எல்லாவற்றையும் கொரோனா அடியோடு புரட்டிப்போட்டு விட்டது. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும்போது சோதனைகளே அதிகம் தாக்கும்.
1. பள்ளிக்கல்வி மாணவர்களுக்குக் கற்றலில் பின்னடைவு ஏற்படும். ஆன்லைன் நேரலை மக்கர் செய்தால் ஐயோ பாவம் மாணவர்கள். படிக்கவேண்டிய பாடங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். படிக்க ஆர்வம் இருக்காது. தர்மப் பிரமோஷனால் கல்லூரியில் சேர்க்கை மற்றும் cut off சர்ச்சையில் குழப்பும்.
2. ஊரடங்கின்போதே பணியோய்வு பெற்றுச் செல்லும் மூத்த பணியாளர்களுக்கு மனக்குறைகள் கூடும், அதிகாரப்பூர்வமான பிரிவு உபசார விழா இருக்காது.
3. ஆறு மாதங்களுக்கு முன்பாகவே சத்திரம் புக் செய்துவிட்டுத் திருமணத்திற்குக் காத்திருக்கும் வரன்களில் யாருக்கேனும் ஜாதக ரீதியாக காலதாமதம் இருந்திருக்கும். அதையும் மீறி தசாபுக்தி சாதகமாக இருந்தோருக்குக் குறித்த நாளில் வீட்டிலோ/கோயில் சன்னதியிலோ எளிமையாக நடந்து முடிந்திருக்கும்.
4. முக்கியமான அறுவை சிகிச்சை செய்துகொள்ள நாள் குறித்த நோயாளிகளுக்கு அதை இந்நேரம் செய்து கொள்வதா வேண்டாமா என்ற திரிசங்கு நிலை.
5. டிவி சேனல்களின் பாடு திண்டாட்டம்தான். சதி சக்குபாய், பக்தமீரா, அசோக் குமார், ஔவையார் போன்ற தேய்ந்துபோன கருப்பு-வெள்ளைப் படங்களை மீண்டும் மீண்டும் ஓட்டியாக வேண்டும்.
6. வீட்டில் சமைக்காமல் இதுநாள்வரை டிமிக்கி அடித்த இல்லத்தரசிகளுக்கு சமையலறை சிறைவாசம்.
7. கடைசியாக மார்ச் மாதம் இறுதியில் 725 ஆவது சீரியல் தொடர்வரை பார்த்த குடும்பப் பெண்கள் மீண்டும் ஆரம்பத்திலிருந்து பார்த்து அழவேண்டும்.
8. தண்ணீர் கேன் வாங்குவதுபோல் மாஸ்க், சானிடைசர் குடும்பம் பூராவுக்கும் வாங்குவது மேலும் செலவை அதிகரிக்கும். இரண்டு மாதத்து மின்சார கட்டணம் எகிறும்.
9. திரையரங்கு உரிமையாளர்களுக்குப் பெருத்த நஷ்டம். இனி படமும் ஓடாது, திருமண மண்டபமாக மாற்றவும் முடியாமல் போகும். மண்டபங்கள் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை மைய்யங்களாக மாறும். இனி பெரிய அளவு கேடரிங் சர்வீஸ்களுக்கு அவசியம் குறையும்.
10. வீட்டுக்கு வந்துபோகும் உறவினர்களுடனான தொடர்பு அப்படியே மெள்ளக் குறைந்து அற்றுப்போகும்.
11. 'அதிவேகமாகப் பரவும் தொற்று' 'கொத்துக் கொத்தாக ஒரே நாளில்' 'சிகிச்சைப் பலனின்றி' 'மக்கள் பீதி' போன்ற அச்சம் தரும் சொற்களை தினமும் எல்லா செய்தியிலும் கேட்டுக்கேட்டே உளவியல்/ உடல்நல பாதிப்பு வரும்.
12. கீழ்நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகும்போது திடமனம் கொண்டவருக்கே விபரீத எண்ணங்கள் எழும்.
இன்னும் யோசித்தால் நிறையவே குமுறல்கள் வரும். மௌன சாட்சியாக நம் வாழ்க்கை அசம்பாவிதமின்றி தெய்வ பலத்தால் கடந்து போகவேண்டும். இறைவா, சக்தி கொடு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக