நாம் காலங்காலமாய் பிறந்து-இறந்து வரும் பிறவிப் பயணத்தில், இதுவரை சேர்ந்துபோன சஞ்சித கர்ம வினை பதிவாகிவிடுகிறது. பழைய பயணத்தில் நம்முடன் சம்பந்தப்பட்ட ஆன்மாக்கள் இந்தப் பிறவியில் நம் வாழ்வில் குறுக்கிட அவகாசமே இல்லாதபோதும், அவ்வான்மாக்கள் கைமாறு செய்து தம் கர்மத்தை தீர்ப்பது என்பது எப்படி நிகழும்? ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன் நான் என் நண்பரோடு பெங்களூர் சென்றேன், பணி முடிந்து அன்று மதியம் ரயில் பிடிக்க ஸ்டேஷன் போகும் வழியில், என் நண்பர் தன்னுடைய தூரத்து உறவினர் யாரோ இறந்த பன்னிரண்டாம் நாள் சுபஸ்வீகரம் நடக்கும் ஒரு மண்டபத்தில் போய் தலையைக் காட்டிவிட்டு வந்து விடுகிறேன் என்றார். மண்டபம் எங்குள்ளது என்று விசாரித்துக் கொண்டு வந்தார். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. ரயிலுக்குப் போகும் வேளையில் இந்த ஆள் இப்படி இம்சை கொடுக்கிறாரே!' என்று நினைத்துக் கொண்டேன். நாங்கள் போகும் வழியில் ஒருவழியாக அந்த மண்டபம் வந்தது.
நான் ஆட்டோவில் அமர்ந்தபடி 'சார், நீங்க போயிட்டு 10 நிமிஷத்துல வந்துடுங்க' என்றேன். உள்ளே போனார். கொஞ்ச நேரத்தில் ஒருவர் ஆட்டோ அருகில் வந்தார். 'சார்.. நீவும் ஓளகடே பன்னி... பிளீஸ்' என்றார். ஆட்டோவை காத்திருக்கச் சொல்லிவிட்டு நான் வேண்டா வெறுப்புடன் போனேன், அங்கே பந்தியில் பலர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். நம் நண்பர் அங்கு தெரிந்த யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார்.
ஒரு நடுத்தர வயதுக்காறார் 'சார்...இல்லி நீவு கூத்கொள்றி... ஊட்டா மாடி' என்றார். பொதுவாகவே நமக்கு சம்பந்தமில்லாத வேற்று மனிதர்களின் காரியநாள் உணவுகளை நாம் யாரும் உண்ணமாட்டோம் என்பது சம்பிரதாயம். மதிய உணவு உண்டுவிட்டுத்தான் கிளம்பினோம், அதனால் உண்ண விருப்பமுமில்லை. என்னை வலுக்கட்டாயமாக அமரவைத்தார். 'சார்.. சொல்ப சித்ரா அன்னம் தெகி.. சுவாமி' என்றார். நான் வேறு வழியில்லாமல், 'சார்.. நீவு ஹேளிதகு கோஸ்ரா நான் திந்தினி... நன்கு அஷ்வே இல்லா' என்று சொல்லிவிட்டு இலையில் இருந்து எலுமிச்சை சாதத்தை ஒரு கைப்பிடி எடுத்தேன், அதை எப்போதும்போல் பொறுமையாக உதட்டில் விரல்கள்பட உண்ணாமல், கிருஷ்ணர் வாய்திறந்து மண்ணை எடுத்துக்கொட்டி உண்டது போல மேலேயிருந்து வாயில் போட்டுக் கொண்டேன். உடனே அவர் 'சொல்ப.. பாயஸா குடி' என்றார், வேறு வழியின்றி தொன்னையை எடுத்து ஒரு வாய் குடித்துவிட்டு அப்படியே வைத்துவிட்டேன்.
பிறகு என் நண்பர் வந்தார் கிளம்பிவிட்டோம். எதற்கு இந்த கதை? இப்பிறவியில் எனக்கு சம்பந்தமே இல்லாத ஒருவர் என்னிடம் தனக்கிருந்த கடனைத் தீர்க்க, என்னை ஊர் விட்டு ஊரு வரவைத்து கடனைத் தீர்த்தார். இறந்தவர் ஆணா பெண்ணா? என்ன வயது? ஏதும் அறியேன், நான் கேட்கவுமில்லை.
ஆக, தேங்கிப்போகும் அந்த சஞ்சித கர்மம் மூட்டை என்பது நாம் எடுத்த எல்லா பிறவிகளின் accumulated வடிவம். சஞ்சித மூட்டைக்குள் பிராரப்த கர்மங்கள் பிறவி வாரியாக சிறு பாவ/புண்ணிய மூட்டைகளாக பதிவாகியுள்ளது. அதுதான் இப்போதைய பிறவியில் வந்து சேருகிறது. இதில் bonus உபரியாக அந்தந்த பிறவியின் மூதாதையர் பாவ-புண்ணிய செயல்களும் வந்துசேரும். ஒவ்வொரு பிறவியிலும் நாம் செய்த நன்மை தீமைகள் எந்த ரூபத்திலும் நம்மை வந்தடையும் என்பதற்கு இது உதாரணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக