About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 10 நவம்பர், 2024

தடம் பதித்த எழுத்தாளர்!

இன்று மறைந்த எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் நிறைய அமானுஷ்ய படைப்புகளைத் தந்து அசத்திய சாதனையாளர். நான் பிளஸ்டூ படிக்கும் காலத்திலேயே அவருடைய தொடர்களை ஆனந்தவிகடன் இதழில் வாசித்துள்ளேன். 


எனக்குத் தெரிந்து கடந்த ஓராண்டாகவே அவர் உடல்நலக் குறைவுடன் இருந்தார். நோய் உபயம் கொரோனா தடுப்பூசியின் பக்கவிளைவு. என்னோடு சில சமயம் chat செய்யும்போது தன்னுடைய உடல்நலம் பற்றிப் பேசுவார். 

"நீங்கள் எழுதியவரை போதும், மூளைக்கு ஓய்வு தாருங்கள், பொழுதுபோக்காக நீங்கள் விரும்பும்போது எழுதுவது வேறு, வார இதழ்களுக்கு/திரைப்படத்திற்கு கட்டாயம் எழுதித் தந்தாக வேண்டும் என்று வருத்திக்கொண்டு எழுதுவது வேறு. சதா சிந்தனையுடன் இருந்தால் இதயத்திற்கும்/ மூளை நரம்பு மண்டலத்திற்கும் நல்லதல்ல" என்று சொல்வேன்.

அதற்கு அவர், "நான் ஒரு காலத்தில் டிவி சீரியல், வார இதழ் தொடர், நாவல் என்று நிறைய எழுதியபோது வராத stress ஆ இப்போது வந்துவிடப் போகிறது? ஆனால் இது stressஸால் ஏற்படுவது என்று டாக்டர் சொல்கிறார்" என்பார்.

எது எப்படியோ, நேரம் வரும்போது விதி வேலை செய்துவிடுகிறது. காலை நேரம் ரத்த அழுத்தம் மாறுபட மூளையில் ரத்தம் உறைந்து பிரக்ஞை தப்பி மாரடைப்பும் வர அதனால் நிலை குலைந்து குளியலறையில் விழுந்து உயிர் போயிருக்கும். குளியலறை கழிவறை எல்லாம் சனியின் ஆதிக்கம் நிறைந்த பகுதி என்பதால் பெருக்கி சுத்தம் செய்து தரை வழுக்காதவாறு ஈரமின்றிக் காயவிடுவதே சரி. 

'மடப்புரத்து காளி' என்ற புதிய தொடரை இரண்டு வாரங்கள் முன்புதான் அவர் தொடங்கினார். தசமஹாவித்யா மற்றும் பலி பூசைகள் பற்றிய திகில் தொடராகும். அதை மேற்கொண்டு எழுதவிடாமல் தெய்வ சக்தி தடுத்துள்ளதாகவே நினைக்கிறேன்.

அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாதது. ஓம் சாந்தி! 🕉️🙏

-எஸ்.சந்திரசேகர்


சனி, 2 நவம்பர், 2024

சித்தருடன் ஓரிரவு!

 ஏசி மெக்கானிக்காக இருக்கும் என் வாசகர் திரு.டில்லி பற்றியும் அவருடைய கொல்லிமலை அனுபவத்தையும் சில வருடங்களுக்கு முன் பழைய பதிவில் சொன்னேன். அது உங்களுக்கு நினைவிருக்குமா என்பது தெரியாது. இன்று அவர் தொடர்பில் வந்தார். 

சதுரகிரியில் அமாவாசை பூஜை தரிசனத்திற்குச் சென்று வந்ததையும், கோரக்கர் குகையில் தனக்கு நடந்த அமானுஷ்யத்தையும் சொன்னார்.  அங்கே தன் கோயம்புத்தூர் நண்பர் இவருடன் சேர்ந்துகொண்டார். இருவரும் சேர்ந்து மலையேறி உள்ளனர். அப்போது கோரக்கர் குகைவரை அந்த கோவை நண்பர் கஷ்டப்பட்டு வந்து, அதற்குமேல் தன்னால் வரமுடியவில்லை கால்கள் வலிக்கிறது என்று சொல்லி அங்கேயே தங்கிவிட்டாராம். 

“சார், நீங்க ஏறிப்போய்ட்டு இருட்டறதுக்குள்ள வாங்க, யாகத்துக்கு நான் தயார் செய்து வைக்கிறேன்” என்றாராம். டில்லி மட்டும் மேலே போனார். சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் தரிசனம் முடித்து நேரே தவசிப்பாறைக்குப் போயுள்ளார். அங்கே யானை ஆறு முறை ஓசை எழுப்பி இவரைப் பார்த்துவிட்டு மெல்லக் கடந்துபோனது. பிறகு இரவு 7மணிக்குள் கீழேயிறங்கி வந்துவிட்டார். நள்ளிரவு யாகம் வளர்ப்பதற்குச் சுருக்க வந்துசேர்ந்தார். அப்போது இவருடைய கோவை நண்பருடன் இன்னொருவர் யாரோ அங்கே இருந்துள்ளார். அவர் மிகப்பிரமாதமாக யாக ஏற்பாடு செய்துவைத்திருந்தார். அந்த மூன்றாம் நபர் அங்கே வருவது வழக்கம்தான் என்பதால் தானும் இவர்களுடன் யாகத்தில் கலந்துகொண்டு பூசிக்க விரும்புவதாகச் சொல்லியுள்ளார்.  

படத்தில் தாடியுடன் இருப்பவர் டில்லி. இரவு யாகம் நிறைவாய் நடத்தி முடித்துள்ளனர். கோரக்கர் குகையில் டில்லி மற்றும் அவரது கோவை நண்பர் யாகம் வளர்த்துப் பூசித்ததை இந்த மூன்றாம் நபர் டில்லியின் மொபைலில் சில படங்கள் எடுத்தார். மறுநாள் காலை அமாவாசை நேரம் முடிகிறது என்பதால் அதற்குப்பிறகு மேலே ஏறிச்செல்ல அனுமதி இல்லை. மூவரும் கீழே இறங்கி வந்துவிட்டனர். அப்போது அந்த மூன்றாம் நபர் டில்லியைப் பார்த்து, “வரீங்களா இன்னொருவாட்டி கோரக்கர் குகை வரைக்கும் சங்கிலி புடிச்சிட்டு ஏறிப்போய் வந்துடலாம்” என்றுள்ளார். ஆனால் டில்லி, “ஐயா, நேத்துதான் மேலே போயிட்டு வந்து யாகம் வளர்த்து, இப்போ கீழே இங்கே இறங்கி வந்ததில் உடல் அசதியாய் இருக்கு. மன்னிச்சிகங்க நான் வரலை” என்றார்.

“சரி, அப்போ நான் சீக்கிரம் போயிட்டு வந்துடறேன்” என்று சொல்லி இவர்கள் கண்முனே நடந்துபோய் கணநேரத்தில் மறைந்தார். டில்லி வாயடைத்துப்போக, கோவை நண்பர் தேம்பி அழுதாராம். சினிமாவில்தான் இப்படி எல்லாம் காட்டுவாங்க, கண் எதிரே காத்துல மறைந்தது பார்த்தது உடம்பெல்லாம் சிலிர்த்து நடுங்குது சார். ராத்திரி முழுக்க எங்களோட இருந்தவரோட பெயர், விலாசம், ஃபோன் எதுவும் கேட்காம விட்டுட்டேன். ஆனால் அவரிடம் அதிகாலையில் காலில் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் வாங்கினேன். வேண்டாம்... விழாத... பரவாயில்ல.. அப்படீன்னு சொல்லிட்டு ஆசிர்வதித்தார். ஆடு மாடு மலையேறுவதுபோல் சரசரனு சரிவுப்பாறைல ஏறினார்.  அங்கே இன்னொரு குகையோரம் உட்கார்ந்து தியானம் செய்ய இடம் பத்தாது சார், ஆனால் இவர் பாறை இண்டுக்குள்ள தலையை வைத்து செங்குத்தாக உட்கார்ந்தது தியானம் செய்ததை பார்த்து பிரமிச்சுப் போனேன். இவர் எப்படிதான் சறுக்கு பாறையில் ஆடு மாதிரி லாவகமாக ஏறிப்போறாரோனு என் மனசுல நினைச்சேன் சார். அவர் திரும்பிப் பார்த்து 'அதுவா பா? நான் கிராமத்தான்... அதெல்லாம் தன்னால் வந்திடும்' னு சொல்றார். அங்கே அவர் எடுத்த படங்களை எல்லாம் உங்களுக்கு அனுப்புறேன். நீங்கதான் அதைப்பார்த்து என்ன ஏதுனு சொல்லணும்” என்றார்.

அவர் அனுப்பிய படத்தை ஜூம் செய்து பார்த்தேன். என்ன ஆச்சரியம்! அதில் நந்தியெம்பெருமான் அமர்ந்தபடி மத்தளம் வாசிக்கும் பாவனையில் கைகள் வைத்திருந்தார். இரண்டு கொம்புகள், தொங்கும் காது மடல்கள், கழுத்து, முகம், தலைமேல் ஷ்ருங்க மத்தி எல்லாம் அவர் நந்தீஸ்வரர்தான் என கண்டுபிடிக்கும் வகையில் இருந்தது. நான் இதை எடுத்துச்சொன்னதும் டில்லி தனக்குக் கிடைத்த பேறு என்று ஆனந்தப்பட்டார். நாமும் கண்டு தரிசித்துக்கொள்வோம். ஓம் நந்தீசாய நமோ நமஹ!

-எஸ்.சந்திரசேகர்







ஞாயிறு, 13 அக்டோபர், 2024

நாசூக்காக!

என் நண்பர் ஒருவர் தன் மாமாவின் பெருமைகளை என்னிடம் பேசும்போது,

"அவர் இந்த வயசுலேயும் விடாம யோகா செய்வார், ஃபிட்டா வெச்சிப்பார், சுத்த சைவம்தான், வாரக்கடைசியில டிரிங்க்ஸ் பண்ணுவார்."

"நல்ல விஷயம்தான? கூடுதலா வருமானம் ஆச்சு! வீட்லயே டிரிங்க்ஸ் பண்ணி அதைக் காதும் காதும் வெச்ச மாதிரி யாருக்கு விநியோகம் பண்ணி விக்கிறாரு? அக்கம்பக்கம் வாடை வருமே. திராட்சையோட கோதுமையா பார்லியா... எதைப் போட்டு பண்றாரு?"

"ஐயோ... அவர் பண்ணி விக்கலை... குடிக்கிறாரு."

"குடிகாரர்னு தெளிவாச் சொல்லுங்க. இங்கிலீஷ்ல சொல்லவே அர்த்தம் மாறுதில்ல. அவருக்காக வெட்கப்பட்டு நீங்க எதுக்கு பாவம் நாசூக்கா தன்மையா சொல்லணும்?"

"சேச்சே.. அந்த அளவுக்கு குடிகாரர்னு சொல்லமுடியாது.. பையன்தான் அளவா கிளாஸ்ல ஊத்தி கொடுப்பான்."

"ஏங்க... குடிக்கிறவர்க்கு அளவா ஊத்தி குடிச்சிக்க தெரியாதா என்ன? இதுக்குனு ஒருத்தர் பக்கத்துல மெனக்கெட நின்னு ஊத்தி வேற தரணுமா? சரியாப்போச்சு."

அவர் மாமாவின் பிரதாப சரித்திரத்தை நிறுத்திக்கொண்டார். 😂

குடிகாரன் என்ற தகுதியைப் பெற ஏதோ அளவீடு வைத்திருப்பார்களோ? 🤔

-எஸ்.சந்திரசேகர்



வியாழன், 10 அக்டோபர், 2024

புதிய வெளியீடு!

ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியான என் புதிய படைப்பு "ஞானம் தரும் சித்தர் பாடல்கள்" விலை ₹150. பதிப்பகம் DK Publishers, 📞 99404 98435, 99406 64635



செவ்வாய், 8 அக்டோபர், 2024

ஆதித்யா!

 


ஒரு சூரியன் மட்டும் இருப்பது போலவும், முற்றிலும் அது எரிந்து பஸ்மம் ஆகிவிட்டால் எதிர்காலத்தில் பூலோக உயிர்களுக்குத் தேவையான வெளிச்சமும் வெப்பமும் கிடைக்க என்ன செய்ய என்று விஞ்ஞானிகள் கவலைப்படுகிறார்களாம்.  சித்தர்களின் ஆய்வுப் பாடல்களைப் படித்துப் பொருள் அறிந்தால், விஞ்ஞானிகள் பிதற்றவோ அச்சப்படவோ வேண்டாம். 🤔

'துவாதச ஆதித்யர்களில் தான் விஷ்ணு' என்று பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார். சிவன் தன்னுடைய வலது கண்ணில் சூரியனையும், இடது கண்ணில் சந்திரனையும் வைத்துள்ளதால், சூரியனை அழிவற்றவனாகவே கருதவேண்டும். 

ஒரு மஹாயுகம் என்பது நமக்கு 4,320,000 ஆண்டுகள், அதாவது 12000 பிரம்மதேவர் ஆண்டுகள் என்பதாம். 12 ராசிகளுக்கு வீதம் 12 சூரியன்கள் சுழற்சியில் வந்து போனால், தாராளமாக ஒவ்வொருவரும் 1000 தேவ ஆண்டுகள் பூரணமாக ஒளி வீசலாம். அவ்வப்போது தங்களுடைய ஒளிரும் பணி முடிந்ததும் அவர்கள் சிவ பூஜையும் யாகமும் செய்து சக்தியைத் தொடர்ந்து கூட்டுகிறார்கள். ஆதித்ய மண்டலத்தில் என்ன நடக்கிறது என்பதை அங்கே போய் போகர் பார்த்துள்ளார். ஆக ஆதித்யர்க்கு முடிவில்லை.

அதனால்தான் கோயில் கல்வெட்டுகளில் நம் மன்னர்கள் தம் ஆணைப்படி ஏற்படுத்தும் பூஜா கட்டளைகளும்,  திருவுண்ணாழியில் சுவாமிக்கு விளக்கு எற்றுவதையும் 'சூரியசந்திரர் உள்ளவரை தொடரவேண்டும்' என்றே வடித்தனர்.

-எஸ்.சந்திரசேகர்

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

போற்றத்தக்கவர்கள்! 🙏🙏

அசைவர்களுக்கே இது தாங்க முடியாத துர்நாற்றம் என்றால் என்ன சொல்ல? சில அண்டை வீடுகளில் மீன் கோழி ஆடு மாடு குடல் சமைக்கும்போது ஜன்னல் கதவு எல்லாவற்றையும் திறந்து வைத்து டார்ச்சர் செய்வார்கள். அவர்களாலேயே தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு ஒரு துர்நாற்றம் பரவும். ஏதோ நம்மைப் பாழும் நரகத்தில் தள்ளியது போன்ற பிரமை ஏற்படும். 🤔

சுத்தம் செய்து நீரில் கழுவியும், மணம் வீசும் புதினா இஞ்சு பூண்டு மசாலா எல்லாம் அரைத்துப் போட்டும் இவ்வளவு துர்நாற்றம் வீசும் என்றால்... அந்தப் பதார்த்தத்தைச் சகித்துக்கொண்டு ரசித்து ருசித்து உண்ண முடியும் என்றால் அவர்கள் ஞானியரே என்று அவ்வப்போது மனம் சொல்லும். அவர்கள் அளவுக்கு நமக்குப் பக்குவமும் முதிர்ச்சியும் போதவில்லையோ என்று நினைப்பேன்.



ஞாயிறு, 30 ஜூன், 2024

அன்றாடம் பின்பற்ற வேண்டியவை!

காலையில் சூரிய உதயத்திற்கு முன்பே வாசல் பெருக்கி, தண்ணீர் தெளித்து, கோலம் போடவேண்டும். வீட்டின் உள்ளேயும் பெருக்க வேண்டும். முக்கியமாகத் தலைவாசல் சுத்தமாக இருக்கவேண்டும். வாசக்காலையும் கதவையும் பெருக்கிச்சுத்தம் செய்யும்போது உங்கள் குலதெய்வத்தின் கோயில் கருவறையைச்சுத்தம் செய்வதாய் நினைத்துச் செய்யுங்கள். அந்நேரம் வீட்டில் பெற்றோரோ/ பிள்ளைகளோ யார் முதலில் குளித்து முடித்தாலும், சுவாமி படங்களுக்குப் போட்ட நிர்மால்ய பூக்களையும், எரிந்த விளக்குத்திரிகளையும், ஊதுபத்தி சாம்பலையும் அப்புறப்படுத்தி விளக்கு ஏற்றவேண்டும். பலர் வீடுகளில் இப்படி நடப்பதில்லை. குடும்பத்தலைவி சமைத்து வீட்டு வேலை முடித்துப் பொறுமையாக ஒன்பது மணிக்குமேல் குளித்துவிட்டு வந்தபின் விளக்கேற்றுவது என்பது வாடிக்கையாகிவிட்டது.

அப்புறப்படுத்தியதை எல்லாம் நேரே குப்பைக்கூடையில் போடாமல் தனியே கவரில் போட்டு வைக்கவேண்டும். நிறைய வீடுகளில் முந்தைய நாள் சாப்பிட்டுப்போட்ட எச்சில் கழிவுகளின் தலையிலேயே இதையும் கூடையில் போடுவார்கள். அது அபச்சாராம்! பிறகு குப்பை வண்டியில் இதைத் தனியே போடலம். விளக்கேற்றும் இடத்தில் ஈரத்துணியால் துடைத்து சிறிய கோலமிட்டு விளக்கு ஏற்றவேண்டும். சுமார் இரண்டு மணிநேரமாவது விளக்கில் முத்துச்சுடர் நின்று எரியும் அளவு எண்ணெய் இருந்தால் போதும். மென்மையான நறுமணம் கமழ்வது சுபம். வீட்டில் பெரியவர்களுக்கே பல விதிகள் தெரியாமல் போவதால் இளைய தலைமுறைக்கு அதை எடுத்துச்சொல்ல முடிவதில்லை.

மாலையில் சூரியன் அஸ்தமனம் ஆகும்முன் என்னவெல்லாம் செய்யவேண்டும்? வெளியே காயப்போட்ட துணிகளை எடுத்துவிட வேண்டும். விளக்கு வைக்கும்முன் வீட்டைப் பெருக்கிடவேண்டும், அறையின் மூலைகளில் ஃபேன் காற்றில் சுழன்று கொண்டிருக்கும் தலைமுடி கற்றைகளை அப்புறப்படுத்த வேண்டும். அமங்கலமான பேச்சு, வாய்ச்சண்டை, சாபம், அழுகை, ஒப்பாரி ஆகியவற்றைத் தவிர்க்கவேண்டும். காலையிலோ /மதியமோ வீட்டில் அசைவம் சமைத்திருந்தால், அதன் துர்நாற்றம் வீட்டுக்குள்ளே சுற்றிக்கொண்டிருந்தால் நல்லதல்ல. அவை துர்சக்திகளை நிச்சயம் இழுக்கும். 

அதுபோல் ஈரத்துணிகளை வெளியே காயப்போட்டு இரவு முழுவதும் அப்படியே இருந்தால் அதுவும் நல்லதல்ல. அஸ்தமன நேரத்தில் பட்சிகளின் நிழல் பட்டு அந்த தோஷமும், ஒவ்வொருவரின் தேகத்தைப்பொறுத்து துர்சக்திகளின் ஆகர்ஷணமும் அதில் பீடிக்கும். பின்னிரவு நேரத்தில் இளம் ஆண்கள் தெருவோர மரத்தடியில் நின்று சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்கவும். அவனுள் பல துஷ்ட சக்திகள் இறங்கி பாதக தசாபுத்தி நடக்கும்போது எல்லா தீயவழிகளிலும் ஆட்டிவைக்கும். பேய், பிரம்மராட்சஸன்,  மோகினிப்பிசாசு, எதுவேண்டுமானாலும் அவனைப் பிடிக்கும்.

இவன் என்னடா கதை அளக்கிறானா என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. நான் இதை எல்லாம் சூட்சுமமாகப் பார்த்தவன். அதுபோல் கன்னிப்பெண்களின் விலக்குத்துணியையும் (சானிடரி நாப்கின்ஸ்), குழந்தைகளின் டயாபர்களையும் குப்பையில் வெளியே பகிரங்கமாக வீசக்கூடாது. அதனாலும் தோஷம் வரும். அதைத் தனியே கவரில் சுற்றி குப்பைவண்டியில் போடுங்கள்.  இப்பொருள்களை வைத்தே சாமக்கோடாங்கி கருந்தொழில் செய்வான். 

உங்களை அச்சமூட்டுவதற்காக இதைச்சொல்ல வரவில்லை. குடும்பத்தில் இதெல்லாம் கடுமையான எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும். ஆச்சாரம் அனுஷ்டானம், சாஸ்திரம் சம்பிரதாயம் என்பது இக்காலத்தில் கடைப்பிடிக்கப்படும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் செயல்பாடு, அது நமக்குத் தேவையில்லை என்று நினைத்துப் புறந்தள்ளினால் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை.     

-எஸ்.சந்திரசேகர்



வியாழன், 20 ஜூன், 2024

கர்மாவின் இலக்கணம்!

என் பள்ளிக்கூட வகுப்பாசிரியர் தன்னுடைய அண்மைப்பதிவு ஒன்றில்...  

"சஞ்சித கர்மா, ஆகாம்ய கர்மா, பிராரப்த கர்மா... என இப்படி எனக்கு புரிந்தும் புரியாமலும் பல உள்ளன. ஆனால் இன்றும் எனக்குப் புரியாத ஒத்துக்கொள்ள முடியாத ஒன்று... அந்தந்த பிறவியில் செய்த பாவங்களுக்கு அந்தந்த பிறவியிலேயே தண்டனை கிடைத்தால்தானே அவன் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். மற்றவர்களும் வாழ்க்கையில் தவறு செய்யக்கூடாது என்று நினைப்பார்கள். 

ஏதேதோ பிறவிகளில் செய்ததற்கு இப்பொழுது தண்டனையை அனுபவிப்பது எந்த வகையில் நியாயம்? நல்லவர்கள் கஷ்டப்படுவதற்கும் கெட்டவர்கள் ஆனந்தமாக வாழ்வதற்கும் இந்த கர்மாவைத்தானே காரணமாகச் சொல்கிறார்கள்" என்று எழுதியிருந்தார்.

அவருடைய ஐயத்திற்குப் பதிலளித்தேன். "அந்தந்தப் பிறவியில் திருந்துவோர் வெகு சொற்பம். பெற்றோரின் வளர்ப்பு, செல்வச்செழிப்பு, முற்போக்குச் சிந்தனை, தீய சகவாசம், அஞ்ஞானம், அதர்மம், அதிகாரம், கோபம், என பலவித காரணங்களால் பாழ்பட இருந்து விடுகிறார்கள். 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்பது ஒரு செயலைச் செய்யும்போதே மனம் நினைத்தால் எவ்வித தீய கர்ம வினையும் அண்டாதபடி செயலில் திருத்தம் வரும். 

செய்த குற்றத்திற்கு ஒற்றை/ இரட்டை/ மூன்று ஆயுள் தண்டனை வழங்கினால் என்ன ஆகும்? இந்திய தண்டனைச் சட்டத்தில் குற்றம் புரிந்த இந்த தேகத்திற்கே தண்டனை. மூன்று ஆயுள் தண்டனையை எல்லாம் ஓரே ஆயுளில் அனுபவித்து முடித்துவிடலாம். 

ஆனால் தருமநெறிபடி நம் ஆன்மாவுக்கே தண்டனை. அதனால் அது குடிகொண்ட தேகமும் இன்னல்களை அனுபவிக்கிறது. முற்பகலில் மனத்தால் தேகத்தால் அனுபவித்ததுபோக உள்ள எஞ்சிய தண்டனையானது பற்று வைக்கப்பட்டு அது பிற்பகலில் தொடர்கிறது. சொச்சம் இல்லாமல் ஒரே பிறவியில் அவை தீர நம் ஆயுள் நீடித்திருக்க வேண்டும் அல்லது கர்மவினை யாவும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். இம்மையில் நல்லவனாக வாழ்ந்து கஷ்டப்படுபவன் தன்னுடைய மும்மையில் செய்த தீவினையால் இது வந்தது என்பதை உணர்ந்து பொறுமை காக்கிறான் நற்பண்புடன் நடக்கிறான்.

அன்றைக்குச் சமைத்த உணவு அன்றே மீதமின்றிக் காலியானால் உத்தமம். ஆனால் பழையது தினமும் இருந்துகொண்டே இருக்கப் புதிதாய்ச் சோறும் சமைத்துக் கொண்டே இருந்தால் எப்போது மீதமின்றிச் சோறு காலியாவது? அதுபோல்தான் நம் சஞ்சித ஆகாமிய பாவங்கள். பழைய கர்மவினை தீரும் முன்பே புதிய பாவங்களை ஈட்டினால் அவை மலைபோல் குவிந்துவிடும். அதை அனுபவித்துத்தீர ஒரு பிறவி போதாது.

எப்படிப்பார்த்தாலும் நம் கர்மவினையை/ தலைவிதியைப் பிறவிதோறும் நாம்தான் பக்கம்பக்கமாய் எழுதிக்கொள்கிறோம். தீதும் நன்றும் பிறர் தர வாரா! நாம் அனைவரும் அவரவர் கர்ம வினையின் திரைக்கதை வசனம் இயக்கம் எல்லாம் எடுத்துச் செய்து அது செயல் ஓட்டத்தில் தவறாகப் போகும்போது அதன் பழியை நான்முகன் மீது சுமத்தி அதற்கு அவனைப் பொறுப்பாக்குவது என்பது அயோக்கியத்தனம். நாம் புண்ணியம் நிறைய செய்தாலும் அதனால் சுகப்படவும் ஒரு பிறவி அமையும். 

ஆக தெரிந்தே ஒவ்வொரு பிறவியிலும் தீவினைகள் செய்பவனுக்கு மறுமையிலும் புத்தி வராவிட்டால், தவறை உணர்ந்து ஆன்ம நிலை உயர்ந்து பிறப்பை அறுக்கும்வரை ஊழ்வினையின் கரகாட்டமும் கச்சேரியும் பிறவிதோறும் தொடரும்" என்றேன். 😂 

-எஸ்.சந்திரசேகர்








சனி, 15 ஜூன், 2024

ரெட்டியப்பட்டி சித்தர் தரிசனம்!

அது ஏப்ரல் 2011. திநகர் ரங்கநாதன் தெருவுக்கு எதிரே சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு ஒட்டினாற்போல் உள்ள தெரு முனையில் ஒரு சித்தரைக் கண்டேன். அவர் தாடி வைத்த முதியவர். நரைத்த தலையுடன் வெற்றுடம்போடு இடுப்பில் வெள்ளைத்துண்டு மட்டும் கட்டியிருந்தார். தெருவில் ஒரு வீட்டின் சுவரில் சாய்ந்துகொண்டு தெருவோரம் மண்மீது கால் மடக்கி கண் மூடியபடி உட்கார்ந்திருந்தார். 

கடை முன்னே நான் நின்று எதிரில் அங்கே அமர்ந்திருந்த இவரைப் பார்த்தபடி 'இவர் பிச்சைக்காரரா, சித்தரா? இங்கே என்ன செய்கிறார்?' என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென்று அவர் கண் திறந்து வேறு எங்கும் சுற்றுமுற்றும் பார்க்காமல் தலையைத் தூக்கி நேராக என்னை உற்று நோக்கிப் புன்முறுவல் செய்தபின் மீண்டும் கண்களை மூடிக்கொண்டார். அதாவது தான் சித்தர்தான் என்பதை உணர்த்தினார். ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் அவ்வழியே கடக்கும்போது அவர் அங்கில்லை. அவர் யார்? சித்தர் ஸ்ரீ ரெட்டியப்பட்டி சுவாமிகள் (1857 - 1923). 🕉️🙏 அவர் இன்னார் என்பது அப்போது எனக்குத் தெரியாது.

இன்று எதேச்சையாக என் பார்வையில் ஒரு காணொளி தென்பட்டது. மக்கள் நெருக்கடி மிக்க ரங்கநாதன் தெருவில் ரெட்டியப்பட்டி சித்தரின் ஆலயத்தை ரத்னா ஃபேன் ஹவுஸ் கட்டியுள்ளது என்றும், சுவாமிகளின் 100 ஆவது ஆராதனை விமரிசையாக நடந்தது என்றும் போட்டிருந்தது. தனக்கு இங்கே ஓர் ஆலயம் வரும் என்பதை 13 ஆண்டுகளுக்கு முன்பே ரங்கநாதன் தெருவுக்கு எதிரில் அமர்ந்து அவர் உணர்த்தினார் என்பதை இப்போதுதான் புரிந்துகொள்ள முடிந்தது. எல்லாம் சிவசித்தம்!

சித்தர்கள் எல்லோரும் அஷ்டசித்தியைக் கைவரப்பெற்றவர்கள். அவர்கள் அகக்கண் மூலம் நம்மைக் கண்காணித்து நம் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார்கள். நாம் போகும் இடத்தில் நம் கண்ணில்பட நமக்காக் காத்திருப்பார்கள். இவர்கள் வட்டத்திற்குள் பல இலாக்காகள் உள்ளது. மிகப்பெரிய சித்து வலைப்பின்னல் உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. யாரை எங்கு வந்து யார் சந்திப்பார் என்ற தகவல் அவர்களுக்குள் பரிமாறப்படுகிறது.

-- எஸ்.சந்திரசேகர்




புதன், 12 ஜூன், 2024

முட்டை!

டிவி செய்தியில் காய்கறி மற்றும் முட்டை மொத்த விற்பனையின் விலை பற்றிச் சொல்லும்போது, முட்டை ரூ.5.50 வரை விற்பனை ஆகின்றது என்று சொன்னார்கள். அப்போது மறக்கமுடியாத ஒரு பழைய நினைவு எழுந்தது. பள்ளியில் நம் எல்லோருக்குமே பலவிதமான அனுபவங்கள் வாய்த்திருக்கும். அப்படியொன்றுதான் நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது நடந்தது.

எங்களுக்கு உயிரியல் நடத்தியவர் திரு.இஸ்மாயில் என்ற திறமையான ஆசிரியர். Reproduction in birds and mammals என்ற தலைப்பில் அன்றைய பாடம் நடந்தது. கரு முட்டை வெளிப்படும் சுழற்சி பற்றி, அடை காக்கும் விதம் பற்றி, பாலூட்டிகள் பற்றி நடத்திக்கொண்டு போனார். பெண்களுக்குச் சினைப்பையில் கருமுட்டை உருவாவது பற்றியும், கர்ப்பம் தரித்து மகப்பேறுவரை சுருக்கமாய் விளக்கி முடித்தார்.

அப்போது நெடுமாறன் என்ற என் வகுப்பு மாணவன், “சார், என்ன சார் சொல்றீங்க? லேடீஸ் முட்டை போடுவாங்களா? எனக்கு இதுவரைக்கும் தெரியாது. அண்ணாச்சி கடையில முட்டை 75 பைசா விக்கித்து. தினமும் அஞ்சு முட்டை வாங்குறோம். வீட்லேயே போடுறாங்கனா ஏன் கடையில போய் காசு கொடுத்து வாங்கணும்? ஆயாகிட்ட அம்மாகிட்ட தினமும் முட்டை போடசொல்லணும். இவ்ளோ நாளா என் கண்ணுல காட்டாம அவ்ளோ பெரிய முட்டைங்கள அவங்களே அவிச்சு தின்றாங்களா!” என்று ஆச்சரிய கோபத்துடன் சொன்னான்.

இதை எதிர்பார்க்காத இஸ்மாயில், “டேய் இந்த முட்டை கண்ணுக்கு தெரியாதுடா, ovary releases microscopic eggs அதைத் திங்க முடியாது என்று விளக்கிச் சொன்னார். இருந்தாலும் அவன் திருப்தியடையவில்லை.

“சார், சின்ன கோழியே பெரிய முட்டை போடும்போது, பெரிய மனுஷங்க ஏன் சின்ன முட்டை போடணும்? அதைவிட பெரிசாத்தான போடணும்?” என்றான். “மாறா, லஞ்ச் முடிச்சிட்டு என்னை வந்து பார், விளக்கமா சொல்றேன்” என்றார். இன்றும் அந்தச் சம்பவத்தை நினைத்தால் சிரிப்பை அடக்கமுடியாது. 

 -எஸ்.சந்திரசேகர்



செவ்வாய், 14 மே, 2024

வியாபாரியின் போக்கு!

 தங்கம்/வைரம் வியாபாரம் செய்யும் செட்டியின் தொழிலும் சொல்லும் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை கொண்டது என்பதை  யாகோபு சித்தர் தன் பஞ்சமித்திரம் நூலில் நகைச்சுவையாக உரைக்கிறார்.

"சுமார் எட்டு மாற்று தரமுள்ள ஒரு தங்கநகையைக் கொண்டுபோய் ஒரு செட்டியிடம் கொடுத்தால், அதை அவன் கருமைநிற உரைகல்லில் அழுத்தித் தேய்த்தும், அதன்பின் வில்லில் நாண்போல் பூட்டி இழுத்துப் பார்த்தும் அதன் தரத்தைச் சோதித்தபின், இந்தத்தங்கம் அப்படி ஒன்றும் துடிப்புடன் இல்லை, இதன் மாத்து ஐந்து இருந்தால் அதிகம், அதனால் நான் எடுத்துகொள்வது இல்லை என்று பூத்த பூவின் அழகுச்சிரிப்பை உதிர்த்தாற்போல் நல்லவன் முகத்துடன் சொல்வான்.

இன்னொரு கடைக்குப் போய் நகையைக் காட்டினால், நான் பார்த்துச் சொல்கிறேன் என்பவன், இன்னும் அந்த நகையை மேலும் அழுத்தமாய் உரசித்தேய்த்துப் பார்த்து, இது வளமான தங்கமில்லை காணும், மாத்து ஆறு வரும், இதை நான் எடுப்பதில்லை என்று அவனும் சொல்வான்.

கொண்டுபோன வளமான தங்கத்திலிருந்து இப்படியே ஆளாளுக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் பொன்னைத் திருடிக்கொண்டு இறுதியில் அதன் தரத்தைத் தாழ்த்தி விடுவார்கள். இவ்வாறு அவனுடைய போக்கு இருந்தால் அவன் வாத தங்கமெடுத்து நகை செய்தாலும் அதை ஒருவரும் நம்பமாட்டார்."   

இன்றைய காலத்தில் பொன்னின் தரம் அறிய உரைகல், அமிலம், ஹால்மார்க் முத்திரை, கேரட்மீட்டார், என பல தொழில்நுட்ப முறைகள் பயன்பாட்டில் உள்ளன. நம் சித்த இலக்கியத்தில் ‘நாத வேதை மூலம் தங்கம், காந்தரசம் மூலம் தங்கம், வாசித்தங்கம்’ என்று பல்வேறு முறைகளில் தங்கம் பெற்றது இப்போது நினைவுக்கு வருகிறது.

-எஸ்.சந்திரசேகர்



திங்கள், 25 மார்ச், 2024

ஒலியா கிலியா?

என் பதிவினையொட்டி ஒரு நண்பர் சந்தேகம் கேட்டிருக்கிறார்.

“நாம் சிறுவயதிலிருந்தே கஙசஞ உச்சரிக்கும் முறை சரிதானா? நாம் பேசும்போது உச்சரிக்கும் சொற்களும் தவறாக உள்ளதோ என்று எனக்குத் தோன்றுகிறது. அதுபற்றி ஒரு பதிவு போடவும்.”

நீங்கள் கேட்பது சரிதான். கஙசஞ என்பதை ka nga cha gnya என்றுதான் உச்சரிக்க வேண்டும். ஆனால் ஆரம்பப் பள்ளியிலேயே தவறாகத்தான் பயிற்றுவிக்கின்றனர். அதாவது கஙசஞ உயிர்மெய் எழுத்துகளைச் சொல்லும்போது ச என்பதை cha என்றும், வல்லினங்கள் சொல்லும்போது மட்டும் அதை sa என்றும் சொல்லித்தருகின்றனர். கஸடதபற என்பதில் sa என்பதும் பிழைதான்! 

இதன் காரணமாகவே எந்தச்சொல்லை எப்படி உச்சரிக்கவேண்டும் என்பதில் அநேகருக்கும் குழப்பம் உண்டு. பிழையோடே நாமும் கல்வி கற்று ஒப்பேற்றிவிட்டோம். 

எங்கள் ஊரில் மூக்குறிஞ்சி வாத்தியார் என்று இருந்தார். ஏன் இந்தப் பெயர்? சளி மூக்கடைப்பு ஒழுகலுடன் வரும் சிறுவர்களை “உறியாதே, உயிர்மெய்யைப் பழகு!” என்பாராம். அதன்படி நாம் சொல்லிப்பார்த்தால், வல்லினம் என்பது நாக்கின் பின்புறத்திலிருந்து ஒலி எழுந்து ஒவ்வொரு எழுத்துக்கும் மேல்தட்டில் நாக்கு தொடும் நிலை சிறிது சிறிதாக முன்னேறி வந்து உதடுகளில் வந்து முடிகிறது. ஆக ka cha என்பதே சரி, ka sa என்பது தவறு. இதைப்பொறுத்தே சொற்களை நாம் உச்சரிக்கும் விதம் அமைகிறது. இக்காலத்தில் அதை யாரும் பெரிதாய்க் கண்டுகொள்வதில்லை.  

திருப்புகழ் ஓதுதல் நாக்கு சுழற்சிக்கும் மூச்சுப்பயிற்சிக்கும் உகந்தது. "முத்தைத்தரு பத்தித் திருநகை" பாடலில் உச்சரிப்பு ஒலிகள் உதடுகளுக்கும் முன்வரிசைப் பற்களுக்கும் ஒட்டியே அமையும். பிற்பாடு அது மெல்ல மத்திம நிலைக்கு வந்து, அதன்பின் நாக்கு பின்புறம் தொடுமாறு சொற்களை அருணகிரியார் அமைத்திருப்பார். மென்மையில் தொடங்கி அதன்பின் கரடுமுரடாகி, பிறகு இரண்டுமே கலந்து வரும். இதுதான் tongue twister என்பது. வாசியும் நரம்பு மண்டலம் சீர்பெறும்.

தமிழின் பெருமையை முழங்குவது ஒருபக்கம் இருக்கட்டும், அந்தத் தமிழ் எழுத்துகளின் உச்சரிப்பைத் தமிழாசிரியர்கள் சிரத்தையுடன் ஆரம்பப்பள்ளியில் சொல்லித்தராவிட்டால் தமிழுக்குத்தான் இழுக்கு! வயதானபின்பு பற்கள் கொட்டிவிட்டால் எதுவும் செய்யமுடியாது, பல்லு போனால் சொல்லு போச்சு! பல்செட் போட்டால் உச்சரிப்பு ஏறக்குறைய அருகில் வந்தாலும் அது செயற்கையாக ஒலிக்கும். அதனால்தான் பல் விழுந்த பொக்கை வாயர்களை வேதமந்திரம் ஓத, பதிகம் பாசுரம் பாட அமர்த்த மாட்டார்கள். அவர்கள் மானசீகமாகச் சொல்லிக்கொள்ளலாம். 

அதனால்தான் வேத மந்திரங்களை ஓதச் சிறுவயதிலையே பயிற்சி தருவார்கள். வேத பாடசாலையில் சிறுவர்கள் ஸ்லோகம் சொல்லும்போது விரல் கணு அடையாளம் வைத்துக்கொண்டு கையை ஏற்றி இறக்கி ஒலி அழுத்தம் உணர்ந்து உரக்க உச்சரிப்பதைப் பார்த்திருப்பீர்கள். வர்ணம் மாத்திரை பலம் சாமம் ஸ்வரம் என உச்சரிப்பை எங்கெங்கு எப்படி எவ்விதம் சொல்வது என்று அத்தியயனம் செய்யும்போது பிழையின்றிக் கற்றுக் கொள்வார்கள். ஆனால் நம் தமிழில் எது சரியான ஒலி என்று உணர்ந்து திருத்திக் கொள்ளும்போது வயதாகிவிடுகிறது. 😀

ஆக இப்படியாக மருத்துவமும் பக்தியும் சேர்ந்ததுதான் நம் மொழி. ஆய்த எழுத்தான ஃ சொல்லும்போது இரு காதுகளும் அடைத்து, அழுத்தம் மேற்புறம் எழுந்து ஆக்ஞா சக்கரம் பகுதியில் குவியும். அந்தப் பகுதிதான் மூன்றாவது கண் ஃ இருக்கும் இடம். உள்ளே ஊசித்துவாரப் பிரம்மரந்திர வாயில் அமைந்துள்ள இடம், ஆகாய சிதம்பரத்தின் வாயில்.   

-எஸ்.சந்திரசேகர் 





உழவாரம்!

கோயில் புனரமைப்பு, உழவாரம், நித்திய கட்டளைகள் சேவைகள், தன்னார்வத் தொண்டு செய்ய இதுபோன்ற தனியார் அறக்கட்டளை இயக்கங்கள் /மன்றங்கள் ஏகப்பட்டது உள்ளன. அதன் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் வரவுசெலவு பற்றி யாம் எதுவும் அறியோம்.

கோயில் உண்டியலில் காசு போட்டால் அறநிலையத்துறை எடுத்துக்கொள்ளும். சிறிய கோயிலுக்கு நிதியுதவி செய்யாது அதனால் போடாதே என்கிறது ஒரு கோஷ்டி. தட்டில் போட்டால் அர்ச்சகர் எந்த உழைப்புமின்றி ஆரத்தி காட்டிப்பிச்சை எடுக்கிறான் அதனால் போடாதே என்கிறது ஒரு கோஷ்டி.

கோயில் சிதிலமடைந்தால் அப்படியே இருந்து விட்டுப்போகட்டும். யார் மூலம் எப்படிப் புனரமைக்க வேண்டும் என்பதை அவன் பார்த்துக்கொள்வான். இத்தனை நூற்றாண்டுகளில் சுவடு தெரியாமல் அழிந்துபோன சிவாலயங்கள் பல. அதை எல்லாம் மீட்க வேண்டும் என்றால் மனிதனால் ஆகாது.

வறுமையில் இருந்தாலும் தேசத்தின் சுபிட்சத்திற்காக வேதியர் தம் பணியைத் தொடரவேண்டும் என்கிறது சாத்திரம். பிறகு அவன் ஏன் பிச்சை எடுக்கவேண்டும்? 🤔

'அருள்மிகு' பெயர் தாங்கிய அரசுக்குச் சொந்தமான வசதியான கோயில்களில் அர்ச்சகர்களுக்குச் சொற்ப ஊதியம் நிர்ணயிப்பார்கள். நித்திய பூஜை அபிஷேகம் அலங்காரம் நிவேதனம் மற்றும் மந்திரங்கள் சொல்லி அர்ச்சனை செய்யவேண்டும். சிவராத்திரி/ பிரதோஷ காலத்தில் அவர்கள் செய்யும் தொடர் பணிக்கு இடுப்பு உடையும். ஆனால் இதில் உடலுழைப்பு எதுவும் இல்லையே என்று பலர் விமர்சிக்கின்றனர்.

"தமிழகத்தில், 26 ஆயிரம் கோவில்களில் வசதியோ, வருமானமோ கிடையாது. அர்ச்சகருக்கு மாதம், 60 ரூபாய் ஊதியம். அதுவும் மூன்றாண்டுகளாக பாக்கியுள்ளது. ஆனால், கோவில் கணக்காளருக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் சம்பளம். அர்ச்சகர்களின் வாரிசுகள் யாரும், அப்பணிக்கு வருவதில்லை" என்று திரு. பொன்மாணிக்கவேல் தன் ஆய்வறிக்கையில் சொன்னார்.

விலைவாசி மிகக்குறைவாக உள்ள இக்காலத்தில் அர்ச்சகர் தாராளமாகவே ஜீவனம் செய்யலாம் என்பது பலருடைய கருத்து. 🤔 திருவள்ளுவர் குறிப்பிட்ட அறுதொழிலோரில் பலரும் கேலி பேசும் இந்த 'பிச்சை எடுக்கும்' வேதியரும் உண்டு.

த₄ர்மஏவ ஹதோ ஹந்தி த₄ர்மோ ரக்ஷதி ரக்ஷித: ||

தர்மத்தை எவன் அழிக்கிறானோ அவனை தர்மம் அழிக்கிறது. தர்மத்தை எவன் காக்கிறானோ அவனை தர்மம் காப்பாற்றுகிறது.

-எஸ்.சந்திரசேகர்



மஹா சிவராத்திரி

 ஓம் நமசிவாய 🕉️🌿

அண்டபகிரண்ட அணுவும் அசைந்தாடும்

அத்தன் கூத்தாட அகிலம் சுழன்றாடும்

உண்ட விடம் யாவும் இறுகி திண்டாடும் ஊழித்தாண்டவம் ஆடும் கணந்தோறும் கண்டம் சதிராட கடலும் எழும் பொங்கும்

காரிருள் சூழந்து எங்கும் புயல் ஓங்கும்

பிண்டம் இயங்கவும் ஒளியும் திரும்பவும்

பஞ்ச பூதனவன் தாளைப் பற்றுவோம்! 🙏

-எஸ்.சந்திரசேகர்



பங்குனி உத்திரம்!

 ஓம் சரவணபவ 🕉️🐓🦚🙏

ஆனைமுகன் தம்பிக்கு அநுபூதிகளுண்டு

ஆறுமுகம் கந்தனுக்கு வேதமுகம் உண்டு 

ஆனந்த முருகனுக்கு போரூர்கள் உண்டு

அனந்தன் மருகனுக்கு பதிகள் பலவுண்டு

ஆற்றுப்படை நாதனுக்கு காவடிகளுண்டு

அக்கினி வீரனுக்கு தமிழ்ச்சங்கம் உண்டு

அகரவுகரமகரப்பொருளில் குகனுமுண்டு

அமரா பதிக்கு சேனை அஸ்திரம் உண்டு

ஆண்டிக்கு உண்டியில் செல்வம் உண்டு

அவன் ஒரு கோமணமே உடுத்துவதுண்டு

ஆற்றல் மிகும் பங்குனி உத்திரம் உண்டு

அழகு வள்ளி தெய்வானை வாசியருண்டு

ஆதிசிவன் பெற்றதால் சிறப்புகளுண்டு

அன்னை சிவகாமியின் ஆசிகள் உண்டு!


-எஸ்.சந்திரசேகர்

திங்கள், 4 மார்ச், 2024

குன்றின்மேல் அணையா விளக்கு!

 


வாலையைப்பற்றியும் அவளைக் கண்டுணர்ந்து தரிசிக்கும் வழியையும், ஆறாதாரசக்கர தளத்தின் குணாம்சங்களையும் “வாலைக்கும்மி” நூலில் கொங்கணர் எளிதாகத் தந்துள்ளார். 

ஆறாதார சக்கரங்கள் வழியாக வாசி ஊர்ந்து சென்று ஆக்ஞா சக்கரத்தில் சுழுமுனையுடன் சங்கமிக்கும் இடமே திரிகூட பர்வதம். அது உண்ணாக்குக்கு மேலாக புரூ மத்தியில் உள்ளது. இடகலை பிங்கலை சுழுமுனையுடன் சங்கமிக்க அங்கே சுயம்பிரகாசம் ஒளிரும். (கபம் சளி இங்கே வாசியின் வழியை அடைத்துக்கொண்டு பிரச்சனை தரும். அதனால் வழலையை அகற்றவேண்டும் என்கிறார் சித்தர்.)  எண்கோண வடிவ நட்சத்திரம்போல் ஆடாமல் சுடர்விட்டுச் சுழலும். அங்கே அகத்தீ நிலையாக எறிந்துகொண்டு இருந்தாலும் தலை வெந்துவிடுவதில்லை! 

ஹம்-ஸம் ஓடும் ஆறாதாரங்களின் உச்சியில் அங்கே எண்ணெயில்லை, சுடரை அணைக்கத் தண்ணீர் இல்லை. வாசிக்கால் அந்தப்பாதையிலேயே பிசகின்றிப் போய்க்கொண்டிருந்தால் பாதைப் புலப்படும். எங்கே போவதற்கு? குன்றின் மேலே ஏறி ஆகாயக் கடுவெளியில் தீபஜோதியில் வாலைக்குமரியைத் தரிசிக்க!

மேலே ஏறிப்போகும் வழிதோறும் ஒவ்வொரு சக்கர தளத்திலும் தசநாத சப்தங்கள் கேட்கும். மேலே அவளுடைய சான்னித்தியம் வெளிப்பட சிலம்புச்சத்தம் கேட்கும். சிக்கலான பாதையைப்போல் தெரிந்தாலும் அகவிளக்கொளி மார்க்கத்தைக் காட்டும். அங்கே ஓங்காரம் ஒலிக்க வாலையவள் வீற்றிருப்பாள்!

-எஸ்.சந்திரசேகர்

சனி, 3 பிப்ரவரி, 2024

கவசக்கயிறு!

 தெருவில் எனக்கு முன்னே ஒடிசலான ஒரு முதியவர் ஊதிக்கொண்டு நடந்து போனார். அவருடைய இடது கணுக்காலில் கருப்பு கயிறு, கையில் ஒன்று கட்டியிருந்தார். பிய்ந்து போன ரப்பர் செருப்பு அணிந்து நிதானமாய் நடந்து சென்றார். அவர் இழுத்து விட்ட சிகரெட் புகை மண்டலம் காற்றில் எழும்பி என் முகத்தில் உராய்ந்து சென்றது. மூச்சு முட்டாத குறையாக விரைந்து நடந்து அவருக்கு முன்பாகச் சென்றுவிட்டேன். யாரெனத் திரும்பிப் பார்த்தேன்!

பொக்கை வாய், குழி விழுந்த கன்னம், இடுங்கிய கண்கள், சாம்பல் பூத்த சருமம்,   வயது பின்னெழுபதுகள் இருக்கும். மோப்ப ஆய்வில் அவர் சரக்கு அடிப்பவர் என்பது தெரிந்தது. உருவத்தைப் பார்த்த உடனே திகைத்தேன்.

நல்லொழுக்கம் பேணிய ஒரு தேகமாகத் தெரியவில்லை. இவருக்கு ஊரார் கண் திருஷ்டி படுவதற்கு அங்கே என்ன மிச்சம் இருக்கிறது? ஏற்கெனவே சீக்கு உடம்பு போல்தான் தெரிந்தது. புகையும் சரக்கும் அள்ளித்தரும் நோய்களே அதிகம். அப்படி இருக்கும்போது அந்தக் கருப்பு கயிறு எதற்கென்றே தெரியவில்லை.

முன்பெல்லாம் மிக அரிதாகத்தான் காலில் கருப்பு கட்டிவிடுவார்கள். ஆனால் இப்போது தெருவில் எதிர்படுவோர் எல்லோர் காலிலும் கயிறு பார்க்கிறேன். அது மந்தரித்ததா ஸ்டைலுக்காகவா என்பது தெரியவில்லை. கருப்புக் கயிறை எல்லா ராசிக்காரர்களும் கட்டக்கூடாது என கேள்விப்பட்டுள்ளேன், மிதுனம் துலாம் கும்பம் நீங்கலாக மற்ற ராசிகளுக்கு அது கெடுபலனைத் தருமாம். திருஷ்டி, காத்து கருப்பு, அடிக்கடி உடல்நலம் பாதிப்பு, போன்றவற்றுக்குத் தற்காலிகமாகக் கயிறு கட்டிவிடுவார்கள். பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு ஒரு மாதம் வரை கருப்பு வளையல் அணிவித்து திருஷ்டி பொட்டு வைப்பது வழக்கம்.

வேப்பிலை சாமியாடிகள் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் இதுபோன்ற கயிறு கட்டிவிடுவார்கள். சில உபாசகர்கள் ருத்ர காயத்ரியை ஜெபித்து உருவேற்றிட வேண்டும் என்பார்கள். இக்காலத்தில் அக்கயிறு கட்டியதற்கான காரணமும் தெரியவில்லை, அணிந்தவர் நித்தம் ஜபம் செய்து சக்தியூட்டுகிறார்களா என்பதும் தெரியவில்லை. 🤔

-எஸ்.சந்திரசேகர்




வெள்ளி, 26 ஜனவரி, 2024

விட்டகுறையாலே நிறைவேறும்!

தென்னிந்தியாவின் கணிதமேதை என்றதும் எஸ். ராமானுஜன் பெயர்தான் நம் நினைவுக்கு வரும். அவர் கும்பகோணத்தில் பிறந்து அங்கே Town High School பள்ளிக்குச் சென்றார். ஆனால் குடும்பச் சூழல் காரணத்தால் மேற்கொண்டு தன் படிப்பைத் தொடரமுடியாமல் சிபாரிசு மூலம் மெட்ராஸ் போர்ட் டிரஸ்ட்டில் குமாஸ்தா பணிக்குச் சேர்ந்தார். ஆயினும் கணிதம் மீதிருந்த தீராத காதலால் அவருடைய ஆய்வுகள் தொடர்ந்தன. அப்போதே அவர் வீட்டுத் திண்ணையில் BA Hons. மாணவர்களுக்குக் கணிதப்பாடம் எடுத்தவர். முறையான உயர்கல்வி இல்லாததால் பல்கலைக்கழகத்தில் சேரமுடியாமல் இருந்தது. இவருடைய திறமைகளை அறிந்த பேராசிரியர் Hardy இவருக்கு லண்டனில் வாய்ப்பு தந்தார். Number Theory பற்றி அவர் பல நுட்பங்களையும் தீர்க்கப்படாத புதிர்களையும் தீர்த்தார். வெளிநாட்டில் நிலவிய குளிர் இவர் உடல்நலத்தைப் பாதித்தது. சைவ உணவையும் ஆச்சாரத்தையும் கடைப்பிடிக்கும் இவருக்கு அங்கு சரியான உணவும் இல்லை. காசநோய் பீடிக்கப்பட்ட நிலையில் ஊர் வந்து சேர்ந்தார். 1920இல் சென்னையில் காலமாகும்போது அவருக்கு வயது 32.  

1938ஆம் ஆண்டு அதே கும்பகோணத்தில் சி.பி.ராமானுஜம் என்பவர் பிறந்தார். அவர் வசதி படைத்த குடும்பத்தில் பிறந்தார், அதே Town High School பள்ளியில் படித்தார். பிற்பாடு சென்னைக்கு வந்தார் லயயோலா கல்லூரியில் உயர்கல்வி பெற்றார். கணிதத்தின் மேல் இருந்த மோகம் அவரைப் புதிய கோணத்தில் Number Theory தலைப்பில் ஆய்வுகள் செய்யத்தூண்டியது. தன் பதினெட்டாவது வயதில் மும்பை Tata Institute of Funamental Research கழகத்தில் சேர்ந்து பல வியக்கும் கோட்பாடுகளை எடுத்துரைத்தார். அங்கு நல்ல ஊதியம், பெயர் எல்லாம் கிடைத்தது. கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் எங்கே விட்டாரோ அங்கிருந்து இவர் தன் பணியைத் தொடர்ந்தார். பாரீஸ் சர்வகலாசாலையில் சிறப்புப் பதவியை ஏற்க அங்கே போகும்போதே உடல்நலம் குன்றியது. மீண்டும் மும்பைக்குத் திருப்பி அனுப்பபட்டார். Schizopherenia நோய்த்தாக்கம் முன்னேறிய நிலையில் இருந்ததால், 1974ஆம் வருடம் மறைந்தபோது அவருக்கு வயது 36.        

ஆக ஆன்மாவின் பயணம் என்பது அளிக்கப்பட பணியை முடிக்கும்வரை மறுபிறவி எடுத்துக்கொண்டே இருக்கும் என்பதற்கு இந்த கணிதமேதைகளின் வாழ்க்கையே சான்று. 

முந்தைய கணிதமேதை ராமானுஜன் தன்னுடைய குலதெய்வமான நாமகிரித்தாயார் மேல் தீவிர பக்தி கொண்டிருந்தார். தான் கண்டுபிடிக்கும் சிக்கலான கணித சூத்திரங்கள் யாவும் அவள் தருவது என்று பகிரங்கமாகச் சொன்னவர். அந்த அர்ப்பணிப்பும் சரணாகதியும்தான் அவருடைய மறுபிறவியில் உயர்கல்வி, வாழ்க்கை வசதிகள், ஆராய்ச்சி வாய்ப்பு, பேராசிரியர் பணி, நல்ல ஊதியம் என எல்லாமே கிடைக்கச்செய்தது. இருந்தாலும், அந்த ஆன்மாவுக்கு இரண்டு பிறவிகளிலும் விதிக்கப்பட்ட ஆயுள் மிகச்சொற்பமே!

-எஸ்.சந்திரசேகர்



திங்கள், 1 ஜனவரி, 2024

என்னவொரு ஆனந்தம்!

சற்றுமுன் ஐயனார் (சாஸ்தா) கோயிலில் திருக்கல்யாண அலங்காரத்தைக் கண்டு தரிசித்தேன். பொதுவாகவே கோயிலில் தரும் அன்னப்பிரசாதத்தை வரிசையில் நின்று தொன்னையில் வாங்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி... மிக அலாதியானது!👌

பிரதக்ஷணம் முடித்து வெளியே வரும்போது அங்கே ஒருவர் வாழையிலையைக் கையில் தர, அடுத்தவர் பெரிய அண்டாவிலிருந்து பொங்கல் புளியோதரையைக் கிண்டி நீளமான அன்னக்கரண்டியால் எடுத்து இலை நிறையப் பரிமாறினார். அக்கணம் என் கையில் நிறைவான அளவில் பிரசாதம் இருக்கும்போது ஓர் ஐந்து வயது சிறுவனின் மனநிலைக்கு மாறியதை உணர்ந்தேன். என் சுற்று வரும்போது... ஹையா... அண்டாவில் இன்னும் போதிய பிரசாதம் உள்ளது என்பதைக் கண்டதும் இலையை ஏந்தியபடி இரு கைகளை நீட்ட என்னவொரு துள்ளல்! 😀

ஆன்மிகப் பதிவு, பிரதோஷம் பாடல்கள், சித்தர் பாடல் உரைகள் என்று ஒரு புறம் முகநூலில் செய்யும் நான் சற்றுமுன் சிறுவயது குதூகல மனநிலையில் இருந்ததை ஆச்சரியமாய் நினைத்துப் பார்த்தேன். எல்லாம் சிவசித்தம்! 🕉️🙏

-எஸ்.சந்திரசேகர்