About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 28 ஜூன், 2017

பிறர் பாவத்தை நாம் போக்குகிறோம்!


நம்மால் பிறருடைய பாவங்கள் போக வாய்புண்டா? உண்டு என்கிறார்கள் சித்த பெருமக்கள். நாம் சாலையில் நடந்து போகும்போது, நம் எதிரே முகம் தெரியாத யாரோ எதிர்படுகிறார்கள். எதிர்படுவோரை எல்லாம் நாம் ஏறெடுத்து பார்ப்பதில்லை. நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வையாக நாம் போய்க்கொண்டு இருப்போம்.  பலபேரில் தனிப்பட்ட யாரோ ஒரு நபரை  குறிப்பிட்டு நாம் உற்றுப் பார்ப்பதில்லை.

ஆனால், அவர் நம்மை ஒருமுறை பார்க்கலாம், மீண்டும் இரண்டாவது முறையாக ஏதோ ஈர்ப்பு காரணமாகவோ,  நம்மை பார்க்கவேண்டும் என்ற நினைப்பில் நம்மைத் தாண்டிபபோகும்வரை நம்மையே  பார்க்கவும் வாய்ப்புண்டு. இதை அநேகமாக நாம் கவனிக்கத் தவறிவிடுவோம். அப்படி நம்மை பார்க்கும்போது, பூர்வஜென்ம பந்தத்தினாலோ, ஊழ்வினைப் பயனாகவோ அவர் நம்மை காரணத்தோடுதான் காண நேரிடுகிறது. அவரை நாம் போகும் வழியில் வரவைத்து காணச் செய்கிறது.

இப்படிச் செய்யும்போது, நம்முடைய பார்வையோ, அல்லது அவர் நம் முகத்தைக் காண நேரிடும்போதோ, தன்னிடமிருக்கும் சில பாவங்கள் அடிபட்டுப் போகிறது என்பதை சித்தர்கள் என்னிடம் சொன்னார்கள். "நாம் என்ன புனிதனா? நம்மைப் பார்த்து ஒருவனின் பாவங்கள் விலகுமா?" என்று உள்மனம்  உடனே நினைக்கும். அல்லவா? நாம் அடுத்தவரின் பாவங்களைப் போக்கும்போது நாமே நம் பாவங்களை களையமுடியாதா? என்று எண்ணத் தோன்றும். நம்மால் சமூகம் மேம்படுவதற்கே நாம் பிறக்கிறோம், நம் அடிச் சுவட்டை விட்டுச் செல்கிறோம். நாம் வாழ்வது நமக்காக அல்ல!

ஆனால் இப்படி நடப்பது உண்மை. காரணத்தோடுதான் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நம்மைக் கடந்துபோவோர்களின் முக்கியத்துவம் அமைகிறது. அப்படித்தான் அவர்கள் வாழ்க்கையிலும் நாம் வந்து போகிறோம். நண்பனாக, சொந்தமாக, ஆசானாக, மாணாக்கராக, இப்படி பல வேடங்கள் ஏற்கிறோம்.

இப்படித்தான் ஒருமுறை என் நண்பரோடு என்றும் செல்லாத ஒரு தெரு வழியே நான் செல்ல நேர்ந்தது. நண்பர் ஒரு கடைக்குள்ளே சென்றார். நான் கடை முன்னே நிழலில் நின்றிருந்தேன். அப்போது என் கண் எதிரே ஒரு சித்தர் கண் மூடிய நிலையில் சுவரில் சாய்ந்து  தெருவில் கால் மடித்து அமர்ந்திருந்தார். "இவர் கோலத்தைப் பார்த்தால் சித்தரா பிச்சைக்காரரா என்று தெரியவில்லையே" என்று என் மனதில் நினைத்தேன். அக்கணமே அவர் திடீரென கண் திறந்து வேறெங்கும் பார்க்காமல் நேராக என்னைப் பார்த்து மெல்லச் சிரித்து மீண்டும் கண் மூடிக்கொண்டார். நான் நினைத்ததை அவர் அறிந்த்ததால் எனக்கு புன்சிரிப்பு மூலம் பதிலளித்தார். நான் வரும் வழியில் அவர் வந்து அமரந்து என்னைக் காணவேண்டும் என்று மேல் நிலையில் கட்டளை வந்திருக்கலாம். அதேபோல், இவரை தரிசனம் செய்ய என்றுமே போகாத அத்தெரு வழியே அப்போது போகவேண்டி இருந்திருக்கும். அதுபோலவே வேறு யாரேனும் என்னைக் காணம்படி அவர் எதிரே நான் பயணப்படவேண்டி இருக்கும்.

இப்படி, நம்மைச்சுற்றி சித்த வலைபின்னல் பல நடந்துகொண்டிருக்கிறது. நம்முடைய ஆன்மாவின் நிலை இதன்மூலம் அறியப்படுகிறது.


செவ்வாய், 27 ஜூன், 2017

'நான்' சொன்னா தப்பா சாமி?

ஆன்மிகம் பொறுத்தவரை 'நான்' என்று சொல்லக்கூடாது. அது அகம்பாவம் ஆணவத்தை குறிக்கும் சொல் என்கிறார்களே. இது உண்மையா? என்று ஒரு வாசகர் கேட்டார்.

நான் என்ற சொல் எப்போதுமே கர்வத்தையே வெளிப்படுத்தும் என்று சொல்ல இயலாது. நான் என்பதை நான் என்றுதான் சொல்லவேண்டிய இடத்தில் சொல்லியாக வேண்டும். யான், யாம், அடியேன் என்ற சொற்களை கர்வம் ஆணவம் வெளிப்படுமாறு சொல்ல முடியாதா என்ன? அதிலும் உருட்டல் மிரட்டல் செருக்கோடு சொல்லலாமே! எதுவுமே சொல்லப்படும் குரல் தொனியிலும், பார்வையிலும், மனதின் வெளிப்பாட்டிலுமே உள்ளது. எப்போது ஒருவன் தன் வெற்றியைப் புகழ்ந்து பலமுறை சொல்லி இறுமாப்பு கொள்கிறானோ, அப்போது இது தற்பெருமை பீற்றுதல் அகம்பாவம் என்று உணரப்படுகிறது.. ஆக, இது சொல்பவன் /கேட்பவன், இரு மனோ நிலைப் பொறுத்தே அறியப்படுகிறது.

எல்லோருக்கும் 'நான் யார்?' என்ற சுயம்தேடலை அறியத் தகுதியுண்டு. அவனுக்குமுன் எல்லோருமே பிரபஞ்ச வெளியில் மெய்ஞானம் தேடி அலையும் பரதேசிகள்தான்.. 'நான்' என்பது, ஆன்மா இயக்கும் உடல் என்ற பொம்மை. அதனுள் பஞ்ச பூதங்களும் இந்திரியங்களும் அடங்கும்.. அந்த 'நான்' என்பதை சிவன்தான் சீவன் என்ற மூச்சு கொடுத்து இயக்கிக்கொண்டு இருக்கிறார். அந்த ஆன்மா இருப்பதால் இந்த உடல் என்னுடையது, நான், எனது என்ற உணர்வை மனதால் அறிய முடிகிறது. அது அகம்பாவமா, தன்னடக்கமா  என்பது அந்த உடலை மனதை இந்த ஆன்மா எப்படி ஆட்டுவித்து வழி நடத்துகிறது என்பதைப் பொறுத்தே அமையும்.

நீதிபதி: கோயிலில் திருடிய குற்றத்தை நீ ஒப்புக்கிறியா?
கட்சிக்காரர்: ஆம். அதை நாமே செய்தோம்.
வக்கீல்:  ஏன்யா உன்னோட என்னையும் கூட்டு சேர்த்துக்கற? நான்தான் செய்தேன்னு சொல்லிட்டுபோ.. பக்தியும் பணிவுமா குற்றத்தை ஒத்துகற மூஞ்சிய பாரு... உனக்காக வாதாடினதே தப்பு. 

திங்கள், 26 ஜூன், 2017

சித்த இரகசியத்தை வெளிப்படுத்தலாமா?


சித்தர்களின் சூட்சும ரகசியத்தை இங்கே முகநூலில் பகிர்ந்து கொள்வது சரியா?அப்படிச் செய்தால், அது போன்ற அற்புத தருணத்தை மீண்டும் அவர்கள் உணர்த்துவதில்லை என்கிறார்களே. அது உண்மையா? என்று குழு நண்பர் ஒருவர் நல்லதொரு சந்தேகத்தைக் கேட்டிருந்தார்.
என்னைப் பொறுத்தவரை இதில் உண்மை இல்லை. நமக்குக் கிடைக்கும் அனுபவத்தின் சாரத்தை உடன் இருப்பவர்களிடம் பகிர்வதில் தவறில்லை.. தியானத்திற்கு ஒருவர் போதும், அனுபவம் பகிர சத்சங்கம் குழு வேண்டும். ஒருவனே அதை அனுபவித்து சுவைக்க முடியாது, அதை வெளிப்படுத்தினால் தான் பிரம்மத்தை, இறை மகிமையை, சித்தர்களின் ஆற்றலை சத்சங்கத்தில் உணரச் செய்ய முடியும். பகிர்வதால் ஆனந்தமும் கூடும்.
'நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறும் மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே
.' என்று திருமூலரே சொல்கிறார்.
அவர் எல்லா சூட்சுமத்தையும் திருமந்திரத்தில் விளக்கினார். அதைத்தான் போகரும் செய்தார். எல்லா ரகசியத்தையும் சப்தகாண்டத்தில் வெட்ட வெளிச்சமாக்கி உரைத்தார். 'காண்ட மேழாயிரத்தில் வெகுகோடி ரகசியங்கள் வுளவுகண்டு வெளியாய்விட்டேன்' என்கிறார்.
அதைத்தான் அடியேனும் இங்கே வெளிப்படுத்தி எல்லா இறைதரிசன அனுபவத்தையும், சித்தர்களின் அமானுஷ்யத்தையும் பகிர்ந்து கொண்டேன். ஆனால் தனிநபருக்குக் கிடைத்த ரகசியத்தை யாரிடமும் வெளிப்படுத்தக் கூடாது என்று சிலர் சொல்வார்கள், அதில் எனக்கு உடன்பாடு இல்லை. நானும் என் குருநாதர் வழிதான். இதை அனைவரும் அறிய போகர் என்னைப் பணித்தார். இது அவர் கொடுத்த பணி.

உதாரணத்திற்கு, 'போகர் ஜெனன சாகரம்' என்ற விளக்க நூலை நான் எழுதி எந்த பதிப்பாளரிடம் அச்சிட தரவேண்டும் என்பதை அவர் தன்னுடைய வாழி விருத்தம் பாடலில் சொல்லிவிட்டார் என்பதை அண்மை பதிவில் நாம் பார்த்தோம், அல்லவா? இதை அவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே உரைத்தது தானே? ஆகவே, இதை உலகத்தாருக்கு எடுத்துரைக்கும் நற்பணியை என் மூலம் நடத்துகிறார். இதுபோன்ற கனமான இலக்கியத்தை கையாளும் அளவிற்கு நான் மொழி வல்லுநரோ, புலமை படைத்த பண்டிதனோ இல்லை. என்னைத் தேர்ந்தெடுத்த காரணத்தை அவரே அறிவார்.
இதுவரை நான் எழுதிய சித்த நூல்கள் எல்லாமே போகர் சம்பந்தப்பட்டது தான். சென்ற வருடம் எழுதிய 'ஸ்ரீ வீரப்பிரம்மேந்திரர்' நூலும் அப்படித்தான். அவருடைய அவதார ஜெனங்கள் சம்பந்தப்பட்ட நூலை விடுத்து வேறெந்த சித்த நூலையும் இதுவரை எழுத வைக்கவில்லை. கனமான மற்ற சித்த நூல்களை ஆய்ந்து எழுதிட போதிய ஞானத்தைத தரவில்லை. ஆகவே, யான் பெற்ற இன்பத்தை, உணர்ந்த சூட்சுமத்தை, விளங்கிக் கொண்ட மெய்பொருளை உங்களோடு பகிர்ந்துகொள்ளவே அவர் பணித்தார். இன்றுவரை ரகசியம் வெளிப்படுத்துவதும் அவர் வழி நடத்துவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 'அதே சுழற்சியில் வரும் ஜெனன உறவுகள்' என்ற அண்மைப் பதிவு ஒரு சான்று. எல்லாம் அவர் சித்தம்!

சனி, 24 ஜூன், 2017

கலிகால பக்தியும் பலனும்


'அந்த ஊர்ல சாமி ரொம்ப சக்தி வாய்ந்தது', 'இந்த கோயில்ல சாமிக்கு சக்தி இருந்தா இப்படி விளக்கே இல்லாம தன்னை இருட்டில் வைத்துக் கொள்ளுமா?' 'சாமிக்கு சக்தி இருந்தா சிலை திருட்டை தடுக்கக் கூடாதா?'.. இதுபோல பல வர்ணனைகள் என் காதில் விழும்போது வாய்விட்டு சிரிப்பேன். நான் சிரித்த காரணம் அவர்கள் அறியார். அவனுக்கு எதற்கு கோயிலும் சிலையும்? அது நம் வழிபாடுக்கு ஏற்படுத்தப்பட்டது. அரூபமாக உள்ள இறைவனின் ரூபத்தை நாம் எல்லோருமே காண முடியுமா? தியானிக்க முடியுமா? அதற்காத்தான் இந்த சிலா வழிபாடு.

ஏதோ மத்த ஊர்ல சாமிக்கு சக்தி பலஹீனம்  பட்டது போலவும்,  வெளிச்சம் இருந்தால்தான் சாமி தெளிவாக நம்மைப் பார்க்கும் என்பது போலவும், சிலை திருட்டுக்கு சாமியும் உடந்தை போலவும்,  பலவாறு அஞ்ஞானிகள் பேசுவார்கள். கலிகாலத்தில் தன் உருவையும் சொத்தையும் திருடவைத்து 'இறை திருட்டு' என்ற பாவச்செயலில் சிக்க வைக்கும்  யுக்தி அவனுக்கே தெரியும். இறைபக்திப் பாடல்களையும் சுலோகத்தையும் சப்தமாக PLAY செய்து விட்டு இவர்கள் அரட்டை அடித்துக் கொண்டும் வேறு வேலையில் முழுகி இருப்பார்கள். எதுக்கு தண்டத்துக்கு இது  பாட்டு பாடுது என்று நாம் கேட்டால், 'அது சாமிக்கு' என்று பதில் வரும். நாம் வாய்விட்டு சுலோகம் சொல்லி பண் இசைத்து வழிபட்ட காலம்போய் ரிகார்ட் போட்டு ஓட்டும் நிலையில் உள்ளோம். டிவியிலும் வானொலியிலும்  ஒலிப்பதை கேட்டு சாமி என்ன செய்யப் போகுது?

பஞ்சமுகத்தானின் ரூப வெளிப்பாடே பூலோகத்து கோயில்கள். அவனிலிருந்து வெளிப்பட்ட தெய்வங்கள் உபதெய்வங்கள் என்றுமே உயர்வானதே. சிலகாங்கள் மக்கள் அறியாமை யில் இருந்துவிட்டு மீண்டும் பக்தி மார்க்கத்தில் வந்துள்ளதால், இந்த நவகோள்கள் மற்றும் காவல் தெய்வங்கள் பிரசித்தமாகி விட்டது போன்று ஒரு மாயைத் தெரிகிறது. வெளியுலகிற்கு தெரியாத புதுப்புது பரிகாரத் தலங்கள் பிஸியாகி விட்டது.

கலியுகத்தில் எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் கடமையாற்றும் அளவுக்கு  ஒருவனால் 'நிஷ்காம்ய' மாக  இருக்க வாய்ப்பில்ல்லை. அப்படி இருந்தால் அவர் இந்த மாசுபட்ட சமுதாயத்தில் இருக்க முடியாது... தேசாந்திரம் சந்நியாசம் என்று வேறு பாதையில் போவார். நாலு பேரு உன்னை எற்றுக் கொள்ளும்படி வாழவேண்டும் , உடை உடுத்த வேண்டும், செயின் வாட்ச் கட்டிக்க வேண்டும் ,  பந்தாவாக வாகனத்தில் போக வேண்டும், வாழ்க்கை அந்தசத்து காட்ட வேண்டும்... இப்படி பல வேஷங்கள் போட்டாக வேண்டும்... அப்படி இல்லாமல், எனக்கு இது போதும் நான் இப்படித்தான் இருப்பேன் என்று ஒரு சித்தர் மாதிரியோ, பிச்சைகாரரைப் போலவோ வெளிப்பாடு கொண்டு இருக்க முடியுமா? இதுதான் இன்றைய உலகம்.

பலன் எதிர்பார்க்காம எப்படி சார்? ' நான் உனக்கு நாலு தாரேன்.. நீ எனக்கு மூணு தா' அப்படீன்னு ஔவை பலன் எதிர்பார்த்துதான விநாயகரிடம் அகவல்  பாட்டு பாடினாள்? என்று சொல்லி அசத்துவார்கள்.

வயது முதிர்ந்த ஒரு செட்டியாரம்மா என்னிடம் பேசும்போது 'இன்னும் கொஞ்சநாள் போனா இந்த வைரத்தோடுகூட கழட்டிடுவேன், ஆசை வைக்ககூடாது' என்று  சொல்லுவார். 'ஏன் பாட்டி., அதை இப்போ கழட்டினாதான் யார் என்ன சொல்லப்போறாங்க?' என்று கேட்பேன். அதற்கு அவர், 'ஹன்.. பெத்தாச்சி ஒண்ணுமில்லாதவனு என்னை எங்க சாதிசனம் யாரும் நினைச்சுடக் கூடாது பாரு..' என்பார். திருநீறு பூசிய அகண்ட நெற்றியும், காதில் டால் அடிக்கும் வைரமும் சமூகம் விரும்புகிறதாம்.  எனக்கு சிரிப்புதான் வரும். இவர் ஒரு பானை சோற்றுக்குப் பதம்.

'கடை விரித்தேன் கொள்வாரில்லை' என்ற வாக்கியம் நாம் கேள்விப்பட்ட ஒன்று. மக்களுக்கு வாழ்வியல் நோக்கில் மற்ற சரக்குகள் முக்கியம் என்று பட்டதால், ஆன்மிக சரக்கு வாங்கவில்லை. கலி லட்சணம் இப்படித்தான் இருக்கும் என்று குருநாதர் போகர் என்றோ சொல்லிவிட்டார். மேலே சொன்னபடி இப்படியெல்லாம் யாரும்  இல்லாவிட்டால் இது 'கிருத' யுகமாக இருக்கும். 

புதன், 21 ஜூன், 2017

அத்தனைக்கும் ஆசைப்படு


நம்மில் பலருக்கு ஆசைக்கும் பேராசைக்கும் வேற்றுமை தெரிவதில்லை. ஆசை எப்போது எல்லைதாண்டி பேராசையாக மாறுகிறது என்ற கவனம் இருப்பதில்லை. அண்மையில் என் நண்பரின் தந்தைக்கு நேர்ந்த அனுபவத்தைச் சொல்கிறேன்.
என் நண்பரின் தந்தை நகை வியாபாரி. அவருக்கு ஊரில் நிலம் உண்டு. அதுபோக இங்கே பட்டணத்தில் அரை கிரவுண்டு மனை வாங்கி அதில் கீழும் மேலும் வீடு கட்டி பத்தாயிரத்திற்கு வாடகை விட்டார். அவர் ஒவ்வொரு ஆண்டும் ஐநூறு ரூபாய் வாடகை உயர்த்திக்கொண்டே போவார்.
நான் இதுபற்றி என் நண்பரிடம் சொல்வேன், 'எதுக்கு இந்த அடாவடித்தனம்? ரெண்டு வருஷத்துக்கு ஒருமுறை சிறு தொகை ஏற்றினால் தப்பில்லை. ஆனால் ஒவ்வொரு வருஷம் ஐநூறு ஏற்றுவது சரியில்லை. வாடகை உச்சவரம்பு இல்லாமல் இது எங்கு போய் முடியுமோ? ஏற்கனவே ஒரு லட்சம் அட்வான்ஸ் தொகை உங்க கைலதான் இருக்கு, அதன் வட்டி ஆண்டுக்கு சராசரியா எழாயிரத்தி ஐநூறு இதுவரை வந்துகிட்டு இருக்கு. ஏழு வருஷத்துக்கு என்ன ஆச்சு? அதுவே லாபம்தான். அதுபோக வருஷா வருஷம் ஏத்தணுமா? இது சரியா படலை" என்று சொன்னேன்.
"அது இல்ல சந்துரு.. எங்க அப்பா காசுல ரொம்ப கில்லி. அவர் கிட்ட நியாயம் தர்மம் சொன்னா புத்தில ஏறாது. ஊருபூரா எல்லாருமே இப்படித்தான் ஏத்தறாங்க. நம்ப மட்டும் ஏன் செய்யக்கூடாதுனு கேப்பாரு.. எங்களோட குடித்தனக்காரங்க யாரும் கவர்மேண்டோ/ ஐடி வேலையிலயோ இல்லை. அவங்களை வாட்டி எடுப்பது கஷ்டமாதான் இருக்கு" என்று சொல்லுவார்.
"விலைவாசி கடுமையா இருக்கிற காலத்துல வர்ற சம்பளம் பூராவும் வாடகைக்கு போனா அவன் பாவம் என்ன செய்வான்?" என்றேன். ஹவுஸ் ஓனர்கள் தங்களோட ஒரு மாச வீட்டு செலவு, கடன் தவணை எல்லாமே வாடகை மூலம் வசூல் பண்ணனும்னு பாக்குறாங்க போலிருக்கு என்று சொல்லிச் சிரித்தேன். அவர் வீட்டு விஷயத்துல நான் எல்லையோட நிக்கணும் என்பதால் அதைத்தாண்டி நான் ஏதும் சொல்லவில்லை.
போன மாதம் என் நண்பர் வருத்தத்துடன் வந்தார். "எங்க அப்பாவோட திருச்சி கடைல வேலை செய்த ஆளு 20 சவரன் நகைங்களையும் சின்ன வெள்ளி சாமான்களையும் அபேஸ் செய்துட்டு ஓடிட்டான். அது கைமாறும் கடத்தல் தங்கம் என்பதால புகார் செய்ய முடில. எல்லாம் கெட்ட நேரம் தான்" என்றார். "ஓ... எவ்ளோ நஷ்டம்? என்றேன். 'சுமார் ஐந்து லட்சம் இருக்கும்' என்றார்.
அவருடைய பேராசையைப்போல் நஷ்டமும் பெரிதாக இருந்தது.. பேராசை இல்லாமல் இருந்திருந்தால், என்னதான் கெட்ட நேரம் என்றாலும், ஐந்து லட்சம் போவதற்கு பதில் ஐநூறோ ஆயிரமோ போயிருக்கும். இவர்கள் சுயமாக அடிபட்டுத்தான் இதுபோன்ற அனுபவம் பெறவேண்டும் போலிருக்கிறது. அடித்துப் பிடுங்கிய காசு வந்த வழியே ஓடிவிட்டது.
No automatic alt text available.

செவ்வாய், 20 ஜூன், 2017

சிவரகசியம் நிறைந்த மரபணுக்கள்

நேற்று முகநூலில் ஒரு ஆய்வு பற்றி படித்தேன். "ஆரியப்படையெடுப்பு நடந்தது என்றால் யார் ஆரியர்கள் அவர்களின் மரபணு என்ன என்பதை கண்டுபிடித்துவிட்டார்களா? இல்லை. எப்போது நடந்தது என உறுதியாக கண்டுபிடித்தார்களா? இல்லை. ஒரு கிமு இரண்டாயிரம் முதல் கிமு நாலாயிரத்துக்குள்ளே நடந்திருக்கலாம் என ஊடக ஆய்வாளர்கள் ஊகிக்கிறார்களாம்." இதுதான் அந்த சங்கதி.
Image may contain: outdoor and nature
உலகின் எந்தவொரு மனிதனின் மரபணுவை ஆராய்ச்சி செய்தாலும் அதில் ஏதோவொரு துண்டு (Parental DNA pattern) நம்மோடு ஒத்துப்போகும். இதை யாரும் மறுக்க முடியாது. நம்முடைய தெற்காசிய சாயல் அதில் இருக்கும். மெய்ஞானமும் சிருஷ்டி ரகசியமும் அறியாத வேற்று நாட்டவர்கள் அவர்களிடமிருந்து நாம் வந்ததாகச் சொல்வார்கள்.
தேவலோக பசு எனப்படும் கோமாதாவின் மரபணு என்னவாக இருக்கும் என்று நாம் போன டிசம்பரில் விவாதித்த மாதிரிதான் இதுவும். தெற்காசிய தென்னாட்டு பசுமாட்டின் மரபணு துண்டு எல்லா ஜெர்சி ஜிம்மி ஜிக்கி ஜாதி கலப்பினங்களிலும் ஒட்டிக் கொண்டுவரும். பல்வேறு காரணங்களினால் இந்த துண்டின் அடர்த்தி (density) குறைந்தும் மிகுந்தும் காணப்படும். இது நமக்கும் பொருந்தும்!
அந்த ஆய்வில் நகைச்சுவை என்னவென்றால், ஆரியர்கள் என்போர்கள் ஏதோ வேற்றுகிரகவாசிகள் போலவும், இன்னமும் கைபர் போலன் கணவாய் கதையை பேசிக்கொண்டு திரிகிறார்கள். முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடிதான், தென்னாடுடைய சிவனின் ராஜியத்தில் லெமுரியாவும் உள்ளது. அங்கிருந்துதான் பல கண்டங்களுக்கு குடி பெயர்ந்தார்கள். இதை விஸ்வகர்மா பரத்த்துவம் மூலம் அறியலாம். மாயன் வம்சத்து சந்ததிகள் உலகம் முழுக்க உண்டு. ஈசனின் ஆக்ஞைப்படி உதித்த தமிழ்க்கடவுள் முருகன்தான் திராவிட தமிழ்க் கடவுள். அதன்பின் வந்த ஆரிய கடவுள்கள் என்று சொல்லப்படும் இராமன் கிருஷ்ணன் பற்றி போகர் சொன்ன கருத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
No automatic alt text available.
பதினெண் தமிழ் சித்தர்களில் ஒருவரான போகர், தன்னுடைய முன்ஜென்ம விவரங்களைச் சொல்லும் போது, தானே ஆதியில் பிரம்மா, மால், முருகன், இந்திரன், ராமன், கிருஷ்ணன், நபி என்று இருந்ததாக வரிசைப்படுத்திச் சொல்லியுள்ளார். ஆக, பொதிகை, அயோத்தி, துவாரகை, மெக்கா இங்கெல்லாம் இருந்தது நம்மூர்காரர் தானே? ராமன்-கிஸ்னன் எல்லாம் ஆரியர்கள்னா, இவங்க கூற்றுப்படி, முருகன் என்ற திராவிட தமிழ்கடவுள் தான் பின்னர் ஆரிய கடவுளாக மாறினார் என்று தெரிகிறது. நம் அகத்தியரை தமிழில் நூல்கள் எழுத வைத்து, அதோடு வடமொழியிலும் எண்ணற்ற படைப்புகளை ஏன் தரவைத்தார் என்ற தேவரகசியம் அந்த ஈசனுக்கே வெளிச்சம்.
உலகின் சப்த சாகரங்களை சுற்றிப்பர்த்தும், பல கண்டங்களுக்கு போகர் தான் வடிவமைத்த விமானத்தில் பலபேரை உலக சுற்றுலா அழைத்துப் போய் இறக்கி விட்டதையும் இதற்குமுன் பல பதிவுகளில் அலசிப் பாரத்தாகிவிட்டது. ஆக, எல்லோருமே இங்கிருந்து புலம் பெயர்ந்த வம்சத்தின் பிற தேச பிரஜைகள் என்று வைத்துக் கொள்ளலாம். இதில் வந்தேறி உப்பேரி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகிறது அல்லவா?
ஊடகங்களுக்கு பொழுது போகவும் அர்த்தமற்ற அரசியல் விவாதம் செய்யவும் பிரிவினைவாத 'அணையா' விளக்கை ஒளிவீசச் செய்யும் வீண் ஆய்வுகளே இது. ஆய்வு செய்ய அறிவியல் கண் மட்டும்போதாது அதைத்தாண்டி மெய்ஞானக் கண் வேண்டும்.

ஞாயிறு, 18 ஜூன், 2017

சோழனா? பாண்டியனா?

சமீப காலமாக முகநூலில் ஒரு சில பதிவுகளைப் பார்த்தாலே பலபேருக்கு அலுப்பு வருகிறது. அப்படி என்ன பதிவு என்கிறீர்களா? வேறென்ன? தஞ்சையும் அதையாண்ட ராஜராஜ சோழன்தான்! மூவேந்தரில் இந்த மன்னன் மட்டும்தான் செயல்பட்டானா? இங்கு வேறு யாரை பற்றியும் வருவதில்லையே என்ற உங்கள் குரல் கேட்கிறது. ஆனால் அதைக் கேட்க ஒரு தயக்கம்.
முகநூலை (Facebook) பொறுத்தவரை, நமக்குத் தெரிந்த ஒரே மன்னன் ராஜராஜசோழன் (11ம் நூற்றாண்டு). ஒரே தலைநகரம் தஞ்சாவூர். ஒரே படைப்பு பெருவுடையார் கோயில்.. அவனுடைய யானைப்படை, சோழ சாம்ராஜ்யம் வளர்ந்த கதை, என்று இப்படி... இதைத் தாண்டி வேறேதுமில்லை.
Image may contain: sky, cloud and outdoor
மதுரை பற்றிய செய்தி மிக அறிதாகவேதான் இடுகிறார்கள். அந்த ஊர்க்காரர் போட்டால்தான் உண்டு. அப்படியொரு பதிவை அண்மையில் படித்தேன். அதன் சாரம் இதுதான்.
'மதுரையை மீட்ட மாறவர்மன் சுந்தர பாண்டியன் (13ம் நூற்றாண்டு) என்ற மன்னன் இருந்தான். (எம்ஜிஆர் நடித்த படம் நினைவுக்கு வருதா?) சுமார் 300 ஆண்டுகள் அடிமைப்பட்டு கிடந்த பாண்டிய நாட்டை சிறிய படைக் கொண்டு பெரிய சோழப்படையை வென்று மீட்டெடுத்தான். தன் ஆட்சிக்காலத்தில் மீனாட்சி அம்மன் கோவிலை அகலப்படுத்தி கிழக்கு கோபுரத்தை பிரம்மாண்டமாக கட்டிமுடித்தான்.  மதுரையில் முதன் முதலில் பெரிய கோபுரம் உருவாக மாறவர்மன் சுந்தர பாண்டியனே காரணம்.
Image may contain: people standing, sky, cloud, tree and outdoor
மதுரையை மீட்டதோடு மட்டுமில்லாமல் சோழநாடு சேரநாடு இலங்கை விஜயநகரம் கன்னட நாட்டின் சிலபகுதிகளும் தன் கட்டுப்பாட்டில். இருந்தும் மூன்றாம் ராசராச சோழன் இவனுக்கு கட்டுபட்டு சிற்றரசனாக இருக்க ஒப்புக்கொண்டதால் சுயாட்சி வழங்கினான். தஞ்சை கோயிலை கட்டிய முதலாம் ராஜராஜசோழன் செய்த அதேயளவு சாதனையை சுந்தர பாண்டியனும் செய்தான். அவன் ஆண்ட அதே அளவு நிலப்பரப்பை இவன் 300 ஆண்டுகள் அடிமைப்பட்டுக்கிடந்த சிறு படையை வைத்தே வென்றான். ஆனால் அவனைப் பேசும் அளவு நம் மக்கள் இவனை மறந்து விட்டோம்' என்று அப்பதிவில் உண்மை இருந்தது.
"சமூக வலைதளத்தில் ராஜராஜசோழனின் பெருமை மட்டும்தான் சொல்லவேண்டும் என்ற ஒரு வழக்கம் இருப்பதுண்டு.. அதனால புதுசா இப்போ வந்து சுந்தரபாண்டி தங்கபாண்டி பற்றி எல்லாம் பேசுவது சரி இருக்காதுங்களே.. என்ன நான் சொல்வது?"
சங்கம் வளர்த்த வைகை பொழியும் ஆலவாயான் தலத்தை எந்த தலை நகரோடும் ஒப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால் கிழக்கு கோபுரம் உள்ளவரை மாறவர்மன் சுந்தரபாண்டியனின் பெயர் சொல்லும். பஞ்சபூத தலங்கள் ஒருபுறம் இருந்தாலும், மதுரை தலத்திற்கு ஈடில்லை என்கிறார் சித்தர் போகர். எல்லாவற்றையும் விட ஈசன் விரும்பியது அதுவே என்கிறார். "மானான மகாதேவர் மதுரையைத்தான் மகத்தான தலமென மதிப்பிட்டாரே" என்று தன் போகர் ஏழாயிரம் நூலில் சொல்லியுள்ளார்.
மதுரை கோயிலின் அழகும் கம்பீரமும் பக்தியும் தமிழ் மணமும் உயிர் துடிப்பும், தஞ்சாவூர் பெரிய கோயிலில் இல்லாமல் போனது ஏனோ?

சனி, 17 ஜூன், 2017

மந்திரக் கட்டும் - பத்மநாப தாசர்களும்

சுமார் 6 ஆண்டுகளுக்கு முன் 2011ல் திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோயில் நிலவறையில் உள்ள 6 ரகசிய பொக்கிஷ அறைகள் பற்றி நாம் எல்லோரும் கேள்விப்பட்டோம். உலகமே பரபரப்பாக பேசியது, அனைத்து டிவி சேனல்களும் முக்கிய செய்தியாக்கின.

சயன பெருமாளின் கர்ப கிருஹத்திற்கு நேர் கீழே பாதாள பகுதியில் 6 ரகசிய அறைகள் உள்ளது. இதில் 5 அறைகள் திறந்து பார்க்கப்பட்டு அதில் இருந்தவை எல்லாமே கணக்கு பார்க்கப்பட்டது. எல்லாமே கடந்த 500 வருடங்களில் ராஜ குடும்பத்து மன்னர்களும் குடும்ப உறுப்பினர்களும் தங்கள் குலதெய்வ சயன பெருமாளுக்கு அளித்த காணிக்கைதான் அவை. இன்றைய மதிப்பில் அது சுமார் இரண்டு லட்சம் கோடிக்கு மேலானது என்று சொல்கிறார்கள். ஆளுயர காசுமாலைகள், கிண்ணங்கள், சொர்ண மணிகள், வைர வைடூரிய ஆபரணங்கள், முகலாய மன்னர்கள் மற்றும் உலகின் வெவ்வேறு மன்னர்கள் காலத்து தங்கக் காசுகள், மற்றும் கற்பனை செய்யமுடியாத வடிவங்களில் கற்கள் பதித்த நகைகள் என்று எத்தனயோ உண்டு. இதெல்லாம் அதிகாரப்பூர்வமாக வெளியான படங்களில் நான் பார்த்தவை. நினைத்துப் பாருங்கள்,  அக்காலத்தில் பொற்கொல்லர்கள் எத்தனை பிஸியாக இருந்திருப்பார்கள் என்று. இவ்வறைகள் போக புதிதாக இன்னும் இரண்டு அறைகள் G & H கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

கோயிலில் முறைகேடுகள் நடக்காமல் இருக்கவும், இந்த சொத்துகள் அனைத்தும் நாட்டுடமை ஆக்கப்பட்டு அது பயன்பட வேண்டும் என்று ஒருவர் வழக்கு போட்டார். விசாரித்த நீதிமன்றம், எல்லா (Secret Vaults) ரகசிய அறைகளையும் திறக்கச்சொல்லி உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்றம் குறித்து வைத்த B அறையின் கதவுக்கு தாழ்பாள் பூட்டு ஏதும் இல்லை. ஏன்? அதற்கு நாகபந்தம் மந்திரக்கட்டு போடப்பட்டு அந்த உலோக கதவின் மீது 'நாக முத்ரிகா' பொறிக்கப்பட்டுள்ளது. அதற்கு தக்கதொரு கருட மந்திரத்தை ஒரு சுத்த யோகி பிரயோகித்தால்தான் அந்த நிலவரை கதவு திறக்கும் என்பது தாந்த்ரீகர்களின் பிரசன்ன தீர்வு. இதுவரை கண்டெடுத்த பொக்கிஷங்களைவிட இதில் அதிகம் உயர்வானவை இருக்ககூடும் என்றும், அதனால் தான் அதற்கு இந்த மந்திரக் கட்டு என்றும் சொல்லப்படுகிறது.

Image may contain: outdoor
ஒரு நூற்றாண்டிற்கு முன் கேரளத்தில் கடும் பஞ்சம் நிலவியது. அதைப் போக்க எண்ணி, பெருமாளின் தலைப் பகுதிக்கு நேர் கீழேயுள்ள இந்த நிலவறையை திறக்க முற்படும் போது அங்கே சமுத்திரத்தின் ஆக்ரோஷ ஒலி கேட்டதாகவும், உடனே முயற்சி கைவிடப்பட்டது என்றும் வரலாறு பக்கங்கள் சொல்கிறது. இது நேரடியாக அரபிக் கடல் சமுத்திர முகத்துவாரமா என்றும் தெரியவில்லை. ஆனால் இந்த அறையை ஆதிசேஷன் காவல் காப்பதாக ஐதீகம், அது திறக்கபட்டால் இந்த பரசுராம ஷேத்திரத்தை கடல் கொள்ளும் என்பது திண்ணம்.

Image may contain: table, food and indoor

அரச குடும்பத்தினர் இந்த அச்சம் காரணமாகவே அறையை திறக்க அனுமதிக்கவில்லை. ராணி கவுரி லக்ஷ்மிபாய் பேசும்போது, "அந்த பாதாள அறைகளில் என்னென்ன இருந்துள்ளது என்று எங்களுக்கும் இதுநாள்வரை தெரியாது. நாங்கள் அதனுள்ளே போனதில்லை. இத்தனை இருப்பது ஆச்சரியமாக இருந்தது. எங்கள் மாமா ஸ்ரீ சித்திரை திருநாள் வர்மா மகாராஜாவுக்கும் அது பற்றித் தெரியாது. ராஜ குடும்ப மகாராஜா எல்லோருமே 'பத்மநாப தாசர்கள்' என்பதால் கொடுத்த காணிக்கையை எக்காரணத்திற்காகவும் எடுத்துக்கொள்ளவோ உரிமை கொண்டாடவோ முடியாது. அனுதினமும் மகாராஜா தரிசனம் செய்ய வரும்போது கோயிலில் சுவாமி முன் நின்று இதை சத்தியம் செய்து உறுதிப்படுத்துவார்கள் " என்றார். 

இதனை ஏற்ற உச்ச நீதிமன்றம் அக்கதவை திறப்பதற்கு தடை stay விதித்தது.
கடந்த நூற்றாண்டுகளில் திருவிதாங்கூர் ராஜாக்கள் ஆங்கிலேயனிடம் முறைத்துக்கொண்டு உராய்வு வைத்துகொண்டதே இல்லை.. ராஜாக்கள், நாய்க்கு எலும்புத்துண்டு வீசுவதுபோல் அவர்களுக்கு கப்பம் கட்டினர். எதற்காக? இதை காபந்து செய்யத்தான்... இல்லாவிட்டால் ஆங்கிலேயர் என்றோ கொள்ளை அடித்திருப்பார்கள்.. திப்புசுல்தான் நாகர்கோயில் வரை படையெடுத்து வந்தான். ஆனால், இங்கு ஏனோ வரமுடியவில்லை. 1799ல் அவனை ஆங்கிலேயர்கள் கொன்றனர். அதேபோல், மேற்படி நீதிமன்றத்தில் வழக்கு போட்டவர், பெட்டிஷன் போட்ட ஒரு வாரத்திலேயே இயற்கையாக இறந்து போனார்.

உச்சநீதி மன்ற ஆணைப்படி இதுவரை திறந்து பார்க்கப்பட்டு, கணக்கெடுக்கபட்டவை.
Image may contain: text

இதை நாட்டுடமை ஆக்குவது ஒன்றும் பெரிய வேலையில்லை. அந்த தெய்வ கருவூலத்தை அபகரித்து மகாப்பெரிய ஊழல் செய்து தலைவர்கள் விழுங்கிடக்கூடாது. திறக்கபடாத அறையின் பொக்கிஷங்களையும் சேர்த்து நம் நாட்டை இன்னும் பத்து ஆண்டுகளுக்கு நிதி நெருக்கடியின்றி நடத்த முடியும் என்ற நிலையும் இருக்கலாம். விவசாயக் கடன்களை, உலக வங்கி கடன்களை அடைத்து பற்றாக்குறைகள் வராமலே சமாளிக்க முடியுமாம். இவை எல்லாம் நம் பொருளாதார-நிதி வல்லுநர்கள் சொன்ன உத்தேசமே! பெருமாளுக்கு கம்யூனிச கொள்கையில் நிலைப்பாடு பற்றி யாமறியோம்!

ஆனால், இறைத் திருட்டு செய்யாத அப்படியொரு அப்பழுக்கற்ற உத்தம தர்மசீலர் இந்த நாட்டின் அரசியல் தலைமையில் இன்று வரை இல்லை என்பதால் அப்பொக்கிஷங்களை ஆதிசேஷனே காக்கட்டும். அதுவரை மர்மம் நீடிக்கும்!

புதன், 14 ஜூன், 2017

ஆதி சங்கரரின் காலம் எது?

கேரள மாநிலம் காலடியில் ஆதிசங்கரர் வசித்த இல்லத்திலிருந்து சிறிது தொலைவில் பூர்ணா நதி ஓடிக் கொண்டிருந்தது. சங்கரரின் தாயாரான ஆர்யாம்பாள் நித்தமும் பூர்ணா சென்று நீராடித் திரும்புவது வழக்கம். ஒரு நாள் ஆற்றில் நீராடி விட்டு இல்லம் திரும்பும்போது தள்ளாமையின் காரணமாக வழியில் மயங்கி விழுந்து விட்டார் ஆர்யாம்பாள். இதை அறிந்த சங்கரர் கவலைப்பட்டார்.
இனி பூர்ணா செல்ல வேண்டாம். இல்லத்தில் இருக்கிற கிணற்றிலேயே நீராடுங்கள்என்று தன் தாயாரிடம் சொன்னார் ஆதி சங்கரர்.
ஆனால், ‘என்ன சிரமப்பட்டாலும், நான் இருக்கின்ற வரை பூர்ணாவில்தான் நீராடுவேன்... அது எத்தனை பெரிய பாக்கியம்என்று மகனை சமாதானப்படுத்தினார் தாயார். அப்போதுதான் ஆதி சங்கரர் கங்காதேவியைப் பிரார்த்தித்துப் பாடல் பாடி, அந்தப் பூர்ணாவையே தனது இல்லம் இருக்கும் பக்கத்துக்குத் திருப்பினார்.
ஆதி சங்கரரின் அவதாரப் பெருமையை நிரூபிக்கும் விதமாகவும், அவரது சந்நியாச தர்மத்துக்கும் கட்டுப்பட்டு பூர்ணா நதியே தன் பாதையைச் சற்று மாற்றிக் கொண்டு பாய ஆரம்பித்தது. திடீரென தன் வீட்டருகிலேயே பூர்ணா ஓடத் துவங்கியதும், ஆர்யாம்பாளுக்கு சந்தோஷமான சந்தோஷம். 

நீண்ட காலமாகவே ஆதிசங்கரரின் குலம், பிறப்பு வருடம் குறித்து ஒரு சர்ச்சை இருந்து வந்தது.
ஒருமுறை சங்கரர் தேச சஞ்சாரம் மேற்கொண்டு ஆந்திராவின் மசூளிபட்டணம் வரும்போது, அங்கே இவரைப் பற்றி கேள்வி கேட்கிறார்கள். அப்போது “ஆச்சார்யோ சங்கரநாமோ துவஷ்டா புத்ரோ நசன்சய விப்ரகுல கௌரார்டிக்க்ஷ விஷ்வகர்மந்து பிராம்மண” என்று உரைக்கிறார். அதன் பொருள், 'சங்கரனான நான் துவஷ்ட பிராமணின் புதல்வன், விஸ்வகர்மா எனது குலம்' என்று உரைக்கிறார்.  

இந்துமத மேன்மையை நிலைநாட்ட, ஆதிசங்கரரின் காலத்தை ஈராயிரம் வருடங்களுக்கு முந்தயது என்று கட்டுக்கதை திரிப்பதாக பல நாத்திக மதவாத கட்சிகள் அவதூறு பரப்பின. காஞ்சி மடத்திற்கு வந்த ஒரு தலைசிறந்த புவியியலாளரைக் கொண்டே அதை நிரூபிக்கக் எண்ணினார் காஞ்சி மகாசுவாமி. ஆதிசங்கரர் தேவ பிராமணரா, தவிச பிராமணரா? என்ற சந்தேகம் உண்டு. ஆனால் அவரே, 
ஆதி சங்கரர் வாழ்ந்த காலத்தில்தான் பூர்ணா நதி திசைமாறி அவரது இல்லம் அருகே பாய்ந்தது. ஆக, இங்கே பாய்கின்ற பூர்ணாவின் மண்ணை சோதித்துப் பார்த்தால், ஆதி சங்கரர் வாழ்ந்த காலம் உறுதியாகத் தெரிந்து விடும். நான் சொன்ன இந்த ரெண்டு எடத்துலேர்ந்து மண் எடுத்துக்கோ. கார்பன் டேட்டிங்’ (Carbon dating பழங்காலப் பொருட்களின் வயதைக் கண்டுபிடிப்பது) முறைப்படி ரெண்டு மண்ணோட வயசையும் கண்டுபிடிச்சு எனக்குச் சொல்லு’’ என்று தெள்ளத் தெளிவாகச் சொன்னார் மகா பெரியவா. அந்தப் புவியியலாளரிடம் இந்தப் பொறுப்பைக் கொடுத்து, உலகத்துக்கு ஒரு உண்மையை வெளியிட்டார் மகா பெரியவா. கொஞ்ச நாள் கழித்து ரிசல்டுடன் வந்தார்.

காலடிக்குள் பூர்ணா நுழைவதற்கு முன் நதியின் வயது ஒரு லட்சம் வருடம். காலடிக்குள் நுழைந்த பின் சங்கரர் இல்லம் அருகே எடுத்த மண்ணுக்கு 2,500 வருடம்எனவே, ஆதி சங்கரர் அவதாரம் செய்து 2,500 ஆண்டுகள் ஆகி விட்டன என்பது ஊர்ஜிதம் ஆயிற்று. ஆதி சங்கரர் இந்த பூலோகத்தில் வாழ்ந்தது 32 ஆண்டுகளே. ஆதி சங்கரரின் அவதார தினம் மற்றும் ஸித்தி தின ஸ்லோகங்களை வைத்து, அவர் வாழ்ந்த காலத்தை மகா பெரியவா வெளியிட்டார். சங்கரர் அவதாரம் செய்தது கி.மு. 509-ஆம் ஆண்டு என்றும், அவர் ஸித்தி ஆனது கி.மு. 477-ஆம் ஆண்டு என்றும் அந்த மகா சபையில் மீண்டும் ஒருமுறை பிரகடனப்படுத்தினார்.

ஆனால், ஸ்ருங்கேரி மடத்தில் கிபி.7ம் நூற்றாண்டிற்கு பின்னர் வந்த மடாதிபதிகள் பற்றிய செப்பேடுகளும் ஆவணகளும் இருக்கிறது. அப்படி என்றால் அதற்கு முன் இருந்த ஆவணங்கள் களப்பிரர் காலத்தில் அழிக்கப்பட்டதா அல்லது ஆவணங்களே பராமரிக்கப்படவில்லையா என்று அறிந்து கொள்ள முடியவில்லை.
ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி மகாசுவாமி  

நலம் தரும் நாட்டு சர்க்கரை

சென்ற மாதம் எங்கள் ஊருக்குப் போனபோது, அங்கே வழியில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட 'நாட்டு சர்க்கரை' பொட்டலங்கள் விற்பனை செய்து கொண்டிருந்தனர். சாலையோறம் இறங்கி உள்ளே சென்றபோது, ஆண்களும் பெண்களுமாக பயிர் நிலத்தில் சுமார் 4 -5 அடி உயர கரும்பை வெட்டிக்கொண்டிருந்தனர்.
அங்கே என்ன செய்கிறார்கள் என்று கேட்டறிந்தேன். அந்த விபரங்கள் மிகவும் சுவாரசியமாக இருந்தது. கரும்பு கரணைகளை 3 அங்குல இடைவெளியில் நடுகிறார்கள். பஞ்சகvவியம் தெளித்து பண்பட்ட நிலத்தில் அவை வளரும்போது கோமியத்தில் ஊற வைத்த ஆடுதின்னா இலை, நாய் துளசி, சிறியாநங்கை, நொச்சி, வேம்பு போன்ற மூலிகைக் கொண்டு தயாரித்த கஷாயம் நீர் தெளிக்கிறார்கள். இதுதான் பூச்சிகொல்லி மருந்து. இந்த மூலிகை பவுடரைக்கொண்டு செய்யும் தூப குச்சிகள் கொசு விரட்டியாகப் பயன்படும் என்பதை பழைய பதிவில் சொல்லியிருப்பேன்.
முதிர்ந்த கரும்பை வெட்டி எடுத்து, ஆலையில் சாறு பிழிந்து, பெரிய கொப்பரையில் ஊற்றி கொதிக்கவைக்கிறார்கள். அதில் சுமார் 100 கிராம் சுண்ணாம்பு போடப்பட்டு அதன்பிறகு காய்ச்சும் போது வெண்டைக்காய் இலைச்சாறு எடுத்து 1 லிட்டர் ஊற்றி அழுக்கை எடுக்கிறார்கள். நன்கு கொதி நிலை வந்ததும் அதில் கொப்பரைக்கு 100மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றுகின்றனர். பிற்பாடு அது ஈரம் போய், பொடியாகும்போது அதை ஆறவைத்து தேவையான பொட்டலங்களாக கட்டுகிறார்கள். அந்த பண்ணை உரிமையாளர் திரு. ஈஸ்வரமூர்த்தி, KKN பண்ணை, காசிலிங்க கவுண்டன் புதூர், கவிந்தபாடி, ஈரோடு.
Image result for நாட்டு சர்க்கரை, KKN Farms 
இப்போது ஒரு கிலோ நாட்டு சர்க்கரை ரூ.45 - 50 க்கு விற்கிறார்கள். இரசாயன கலப்பின்றி உள்ள இந்த நாட்டு சர்க்கரை உடலுக்கு தீமை தருவதில்லை. நுகர்வோர் அங்காடி Ration கடையில் இதை விற்க வேண்டும். அபாயகர வெள்ளை சீனிதான் புழக்கத்தில் உள்ளது. விருப்பப்படுவோர் படத்திலுள்ள நம்பருக்கு தொர்பு கொளளவும்.

Image may contain: one or more people, outdoor and nature

ஞாயிறு, 11 ஜூன், 2017

அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம்

முன் எப்போதோ இது பற்றி படித்திருந்தாலும், அவ்வப்போது மறந்துபோவது இயல்பு. இன்னும் சொல்லப்போனால், இதுபற்றி நம்மை யாரேனும் விளக்கம் கேட்கும்போது சற்று குழப்பும். ஏன் அப்படி? சிவன்-திருமால்; சைவம் -வைணவம், வேறுபாடின்றி வணங்கி வருகிறோம். 'எல்லாம் ஒன்றே' என்ற தத்துவத்தை நாம் கொண்டுள்ளதால், நம் மார்க்கம் என்னவென்று அறியத்தேவையின்றி இருக்கிறோம். இறைவன் என்ற பரபிரம்மம் உள்ளதை ஏற்கிறோம். அது நம்முள் இருந்தால் என்ன? வெளியில் இருந்தால் என்ன? என்ற நிலையில் உள்ளோம்.  உண்மைதானே?

அத்வைதம் (ADVAITHAM)
அத்வைதம் (அ + துவைதம்) அதாவது இரண்டற்ற நிலை, ஏகம். சீவன் என்னும் (ஜீவாத்மா) என்பதும் சிவன் (பரமாத்மா) என்பதும் ஒன்றுதான்; வேறல்ல என்றும், சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மா விளங்குகின்றது என்று கூறுவது அத்வைதம். சங்கரர் தான் முதன்முதலில் அத்வைத தத்துவத்தைத் தொகுத்து எழுதி வைத்தார். இதன் சாரம், 'பிரம்மம் ஒன்றே'.  பிரம்மத்திலிருந்து ஆன்மா வேறுபடாத நிலை.

துவைதம் (DHVAITHAM)
துவைதம்- துவி என்றால் இரண்டு. பிரபஞ்சமும், பரமாத்மாவும் வேறானவை. பரமாத்மா தனி, மற்றவை அதில் சேராதவை என்பதாம். பரமாத்மா, ஜீவாத்மா, ஜட உலகம்-இவை எவராலும் உண்டாக்கப்படாத நித்தியப் பொருள்கள். உலகம் ஒரு தோற்றம் அன்று. சுதந்திரம் இறைவனுக்கு மட்டும் உண்டு. கர்மத்தை நீக்கினால் வீடுபேற்றை அடையலாம். இதை பரப்பியவர் மத்துவர்.

விசிஷ்டாத்வைதம் (VISISHTA-ADWAITHAM)
இவ்வேதாந்த நெறியை உலகிற்கு அளித்தவர் இராமானுஜர். விசிஷ்டம் - விசேஷம். விசிஷ்டாத்வைதமானது, ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒரே பொருளாலானவை என்றும், ஜீவாத்மா என்பது பரமாத்மாவிலிருந்து தான் வெளிப்பட்டது என்று கூறுகிறது.

                    Image may contain: 1 person

வியாழன், 8 ஜூன், 2017

மகாபெரியவர் என்ற அவதார புருஷர்



  

சுமார் 75 வருடங்களுக்கு முன் மகாபெரியவர் ஸ்ரீ  சந்திரசேகர சரஸ்வதி மகாசுவாமிகள் காஞ்சி மடத்தின் தலைமை பீடாதிபதியாக பொறுப்பில் இருந்த சமயம், தன்னுடைய பூர்வாஸ்ரம சித்தப்பா-சித்தி தரிசிக்க வந்தார்கள். கூட்டத்தோடு கூட்டமாக நின்று சந்திரமௌலி பூசையை கண்டனர். நித்திய பூசை முடிந்ததும், அவர்களை நலம் விசாரித்து, பிரசாதங்கள் வழங்கினார். அங்கு அவர்களுக்கு கைத்தறி வேட்டியும் புடவையும் மடத்தின் சார்ப்பாக கொடுத்து ஆசிர்வதித்து அனுப்பினாராம்.
ஆனால் இன்று இப்படி நிகழுமா? இக்காலத்தில் எந்த மடமாக இருந்தாலும் முன்னாள் உறவினர்கள், நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள், ஆன்மிக சங்க பிரதிநிதிகள் என்று எல்லோருமே ஒரு துறவியை தனிமையில் விடாமல் சொந்தம் கொண்டாடி அவரை சன்னியாசியாக இருக்க விடுவதில்லை. இறுதியில் அவரை வியாபார கேந்திரத்தின் கார்பரேட் CEO வாகவே மாற்றிவிடுகிறார்கள்.
அன்று இவர் எதற்கும் பிடி கொடுக்காமல் தன் உள்ளொளி காட்டிய வழியில் நின்றார். எல்லா வற்றிலிருந்து ஒரு மாறுபட்ட துறவியாக அவர் இருந்ததால் மகாபெரியவர் என்று அழைக்கபட்டார். மும்மூர்த்திகளும் தேவியரும் அவருள்ளேயே இருந்தனர், அது ஒரு சிலர் கண்களுக்கு மட்டுமே தெரிந்தது என்பதால் நடமாடும் தெய்வமாக போற்றப்பட்டார். சமத்துவம் போற்றிய ஒப்பற்ற துறவி என பலபிரிவு மக்களால் கொண்டாடபட்டார். அவர் பிறந்த குலம் ஒன்றை வைத்துக்கொண்டு இன்றுவரை அவரை எப்படியெல்லாம் இகழ முடியுமோ அப்படி எல்லாம் செய்துவந்தனர். பிறப்பதற்கு பெற்றோரும், சாதி என்பதும் ஒட்டிக் கொண்டும் வருவது தவிர்க்கமுடியாது. அதன்பின் அவை சன்னியாசத்தில் தொடராது.
பலபேருடைய சந்தேகங்களுக்கு தீர்வு சொன்னவர்... கண்ணதாசன் 'அர்த்தமுள்ள இந்துமதம்' என்ற நூல் எழுதக்காரணமாக இருந்தவர், சிவாஜி கணேசன் 'திருவருட்செல்வர்' படத்தில் நடிக்க தன்னை அறியாமலே மாடலாக இருந்தவர், திருக்குரானில் சந்தேகத்தை தீர்த்தவர், பக்கத்து மசூதியில் தொழுகை நேரத்தில் இவரும் தொழுபவர், இப்படி எவ்வளவோ சொல்லலாம். அவருடைய பக்தர்களில் முஸ்லிம்கள், கிறித்துவர்கள், பௌத்தர்கள், நரிக்குறவர்கள், அரசர்கள், கொடையாளர்கள், விவசாயிகள், பரம எழைகள், என்று பலரும் இருந்தனர். அவர் பன்மொழியாளர். அவர் அருளிய திருவாய்மொழி உரைகள் தொகுத்து 'தெய்வத்தின் குரல்' என்று வெளிவந்தது. ஏழைகளுக்காக 'பிடி அரிசி' திட்டம் கொண்டு வந்தவர். அப்படிப்பட்ட காஞ்சி மாமுனிவரின் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. நாமும் குருபாதம் சேவிப்போம்.
மகான் ஸ்ரீ வீரப்பிரம்மேந்திரரின் தீர்க்கதரிசனம்படி எதிர்காலத்தில் விஸ்வ பிராமணர்களே (கம்மாள ஆச்சாரிகள்) அத்வைத்த மடங்களின் பீடாதிபதியாக வரும் சாத்தியங்கள் உள்ளது.

சிவஜோதியில் வந்து கலந்திடுங்கள்

சம்பந்தன் பூரணாம்பிகை மணக்கோலம் காண்
சுற்றம்சூழ நல்லூர் பெருமண வைபவம் காண்;
அம்பலத்தான் அருளாசி அசரீரி ஒலிக்கக் காண்
அகமகிழ்ந்தோர் ஜோதியில் புகுவதைக் காண்;
விண்ணவர் மலர்ச்சொரிய வரவேற்கக் காண்
வந்தோர் யாவருக்கும் வீடுபேறுகிட்டக் காண்;
பண்ணவர் திருநீலர் நாயனார்கள் ஓதக் காண்
பைந்தமிழ் தேவாரம் திருமுறை பதியக் காண்.
ஈசனின் பதியொளிர ஐந்தெழுத்து செபிக்கக் காண்
இம்மையும் எம்மையும் அறுபட்ட தருணம் காண்;
தாசனின் பேற்றினில் உற்றார்கள் மகிழக் காண்
தயாபர தோணிபுரத்தான் திருவிளையாடல் காண்
.
             (இது அடியேன் புனைந்த கவிதை.)
நல்லூர் கோயில் (ஆச்சாள்புரம், நாகப்பட்டினம்) கருவறையில் ஈசன் ஜோதியாய்த் தோன்றி அசரீரியாக திருவாய் மலர்ந்தருளினார். அதன்படி திருஞானசம்பந்தப் பெருமான் தன் திருமணத்திற்கு வந்தோர் அனைவரையும் சிவ ஜோதிக்குள் இட்டுச்சென்றார். அவர்கள் அனைவரும் கைலாசபதியில் ஈசனில் கலந்தனர்.
அப்போதுதான்;
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாய மே
.”
என்று தொடங்கும் நமச்சிவாய பதிகத்தைப்பாடி தன் மனைவியுடன் சம்பந்தப்பெருமான் சிவஜோதியில் கலந்தார்.. இதை படிக்கும்போது உங்கள் உடலில் இப்போது தெய்வீக அதிர்வலை உணரமுடிகிறதா? ஓம் நமசிவாய!
ஆம், திருஞானசம்பந்தரின் மணநாளும் ஆராதனை (குருபூஜை) விழாவும் ஒரே நாளில் வரும். அத்திருநாள், வைகாசி –மூலம்.. ஜூன் 10.
Image may contain: one or more people

புதன், 7 ஜூன், 2017

பிராண ஓட்டம்


'மேன்மையான சிவசக்தி ஸ்தலம்' என்ற என் நேற்றைய பதிவில், பிராணன் நம் உடலில் ஒவ்வொரு சக்தி சக்கரங்களிலும் சில ஆயிரம் முறைகள் 'ஹம்ச' ஜெபம் செய்கிறது என்பதைப் பார்த்தோம், அல்லவா? அந்த ஆறாதார சக்கரங்களில் உறையும் தெய்வங்களை பூசித்தபடி இந்த பிராணன் உச்ச்சுவாசம் -நிச்சுவாசம் என்று கீழும் மேலும் ஓடிக்கொண்டிருக்கிறது.  ஒவ்வொரு சக்கர தளத்திலும் குறிப்பிட்ட கால அளவு நேரம் ஜெப ஓட்டம் நடக்கிறது. ஒரு நாளில் 21600 முறை ஜெப ஓட்டம்  நடக்கிறது. அவை என்னென்ன? (1 கடியா = 24 நிமிடங்கள் = 60 விகடியா)

சக்கர தளம் -----  ஜெபங்கள்  ---  கால அளவு  
======================================
மூலாதாரம்                 600            1 கடியா  40விகடியா
சுவாதிஷ்டானம்     6000           16க  40வி
மணிபூரகம்               6000           16 க 40வி
அனாஹதம்              6000           16 க 40வி
விசுத்த                        1000             2 க 45வி
ஆக்ஞா                        1000            2 க 40வி
சகஸ்ராரம்                1000            2 க 06வி

இந்த பிராண மூச்சு நம் தண்டு வடத்தின் இடது /வலது பக்கம் ஓடி, இடகலை பிங்கலை சுழுமுனை என்று நிலை பெறுகிறது. இந்த சுழுமுனைதான் ஆக்ஞாவிற்குமேல் கபால பீடத்தை பிரம்மரந்திரம் மூலம் சூட்சும நாடியால் இணைக்கிறது.

மகான்  ஸ்ரீவீரப்பிரம்மேந்திரர் 'ஷட்சக்கர யோக உபதேசம்' பற்றி தன் சீடர் சித்தையாவுக்கு கண்ணெதிரே காட்டி நிரூபிக்கும் ஒரு சிறு பகுதியை இங்கு பதிவிட்டேன்.


மேன்மையான சிவசக்தி தலம்

ஆக்ஞாபுதூர் தேர்வுநிலை ஊராட்சி எல்லையில் நான்கு மைல் தொலைவில் சகஸ்ரமங்கலம் பேரூராட்சி வரும். ஆகாய க்ஷேத்ரமான அங்குள்ள பெரிய கோயிலில் லிங்க மூர்த்தி கபாலீஸ்வரன், அம்பாள் பெயர் பாலம்பிகை. ஓங்காரம் சதா ஒலித்துக் கொண்டே இருக்கும் இந்த மோட்சபுரம் தலத்தில் சொர்க வாசலுக்கு இணையான ஒரு பிரம்மரந்திரம் உண்டு. அது எப்போது திறக்கும் என்பதை நாம் அறிந்து கொண்டால், யோக சக்தி மூலம் சச்சிதானந்தத்தில் இலயிக்க முடியும்.
இக்கோயிலின் கோடி சூரிய ஒளிமயமான கமல பீடத்தில் ஆயிரம் முறை சிவஜெபம் இடைவிடாது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை நடந்துகொண்டே இருக்கிறது என்பது விசேஷம். இத்தலத்தில் வாலை தெய்வம் யோகிகளுக்கு ஞானத்தையும் பிரபஞ்ச சக்தியை அளித்து, வாசியை கட்டுப்படுத்தி, சமாதி நிலை எய்த அருள் புரிகிறாள் என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்ச பூதங்களும் இத்தலத்தில்தான் ஒடுங்குகிறது என்றால் இது எப்பேர்பட்ட தலம் என்று பாருங்கள்!
ஒருமுறையேனும் அத்தலத்தில் கால் பதிக்க வேண்டும். நம் தேகத்திலுள்ள ஆறாதார சக்தி சக்கரங்கள் சிறப்பாக இயங்கினால்தான், இத்தலத்திற்கு செல்ல பிராப்தம் கிட்டும் என்பது ஐதீகம். அந்த உயர்வான சக்தி நிலையை நாம் ஒவ்வொருவரும் அடைய முயற்சிப்போம்.. ஓம் நமசிவாய!
---------- ------------ ----------- -----------  --------- 
நீங்கள் அனைவரும் இந்த கோயில் எங்குள்ளது, அந்த ஊருக்கு போகும் வழி என்ன என்று நினைப்பீர்கள். அந்த கோயில் இருப்பது நம் தலையில். 

நம் உடலில் ஆறாதார சக்கரங்கள் பற்றி நீங்கள் அறிவீர்கள். மூலாதாரம் முதல் ஆக்ஞா சக்கரம் வரை பூமி. ஆக்ஞாவுக்கு மேலே ஆகாயம், மூ
லாதாரத்திற்கு கீழே பாதாளம். ஆகவே, மூலம்-ஆக்ஞா வரை பூமி zone எல்லை முடிகிறது. அதிலிருந்து மேலாக சுமார் நான்கு விரல் தூரத்தில் சகஸ்ரார சக்கரம் உள்ளது. இது மேல் நிலையில் உள்ள பேரூராட்சி. இது ஆகாயம் என்பதால், ஆகாய தலம் என்றேன். இங்கு கபாலத்தில் சிவனும் சக்தியும் உறைவதால், கபாலீசன் என்றும் பாலாம்பிக்கை என்றும் குறிப்பிட்டேன். எப்போதும் இந்த சகஸ்ராரத்தில் ஓம் என்ற பிரணவம் ஒலித்துக் கொண்டிருக்கும். இதுதான் வாலை குடியிருக்கும் மேருபீடம் என்று சித்தர்கள் சொல்லியுள்ளார்கள். அங்கே ஆக்ஞா சக்கரத்தின் மேலே 'பிரம்மரந்திரம்' சிறு துளை உள்ளது. இதைத்தான் சொர்கவாசல் என்றேன். இது திறக்கும் சமயம் வாசி யோகத்தால் அங்கே அமுத சொட்டு பருகி பிரபஞ்சவெளியோடு ஐக்கியமாகி பேரானந்த நிலையில் இருக்க முடியும். 

இங்கு ஆயிரத்து எட்டு இதழ்கள் கொண்ட தாமரை உள்ளது. சதகோடி சூரியனின் தூய ஒளி இங்கு வெளிப்படுகிறது. இங்கே நம் பிராணன் சுமார் ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை ஆயிரம் 'ஹம்ச' ஜெபம் செய்து கொண்டிருக்கிறது. (இதுபோல் ஒவ்வொரு ஆறாதார சக்கரத்திலும் பல ஆயிரம் முறைகள் ஜெப ஒட்டம் நடக்கிற படியால், ஒரு நாளில் மொத்தம் 21600 முறை ஓடுகிறது. அதனால் தான் சித்தர்களும் மகான்களும் தங்கள் சிரசில் வில்வம், மலர் வைத்து வழிபடுவார்கள்.) இந்த சகஸ்ரார சக்கரம் யோகிகளுக்கு மட்டுமே கைகூடுவது. இங்கு பஞ்சபூத சக்திகள் கட்டுப்படுகிறது. சித்தர்கள் தங்கள் வாசியை விருப்பம்போல் மாற்றிடவும், கட்டுப்பாட்டில் கொண்டு வரவும், வெட்டவெளியோடு ஒன்றிட, இங்கு வாலை தெய்வம் சித்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். மூலாதாரம் முதல் ஆக்ஞா வரை உயர் நிலைகள் தாண்டிய பிறகுதான், தேர்வுநிலை முடிந்து அடுத்த நிலை சகஸ்ராரத்திற்கு குண்டலினி உயர்த்தபட பிராப்தம் வருகிறது என்றேன்... ஒரு புதிர் போட்டு இப்படி உங்களை சுற்ற விட்டதற்கு மனிக்கவும். 

இது எப்பேர்பட்ட தலம் என்பதை போகர் ஏழாயிரம்- இரண்டாம் காண்டத்தில் (பா-1089) சொல்வதைக் காண்க.
Image may contain: one or more people and text

திங்கள், 5 ஜூன், 2017

மதியால் விதியை வெல்லலாமா?

நேற்று முகநூலில் ஒரு பதிவைப் படித்தேன். அதில் ஊழ்வினை, கஷ்டம், துன்பங்கள் பற்றி பல விஷயங்கள் சொல்லப்பட்டன. ஆறறிவு கொண்ட மனிதன் நற்செயல் செய்யாமல் இருப்பதும், அப்படி வாய்ப்புகள் கிடைத்தும் அதை செய்யாது கோட்டை விட்டு விடுகிறான் என்றும் அதில் இருந்தது.
அதில் மேலோட்டமாக சொன்ன கருத்து சரி என்றாலும் ஏன் நம்மால் இந்த வாழ்க்கை சக்கரத்தின் பிடியிலிருந்து தப்ப முடியவில்லை? பாவம் புண்ணியம் எல்லாம் அறிந்தவர்கள்தான் நாம். மெத்தப் படித்த கல்விமான், செல்வந்தர் என்று எல்லோருமே ஏதோ ஒரு வகையில் மன நிறைவின்றி இருப்பது ஏன்? பணத்தைகொண்டு அவர்கள் நற்செயல் செய்ய முடியாதா? வெறும் நற்செயல் மட்டும் செய்வதால் விதியை நம் மதியால் மாற்றிட முடியாது என்பதை ப்பற்றி சற்று விளக்க விரும்புகிறேன்.
நம் ஆன்மா எடுக்கும் பிறவியே ஊழ்வினை அடிப்படையில் தான் நடக்கிறது. இதுவரை நாம் எடுத்த பல லட்ச மனித பிறவிகளில் செய்த பாவங்களும் புண்ணியங்களும் பொதுவாக 'சஞ்சித கர்மம்' என்று அழைக்கபடுகிறது. சம்பந்தமே இல்லாமல் ஒருவன் உங்களுக்கு ஒரு உபகாரம் செய்கிறான் என்றால் அதை தெய்வ அனுக்ரகம் என்று பொதுவாக எண்ணுகிறோம். ஆனால் ஏதோவொரு முற்பிறவியில் அந்த ஆன்மாவிற்கு நாம் தக்க நேரத்தில் உதவி செய்திருப்போம் அது இப்போது ஒரு பிறவியில் வலியவந்து சகாயம் செய்தது. ஒருவனுக்கு தீவினை செய்தால் அது நாம் எப்பிறவியில் வாழ்ந்தாலும் அந்த ஆன்மா படை எடுத்து வந்து தாக்கும். அவனுக்கும் உங்களுக்கும் இப்பிறவியில் சம்பந்தம் இருக்க வேண்டும் என்பது இல்லை. நண்பர்கள்/உறவுமுறைகள் என்று சம்பந்தம் இருந்தாலும் ஆச்சரியம் இல்லை.
இந்த சஞ்சித பாவ/புண்ணியங்கள் accumulate ஆகிக் கொண்டுவரும். அந்தந்த பிறவியில் எந்தந்த ஆன்மாவுக்கு முன்னர் நாம் என்ன செய்தோம் என்று match the following நடந்து அதன்மூலம் இந்த பிறவியில் இன்பமும்/துன்பமும் வருகிறது. இதை அந்தந்த பிறவியின் 'பிராரப்த கர்மம்' என்போம். இதைத்தான் 'தீதும் நன்றும் பிறர் தர வாராது' என்று சொல்வது. அதாவது முற்பகல் செய்தது பிற்பகல் விளையும். சஞ்சித கர்ம மூட்டையில் இருக்கும் புண்ணிய செயல்களுக்கேற்ப இப்பிறவியில் ஜாதகத்தில் நல்ல தசா-புக்தி வரும்போது நற்பலன்களும் யோகங்களும் வருகிறது. கண்ணெதிரே அட்டூழியம் செய்தவனும் சுகபோகமாக வாழ்கிறானே என்று வயிறு எரியும். அதற்கு இதுதான் காரணம். கெட்டநேரம் வரும்போது தீய ஊழ்வினை எச்சங்கள் வெளுத்து வாங்கி தாக்குகிறது. இதில் நம் மதி என்ன செய்யும்? நம் புத்தியால் அதை போக்கமுடிந்ததா?
ஒன்றைச் சொல்கிறேன். 'நற்செயல் செய்ய தடை இல்லைதான்'. இருந்தாலும் அதனை செய்து புண்ணியம் ஈட்டவும் ஈசனின் அருள் வேண்டும்.. ஆறாம் அறிவு இருந்தும்கூட மனிதன் கண்டு கொள்ளாமல் கோட்டை விட்டான் என்பதெல்லாம் இல்லை... ஏழாம் அறிவே நமக்கு இருந்தால்கூட, ஊழ்வினை தீரும்வரை இதைச் செய்ய ஏதோவொரு இடைஞ்சல் வரும்.. மனம் இலயிக்காது.. இதை உங்களில் பலர் அனுபவத்தில் அறிவீர்கள்... அவன் அருளால்தான் அவனைத் தொழவும், தர்ம நெறியில் நல்ல செயல்கள் செய்யவும், ஊழ்வினை வெல்லவும் முடியும். இது பிராப்தம் இருந்தால் நடக்கும். விதி கட்டிப்போடுவதால் செயலுக்கும் அறிவிற்கும் சம்பந்தமில்லை. மதி வேலை செய்யாது. விதி வலியது எனும்போதுதான் புத்தியும் கெடும்.. 'விநாசகாலே விபரீத புத்தி' என்று கோணங்கித்தனமாக செயல்படும்.
அதுவரை குடும்ப சாபமும், ஊழ் வினை சதியும் விதியும் நடந்த வண்ணம் இருக்கும். ஊழ்வினை தான் விதி என்ற பெயரோடு துரத்தும். நாம் அதன் கட்டுப்பாட்டில் இருக்கிறோம். 'நற்செயல் செய்ய எண்ணம் வராதது, அப்படியே வந்தாலும் நீங்கள் செய்யும் தர்மம் பலனற்று போவது, உங்களின் தர்மத்தை ஏற்க மறுப்பது, செய்த நற்செயலுக்கு பிரதி உபகாரமாக வேறெதையோ பெறுவது..' என்று பலவற்றைச் சொல்லலாம். இது மிகவும் சூட்சுமம் நிறைந்த சமாசாரம்... மனக் கண்ணால் இதன் தொடர் விளைவுகள் அத்தனையும் காண முடிகிறது.. அவற்றை நான் மேலெழுந்த வாரியாக இங்கே விளக்குவது சாத்தியப்படாது.
சித்தர் போகர் இராமனாக ஜனித்தார். அவர்தான் இராமாயண கதாநாயகன். அவர் நினைத்திருந்தால் கதையை மதியால் மாற்றி இருக்கலாம். ஏன் செய்யவில்லை? ஈசன் எழுதிய ஸ்க்ரிப்ட்படி கதை அப்படித்தான் டைரக்ட் செய்யப்பட்டது என்பதை தன் 'போகர் ஜெனன சாகரம்' நூலில் சொல்கிறார். இராமன் பிறப்பதற்கு முன்பே ஆரணிய காண்டம் கதை முடிவாகிவிட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். தசரதனாக வரும் இந்திரனிடம் இதைப் பற்றி விவாதிக்கிறார்.
                                              Image may contain: one or more people
ஆக, எதுவும் நம் கையில் இல்லை. நாம் வெறும் ரோபோ பொம்மைகள். அவன் ஆட்டுவித்தபடி ஆடுகிறோம். செயல்படுகிறோம். மதியால்தான் எல்லாம் செய்கிறோம் என்று நினைப்பது மாயை. நல்ல பலன் கிட்டினால் 'மதி' உபயோகித்தேன் என்போம், கெடுபலன் வந்தால் 'விதி' என்போம்.

நல்வினை தீவினை : மூட்டைகள்

நாம் காலங்காலமாய் பிறந்து-இறந்து வரும் பிறவிப் பயணத்தில், இதுவரை சேர்ந்துபோன சஞ்சித கர்ம வினை பதிவாகிவிடுகிறது. பழைய பயணத்தில் நம்முடன் சம்பந்தப்பட்ட ஆன்மாக்கள் இந்தப் பிறவியில் நம் வாழ்வில் குறுக்கிட அவகாசமே இல்லாதபோதும், அவ்வான்மாக்கள் கைமாறு செய்து தம் கர்மத்தை தீர்ப்பது என்பது எப்படி நிகழும்? ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன் நான் என் நண்பரோடு பெங்களூர் சென்றேன், பணி முடிந்து அன்று மதியம் ரயில் பிடிக்க ஸ்டேஷன் போகும் வழியில், என் நண்பர் தன்னுடைய தூரத்து உறவினர் யாரோ இறந்த பன்னிரண்டாம் நாள் சுபஸ்வீகரம் நடக்கும் ஒரு மண்டபத்தில் போய் தலையைக் காட்டிவிட்டு வந்து விடுகிறேன் என்றார். மண்டபம் எங்குள்ளது என்று விசாரித்துக் கொண்டு வந்தார். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. ரயிலுக்குப் போகும் வேளையில் இந்த ஆள் இப்படி இம்சை கொடுக்கிறாரே!' என்று நினைத்துக் கொண்டேன். நாங்கள் போகும் வழியில் ஒருவழியாக அந்த மண்டபம் வந்தது.
நான் ஆட்டோவில் அமர்ந்தபடி 'சார், நீங்க போயிட்டு 10 நிமிஷத்துல வந்துடுங்க' என்றேன். உள்ளே போனார். கொஞ்ச நேரத்தில் ஒருவர் ஆட்டோ அருகில் வந்தார். 'சார்.. நீவும் ஓளகடே பன்னி... பிளீஸ்' என்றார். ஆட்டோவை காத்திருக்கச் சொல்லிவிட்டு நான் வேண்டா வெறுப்புடன் போனேன், அங்கே பந்தியில் பலர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். நம் நண்பர் அங்கு தெரிந்த யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார்.
ஒரு நடுத்தர வயதுக்காறார் 'சார்...இல்லி நீவு கூத்கொள்றி... ஊட்டா மாடி' என்றார். பொதுவாகவே நமக்கு சம்பந்தமில்லாத வேற்று மனிதர்களின் காரியநாள் உணவுகளை நாம் யாரும் உண்ணமாட்டோம் என்பது சம்பிரதாயம். மதிய உணவு உண்டுவிட்டுத்தான் கிளம்பினோம், அதனால் உண்ண விருப்பமுமில்லை. என்னை வலுக்கட்டாயமாக அமரவைத்தார். 'சார்.. சொல்ப சித்ரா அன்னம் தெகி.. சுவாமி' என்றார். நான் வேறு வழியில்லாமல், 'சார்.. நீவு ஹேளிதகு கோஸ்ரா நான் திந்தினி... நன்கு அஷ்வே இல்லா' என்று சொல்லிவிட்டு இலையில் இருந்து எலுமிச்சை சாதத்தை ஒரு கைப்பிடி எடுத்தேன், அதை எப்போதும்போல் பொறுமையாக உதட்டில் விரல்கள்பட உண்ணாமல், கிருஷ்ணர் வாய்திறந்து மண்ணை எடுத்துக்கொட்டி உண்டது போல மேலேயிருந்து வாயில் போட்டுக் கொண்டேன். உடனே அவர் 'சொல்ப.. பாயஸா குடி' என்றார், வேறு வழியின்றி தொன்னையை எடுத்து ஒரு வாய் குடித்துவிட்டு அப்படியே வைத்துவிட்டேன்.
பிறகு என் நண்பர் வந்தார் கிளம்பிவிட்டோம். எதற்கு இந்த கதை? இப்பிறவியில் எனக்கு சம்பந்தமே இல்லாத ஒருவர் என்னிடம் தனக்கிருந்த கடனைத் தீர்க்க, என்னை ஊர் விட்டு ஊரு வரவைத்து கடனைத் தீர்த்தார். இறந்தவர் ஆணா பெண்ணா? என்ன வயது? ஏதும் அறியேன், நான் கேட்கவுமில்லை. 
ஆக, தேங்கிப்போகும் அந்த சஞ்சித கர்மம் மூட்டை என்பது நாம் எடுத்த எல்லா பிறவிகளின் accumulated வடிவம். சஞ்சித மூட்டைக்குள் பிராரப்த கர்மங்கள் பிறவி வாரியாக சிறு பாவ/புண்ணிய மூட்டைகளாக பதிவாகியுள்ளது. அதுதான் இப்போதைய பிறவியில் வந்து சேருகிறது. இதில் bonus உபரியாக அந்தந்த பிறவியின் மூதாதையர் பாவ-புண்ணிய செயல்களும் வந்துசேரும். ஒவ்வொரு பிறவியிலும் நாம் செய்த நன்மை தீமைகள் எந்த ரூபத்திலும் நம்மை வந்தடையும் என்பதற்கு இது உதாரணம்.

No automatic alt text available.

வெள்ளி, 2 ஜூன், 2017

படமும் பதிவும்

ஹோமத்தில் இதுவரை நான் எடுத்த படங்களில் பதிவான தெய்வ உருவங்கள் இங்கே இடுகிறேன். நான் எடுக்கும்போதெல்லாம் பதிவாவதை புரிந்து கொண்டேன். இந்த நிகழ்வுக்குப் பிறகு படம் ஏதும் எடுக்கவில்லை. ஏன்? தெய்வச்செயலை மீண்டும் சோதித்துப் பார்க்ககூடாது.