நம்மால் பிறருடைய பாவங்கள் போக வாய்புண்டா? உண்டு என்கிறார்கள் சித்த பெருமக்கள். நாம் சாலையில் நடந்து போகும்போது, நம் எதிரே முகம் தெரியாத யாரோ எதிர்படுகிறார்கள். எதிர்படுவோரை எல்லாம் நாம் ஏறெடுத்து பார்ப்பதில்லை. நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வையாக நாம் போய்க்கொண்டு இருப்போம். பலபேரில் தனிப்பட்ட யாரோ ஒரு நபரை குறிப்பிட்டு நாம் உற்றுப் பார்ப்பதில்லை.
ஆனால், அவர் நம்மை ஒருமுறை பார்க்கலாம், மீண்டும் இரண்டாவது முறையாக ஏதோ ஈர்ப்பு காரணமாகவோ, நம்மை பார்க்கவேண்டும் என்ற நினைப்பில் நம்மைத் தாண்டிபபோகும்வரை நம்மையே பார்க்கவும் வாய்ப்புண்டு. இதை அநேகமாக நாம் கவனிக்கத் தவறிவிடுவோம். அப்படி நம்மை பார்க்கும்போது, பூர்வஜென்ம பந்தத்தினாலோ, ஊழ்வினைப் பயனாகவோ அவர் நம்மை காரணத்தோடுதான் காண நேரிடுகிறது. அவரை நாம் போகும் வழியில் வரவைத்து காணச் செய்கிறது.
இப்படிச் செய்யும்போது, நம்முடைய பார்வையோ, அல்லது அவர் நம் முகத்தைக் காண நேரிடும்போதோ, தன்னிடமிருக்கும் சில பாவங்கள் அடிபட்டுப் போகிறது என்பதை சித்தர்கள் என்னிடம் சொன்னார்கள். "நாம் என்ன புனிதனா? நம்மைப் பார்த்து ஒருவனின் பாவங்கள் விலகுமா?" என்று உள்மனம் உடனே நினைக்கும். அல்லவா? நாம் அடுத்தவரின் பாவங்களைப் போக்கும்போது நாமே நம் பாவங்களை களையமுடியாதா? என்று எண்ணத் தோன்றும். நம்மால் சமூகம் மேம்படுவதற்கே நாம் பிறக்கிறோம், நம் அடிச் சுவட்டை விட்டுச் செல்கிறோம். நாம் வாழ்வது நமக்காக அல்ல!
ஆனால் இப்படி நடப்பது உண்மை. காரணத்தோடுதான் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நம்மைக் கடந்துபோவோர்களின் முக்கியத்துவம் அமைகிறது. அப்படித்தான் அவர்கள் வாழ்க்கையிலும் நாம் வந்து போகிறோம். நண்பனாக, சொந்தமாக, ஆசானாக, மாணாக்கராக, இப்படி பல வேடங்கள் ஏற்கிறோம்.
இப்படித்தான் ஒருமுறை என் நண்பரோடு என்றும் செல்லாத ஒரு தெரு வழியே நான் செல்ல நேர்ந்தது. நண்பர் ஒரு கடைக்குள்ளே சென்றார். நான் கடை முன்னே நிழலில் நின்றிருந்தேன். அப்போது என் கண் எதிரே ஒரு சித்தர் கண் மூடிய நிலையில் சுவரில் சாய்ந்து தெருவில் கால் மடித்து அமர்ந்திருந்தார். "இவர் கோலத்தைப் பார்த்தால் சித்தரா பிச்சைக்காரரா என்று தெரியவில்லையே" என்று என் மனதில் நினைத்தேன். அக்கணமே அவர் திடீரென கண் திறந்து வேறெங்கும் பார்க்காமல் நேராக என்னைப் பார்த்து மெல்லச் சிரித்து மீண்டும் கண் மூடிக்கொண்டார். நான் நினைத்ததை அவர் அறிந்த்ததால் எனக்கு புன்சிரிப்பு மூலம் பதிலளித்தார். நான் வரும் வழியில் அவர் வந்து அமரந்து என்னைக் காணவேண்டும் என்று மேல் நிலையில் கட்டளை வந்திருக்கலாம். அதேபோல், இவரை தரிசனம் செய்ய என்றுமே போகாத அத்தெரு வழியே அப்போது போகவேண்டி இருந்திருக்கும். அதுபோலவே வேறு யாரேனும் என்னைக் காணம்படி அவர் எதிரே நான் பயணப்படவேண்டி இருக்கும்.
இப்படி, நம்மைச்சுற்றி சித்த வலைபின்னல் பல நடந்துகொண்டிருக்கிறது. நம்முடைய ஆன்மாவின் நிலை இதன்மூலம் அறியப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக