எனக்குத் தெரிந்த ஒருவர் ரயில்வேயில் பரிசோதகராகப் பணி செய்கிறார் ஓய்வு பெறும் தருவாயில் இருக்கிறார். அவர் வெளியே நின்று மொபைலில் தன் சகா யாரிடமோ உரக்கப் பேசும்போது, 'நீ சேலத்துல அவன்கிட்டே வாங்கிக்க, உனக்கு மூணு எனக்கு ரெண்டு, வரும்போது கோயம்புத்தூர்ல நான் பாத்துகிறேன். எனக்கு ரெண்டு உனக்கு ரெண்டு' என்று பேசுவார். சரிதான்! வியாபாரிகள் கொண்டுவரும் சரக்கிற்கு எடை குறைத்துச் சலுகையில் கட்டணம் வாங்கும்போது அதற்குப் பிரதிபலனாக அந்த வியாபாரியே கடலை, துண்டு, வெண்ணெய், பருப்பு என்று சகலமும் தந்து கவனிக்க வேண்டும் என்பது புரிந்தது. இத்தனைக்கும் லகரத்திற்குக் கூடுதலாக மாத ஊதியம் பெறுகிறார். இருந்தாலும் வாங்கும் கை நீளம்!
அவர் நெற்றியில் ஒருநாள்கூட திருநீறு அணிந்து நான் பார்த்ததில்லை. நேற்று மந்திரகோஷம் அதிர அயோத்தி பூமிபூஜை நேரடி ஒளிபரப்பு எல்லோர் வீடுகளிலும் முழங்கின. 'மோடிக்கு வேற இன்னா வேலை? எதைப் பத்தியும் கவலையில்லாம அங்கேபோய் உக்காந்துகினாரு" என்று யாரிடமோ எதிர்ப்பைக் காட்டிப் பேசிக் கொண்டிருந்தார். அவர் வீட்டில் ஷிர்டி பாபாவின் கேலண்டர் தொங்கிக் கொண்டிருக்கும். அது எதற்கோ?!
சென்றவருடம் அவருடைய ஒரே மகன் வெளிநாட்டில் படித்துவிட்டு வந்தார். இதுவரை சரியாக வேலை கிடைக்காமல் உண்டு உறங்கிப் பொழுதை ஓட்டிக்கொண்டிருக்கிறார். 'ஒரு கோடிக்கு மேலேயே செலவு செய்து படிக்க வெச்சோம். மாசம் ஒரு லட்சம் குறையாம சம்பளத்துக்குதான் அவன் போவணும்னு சொல்ட்டேன்' என்றார். 'நீங்கவேற.. கம்பனிங்க இப்போ இருக்கிற நிலையில வருஷத்துக்கு ஒன்று- ஒன்றரை லட்சம் கிடைச்சாலே பெரிசுங்க. நிதிச்சுமையைக் குறைக்க ஒப்பந்தப் பணியாளர்களைத்தான் எடுக்கிறாங்க' என்றேன்.
'உனக்கு ரெண்டு எனக்கு நாலு' என்று இத்தனை வருடங்களாக வாங்கியதன் மொத்த மதிப்பு எப்போது பைசா மீதமின்றித் தீருமோ அப்போதுதான் அவர் மகன் வேலைக்குப் போவார் என்பதை அவர் இன்னும் அறியவில்லை. அவர் பணியோய்வு பெற்றாலும் ஊழ்வினை தொடர்ந்து பணியில் இருக்கும்! இவருடைய பாவங்களின் சுமை தாங்கியாக ஏகபோக உரிமையுடன் அவருடைய மகன் திகழ்வார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக