சிலப்பதிகாரம் எழுதி பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இந்த சிலம்பு இன்று வரை பிரச்சனையை கிளப்பிவருகிறது. இளங்கோவின் வர்ணனைப்படி மதுரையில் கோவலணின் வழியில் எதிர்பட்ட அரசவை பொற்கொல்லனிடம் கண்ணகியின் ஒற்றைச் சிலம்பை மதிப்பிட காட்டி விற்கும் எண்ணத்தில் அணுகினான். இதை நாமெல்லாம் பள்ளிகூட பாடத்திலேயே படித்து விட்டோம்.
இந்த காவியத்தில் அரச பொற்கொல்லன் பாண்டி மாதேவியின் சிலம்பை திருடிவிட்டு கோவலன் மீது திருட்டுப் பட்டம் கட்டுவதாக வரும் வரிகளை நீக்க வேண்டும் என்றும், பொற்கொல்லர் சமூகம் மோசமாக சித்தரிக்கபடுவது கண்டிக்கத் தக்கது என்று பல்வேறு விஸ்வகர்மா சங்கங்கள் தமிழ்நாடு அரசுக்கு மனு அளித்தது. இதற்கான அரசாணை உத்தரவை பெrruம் பாடத்திட்டத்தில் மாற்றம் வரவில்லையே என்பதுதான் செய்தி.
அதில் திரு.அசோகன் என்பவரின் விளக்கத்தை படித்ததும் எனக்கு சிரிப்புத்தான் வந்தது. அதாகப்பட்டது, ராஜாஜி என்ற பிராமணர்தான் வேண்டுமென்றே இதுபோன்ற ஒரு பாடலை செருகலாக வைத்தார் என்று சொல்லியிருந்தார். அதை படித்துவிட்டுத்தான் இந்தப் பதிவை இடுகிறேன்.
இலக்கியத்தில் மெனக்கெட்டு ஒரு த்விஜ பிராமணன் இடைச்செருகல் செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை. வீடு தோறும் சென்று அதே த்விஜ பிராமண பிரிவைச் சேர்ந்த 'தமிழ் தாத்தா' உ.வே.சாமிநாத ஐயர் கண்டெடுத்து சிரமப்பட்டு தொகுத்ததே ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம். அன்று இருந்த திராவிடர் ஆட்சியில் பிராமண எதிர்ப்புக்கு ஏதோ ஒரு தீனி வேண்டும் என்பதால் இது திரித்து விட்டிருப்பதும் நடக்கும்.. உவேசா பட்ட கஷ்டம் என்ன என்பதை சில்பகுரு கணபதி ஸ்தபதி எப்போது உணர்ந்து வருந்தினார் என்பதை ஐந்திறம் பற்றிய பதிவில் நான் சொல்லி இருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
அரசியின் கால்சிலம்பு பொற்கொல்லனிடம் கொடுக்கப்பட்டு அங்கு அது காணாமல் போனால், அவன் எடுக்காவிட்டாலும் அவன் மீதுதான் பழிவரும். ஊர் உலகம் அப்படித்தான் நினைக்கும். அன்றைய வாழ்க்கைத் தரம் இருந்த சூழலில் அரசியைத் தவிர செல்வந்த பெண்கள் காலில் சிலம்பு அணியவில்லையா? பிறகு ஏன் பொற்கொல்லனின் சந்தேகம் கோவலன் மீது விழவேண்டும்? இப்படி பின்னோக்கி பல ஆய்வுக் கேள்விகள் கேட்கலாம். அதை இப்போது அலசி ஒரு பயனுமில்லை.
வீடு வீடுவீடாய் சென்று சுவடிகளை யாசித்த ஐயர் இந்த இடைச் செருகலை செய்திருக்க முடியாது. தொகுப்பில் misplaced leaves இருக்கும், விடுபட்ட கொசுறு உதிரி ஓலைகள் எந்த சுவடியில் வரும் என்று ஆராய்வதே கஷ்டம். பிறகு பிற்சேர்க்கையில் விடுபட்டதை கோர்த்து இருக்கலாம். ஆக பல நூற்றாண்டுகளுக்கு முந்தய செல்லரித்த சுவடியில் செருகியது யார் என்பதை கண்டுபிடித்து என்ன ஆகப் போகிறது?
விஸ்வ+த்விஜ பிராமண குலத்தில் மட்டுமல்ல, எல்லா குலத்திலும் யோக்கியர்களும் திருடர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.. சுவடிகளில் ரிஷி மூலம் நதிமூலம் கண்டறிய முடியாது.. வால்மீகி, தொல்காப்பியர், கம்பர், ஒட்டக்கூத்தர், இறையனார், சேக்கிழார், பாடல்களிலேயே இடைசெருகல் உள்ளதே. ஆக, நடந்த உண்மை என்ன என்பது இளங்கோவுக்கும் உவேசா ஐயருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.
இலக்கிய பக்கங்கள் எல்லா பிரிவினர்களையுமே உயர்த்தி தாழத்தி சொல்லும். தொல்காப்பியத்தில் வடமொழி மேற்கோள் வருகிறது, பைபிள் Old testament ஹிந்துமத கொள்கைகள் வருகிறது, திருக்குறளில் சைவ சித்தாந்தம் வருகிறது, கந்தர் அனுபூதியில் 50 பாடல்களுக்குமேல் செருகல் என்கிறார்கள், பல சித்த நூலிலும் குழப்பம் வருகிறது, வழக்கு போட்டு இப்படி எல்லாவற்றையும் திருத்துவது சாத்தியமாகுமா? மக்களின் மூளை ஏன் விபரீதமாக செயல்படுகிறது என்று தெரியலை.
'நாட்டாமை பாட்டை மாத்தி எழுது'னு சொல்லிகிட்டே இருந்த எப்படி சாத்தியம்? சித்தர்கள் அனேகம்பேர் ஆச்சாரிகள் என்பதால் விஸ்வகர்மாவினர் சித்தர்கள் ஆகிவிட்டார்களா? பொற்கொல்லன்தான் திருடன் என்பதால் ஆச்சாரிகளுக்கு தலைக்குனிவு வந்திடுமா? இளங்கோவடிகள் கதையை அப்படித்தான் கொண்டு சென்றுள்ளார். இலக்கிய கதையை அத்தோடு விட்டுடணும். இதையெல்லாம் பெரிதுபடுத்தக் கூடாது. சிலம்புதானே இந்த காப்பியத்தின் மூல காரணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக