ஒரு முகநூல் பக்கத்தில் இருந்த மீம் பதிவு எனக்குச் சிரிப்பை வரவழைத்தது. ‘கறுப்பர் கூட்டத்தை எதிர்க்கும் இந்துக்களே! முருகன் என்ற தமிழ்ப் பெயரை எந்த பார்ப்பனராவது வைத்துக் கொண்டதுண்டா?’ என்று அதில் இருந்தது. சஷ்டி கவசத்தைத் தரக்குறைவாக விமர்சித்த காரணத்திற்காக அவர்களைக் கண்டித்த முருக பத்தர்களிடம் தங்கள் கோபத்தை இவ்விதம் காட்டியுள்ளனர்.
பாட்டன், முப்பாட்டன் பெயர்களையே ஒரு குடும்பத்தில் சுழற்சியில் வைப்பது பொதுவான வழக்கம். தொட்டிலில் நாமகரணம் செய்தபிறகு காலத்திற்குத் தக்கபடி வேறு பெயர் வைப்போர் உண்டு. நமக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் அப்படியான தமிழ்ப் பெயர்களை வைத்துள்ளனரா என்று யோசித்தேன். குணவதி, முருகபூபதி, செங்கமலவல்லி, வேம்பு ஐயர், வள்ளி, சடலாண்டி, மலையம்மா, செல்லம், கொழுந்து ஐயர், என்று ஏகப்பட்ட பெயர்கள் பளிச்சென்று நினைவில் வந்து போயின. பெயரில் வடமொழி/தெம்மொழி என்று வகைப்படுத்திப் பார்ப்பது மடமை. ஜாதிகள் எதுவாயினும் அவரவர் மூதாதையர்களின் பெயரோ அல்லது அவ்வூர் கிராம தேவதையின் பெயரோதான் பெரும்பாலும் இருக்கும்.
தாமரையை 'கமலம்' என்று சொல்லாமல் ‘மலம்’ என்றால் அது பூசைக்குரிய மலர் ஆகாதா? ஆம்பலைச் சோம்பல் என்றால் அதன் வளரியல் தன்மை மாறிவிடுமா என்ன? எங்கள் ஊரில் காவேரிக்கரை கொரம்பு அருகே பணி செய்தவர் முருகு சுப்பிரமணியம். நாளடைவில் அவர் மூசுமணி, சுப்பாமணி, சுப்புணி என படிப்படியாய்ச் சுருங்கி காலவோட்டத்தில் ‘கொரம்பு சுப்பு’ என்று நிலைத்து விட்டது.
நம் மக்கள் வல்லி/வள்ளி பெயரை இன்னும் சரியாகச் சொல்வதில்லை. கனகவல்லி, பூவிருந்தவல்லி, நாகவல்லி போன்ற பெயர்களை, கனகவள்ளி, நாகவள்ளி என மாற்றி எழுதுகிறார்கள். முருகனின் வள்ளிதான் வள்ளி. அம்மன் பெயர்களிலுள்ள வல்லியைச் செம்மான் மகளான வள்ளியாக மாற்றுகிறார்கள். பொருள் தராது!
கறுப்பரோ வெளுப்பரோ, யாராக இருந்தாலும் இறைவனின் பெயர்களில் பேதம் பார்க்கும் எண்ணம் இருந்தால் இன்னும் பல பிறவிகள் எடுத்துப் பெயர் சூட்டிக்கொண்டு ஊழ்வினையைக் கழித்துத் தெளிவு பெற வேண்டியதுதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக