About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 28 ஜூன், 2020

ஆகர்ஷணம்

அஷ்டகர்மம் பற்றி நம்முடைய பழைய பதிவில் பார்த்துள்ளோம். வசியம், மோகனம், உச்சாடனம், தம்பனம், ஆகர்ஷணம், வித்வேஷணம், பேதனம், மாரணம் என்பதே அஷ்ட கர்மங்கள். அதில் ஒன்றான ஆகர்ஷணம் பற்றியதுதான் இப்பதிவு. அதாவது ஒன்றையோ/ஒருவரையோ சக்தி கொண்டு தன்வசம் இழுக்கும் மாந்திரீக முறை. 

மாந்திரீகர்களை வைத்து  ஒரு  குடும்பத்திற்கே கெடுதல் வைப்பைச் செய்வது இக்காலத்தில் சர்வ சாதாரணம். அஷ்டகர்மம் என்பதே பொய் என்றும் அதை இக்காலத்திலுமா நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள் என்ற ரீதியில் நம்பிக்கை இல்லாத ஞான சூரியன்கள் பரப்புரை செய்வதுண்டு. அவரவர் தனிப்பட்ட கருத்து என்று விட்டுவிட வேண்டும். அவை எல்லாமே பொய் என்றால் மூத்த சித்தர்கள் மாய்ந்து மாய்ந்து தங்களுடைய நூல்களில் யந்திரம், மந்திரம், பூசை விதிகளை உரைக்கவேண்டிய அவசியமில்லையே!

பேராசை பொறாமை ஆத்திரம் கோபம் ஆகியவற்றின் ஆளுமையால் ஒருவர் நாடுவதே கருதொழில் செய்வினை. செய்யச்சொல்லி வருபவனுடைய நோக்கத்தில் தர்மம்/அதர்மம் பற்றி எதையும் தீர விசாரிக்காமல் பணம் வாங்கிக்கொண்டு செய்வினை செய்வது நல்லதா? இல்லை. அப்படியானால் சித்தர்கள் உரைத்த அவற்றை எல்லாம் யாரை வைத்துச் செய்வது? அது மட்டும் தர்மம் ஆகுமா? சித்தர்கள் எல்லோருமே தர்மநெறி வழுவாமல் இருக்கும் நல்லோர்களின் தற்காப்புக்காகத்தான் உபாயம் தந்துள்ளனர். ஆனால் இக்கலியுகத்தில் யாருக்கு வேண்டுமானாலும் வைக்கலாம் என்ற நெறியற்ற நிலை உள்ளதுதான் கொடுமை. அதற்கேற்ப விதியாளி ஜாதகத்தில் தசாபுக்தியும் அமைந்திடும்.

அது 2007. என்னுடைய பழைய நண்பர் ஒருவரின் குடும்பம் தன் நெருங்கிய உறவினரால் சொல்லொணாத் தொல்லைகளை அனுபவித்து வந்தது. அவர் ஒருசமயம் ஒரு சித்த மரபு மாந்திரீகரிடம் என்னையும் துணைக்கு வருமாறு அழைத்துச் சென்றார். அவருடன் போனேன். அந்தப் பெரியவருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். இதுவரை அவர் இதுபோன்ற அஷ்டகர்மத்தைப் பிரயோகம் செய்ததில்லை என்பதைப் பேசும்போது சொன்னார். ‘அவங்க குடும்பம் ரொம்ப காலமாவே கஷ்டப்படுறாப்ல... அவருக்கு என்னால நல்லது நடந்தா சரினு இதுக்கு சம்மதிச்சேன்’ என்றார். நாங்கள் அமரவுள்ள அறையின் அஷ்ட திக்குகளில் வைப்பதற்குச் சிறிய காகிதங்களில் 5x5 கட்டங்களில் காப்புச் சக்கரம் வரைந்து வைத்திருந்தார். அருகே பெரிய பாத்திரத்தில் தண்ணீர், எலுமிச்சைப்பழம், மல்லிகைப்பூ, ஊதுபத்தி என எல்லாமே இருந்தன.

‘தம்பி, என் வாழ்க்கையில இப்பதான் முதல்முறையா இதைப் பிரயோகம் செய்யப்போறேன். வைப்பு எடுக்க எவ்வளு நேரம் ஆகும்னு தெரியலை. அதனால நீங்களும் கண்மூடி தியானத்துல இருந்து நான் சொல்லும் பொருளை இழுக்க என்னோடு சேர்ந்து ஒத்துழைக்கணும்’ என்றார். ‘ஆகட்டுமுங்க... நீங்க சொல்லும் வஸ்து எப்படி இருக்கும், எவ்வளவு கனம், அதன் தன்மை என்ன, அது இப்போ எங்கே இருக்கு?’ என்று கேட்டேன்.

“தம்பி.. அது விருதாச்சலத்துல ஊர் ஒதுக்குப்புறத்துல பாம்பு புத்துக்குள்ள இருக்கு. அவங்க செய்வினை செய்து அதுக்குள்ள போட்ட வெச்சதை இங்கே இழுக்கணும்” என்று சொன்னார். அறையின் மூலைகளில் ஐம்பத்தொன்று அட்சரங்கள் கொண்ட தற்காப்புச் சக்கரங்களை வைத்து மஞ்சள் குங்குமம் மலர்கள் சாற்றினார். அதன்பின் விளக்கேற்றிவிட்டுப் பிள்ளையாரைக் கும்பிட்டுக்கொண்டு, சிவனை/பழனி முருகனை வேண்டிக்கொண்டு இறங்கினார். நானும் பிராணாயமம் செய்துகொண்டு ஆயத்தமானேன். ஆகர்ஷணத்தால் இழுக்கக் கூடிய பொருள் நம் தலையில் வந்து விழுந்து விடாமல் இருக்க மந்திரக்கட்டு வளையங்கள் போட்டு உருவேற்றினார்.

அங்கே பூசையில் முட்டைகள், மூலிகை வேர் மற்றும் வேறு சில பொருட்கள் இருந்தன. ‘அடேங்கப்பா.. விட்டலாச்சாரியா படத்துல வர்றமாதிரி ஏதேதோ சாமான்கள் இருக்கே’ என அன்று அதைப் பார்த்ததும் மனதில் நினைத்துக் கொண்டேன். ஆனால் சித்தர் பாடல்களில் உரைக்கப்பட்ட விதமாகவே அவை எல்லாம் இருந்ததை சித்தநூல்களில் ஈடுபாடு வந்தபிறகு உணர்ந்தேன்.    

(சித்த நூல்களை நான் படிக்கத் தொடங்கியதே 2013 -இல் தான்.)

அவர் சொன்னபடி நானும் முழு வீச்சில் இறங்கினேன். இப்படியுமா ஒரு செய்வினையைப் பண்ணிப் போடுவார்கள் என்று என்னுள் எழுந்த கோபம் உக்கிரமாகிக் கொழுந்து விட்டு எரிந்தது. பாம்புப் புற்றையே ஆழத்திலிருந்து பெயர்த்திழுக்க என் சக்தியைக் கூட்டினேன். சரியாகப் பத்து நிமிடங்கள்தான் ஆகியிருக்கும். அப்போது இடையூறாக ஒரு ஓசை...!

எங்களுக்கு நடுவே பொதுவான இடத்தில் ஏதோ பொத்தென்று விழுந்த சப்தம் கேட்டது. நண்பர் அதைப் பார்த்துவிட்டு ‘எதோ சாமான் வந்து விழுந்திடுச்சு’ என்றார். தியானத்திலிருந்து விடுபட்டோம். வெல்லக்கட்டி அளவுக்குப் புற்றுக் களிமண் உருண்டை உடைந்து சிதறி இருந்தது. அதைத் தொடாமல் அதைச்சுற்றி எலுமிச்சைப் பழத்தை வட்டமாகப் பிழிந்த பின் சில முத்திரைகள் காட்டி மந்திரங்கள் ஜெபித்துவிட்டு உதிரி மல்லிபூவை அதன்மேல் போட்டுவிட்டுத் தொட்டார்.

‘அந்தூர்லே நேத்து நல்ல மழை பெய்திருக்கோ...  களிமண் உருண்டை ஒரே ஈரமா இருக்கு’ என்றார். வஸ்துவை கையால் எடுத்து உடனே பெரிய பாத்திரத்திலுள்ள நீரில் போட்டுக் கரைத்தார். உருமாறிய சில பொருட்களை அதலிருந்து துழாவி எடுத்தார்.  தன் வீட்டில் சில வருடங்களுக்குமுன் காணாமல் போன சிறு பொருட்களை நண்பர் அடையாளம் காட்டினார். ‘ஓ.. இதுவா... ரொம்ப பழசாச்சே.. தொலைஞ்சு போச்சுனு இல்ல நினைச்சோம்!’ என்று வாய் பிளந்தார்.  அதன் பிறகு அவர் எங்களுக்குக் கழிப்பு நடத்தினார். ‘தம்பி.. இவ்வளவு சீக்கிரம் வந்திரும்னு நான் எதிர்பாக்கல... உங்கள்ள யாரோ அதிகமா சக்தி பிரயோகம் பண்ணியிருக்கீங்க. சந்தோசம் பா’ என்றார்.

அன்றுதான் முதல்முறையாக அஷ்டகர்ம பிரயோகத்தை நேரில் பார்த்தேன். வியந்து போனேன்! சில நாட்களிலேயே நண்பரின் உடல்நலம் முன்னேறி அவர் குடும்பத்தில் நிம்மதியும் நிலவத் தொடங்கிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக