சமீப காலமாக முகநூலில் ஒரு சில பதிவுகளைப் பார்த்தாலே பலபேருக்கு அலுப்பு வருகிறது. அப்படி என்ன பதிவு என்கிறீர்களா? வேறென்ன? தஞ்சையும் அதையாண்ட ராஜராஜ சோழன்தான்! மூவேந்தரில் இந்த மன்னன் மட்டும்தான் செயல்பட்டானா? இங்கு வேறு யாரை பற்றியும் வருவதில்லையே என்ற உங்கள் குரல் கேட்கிறது. ஆனால் அதைக் கேட்க ஒரு தயக்கம்.
முகநூலை (Facebook) பொறுத்தவரை, நமக்குத் தெரிந்த ஒரே மன்னன் ராஜராஜசோழன் (11ம் நூற்றாண்டு). ஒரே தலைநகரம் தஞ்சாவூர். ஒரே படைப்பு பெருவுடையார் கோயில்.. அவனுடைய யானைப்படை, சோழ சாம்ராஜ்யம் வளர்ந்த கதை, என்று இப்படி... இதைத் தாண்டி வேறேதுமில்லை.
மதுரை பற்றிய செய்தி மிக அறிதாகவேதான் இடுகிறார்கள். அந்த ஊர்க்காரர் போட்டால்தான் உண்டு. அப்படியொரு பதிவை அண்மையில் படித்தேன். அதன் சாரம் இதுதான்.
'மதுரையை மீட்ட மாறவர்மன் சுந்தர பாண்டியன் (13ம் நூற்றாண்டு) என்ற மன்னன் இருந்தான். (எம்ஜிஆர் நடித்த படம் நினைவுக்கு வருதா?) சுமார் 300 ஆண்டுகள் அடிமைப்பட்டு கிடந்த பாண்டிய நாட்டை சிறிய படைக் கொண்டு பெரிய சோழப்படையை வென்று மீட்டெடுத்தான். தன் ஆட்சிக்காலத்தில் மீனாட்சி அம்மன் கோவிலை அகலப்படுத்தி கிழக்கு கோபுரத்தை பிரம்மாண்டமாக கட்டிமுடித்தான். மதுரையில் முதன் முதலில் பெரிய கோபுரம் உருவாக மாறவர்மன் சுந்தர பாண்டியனே காரணம்.
மதுரையை மீட்டதோடு மட்டுமில்லாமல் சோழநாடு சேரநாடு இலங்கை விஜயநகரம் கன்னட நாட்டின் சிலபகுதிகளும் தன் கட்டுப்பாட்டில். இருந்தும் மூன்றாம் ராசராச சோழன் இவனுக்கு கட்டுபட்டு சிற்றரசனாக இருக்க ஒப்புக்கொண்டதால் சுயாட்சி வழங்கினான். தஞ்சை கோயிலை கட்டிய முதலாம் ராஜராஜசோழன் செய்த அதேயளவு சாதனையை சுந்தர பாண்டியனும் செய்தான். அவன் ஆண்ட அதே அளவு நிலப்பரப்பை இவன் 300 ஆண்டுகள் அடிமைப்பட்டுக்கிடந்த சிறு படையை வைத்தே வென்றான். ஆனால் அவனைப் பேசும் அளவு நம் மக்கள் இவனை மறந்து விட்டோம்' என்று அப்பதிவில் உண்மை இருந்தது.
"சமூக வலைதளத்தில் ராஜராஜசோழனின் பெருமை மட்டும்தான் சொல்லவேண்டும் என்ற ஒரு வழக்கம் இருப்பதுண்டு.. அதனால புதுசா இப்போ வந்து சுந்தரபாண்டி தங்கபாண்டி பற்றி எல்லாம் பேசுவது சரி இருக்காதுங்களே.. என்ன நான் சொல்வது?"
சங்கம் வளர்த்த வைகை பொழியும் ஆலவாயான் தலத்தை எந்த தலை நகரோடும் ஒப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால் கிழக்கு கோபுரம் உள்ளவரை மாறவர்மன் சுந்தரபாண்டியனின் பெயர் சொல்லும். பஞ்சபூத தலங்கள் ஒருபுறம் இருந்தாலும், மதுரை தலத்திற்கு ஈடில்லை என்கிறார் சித்தர் போகர். எல்லாவற்றையும் விட ஈசன் விரும்பியது அதுவே என்கிறார். "மானான மகாதேவர் மதுரையைத்தான் மகத்தான தலமென மதிப்பிட்டாரே" என்று தன் போகர் ஏழாயிரம் நூலில் சொல்லியுள்ளார்.
மதுரை கோயிலின் அழகும் கம்பீரமும் பக்தியும் தமிழ் மணமும் உயிர் துடிப்பும், தஞ்சாவூர் பெரிய கோயிலில் இல்லாமல் போனது ஏனோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக