About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 1 ஜூலை, 2020

ஊதித் தள்ளிட்டோமில்ல!

நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது ஹிந்தி மூன்றாம் மொழியாக இருந்தது. அதில் பாடங்களை எப்படிப் படித்தேன் தேர்வில் எப்படித் தேறினேன் என்பது மர்மம்தான். புலவர் இராஜலட்சுமி எங்களுக்குத் தமிழ் வகுப்பு நடத்தி முடிக்கும்போது வெளியே வகுப்பு வாயிலில் ஹிந்தி ஆசிரியை பண்டிட் ஆஷா சதுர்வேதி காத்துக்கொண்டிருப்பார்.
என்னுடைய வகுப்பில் என்னைப்போல் சில மாணவர்கள் முதன்முறையாக ஹிந்திக்கு அறிமுகமானவர்கள். அரையாண்டுத் தேர்வில் ஒருவிதமாக அ ஆ இ ஈ.. என ஸ்வரம்/ வ்யாஞ்சன அட்சரங்களைக் கூட்டிப் படித்து எழுதும் அளவுக்கு முன்னேறி இருந்தேன். ஆனால் எளிய வாக்கியத்தைச் சொந்தமாக ‘வாக்யோன் மே ப்ரயோக் கரோ’ கேள்விக்கு எழுதச் சொன்னால்... பெப்பே! எங்கள் ஒவ்வொருவரையும் பாடத்தின் ஒரு பத்தி வாசிக்கச் சொல்வார். நான் தட்டுத்தடுமாறி ஒப்பேற்றிவிட்டு வாக்கியத்தின் ஈற்றுச் சொல்லை ‘ஹையான்’ என்று ஜோராகப் படிப்பேன். What did you read? It is Hein, not Haiyaan. அது ஹேன் என்று திருத்துவார்.
ஆண்டுத் தேர்வில் ஹிந்தி பாடத்திற்கு மொத்த மதிப்பெண் 50. அது written / oral என இருந்தது. ஒப்புவித்தல் மனப்பாடப் பகுதி எனக்கு என்றுமே சிம்ம சொப்பனமாக இருந்தது. எங்களுக்கு மீராபாய், சந்த் கபீர் ஆகியோருடைய பாடல்கள் மனப்பாடச் செய்யுள் பகுதியில் இருந்தன. அவ்வயதில் எனக்கு அவை மறைப்புமிக்க சித்தர் பாடல்களுக்கு ஒப்பானது.
சந்த் கபீர் இயற்றிய ஈரடி குறட்பாக்களான ‘தோஹே’ மிகவும் பிரசித்தம். அதில் ஒன்றை ஒப்பிக்கச் சொன்னார். அந்நேரம் பார்த்து மறந்து போனது. Tell me one or two words, it is enough என்றார். யோசித்தபின் ‘Miss, it comes like Sathya barber thappu nahin (சத்யா பார்பர் தப்பு நஹின்) என்றேன். தலையில் அடித்துக் கொண்டார். Okay, tell me another dohe என்றார். Govind Paaya kadai (கோவிந்த் பாயா கடை) என்று இழுக்க, Uff... You are making my life miserable! என்று நொந்துக் கொண்டார்.😂 எப்படியோ ஹிந்தியில் முப்பத்தைந்து மதிப்பெண் பெற்று ஏழாம் வகுப்பிற்குச் சென்றேன். எட்டாம் வகுப்பு முடிக்கும்போது சரளமாக எழுத/ படிக்கத் தயாரானேன்.
இன்றும் அந்த couplets சிலவற்றை நினைவில் வைத்துக் கொண்டுள்ளேன். நான் சொதப்பிய அந்த தோஹே படத்திலுள்ளது. அது ;
‘சான்ச் பராபர் தப் நஹின், ஜூத் பராபர் பாப்...' - உண்மை பேசுவதைவிட பெரிய தவம் கிடையாது, பொய் பேசுவதைவிட பெரிய பாவம் கிடையாது.
‘குரு கோவிந்த் தோஹூன் கடேன், காகே லாகூன் பாய்ன்...' – குரு/ தெய்வம், இருவரின் போதனைகளில் யாருக்கு மதிப்பளிக்க வேண்டும்? குரு மூலமாக தெய்வத்தை அறிவதால் குருவின் சொல்லே மந்திரம்.
படிக்கவும் எழுதவும் கொஞ்சம் கொஞ்சம் பேசவும் ஹிந்தி இன்று எனக்குப் பயன்படுகிறது. மற்றபடி பெரிதாக என்ன கற்றேன் என்றால் எதுவுமில்லை! 😴 வடக்கே போகும்போது ஓரளவுக்கு எல்லோருக்கும் பேசுமளவில் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்பேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக