ஆக்ஞாபுதூர் தேர்வுநிலை ஊராட்சி எல்லையில் நான்கு மைல் தொலைவில் சகஸ்ரமங்கலம் பேரூராட்சி வரும். ஆகாய க்ஷேத்ரமான அங்குள்ள பெரிய கோயிலில் லிங்க மூர்த்தி கபாலீஸ்வரன், அம்பாள் பெயர் பாலம்பிகை. ஓங்காரம் சதா ஒலித்துக் கொண்டே இருக்கும் இந்த மோட்சபுரம் தலத்தில் சொர்க வாசலுக்கு இணையான ஒரு பிரம்மரந்திரம் உண்டு. அது எப்போது திறக்கும் என்பதை நாம் அறிந்து கொண்டால், யோக சக்தி மூலம் சச்சிதானந்தத்தில் இலயிக்க முடியும்.
இக்கோயிலின் கோடி சூரிய ஒளிமயமான கமல பீடத்தில் ஆயிரம் முறை சிவஜெபம் இடைவிடாது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை நடந்துகொண்டே இருக்கிறது என்பது விசேஷம். இத்தலத்தில் வாலை தெய்வம் யோகிகளுக்கு ஞானத்தையும் பிரபஞ்ச சக்தியை அளித்து, வாசியை கட்டுப்படுத்தி, சமாதி நிலை எய்த அருள் புரிகிறாள் என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்ச பூதங்களும் இத்தலத்தில்தான் ஒடுங்குகிறது என்றால் இது எப்பேர்பட்ட தலம் என்று பாருங்கள்!
ஒருமுறையேனும் அத்தலத்தில் கால் பதிக்க வேண்டும். நம் தேகத்திலுள்ள ஆறாதார சக்தி சக்கரங்கள் சிறப்பாக இயங்கினால்தான், இத்தலத்திற்கு செல்ல பிராப்தம் கிட்டும் என்பது ஐதீகம். அந்த உயர்வான சக்தி நிலையை நாம் ஒவ்வொருவரும் அடைய முயற்சிப்போம்.. ஓம் நமசிவாய!
---------- ------------ ----------- ----------- ---------
நீங்கள் அனைவரும் இந்த கோயில் எங்குள்ளது, அந்த ஊருக்கு போகும் வழி என்ன என்று நினைப்பீர்கள். அந்த கோயில் இருப்பது நம் தலையில்.
நம் உடலில் ஆறாதார சக்கரங்கள் பற்றி நீங்கள் அறிவீர்கள். மூலாதாரம் முதல் ஆக்ஞா சக்கரம் வரை பூமி. ஆக்ஞாவுக்கு மேலே ஆகாயம், மூலாதாரத்திற்கு கீழே பாதாளம். ஆகவே, மூலம்-ஆக்ஞா வரை பூமி zone எல்லை முடிகிறது. அதிலிருந்து மேலாக சுமார் நான்கு விரல் தூரத்தில் சகஸ்ரார சக்கரம் உள்ளது. இது மேல் நிலையில் உள்ள பேரூராட்சி. இது ஆகாயம் என்பதால், ஆகாய தலம் என்றேன். இங்கு கபாலத்தில் சிவனும் சக்தியும் உறைவதால், கபாலீசன் என்றும் பாலாம்பிக்கை என்றும் குறிப்பிட்டேன். எப்போதும் இந்த சகஸ்ராரத்தில் ஓம் என்ற பிரணவம் ஒலித்துக் கொண்டிருக்கும். இதுதான் வாலை குடியிருக்கும் மேருபீடம் என்று சித்தர்கள் சொல்லியுள்ளார்கள். அங்கே ஆக்ஞா சக்கரத்தின் மேலே 'பிரம்மரந்திரம்' சிறு துளை உள்ளது. இதைத்தான் சொர்கவாசல் என்றேன். இது திறக்கும் சமயம் வாசி யோகத்தால் அங்கே அமுத சொட்டு பருகி பிரபஞ்சவெளியோடு ஐக்கியமாகி பேரானந்த நிலையில் இருக்க முடியும்.
இங்கு ஆயிரத்து எட்டு இதழ்கள் கொண்ட தாமரை உள்ளது. சதகோடி சூரியனின் தூய ஒளி இங்கு வெளிப்படுகிறது. இங்கே நம் பிராணன் சுமார் ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை ஆயிரம் 'ஹம்ச' ஜெபம் செய்து கொண்டிருக்கிறது. (இதுபோல் ஒவ்வொரு ஆறாதார சக்கரத்திலும் பல ஆயிரம் முறைகள் ஜெப ஒட்டம் நடக்கிற படியால், ஒரு நாளில் மொத்தம் 21600 முறை ஓடுகிறது. அதனால் தான் சித்தர்களும் மகான்களும் தங்கள் சிரசில் வில்வம், மலர் வைத்து வழிபடுவார்கள்.) இந்த சகஸ்ரார சக்கரம் யோகிகளுக்கு மட்டுமே கைகூடுவது. இங்கு பஞ்சபூத சக்திகள் கட்டுப்படுகிறது. சித்தர்கள் தங்கள் வாசியை விருப்பம்போல் மாற்றிடவும், கட்டுப்பாட்டில் கொண்டு வரவும், வெட்டவெளியோடு ஒன்றிட, இங்கு வாலை தெய்வம் சித்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். மூலாதாரம் முதல் ஆக்ஞா வரை உயர் நிலைகள் தாண்டிய பிறகுதான், தேர்வுநிலை முடிந்து அடுத்த நிலை சகஸ்ராரத்திற்கு குண்டலினி உயர்த்தபட பிராப்தம் வருகிறது என்றேன்... ஒரு புதிர் போட்டு இப்படி உங்களை சுற்ற விட்டதற்கு மனிக்கவும்.
இது எப்பேர்பட்ட தலம் என்பதை போகர் ஏழாயிரம்- இரண்டாம் காண்டத்தில் (பா-1089) சொல்வதைக் காண்க.
நன்றி.
பதிலளிநீக்குவாழ்க வளமுடன். ஐயா பிரம்மரந்திரம் என்பதன் பொருள் என்ன?
பதிலளிநீக்கு