About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 17 ஜூன், 2017

மந்திரக் கட்டும் - பத்மநாப தாசர்களும்

சுமார் 6 ஆண்டுகளுக்கு முன் 2011ல் திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோயில் நிலவறையில் உள்ள 6 ரகசிய பொக்கிஷ அறைகள் பற்றி நாம் எல்லோரும் கேள்விப்பட்டோம். உலகமே பரபரப்பாக பேசியது, அனைத்து டிவி சேனல்களும் முக்கிய செய்தியாக்கின.

சயன பெருமாளின் கர்ப கிருஹத்திற்கு நேர் கீழே பாதாள பகுதியில் 6 ரகசிய அறைகள் உள்ளது. இதில் 5 அறைகள் திறந்து பார்க்கப்பட்டு அதில் இருந்தவை எல்லாமே கணக்கு பார்க்கப்பட்டது. எல்லாமே கடந்த 500 வருடங்களில் ராஜ குடும்பத்து மன்னர்களும் குடும்ப உறுப்பினர்களும் தங்கள் குலதெய்வ சயன பெருமாளுக்கு அளித்த காணிக்கைதான் அவை. இன்றைய மதிப்பில் அது சுமார் இரண்டு லட்சம் கோடிக்கு மேலானது என்று சொல்கிறார்கள். ஆளுயர காசுமாலைகள், கிண்ணங்கள், சொர்ண மணிகள், வைர வைடூரிய ஆபரணங்கள், முகலாய மன்னர்கள் மற்றும் உலகின் வெவ்வேறு மன்னர்கள் காலத்து தங்கக் காசுகள், மற்றும் கற்பனை செய்யமுடியாத வடிவங்களில் கற்கள் பதித்த நகைகள் என்று எத்தனயோ உண்டு. இதெல்லாம் அதிகாரப்பூர்வமாக வெளியான படங்களில் நான் பார்த்தவை. நினைத்துப் பாருங்கள்,  அக்காலத்தில் பொற்கொல்லர்கள் எத்தனை பிஸியாக இருந்திருப்பார்கள் என்று. இவ்வறைகள் போக புதிதாக இன்னும் இரண்டு அறைகள் G & H கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

கோயிலில் முறைகேடுகள் நடக்காமல் இருக்கவும், இந்த சொத்துகள் அனைத்தும் நாட்டுடமை ஆக்கப்பட்டு அது பயன்பட வேண்டும் என்று ஒருவர் வழக்கு போட்டார். விசாரித்த நீதிமன்றம், எல்லா (Secret Vaults) ரகசிய அறைகளையும் திறக்கச்சொல்லி உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்றம் குறித்து வைத்த B அறையின் கதவுக்கு தாழ்பாள் பூட்டு ஏதும் இல்லை. ஏன்? அதற்கு நாகபந்தம் மந்திரக்கட்டு போடப்பட்டு அந்த உலோக கதவின் மீது 'நாக முத்ரிகா' பொறிக்கப்பட்டுள்ளது. அதற்கு தக்கதொரு கருட மந்திரத்தை ஒரு சுத்த யோகி பிரயோகித்தால்தான் அந்த நிலவரை கதவு திறக்கும் என்பது தாந்த்ரீகர்களின் பிரசன்ன தீர்வு. இதுவரை கண்டெடுத்த பொக்கிஷங்களைவிட இதில் அதிகம் உயர்வானவை இருக்ககூடும் என்றும், அதனால் தான் அதற்கு இந்த மந்திரக் கட்டு என்றும் சொல்லப்படுகிறது.

Image may contain: outdoor
ஒரு நூற்றாண்டிற்கு முன் கேரளத்தில் கடும் பஞ்சம் நிலவியது. அதைப் போக்க எண்ணி, பெருமாளின் தலைப் பகுதிக்கு நேர் கீழேயுள்ள இந்த நிலவறையை திறக்க முற்படும் போது அங்கே சமுத்திரத்தின் ஆக்ரோஷ ஒலி கேட்டதாகவும், உடனே முயற்சி கைவிடப்பட்டது என்றும் வரலாறு பக்கங்கள் சொல்கிறது. இது நேரடியாக அரபிக் கடல் சமுத்திர முகத்துவாரமா என்றும் தெரியவில்லை. ஆனால் இந்த அறையை ஆதிசேஷன் காவல் காப்பதாக ஐதீகம், அது திறக்கபட்டால் இந்த பரசுராம ஷேத்திரத்தை கடல் கொள்ளும் என்பது திண்ணம்.

Image may contain: table, food and indoor

அரச குடும்பத்தினர் இந்த அச்சம் காரணமாகவே அறையை திறக்க அனுமதிக்கவில்லை. ராணி கவுரி லக்ஷ்மிபாய் பேசும்போது, "அந்த பாதாள அறைகளில் என்னென்ன இருந்துள்ளது என்று எங்களுக்கும் இதுநாள்வரை தெரியாது. நாங்கள் அதனுள்ளே போனதில்லை. இத்தனை இருப்பது ஆச்சரியமாக இருந்தது. எங்கள் மாமா ஸ்ரீ சித்திரை திருநாள் வர்மா மகாராஜாவுக்கும் அது பற்றித் தெரியாது. ராஜ குடும்ப மகாராஜா எல்லோருமே 'பத்மநாப தாசர்கள்' என்பதால் கொடுத்த காணிக்கையை எக்காரணத்திற்காகவும் எடுத்துக்கொள்ளவோ உரிமை கொண்டாடவோ முடியாது. அனுதினமும் மகாராஜா தரிசனம் செய்ய வரும்போது கோயிலில் சுவாமி முன் நின்று இதை சத்தியம் செய்து உறுதிப்படுத்துவார்கள் " என்றார். 

இதனை ஏற்ற உச்ச நீதிமன்றம் அக்கதவை திறப்பதற்கு தடை stay விதித்தது.
கடந்த நூற்றாண்டுகளில் திருவிதாங்கூர் ராஜாக்கள் ஆங்கிலேயனிடம் முறைத்துக்கொண்டு உராய்வு வைத்துகொண்டதே இல்லை.. ராஜாக்கள், நாய்க்கு எலும்புத்துண்டு வீசுவதுபோல் அவர்களுக்கு கப்பம் கட்டினர். எதற்காக? இதை காபந்து செய்யத்தான்... இல்லாவிட்டால் ஆங்கிலேயர் என்றோ கொள்ளை அடித்திருப்பார்கள்.. திப்புசுல்தான் நாகர்கோயில் வரை படையெடுத்து வந்தான். ஆனால், இங்கு ஏனோ வரமுடியவில்லை. 1799ல் அவனை ஆங்கிலேயர்கள் கொன்றனர். அதேபோல், மேற்படி நீதிமன்றத்தில் வழக்கு போட்டவர், பெட்டிஷன் போட்ட ஒரு வாரத்திலேயே இயற்கையாக இறந்து போனார்.

உச்சநீதி மன்ற ஆணைப்படி இதுவரை திறந்து பார்க்கப்பட்டு, கணக்கெடுக்கபட்டவை.
Image may contain: text

இதை நாட்டுடமை ஆக்குவது ஒன்றும் பெரிய வேலையில்லை. அந்த தெய்வ கருவூலத்தை அபகரித்து மகாப்பெரிய ஊழல் செய்து தலைவர்கள் விழுங்கிடக்கூடாது. திறக்கபடாத அறையின் பொக்கிஷங்களையும் சேர்த்து நம் நாட்டை இன்னும் பத்து ஆண்டுகளுக்கு நிதி நெருக்கடியின்றி நடத்த முடியும் என்ற நிலையும் இருக்கலாம். விவசாயக் கடன்களை, உலக வங்கி கடன்களை அடைத்து பற்றாக்குறைகள் வராமலே சமாளிக்க முடியுமாம். இவை எல்லாம் நம் பொருளாதார-நிதி வல்லுநர்கள் சொன்ன உத்தேசமே! பெருமாளுக்கு கம்யூனிச கொள்கையில் நிலைப்பாடு பற்றி யாமறியோம்!

ஆனால், இறைத் திருட்டு செய்யாத அப்படியொரு அப்பழுக்கற்ற உத்தம தர்மசீலர் இந்த நாட்டின் அரசியல் தலைமையில் இன்று வரை இல்லை என்பதால் அப்பொக்கிஷங்களை ஆதிசேஷனே காக்கட்டும். அதுவரை மர்மம் நீடிக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக