட்டத்தில் நாகங்களை கட்டுப்படுத்தும் அதிர்வுகள் இயற்கையாக இருந்தாலோ அதை அவை சட்டென நுகர்ந்து உணர்ந்திடும். அப்படித்தான் அவை அன்று நாங்கள் இருந்த புதர் வெளியில் உணர்ந்திருக்கும் என்று புரிந்து கொண்டேன்.
நான் சிறுவனாக இருக்கும்போது, எங்கள் வீட்டுக் கொல்லைப்புற கிணற்றடியில் பல்தேய்த்துத் துப்புவேன். அங்கே முல்லைப் பந்தல் பக்கத்தில் மணத்தக்காளி கத்தரி செடிகள் இருக்கும். அப்படி ஒரு சமயம் என் பாதங்களுக்கு அருகே, துப்பிய வெள்ளையை அப்பிக்கொண்டு விரியன் ஊர்ந்து போனதைப் பார்த்தேன். அது போனபிறகு படபடப்பும் அச்சமும் எகிறியது!
வாழை இலை பறிக்கும்போது என் தலைக்குப் பக்கத்தில் ஓசையின்றி ஒரு பச்சைப்பாம்பு என்னைப் பார்த்தபடி தொங்கிக் கொண்டிருந்ததை நான் கவனிக்கவில்லை. நல்ல வேளையாக அது என் கருவிழிகளைக் குறிவைக்க மறந்தது. இன்னொரு சமயம் கனமழை வெள்ளம் வந்தபோது ஜன்னல் பிடித்துக்கொண்டு மூட முடியாமல் இருக்கவே, செருப்பு அணிந்து வீட்டின் வெளியேபோய் ஜன்னலைத் தட்டி மூடும்போது சட்டென்று இரண்டு அங்குல உயரம் வழுக்கிக்கியபடி இறங்கினேன். சுருண்டிருந்த பாம்பின்மீது காளிங்கனைப்போல் நின்று வேலைப் பார்த்தேன் போலுள்ளது. ஐயோ சாமி! வெலவெலத்து மெள்ள கதவை தாளிடும்போது நிலைப்படிக்குக்கீழே கீரி உலாவிக் கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டேன். வியர்த்துக் கொட்டியது! சர்ப்பங்கள் என்னை ஒன்றும் செய்யாவிட்டாலும் அன்றுமுதல் அதைக் கண்டாலே கிலிதான் !
சித்தர் பாடல்களில் நாகங்களை வசியப்படுத்திக் கட்ட ‘நறீ சிம் மறீ சிம்’ என்ற மந்திரத்தை ஆயிரத்தெட்டு முறை குருவை நினைத்து உருவேற்றினால் சித்தியாகும் என்று உள்ளது. எதிரில் படமெடுத்துச் சீரும் நாகத்தைப் பார்த்து ‘சிஊ’ என்று ஆணையிட அது கட்டுப்பட்டு அப்பால் போய்விடுமாம். சிலர் கருடக்கிழங்கு மற்றும் சர்ப்பவிரட்டி மூலி வேரை மந்திரித்துத் தாயத்தில் வைத்துக் கட்டிக்கொள்வதும் உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக