'அந்த ஊர்ல சாமி ரொம்ப சக்தி வாய்ந்தது', 'இந்த கோயில்ல சாமிக்கு சக்தி இருந்தா இப்படி விளக்கே இல்லாம தன்னை இருட்டில் வைத்துக் கொள்ளுமா?' 'சாமிக்கு சக்தி இருந்தா சிலை திருட்டை தடுக்கக் கூடாதா?'.. இதுபோல பல வர்ணனைகள் என் காதில் விழும்போது வாய்விட்டு சிரிப்பேன். நான் சிரித்த காரணம் அவர்கள் அறியார். அவனுக்கு எதற்கு கோயிலும் சிலையும்? அது நம் வழிபாடுக்கு ஏற்படுத்தப்பட்டது. அரூபமாக உள்ள இறைவனின் ரூபத்தை நாம் எல்லோருமே காண முடியுமா? தியானிக்க முடியுமா? அதற்காத்தான் இந்த சிலா வழிபாடு.
ஏதோ மத்த ஊர்ல சாமிக்கு சக்தி பலஹீனம் பட்டது போலவும், வெளிச்சம் இருந்தால்தான் சாமி தெளிவாக நம்மைப் பார்க்கும் என்பது போலவும், சிலை திருட்டுக்கு சாமியும் உடந்தை போலவும், பலவாறு அஞ்ஞானிகள் பேசுவார்கள். கலிகாலத்தில் தன் உருவையும் சொத்தையும் திருடவைத்து 'இறை திருட்டு' என்ற பாவச்செயலில் சிக்க வைக்கும் யுக்தி அவனுக்கே தெரியும். இறைபக்திப் பாடல்களையும் சுலோகத்தையும் சப்தமாக PLAY செய்து விட்டு இவர்கள் அரட்டை அடித்துக் கொண்டும் வேறு வேலையில் முழுகி இருப்பார்கள். எதுக்கு தண்டத்துக்கு இது பாட்டு பாடுது என்று நாம் கேட்டால், 'அது சாமிக்கு' என்று பதில் வரும். நாம் வாய்விட்டு சுலோகம் சொல்லி பண் இசைத்து வழிபட்ட காலம்போய் ரிகார்ட் போட்டு ஓட்டும் நிலையில் உள்ளோம். டிவியிலும் வானொலியிலும் ஒலிப்பதை கேட்டு சாமி என்ன செய்யப் போகுது?
பஞ்சமுகத்தானின் ரூப வெளிப்பாடே பூலோகத்து கோயில்கள். அவனிலிருந்து வெளிப்பட்ட தெய்வங்கள் உபதெய்வங்கள் என்றுமே உயர்வானதே. சிலகாங்கள் மக்கள் அறியாமை யில் இருந்துவிட்டு மீண்டும் பக்தி மார்க்கத்தில் வந்துள்ளதால், இந்த நவகோள்கள் மற்றும் காவல் தெய்வங்கள் பிரசித்தமாகி விட்டது போன்று ஒரு மாயைத் தெரிகிறது. வெளியுலகிற்கு தெரியாத புதுப்புது பரிகாரத் தலங்கள் பிஸியாகி விட்டது.
கலியுகத்தில் எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் கடமையாற்றும் அளவுக்கு ஒருவனால் 'நிஷ்காம்ய' மாக இருக்க வாய்ப்பில்ல்லை. அப்படி இருந்தால் அவர் இந்த மாசுபட்ட சமுதாயத்தில் இருக்க முடியாது... தேசாந்திரம் சந்நியாசம் என்று வேறு பாதையில் போவார். நாலு பேரு உன்னை எற்றுக் கொள்ளும்படி வாழவேண்டும் , உடை உடுத்த வேண்டும், செயின் வாட்ச் கட்டிக்க வேண்டும் , பந்தாவாக வாகனத்தில் போக வேண்டும், வாழ்க்கை அந்தசத்து காட்ட வேண்டும்... இப்படி பல வேஷங்கள் போட்டாக வேண்டும்... அப்படி இல்லாமல், எனக்கு இது போதும் நான் இப்படித்தான் இருப்பேன் என்று ஒரு சித்தர் மாதிரியோ, பிச்சைகாரரைப் போலவோ வெளிப்பாடு கொண்டு இருக்க முடியுமா? இதுதான் இன்றைய உலகம்.
பலன் எதிர்பார்க்காம எப்படி சார்? ' நான் உனக்கு நாலு தாரேன்.. நீ எனக்கு மூணு தா' அப்படீன்னு ஔவை பலன் எதிர்பார்த்துதான விநாயகரிடம் அகவல் பாட்டு பாடினாள்? என்று சொல்லி அசத்துவார்கள்.
வயது முதிர்ந்த ஒரு செட்டியாரம்மா என்னிடம் பேசும்போது 'இன்னும் கொஞ்சநாள் போனா இந்த வைரத்தோடுகூட கழட்டிடுவேன், ஆசை வைக்ககூடாது' என்று சொல்லுவார். 'ஏன் பாட்டி., அதை இப்போ கழட்டினாதான் யார் என்ன சொல்லப்போறாங்க?' என்று கேட்பேன். அதற்கு அவர், 'ஹன்.. பெத்தாச்சி ஒண்ணுமில்லாதவனு என்னை எங்க சாதிசனம் யாரும் நினைச்சுடக் கூடாது பாரு..' என்பார். திருநீறு பூசிய அகண்ட நெற்றியும், காதில் டால் அடிக்கும் வைரமும் சமூகம் விரும்புகிறதாம். எனக்கு சிரிப்புதான் வரும். இவர் ஒரு பானை சோற்றுக்குப் பதம்.
'கடை விரித்தேன் கொள்வாரில்லை' என்ற வாக்கியம் நாம் கேள்விப்பட்ட ஒன்று. மக்களுக்கு வாழ்வியல் நோக்கில் மற்ற சரக்குகள் முக்கியம் என்று பட்டதால், ஆன்மிக சரக்கு வாங்கவில்லை. கலி லட்சணம் இப்படித்தான் இருக்கும் என்று குருநாதர் போகர் என்றோ சொல்லிவிட்டார். மேலே சொன்னபடி இப்படியெல்லாம் யாரும் இல்லாவிட்டால் இது 'கிருத' யுகமாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக