மக்கள் தொலைக்காட்சியில் சனி/ஞாயிறு கிழமைகளில் காலை 7-7.30 வரை 'சித்தி தரும் சித்தர்கள்' என்ற தலைப்பில் திரு.மீனாட்சிசுந்தரம் அவர்கள் உரை நிகழ்த்தி வருகிறார். சித்தர்கள் பற்றியும் அவர்களது லீலைகள் பற்றியும் விளக்கமாகச் சொல்லி வருகிறார்.
கடந்தவார நிகழ்ச்சியில் பேசும்போது, 'சுப்பிரமணியனும் முருகனும் ஒருவரல்ல வேறுவேறு என்று உரை ஆசிரியர்கள் சொல்வது தெரிகிறது' என்றார். இங்குதான் பலபேர் தவறு செய்கிறார்கள். புத்தகங்கள் ஒருபுறம் படித்தாலும் சுயமாகப் பாடல்களை ஆராய்ந்து ஒப்பிட்டுத் தனியாக எழுதிக்கொண்டு மெய்ஞானத்திற்கு எது தெளிவாகிறதோ அதைக் கூறவேண்டும். அக்காலத்தில் (கழக) நூலாசிரியர்கள் தம் போக்கில் ஏதோவொன்றை சந்தேகமாக எழுதியதும், பிற்பாடு அதைப் படிக்கும் மக்கள், அப்பெயர்களில் ஆரியம்- தமிழ் என்று குழம்பிய நிலையில் விவாதம் செய்வார்கள்.
அகத்தியருக்கு அருளப்பட்ட 'சுப்பிரமணியர் ஞானம் 550' என்ற நூலில் முருகப்பெருமான் தன்னுடைய ஆதார ரகசியங்களையும் பெயர் காரணங்களையும் விவரித்து உரைத்துள்ளார். அது தெளிவாக உள்ளது. அப்படி இருக்க, தொலைக்காட்சியில் உரையாற்றுவோர் அருளப்பட்ட நூல்களிலுள்ள பாடல்களை மெனக்கெட வாசிக்காமல் எங்கோ படித்த புத்தகத்தில் சொல்லப்பட்டதை இங்கே சொன்னால், நிகழ்ச்சியைப் பார்க்கும் நேயர்கள் அதையே உண்மை என்று நம்பிடுவார்கள். அதுவே சர்ச்சைக்கு வழி வகுக்கும்!
எனக்குத் தெரிந்து இதுபோல் வேறுபடுத்திப் பேசியவர்கள் திரு.சுகி சிவம், திரு. மீனாட்சிசுந்தரம். என்னைப்போன்ற வெகுசாமானியன் கண்களுக்குப் புலப்படும் கருப்பொருள் பாடல்களை இவர்கள் தவறவிட்டது ஏன் எனத் தெரியவில்லை. பூரண பிரம்மக்ஞானம் பெற்ற வாசி மயிலேறும் சுப்பிரமணியர் தனக்கு முருகா என்ற நாமம் எப்படி வந்தது என்பதை இப்பாடலில் சொல்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக