என் நண்பரின் அண்டை வீட்டு மாடித் தோட்டத்தில் துளசி, கற்பூரவல்லி, திருநீற்றுப்பச்சிலை, கரிசாலை, கற்றாழை, என அநேகமும் தொட்டியில் வளர்ந்துள்ளன. நேற்று அவ்வீட்டிலிருந்து சண்டையிடும் தொனியில் ஒரு மூதாட்டியின் குரல் பெரிதாகக் கேட்டது.
“எதுக்கும் கையால ஆகலைனா என்ன அர்த்தம்? ஒரு விஷயத்தைச் சொன்னா எதையும் நினைவுல வெச்சிக்கறதில்லை. எந்தவொரு முயற்சியும் பண்ணாமலே எதுவும் வரலனா என்ன அர்த்தம்? வேளா வேளைக்கு ஆக்கிப்போட்டா நல்லா திங்கத் தெரியுதில்ல?” என்று உரக்க யாரையோ திட்டிக்கொண்டிருந்தாள்.
சுயமுன்னேற்றம் தன்னம்பிக்கை ரீதியில் வசனங்கள் இருக்கவே, வேலைக்குப் போகாமல் உழைக்கத் தயாராக இல்லாமல் அக்குடும்பத்தில் யாரோ இருப்பார் போல, அவருக்குத்தான் அந்த மூதாட்டி வசைகளைப் பாடி புத்தி சொல்கிறாள் என்று நினைத்துக் கொண்டேன்.
“எனக்குக் கெட்டகோவம் வந்திடும்... முக்குங்க... முயற்சி பண்ணுங்க..” என்று கிழவி அதட்ட,
“வரலையே .. நான் என்ன பொய்யாடி சொல்றேன் ...?” என்று வயதான கிழவரின் குரல் குளியலறையிலிருந்து பதிலளித்தது.
அப்போதுதான் அங்கு நடப்பது என்னவென்று எனக்குப் புரிந்தது. என் நண்பர் விளக்கினார்.
“அந்தப் பெரியவருக்கு யாரையும் நினைவுல இல்ல ... நடக்கவே பயப்படுவாரு... உடம்புல நீர் உப்பு எல்லாம் அதிகமா இருக்கு. மருந்துலதான் ஓடுது. வெளியே நடமாட்டமில்லாததால மலச்சிக்கல். தினமும் அந்தப் பெரியம்மா இவரோட போராடுறது அக்கம்பக்கத்து வீடுகளுக்கே கேட்கும். இவரோட பேரப் பசங்களே கண்டுக்க மாட்டாங்க. வயசாகி, நடமாட்டமில்லாம போய் ஞாபக மறதியும் வந்துட்டா ... எல்லாருக்கும் கஷ்டம்தான்!” என்றார்.
அதோ அங்க பால்கனி தொட்டில திருநீற்றுப்பச்சிலை (சப்ஜா விதை) ஜோரா வளந்திருக்கு. அந்த விதைகளை ஒரு ஸ்பூன் ராத்திரி ஊரப்போட்டு காலையில் குடிச்சாலே போதும். ராத்திரி தூங்கப்போகும்முன் ஒரு சிட்டிகை திரிபலா சூரணம் போட்டுக்கிட்டு அரை டம்பளர் பால் குடிச்சாலே போதும். அந்தப் பாட்டி போராடவே வேண்டாம். இத்தனைச் செடிகள் இருக்கு ... பின்ன எதுக்காக இதெல்லாம் வெச்சிருக்காங்களோ? என சொன்னேன்.
முயற்சி செய்ய வேண்டுமானால் உந்துசக்தி வேண்டும். அது இல்லாவிட்டால் எந்த முயற்சியும் பலனளிக்காது. முயற்சி என்பது உள்ளிருந்து தானகவே வெளிப்பட வேண்டும். முக்கினால் பைல்ஸ்தான் வரும். அதன்பின் அப்பெரியவர் வட்டியும் முதலுமாக கல்லாவிலிருந்து சில்லறையைக் கொட்டினாரா என்ற விவரம் தெரியவில்லை.
காட்சியின் கண்ணோட்டாத்தில் பார்க்காமல் கேட்டால் மூதாட்டியின் பொதுவான அறிவுரை அப்பெரியவருக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே பொருந்தும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக