About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 4 ஜூலை, 2020

இளைய சமுதாயமே.. புதிய அத்தியாயம் படைக்க வா!

 நம் கண்ணுக்குப் புலப்படாத ஒரு கிருமி தன் அழிவாற்றலைக் கட்டவிழ்த்து விட்ட நிலையில், இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். நான்கு மாதங்களுக்கு முன், இங்கொன்று அங்கொன்று என்று ஆரம்பித்தத் தொற்று, ஆனைக்கொண்டான் பாம்பைப்போல் மெள்ள இவ்வுலகையே தன்வசம் கொண்டது. இது செய்த கபளீகரத்தில், வல்லரசு முதல் சிற்றரசு வரை கதிகலங்கிப்போய் நிற்பது உண்மை.

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியே நிலைகுலைந்து, பொருளாதாரம் வீழ்ந்து, தனிநபர் வாழ்வாதாரமே கேள்விக்குறியானது. எல்லா துறைகளிலும் பாதிப்பின் எதிரொலி கேட்க, பட்ஜெட்டுக்கு இணையான புதிய திட்டங்களும் நிதி ஒதுக்கீடும் அதிரடியாக செயல்படுத்தப்பட்டன. பல துறைகளில் அவசரகால மாற்றங்கள் நடந்தன. முதல்முறை சுனாமி வந்தபோது எப்படி இருந்ததோ, அதுபோல் இது இல்லை என்பதை ஊரடங்குக் காலம் புகட்டிய வெறுமையில் புரிந்துகொண்டோம். நித்தமும் அச்சத்தின் பிடியில் மக்கள். எதிர்காலத்தப் பற்றிய கவலையில், திடமனம் கொண்டவர்களையும் அசைத்துப் பார்த்தது. பெரும்பாலானோருக்கு இச்சூழல் சோதனை மிகுந்த சாபக்கேடாகவும், இன்னும் பலருக்குப் புதிய அத்தியாயத்தைத் துவங்கும் தருணமாகவும் வாய்த்தது என்றால் மிகையில்லை.

நிரந்தரப் பணியும் ஊதியமும் பெறுவோருக்கு நெருக்கடி இல்லை. ஆனால், Safe zone எனப்படும் பாதுகாப்பான வட்டத்திலேயே இதுவரை பழகியவர்களுக்குப் பணி உத்தரவாதமில்லை என்றதும், செய்வதறியாது தடுமாறினார். நம் இளைஞர்களிடம் அளவிடமுடியாத மாபெரும் ஆற்றல் கொட்டிக்கிடக்கின்றது. சரியான வழியில் அதைப் பயன்படுத்தி முன்னேறும் உபாயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். கல்வி கற்றபின் புதிதாக வேலை தேடுவோருக்கும், சொந்தமாகத் தொழில் தொடங்குவோருக்கும் இத்தருணம் வித்தியாசமாகத்தான் தெரியும். பட்டயப் படிப்பு முடித்த என் வாசகர், தன் நிலைமையை விளக்கிச்சொல்லி, தான் மேற்கொண்டு என்ன செய்வது என்று என்னைக் கேட்டார். கல்வி கற்ற/கற்காத, தொழில் அனுபவம் பெற்ற/பெறாத பலருமே, புதியதொரு சூழலில் தற்சமயம் இருக்கிறோம். சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட உலகப் பொருளாதார வீழ்ச்சியைப் போன்றே இப்போதைய நிலை உள்ளது. அவருடன் உரையாடியதை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

தனிமனித வாழ்க்கையில் எதிர்பார்ப்பு இருக்க வேண்டியதுதான் ஆனால், அது வரம்புக்குள் சாதிக்கக்கூடிய இயல்பான இலக்காக இருக்க வேண்டியது அவசியம். எதிர்காலத்தில் தான் இன்னவாக ஆக வேண்டும் என்று பள்ளிக்கூடப் பருவத்தில் நினைத்து வைத்திருந்த கனவு வசப்பட வேண்டும் என்றால், அதற்காக உழைக்க வேண்டும். மாறும் சமூகப் பொருளாதார வாழ்க்கைச் சூழலில் சிக்கியுள்ளோம்.

படிப்பினை

இருக்கும் நிலைக்கேற்ப தன்னை தயார்படுத்திக்கொண்டு முன்னேற கற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் நம்மைக் கடந்துபோகும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் நமக்குப் பாடம்தான். அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய உத்திகள் உண்டு. அவர்கள் பட்ட இன்னல்கள், அவர்களுக்குக் கிட்டிய படிப்பினைகள் நமக்கும் பொருந்தும். இவனிடமிருந்து நாம் பெரிதாகக் கற்றுக்கொள்ள அப்படி என்ன இருக்கிறது? இவ்வாறு நீங்கள் கருதினால் வரட்டுப் பிடிவாதத்துடன் இருப்பதைக் காட்டும். ஓர் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், காக்கை, கழுகு, அணில், நாய் போன்ற ஜீவராசிகளும் எனக்கு ஆசான்களாக இருந்து போதித்துள்ளன.

கண்மூடித்தனமாக வளர்ச்சி வேகமாக நிகழ வேண்டும் என்ற பேராசையில், அவசரகதியில் முயன்று, கடைசியில் தோல்வியில் முடிந்து சூடுபோட்டுக் கொள்வதுண்டு. ஆகவே, வேகம் முக்கியமல்ல; விவேகம் வேண்டும். எப்போதும் வாழ்க்கையில் நிதானமன ஒரு போக்கைக் கடைப்பிடித்து, கவனத்துடன் முன்னேற வேண்டும். இந்த உரையாடல், உங்களில் பலருக்கும் ஒற்றையடிப் பாதையில் துணைவரும் கைவிளக்காக இருந்து பயன்தரும் என்பதில் சந்தேகமில்லை.

உங்களில் பலருக்கும் நிறைய ஆசைகள் இருக்கும். தன்னம்பிக்கை பெற வேண்டும், சுயமாக முன்னேற வேண்டும், சொந்தக் காலில் நிற்க வேண்டும், சமுதாயத்தில் முத்திரை பதிக்க வேண்டும், மனித உறவுகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், கவலைகள் இல்லாமல் வாழ வேண்டும், சூழ்நிலைகளைக் கையாளத் தெரிய வேண்டும், மன அழுத்தமின்றி வாழ வேண்டும், நேரத்தை அருமையாக நிர்வகிக்க வேண்டும், ஆக்கப்பூர்வமான எண்ணங்களைப் பெற வேண்டும் என்று பலவிதமான சிந்தனைகளும் எதிர்பார்ப்புகளும் நிறைந்த கனவுகளுடன் இருப்பீர்கள்.

வாழ்க்கையைத் திட்டமிடுவதே, வெற்றிப்பாதையில் முதல் அடி வைப்பது போன்றதாகும். அவரவர் வாழ்க்கைப் பயணம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். அலுங்காமல் குலுங்காமல், கசப்பான அனுபவம் பெறாமல், வெகு சிலருக்குத்தான் வாழ்க்கைப்படகு கச்சிதமாக அமைவதுண்டு. அவர்களுக்கு அதிர்ஷ்டவசமாகவோ, யாருடைய தயவிலோ எந்தவொரு பிரச்னையுமின்றி அமையும். ஆனால், அவர்களுக்கு வாழ்வில் நல்ல படிப்பினையோ அனுபவங்களோ ஒருபோதும் கிடைக்காது. ஏன்? முயன்று சிரமப்படாமல், யார் உழைப்பிலோ பயணித்தால், சுயமாகக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுகிறது. சிலருடைய வாழ்க்கையில், இலக்கின் மார்க்கம் தெரியும். ஆனால், செல்வதற்குப் பாதையின்றி கட்டாந்தரையாக இருக்கும். அந்நிலையில், உழைத்து மேலும் கீழும் விழுந்து எழுந்து, நம்பிக்கையுடன் தொடர்ந்து பயணிக்கும்போது, அங்கே அத்தடத்தில் நடந்துபோக, எதிர்காலத்தில் ஒற்றையடிப்பாதை பிறந்துவிடும். அந்தப் பாதை என்ன? யாருடைய உழைப்பின் கால்சுவடுகளிலோ பதிவான பாதை என்பதை மறக்கக் கூடாது. பாதை உள்ளது! அதில் நீங்கள்தான் சுயமாகப் பயணித்தாக வேண்டும்.

பாதையை உருவாக்க வேண்டும்

ஆகவே, நாம் செல்லும் ஊருக்குப் பயணிக்கவல்ல, பாதை இல்லாமல் போனாலும், அதை உருவாக்க வேண்டிய கட்டாயம் இன்றைய சூழலில் உள்ளது. உங்களுக்கேற்றதொரு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், அதனை உருவாக்கிக்கொள்ள வேண்டும். கண்ணுக்கு எட்டிய தூரம்வரை நீர்நிலைகள் எங்குமே தென்படவில்லை என்னும் பட்சத்தில், நம் கால்களுக்குக் கீழே தோண்டினால் நீர் கிடைக்குமா என்று சிந்திக்க வேண்டும். கொஞ்சம் முயன்று உழைத்தால், பத்தடியில் நீர் கிடைக்கும் சாத்தியம் உண்டு. மேகம் திறந்துகொண்டு பெய்தாலும், அதைத் தேக்கிவைக்க குளத்தையாவது வெட்ட வேண்டும். ஆகவே, உழைக்க அஞ்சக் கூடாது!

முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும், எப்போதுமே வாய்ப்புகள் கண்ணெதிரே இலாகவமாகக் கையில் வந்து மாட்டும் என்று சொல்லிட முடியாது. கிரிக்கெட்டில், பேட்ஸ்மேன் அடித்த பந்தைத் துரத்திப் பிடித்து, அதை பவுண்டரிகுள்ளே தாவிக் குதித்து எம்பிப் பிடிப்பதுபோல்தான் இதுவும். வாழ்க்கையே ஆடுகளம்தான்! உழைப்பின் சுகமும் மனநிறைவும், சொகுசான வாழ்க்கையில் கிடைக்காது. எல்லா வசதிகளும் இருக்கும்; ஆனால், நெஞ்சுறுதியும் அனுபவமும் கிட்டாது.

ஆகவே, உழைப்புக்கு அடித்தளமாக விளங்குவது தன்னம்பிக்கை, லட்சியம், விடாமுயற்சி. இவையெல்லாமே, உந்துசக்தியாக உள்ளிருந்து கட்டளையிட்டுச் செயல்படுத்துகின்றன. உள்மனம் உங்களுக்கு உணர்த்துவதை உன்னிப்பாகக் கூர்ந்து கவனிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், சோம்பல் உங்கள் ஊக்கத்தைக் குறைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், உங்களுடைய ஆரோக்கியச் சிந்தனைக்கு மனம் அடிபணியும் என்றாலும், அதைவிட தாழ்நிலை எண்ணத்துக்கும், அதனால் உடல் பெறும் சுகத்துக்கும் அடிபணிந்தால், பின்னடைவுதான் ஏற்படும். ஆகவே, மனதும்-உடலும் ஒன்றையொன்று புரிந்துகொண்ட, பரஸ்பரம் உதவிக்கொள்வதை ஆக்கப்பூர்வ செயல்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

வழிகாட்டி அவசியம்

திட்டமிட்டபடி வாழ்க்கையைச் செவ்வனே வகுத்துக்கொள்ள, மூன்று அம்சங்கள் அத்தியாவசியமானது. அவை, பணம் – நேரம் – சக்தி. இவை சரியான விகிதத்தில் அமைந்துவிட்டால், அந்நபர் வெற்றியாளராவது உறுதி. கல்வி கற்கும் பருவத்தில் இருப்பவர்களுக்கும், வேலைதேடும் பிராயத்தில் உள்ளவர்களுக்கும், அதிகப்படியான நேரமும், உடலில் சக்தியும் இருக்கும். இந்தக் கொரோனா ஊரடங்கு காலத்திலேயே அதிகப்படியான நேரம் இருந்ததையும், என்ன செய்வதென்று தெரியாமல் வெட்டியாக உண்டு உறங்கிக் கழித்தவர்கள் ஏராளம். சிலருக்கு ஊதியமாவது வந்தது, பலருக்கு அதுவும் இல்லை. சிலருக்குச் சுயசம்பாதியம் இல்லாதபோதும், வாழ்க்கையின் லட்சியத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற வெறியும், சாதிக்க வேண்டும் என்ற கனலும் கண்ணில் தெரியும். இக்கூட்டத்தில், அப்போதும்போல் விதிவிலக்காக சோம்பேறிகளும் உண்டு. சுமார் முப்பது வயதுவரை இதுபோன்ற உத்வேகம் குறையாது. அந்தக் காலகட்டம்வரை, அவர்களைச் சரியாக வழிநடத்தவும், அவர்களது அபரிமிதமான நேரத்தையும் சக்தியையும் சரியாக நெறிபடுத்தத்தக்க வழிகாட்டி அவசியம்.

அதன்பிறகு அவ்வயதைக் கடந்தபின், நடுவயதுவரை உள்ளவர்கள் வெளியே ஓடியாடிப்போய் பணம் பொருள் சம்பாதித்துச் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். பகுதிநேர வேலைக்குப் போகலாமா, சொத்து சேர்க்கலாமா என்று எப்போதும் எண்ணம் இருக்கும். எத்தனை வயதுக்குள் என்ன வேண்டும் என்பதைச் சற்றும் பிராக்டிகலாக நினைத்துப் பார்க்காமல், கண்மூடித்தனமாக எல்லாவற்றுக்கும் ஆசைப்படுவோர் இச்சமுதாயத்தில் உண்டு. அது போன்றவர்களிடம் ஓரளவுக்குப் பணமும் சக்தியும் இருக்கும். ஆனால், 24 மணிநேரம் அதிகம் இருந்தால்கூட அவர்களுக்குப் போதாது. மன உளைச்சலால் அழுத்தம் எழ, அனைத்தையும் சாதிக்க வேண்டும் என பிரயாசைப்பட்டு, உடலைக் கெடுத்துக் கொள்வோர் உண்டு. என்னமோ நாளைக்கே பூகம்பமும் சுனாமியும் வந்து கொண்டுப்போய்விடும் என்பதுபோல், இவர்களுடைய அவசரமும் பதற்றமும் இருக்கும். இந்த வயதினர், அகலக்கால் வைத்து அதில் சறுக்கிடாமல் இருக்கவும், உடல்நலம் குன்றிடாமலும் இருக்க, சரியான திட்ட நிரலை வகுத்துக்கொண்டு, நிதானமாகச் சீராக முன்னேறினாலே போதுமானது.

முதுமையை நோக்கி அறுபதுகளைக் கடந்தபின், உடலும் மனமும் தளர்ந்துபோயிருக்கும் ஆனால், நேரமும் பணமும் ஓரளவுக்கு இருக்கும். ஓய்வுபெற்றும்கூட, பணிக்குச் செல்ல குடும்பச் சூழல் வற்புறுத்தினாலும், அதை எடுத்துச் செய்ய மனம் நினைத்தாலும், உடலில் சக்தி இருக்காது. இது வேடிக்கையாக இருக்கிறது, அல்லவா? ஒவ்வொரு வாழ்க்கைப் பருவத்திலும் மூன்று அம்சங்களில் ஏதோவொன்று இல்லாமல் போகும் நிலை இருக்கும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த மூன்றும் ஒருசேரக் கிடைக்கப்பெறுவது என்பது அபூர்வம். இந்த ரகசியத்தை இப்போது தெரிந்துகொண்டீர்களா? ஆகவே, இளைஞர்களே உங்கள் கையில் இருக்கும் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்காமல், அதை வைத்துக்கொண்டு, அடுத்தகட்டத்தில் என்ன பெறலாம் என்பதை ஆக்கப்பூர்வமாக சிந்தித்துச் செயலாற்றுங்கள். நீங்கள் உழைத்த கொஞ்ச காலத்திலேயே, பயண மார்க்கத்தில், இப்போது ஒரு சன்னமான ஒற்றையடிப்பாதை உங்கள் கால்தடத்தால் உருவாகியிருப்பது கண்ணுக்குத் தெரியும். அதிலிருந்து கிளைப் பாதைகள் உங்களை வேறு இடங்களுக்கு இட்டுச் செல்லும்.

கொரோனா பிடியிலிருந்து மீண்டு எழும் இந்தியா மிகப்பெரிய வல்லரசாகத் திகழப்போவது உறுதி. ஒரு நாடோ/நபரோ புதிய பாதையை வகுத்துக்கொண்டு வளர்ச்சியடைய இயற்கையே கொடுத்த ஒரு தருணம்தான் இது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புதிய அத்தியாயம் உதயமாகும். இந்தியப் பொருளாதாரம் அதிவிரைவாக முன்னேறி உலக அரங்கையே கலக்கப்போகிறது. நாட்டின் முன்னேற்றத்தில் பங்கு வகிக்கும் நீங்களும் சாதனையாளரே! தொடர்ந்து முன்னேறுங்கள்!


way to succeed

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக