About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 3 ஜூன், 2020

தியாகப்பிரம்மத்தின் அரிதான படம்!

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஶ்ரீ தியாகராஜர் உருவத்தில் எப்படி இருந்திருப்பார் என்று பலர் நினைத்திருப்பார்கள். இங்கே உள்ள நிழற்படம் 1847ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஒருவரால் (William Russell) படம் பிடிக்கப்பட்டதென அறிகிறோம். வெளிச்சுற்றில் வர இத்தனை ஆண்டுகளாகி உள்ளது.

சன்னியாச தீட்சை வாங்கிக்கொண்ட பிறகு உஞ்சவிருத்தி எடுத்து ஜீவனம் செய்தவர். பணத்தைப் புகழை விரும்பாதவர். ராம நாமத்தை இறுதிவரை கோடி ஜெபம் செய்தவர். அப்படி இருந்த அவர் திருமண் நாமம் தரிக்கிமல் விபூதி பூசியுள்ளாரே என்று நீங்கள் நினைக்கலாம். அவர் வைணவர் அல்ல, சைவர்தான். தெலுங்கு முலக்கநாடு பிரிவு ஸ்மார்த்த ஐயர். சரபோஜி மன்னர் காலத்தில் வாழ்ந்தவர். 'அபிராமி அந்தாதி' சுப்ரமணிய பட்டருக்குச் சமகாலத்தவர். அவருக்கு இராமன் மீது அலாதி பிரியம். சுமார் 700 கீர்த்தனைகளுக்கு மேல் இயற்றினார் என்றும் அதில் குறைவான எண்ணிக்கையே கிடைத்தது என ஆய்வு சொல்கிறது. இவர் இராமர்-சீதையை நேரில் கண்டு தரிசித்தவர். இவர் சித்தியான திருவையாறு தலத்தில் அவர் சமாதிக்கு முன்பாக ஆண்டு தோறும் பஞ்சரத்ன கீர்த்தனைகளை இசைத்துப் பாடி அஞ்சலி செலுத்துவார்கள்.

இவர் விபூதியைத் தரித்த விதம் பலருக்கும் வியப்பைத் தரும். விபூதி /பஸ்ம தாரணத்தில் 5, 8,16, 32 எண்ணிக்கையில் திரிபுண்டரமாக உடலெங்கும் இடுவதுண்டு. இப்போது வெகு சிலரே இவ்வாறு நீறணிவதைப் பார்த்துள்ளேன். சிவதீட்சைப் பெற்றவர்கள் விபூதியைக் குழைத்துத் தரிப்பார்கள். நாம் எல்லோரும் வெறுமனே நெற்றியில் ஒற்றை வசக்கோடாகவோ, திரிபுண்டரமாகவோ, உத்தூளனமாகவோ அணிவதோடு சரி. விரலில் அதிகம் படிந்திருந்தால் போனால் போகிறதென்று தொண்டையில் பூசுகிறோம். 😊



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக