About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 26 ஜூன், 2017

சித்த இரகசியத்தை வெளிப்படுத்தலாமா?


சித்தர்களின் சூட்சும ரகசியத்தை இங்கே முகநூலில் பகிர்ந்து கொள்வது சரியா?அப்படிச் செய்தால், அது போன்ற அற்புத தருணத்தை மீண்டும் அவர்கள் உணர்த்துவதில்லை என்கிறார்களே. அது உண்மையா? என்று குழு நண்பர் ஒருவர் நல்லதொரு சந்தேகத்தைக் கேட்டிருந்தார்.
என்னைப் பொறுத்தவரை இதில் உண்மை இல்லை. நமக்குக் கிடைக்கும் அனுபவத்தின் சாரத்தை உடன் இருப்பவர்களிடம் பகிர்வதில் தவறில்லை.. தியானத்திற்கு ஒருவர் போதும், அனுபவம் பகிர சத்சங்கம் குழு வேண்டும். ஒருவனே அதை அனுபவித்து சுவைக்க முடியாது, அதை வெளிப்படுத்தினால் தான் பிரம்மத்தை, இறை மகிமையை, சித்தர்களின் ஆற்றலை சத்சங்கத்தில் உணரச் செய்ய முடியும். பகிர்வதால் ஆனந்தமும் கூடும்.
'நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறும் மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே
.' என்று திருமூலரே சொல்கிறார்.
அவர் எல்லா சூட்சுமத்தையும் திருமந்திரத்தில் விளக்கினார். அதைத்தான் போகரும் செய்தார். எல்லா ரகசியத்தையும் சப்தகாண்டத்தில் வெட்ட வெளிச்சமாக்கி உரைத்தார். 'காண்ட மேழாயிரத்தில் வெகுகோடி ரகசியங்கள் வுளவுகண்டு வெளியாய்விட்டேன்' என்கிறார்.
அதைத்தான் அடியேனும் இங்கே வெளிப்படுத்தி எல்லா இறைதரிசன அனுபவத்தையும், சித்தர்களின் அமானுஷ்யத்தையும் பகிர்ந்து கொண்டேன். ஆனால் தனிநபருக்குக் கிடைத்த ரகசியத்தை யாரிடமும் வெளிப்படுத்தக் கூடாது என்று சிலர் சொல்வார்கள், அதில் எனக்கு உடன்பாடு இல்லை. நானும் என் குருநாதர் வழிதான். இதை அனைவரும் அறிய போகர் என்னைப் பணித்தார். இது அவர் கொடுத்த பணி.

உதாரணத்திற்கு, 'போகர் ஜெனன சாகரம்' என்ற விளக்க நூலை நான் எழுதி எந்த பதிப்பாளரிடம் அச்சிட தரவேண்டும் என்பதை அவர் தன்னுடைய வாழி விருத்தம் பாடலில் சொல்லிவிட்டார் என்பதை அண்மை பதிவில் நாம் பார்த்தோம், அல்லவா? இதை அவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே உரைத்தது தானே? ஆகவே, இதை உலகத்தாருக்கு எடுத்துரைக்கும் நற்பணியை என் மூலம் நடத்துகிறார். இதுபோன்ற கனமான இலக்கியத்தை கையாளும் அளவிற்கு நான் மொழி வல்லுநரோ, புலமை படைத்த பண்டிதனோ இல்லை. என்னைத் தேர்ந்தெடுத்த காரணத்தை அவரே அறிவார்.
இதுவரை நான் எழுதிய சித்த நூல்கள் எல்லாமே போகர் சம்பந்தப்பட்டது தான். சென்ற வருடம் எழுதிய 'ஸ்ரீ வீரப்பிரம்மேந்திரர்' நூலும் அப்படித்தான். அவருடைய அவதார ஜெனங்கள் சம்பந்தப்பட்ட நூலை விடுத்து வேறெந்த சித்த நூலையும் இதுவரை எழுத வைக்கவில்லை. கனமான மற்ற சித்த நூல்களை ஆய்ந்து எழுதிட போதிய ஞானத்தைத தரவில்லை. ஆகவே, யான் பெற்ற இன்பத்தை, உணர்ந்த சூட்சுமத்தை, விளங்கிக் கொண்ட மெய்பொருளை உங்களோடு பகிர்ந்துகொள்ளவே அவர் பணித்தார். இன்றுவரை ரகசியம் வெளிப்படுத்துவதும் அவர் வழி நடத்துவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 'அதே சுழற்சியில் வரும் ஜெனன உறவுகள்' என்ற அண்மைப் பதிவு ஒரு சான்று. எல்லாம் அவர் சித்தம்!

1 கருத்து: