நேற்று முகநூலில் ஒரு பதிவைப் படித்தேன். அதில் ஊழ்வினை, கஷ்டம், துன்பங்கள் பற்றி பல விஷயங்கள் சொல்லப்பட்டன. ஆறறிவு கொண்ட மனிதன் நற்செயல் செய்யாமல் இருப்பதும், அப்படி வாய்ப்புகள் கிடைத்தும் அதை செய்யாது கோட்டை விட்டு விடுகிறான் என்றும் அதில் இருந்தது.
அதில் மேலோட்டமாக சொன்ன கருத்து சரி என்றாலும் ஏன் நம்மால் இந்த வாழ்க்கை சக்கரத்தின் பிடியிலிருந்து தப்ப முடியவில்லை? பாவம் புண்ணியம் எல்லாம் அறிந்தவர்கள்தான் நாம். மெத்தப் படித்த கல்விமான், செல்வந்தர் என்று எல்லோருமே ஏதோ ஒரு வகையில் மன நிறைவின்றி இருப்பது ஏன்? பணத்தைகொண்டு அவர்கள் நற்செயல் செய்ய முடியாதா? வெறும் நற்செயல் மட்டும் செய்வதால் விதியை நம் மதியால் மாற்றிட முடியாது என்பதை ப்பற்றி சற்று விளக்க விரும்புகிறேன்.
நம் ஆன்மா எடுக்கும் பிறவியே ஊழ்வினை அடிப்படையில் தான் நடக்கிறது. இதுவரை நாம் எடுத்த பல லட்ச மனித பிறவிகளில் செய்த பாவங்களும் புண்ணியங்களும் பொதுவாக 'சஞ்சித கர்மம்' என்று அழைக்கபடுகிறது. சம்பந்தமே இல்லாமல் ஒருவன் உங்களுக்கு ஒரு உபகாரம் செய்கிறான் என்றால் அதை தெய்வ அனுக்ரகம் என்று பொதுவாக எண்ணுகிறோம். ஆனால் ஏதோவொரு முற்பிறவியில் அந்த ஆன்மாவிற்கு நாம் தக்க நேரத்தில் உதவி செய்திருப்போம் அது இப்போது ஒரு பிறவியில் வலியவந்து சகாயம் செய்தது. ஒருவனுக்கு தீவினை செய்தால் அது நாம் எப்பிறவியில் வாழ்ந்தாலும் அந்த ஆன்மா படை எடுத்து வந்து தாக்கும். அவனுக்கும் உங்களுக்கும் இப்பிறவியில் சம்பந்தம் இருக்க வேண்டும் என்பது இல்லை. நண்பர்கள்/உறவுமுறைகள் என்று சம்பந்தம் இருந்தாலும் ஆச்சரியம் இல்லை.
இந்த சஞ்சித பாவ/புண்ணியங்கள் accumulate ஆகிக் கொண்டுவரும். அந்தந்த பிறவியில் எந்தந்த ஆன்மாவுக்கு முன்னர் நாம் என்ன செய்தோம் என்று match the following நடந்து அதன்மூலம் இந்த பிறவியில் இன்பமும்/துன்பமும் வருகிறது. இதை அந்தந்த பிறவியின் 'பிராரப்த கர்மம்' என்போம். இதைத்தான் 'தீதும் நன்றும் பிறர் தர வாராது' என்று சொல்வது. அதாவது முற்பகல் செய்தது பிற்பகல் விளையும். சஞ்சித கர்ம மூட்டையில் இருக்கும் புண்ணிய செயல்களுக்கேற்ப இப்பிறவியில் ஜாதகத்தில் நல்ல தசா-புக்தி வரும்போது நற்பலன்களும் யோகங்களும் வருகிறது. கண்ணெதிரே அட்டூழியம் செய்தவனும் சுகபோகமாக வாழ்கிறானே என்று வயிறு எரியும். அதற்கு இதுதான் காரணம். கெட்டநேரம் வரும்போது தீய ஊழ்வினை எச்சங்கள் வெளுத்து வாங்கி தாக்குகிறது. இதில் நம் மதி என்ன செய்யும்? நம் புத்தியால் அதை போக்கமுடிந்ததா?
ஒன்றைச் சொல்கிறேன். 'நற்செயல் செய்ய தடை இல்லைதான்'. இருந்தாலும் அதனை செய்து புண்ணியம் ஈட்டவும் ஈசனின் அருள் வேண்டும்.. ஆறாம் அறிவு இருந்தும்கூட மனிதன் கண்டு கொள்ளாமல் கோட்டை விட்டான் என்பதெல்லாம் இல்லை... ஏழாம் அறிவே நமக்கு இருந்தால்கூட, ஊழ்வினை தீரும்வரை இதைச் செய்ய ஏதோவொரு இடைஞ்சல் வரும்.. மனம் இலயிக்காது.. இதை உங்களில் பலர் அனுபவத்தில் அறிவீர்கள்... அவன் அருளால்தான் அவனைத் தொழவும், தர்ம நெறியில் நல்ல செயல்கள் செய்யவும், ஊழ்வினை வெல்லவும் முடியும். இது பிராப்தம் இருந்தால் நடக்கும். விதி கட்டிப்போடுவதால் செயலுக்கும் அறிவிற்கும் சம்பந்தமில்லை. மதி வேலை செய்யாது. விதி வலியது எனும்போதுதான் புத்தியும் கெடும்.. 'விநாசகாலே விபரீத புத்தி' என்று கோணங்கித்தனமாக செயல்படும்.
அதுவரை குடும்ப சாபமும், ஊழ் வினை சதியும் விதியும் நடந்த வண்ணம் இருக்கும். ஊழ்வினை தான் விதி என்ற பெயரோடு துரத்தும். நாம் அதன் கட்டுப்பாட்டில் இருக்கிறோம். 'நற்செயல் செய்ய எண்ணம் வராதது, அப்படியே வந்தாலும் நீங்கள் செய்யும் தர்மம் பலனற்று போவது, உங்களின் தர்மத்தை ஏற்க மறுப்பது, செய்த நற்செயலுக்கு பிரதி உபகாரமாக வேறெதையோ பெறுவது..' என்று பலவற்றைச் சொல்லலாம். இது மிகவும் சூட்சுமம் நிறைந்த சமாசாரம்... மனக் கண்ணால் இதன் தொடர் விளைவுகள் அத்தனையும் காண முடிகிறது.. அவற்றை நான் மேலெழுந்த வாரியாக இங்கே விளக்குவது சாத்தியப்படாது.
சித்தர் போகர் இராமனாக ஜனித்தார். அவர்தான் இராமாயண கதாநாயகன். அவர் நினைத்திருந்தால் கதையை மதியால் மாற்றி இருக்கலாம். ஏன் செய்யவில்லை? ஈசன் எழுதிய ஸ்க்ரிப்ட்படி கதை அப்படித்தான் டைரக்ட் செய்யப்பட்டது என்பதை தன் 'போகர் ஜெனன சாகரம்' நூலில் சொல்கிறார். இராமன் பிறப்பதற்கு முன்பே ஆரணிய காண்டம் கதை முடிவாகிவிட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். தசரதனாக வரும் இந்திரனிடம் இதைப் பற்றி விவாதிக்கிறார்.
ஆக, எதுவும் நம் கையில் இல்லை. நாம் வெறும் ரோபோ பொம்மைகள். அவன் ஆட்டுவித்தபடி ஆடுகிறோம். செயல்படுகிறோம். மதியால்தான் எல்லாம் செய்கிறோம் என்று நினைப்பது மாயை. நல்ல பலன் கிட்டினால் 'மதி' உபயோகித்தேன் என்போம், கெடுபலன் வந்தால் 'விதி' என்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக