நம்மில் பலருக்கு ஆசைக்கும் பேராசைக்கும் வேற்றுமை தெரிவதில்லை. ஆசை எப்போது எல்லைதாண்டி பேராசையாக மாறுகிறது என்ற கவனம் இருப்பதில்லை. அண்மையில் என் நண்பரின் தந்தைக்கு நேர்ந்த அனுபவத்தைச் சொல்கிறேன்.
என் நண்பரின் தந்தை நகை வியாபாரி. அவருக்கு ஊரில் நிலம் உண்டு. அதுபோக இங்கே பட்டணத்தில் அரை கிரவுண்டு மனை வாங்கி அதில் கீழும் மேலும் வீடு கட்டி பத்தாயிரத்திற்கு வாடகை விட்டார். அவர் ஒவ்வொரு ஆண்டும் ஐநூறு ரூபாய் வாடகை உயர்த்திக்கொண்டே போவார்.
நான் இதுபற்றி என் நண்பரிடம் சொல்வேன், 'எதுக்கு இந்த அடாவடித்தனம்? ரெண்டு வருஷத்துக்கு ஒருமுறை சிறு தொகை ஏற்றினால் தப்பில்லை. ஆனால் ஒவ்வொரு வருஷம் ஐநூறு ஏற்றுவது சரியில்லை. வாடகை உச்சவரம்பு இல்லாமல் இது எங்கு போய் முடியுமோ? ஏற்கனவே ஒரு லட்சம் அட்வான்ஸ் தொகை உங்க கைலதான் இருக்கு, அதன் வட்டி ஆண்டுக்கு சராசரியா எழாயிரத்தி ஐநூறு இதுவரை வந்துகிட்டு இருக்கு. ஏழு வருஷத்துக்கு என்ன ஆச்சு? அதுவே லாபம்தான். அதுபோக வருஷா வருஷம் ஏத்தணுமா? இது சரியா படலை" என்று சொன்னேன்.
"அது இல்ல சந்துரு.. எங்க அப்பா காசுல ரொம்ப கில்லி. அவர் கிட்ட நியாயம் தர்மம் சொன்னா புத்தில ஏறாது. ஊருபூரா எல்லாருமே இப்படித்தான் ஏத்தறாங்க. நம்ப மட்டும் ஏன் செய்யக்கூடாதுனு கேப்பாரு.. எங்களோட குடித்தனக்காரங்க யாரும் கவர்மேண்டோ/ ஐடி வேலையிலயோ இல்லை. அவங்களை வாட்டி எடுப்பது கஷ்டமாதான் இருக்கு" என்று சொல்லுவார்.
"விலைவாசி கடுமையா இருக்கிற காலத்துல வர்ற சம்பளம் பூராவும் வாடகைக்கு போனா அவன் பாவம் என்ன செய்வான்?" என்றேன். ஹவுஸ் ஓனர்கள் தங்களோட ஒரு மாச வீட்டு செலவு, கடன் தவணை எல்லாமே வாடகை மூலம் வசூல் பண்ணனும்னு பாக்குறாங்க போலிருக்கு என்று சொல்லிச் சிரித்தேன். அவர் வீட்டு விஷயத்துல நான் எல்லையோட நிக்கணும் என்பதால் அதைத்தாண்டி நான் ஏதும் சொல்லவில்லை.
போன மாதம் என் நண்பர் வருத்தத்துடன் வந்தார். "எங்க அப்பாவோட திருச்சி கடைல வேலை செய்த ஆளு 20 சவரன் நகைங்களையும் சின்ன வெள்ளி சாமான்களையும் அபேஸ் செய்துட்டு ஓடிட்டான். அது கைமாறும் கடத்தல் தங்கம் என்பதால புகார் செய்ய முடில. எல்லாம் கெட்ட நேரம் தான்" என்றார். "ஓ... எவ்ளோ நஷ்டம்? என்றேன். 'சுமார் ஐந்து லட்சம் இருக்கும்' என்றார்.
அவருடைய பேராசையைப்போல் நஷ்டமும் பெரிதாக இருந்தது.. பேராசை இல்லாமல் இருந்திருந்தால், என்னதான் கெட்ட நேரம் என்றாலும், ஐந்து லட்சம் போவதற்கு பதில் ஐநூறோ ஆயிரமோ போயிருக்கும். இவர்கள் சுயமாக அடிபட்டுத்தான் இதுபோன்ற அனுபவம் பெறவேண்டும் போலிருக்கிறது. அடித்துப் பிடுங்கிய காசு வந்த வழியே ஓடிவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக