வாசக நண்பர் ஒருவர் நீண்டநாள் விருப்பமாக என்னுடைய புத்தகத்தை முதல்முறை வாங்கினார். ஜூன் தொடக்கத்தில் புத்தகத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்தபின் அது கூரியர் அலுவலகத்திலேயே பட்டுவாடா ஆகாமல் பதினெட்டு நாள்கள் இருந்துள்ளது. கடந்த வாரம் இவரே நேரில் போய் வாங்கி வந்துள்ளார். மாலையில் சித்தர் நூலை வாங்கி வந்து பயபக்தியுடன் அதைப் பூஜை அடுக்கில் வைத்தபின் எடுத்துப் படித்தார். அன்று முன்னுரை மட்டுமே படிக்க முடிந்ததாம்.
மறுநாள் முழு ஊரடங்கு நிலவியதால் அவருடைய வடநாட்டுச் சமையல்காரர் தேவையான உணவுப் பண்டங்களை வாங்கி வைத்துவிட்டார். ஞாயிறன்று மதிய உணவுக்குக் கோழிக் குழம்பும் மீன் வறுவலும் சமைத்து அமர்க்களப்படுத்தி விட்டார். நம் நண்பர் அன்று மாலை புத்தகம் வாசிக்கலாம் என்று கையில் எடுத்தபோது அவசர அழைப்பு வரவே படிக்க வாய்ப்பு கிட்டவில்லை. அதன்பின் இன்று வரை புத்தகத்தை வாசிக்க வேண்டுமென அவர் நினைத்தபோதெல்லாம் ஏதோ காரணத்தால் தடங்கல் வந்து வாசிக்க முடியவில்லை என்று நேற்று சங்கடப்பட்டார்.
"புத்தகத்தை பூஜையில் வெச்சீங்க சரி. அதுக்கப்புறம் மறுநாளே மாமிசம் சாப்பிட்டீங்க. அது வயிற்றில் இருக்கும்போதே பூஜை அறையிலிருந்த சித்தர் நூலை எடுத்ததால அதன் புனிதம் கெட்டுப்போகிற மாதிரி ஆயிடுச்சு... இதைப்பத்தி சிந்திச்சிருக்க மாட்டீங்க. ஆனால் கைக்கு வந்தும் இன்னி வரைக்கும் படிக்க சந்தர்ப்பம் வாய்க்கல பாத்தீங்களா?" என்றேன்.
"சார், தப்பு பண்ணிட்டேனோ? திரும்பி எப்போ படிக்க முடியும்?"
"இனி படிச்சு முடிக்கிற வரைக்கும் மீன் மாமிசம் தொடாதீங்க. அடுத்த வாரம் புதன் (அ) வெள்ளிக் கிழமையில தொடங்குங்க. அந்த சமையல்காரருக்குப் புரியறா மாதிரி சொல்லி வையுங்க. பூஜை அறையில சுத்தபத்தமா நுழையணும். போகரிடம் மன்னிப்பு கேட்டுட்டு படிக்க ஆரம்பிங்க" என்றேன்.
"சார், இதை அனுபவபூர்வமா நல்லா உணர்ந்துட்டேன். அதை வெறும் புத்தகமா நான் பாத்ததுதான் தப்பு போல... நாக்கை என்னால கட்டுப்படுத்த முடியலை... நடந்ததை என்னாலேயே நம்ப முடியலை, சார்!" என்றார்.
முன்னொரு சமயம் திருப்பூரைச் சேர்ந்த ஒரு வாசகர் தனக்கு நூல் கூரியரில் வந்ததும் அதைப் பிரித்துப் பார்த்து நுகரும்போது அதில் அச்சுமை வாசத்திற்குப் பதில் திருநீறு வாசமே இருந்தது. அது எப்படி? என்றார். எண்ணமே சக்தி வாய்ந்த அனுபவத்தைத் தருகிறது என்றேன். ஆக, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம். சிவ சித்தம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக