'சித்தர்களின் அறிவியல் பங்களிப்பு' (வெளியீடு: விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோயம்புத்தூர்) என்ற என் பழைய நூலிலிருந்து ஒரு சுவாரசியமான பகுதியை இங்கே பதிவிடுகிறேன்.
வேட்டு வைக்காமல், துளைகளிட்டுப் பிளக்காமல் ஒரு குன்றைத் தகர்க்கவோ குடையவோ சித்தர்கள் திறன் பெற்றிருந்தனர். மிக இறுக்கமான அணு கட்டமைப்பு கொண்ட எப்படியாகப்பட்ட பொருளையும் வலுவிழக்கச் செய்துள்ளனர். பூம்பாறை/ சதுரகிரியில் பூநீறு மற்றும் இதர பாஷாணங்களை போகர் சேகரித்தார். அப்பகுதியில் சிறிய/ பெரிய வட்டமான துளைகள் 1 அடி முதல் 3 அடி விட்டமுள்ள குழிகள் நேர்த்தியாக உள்ளதைக் காணலாம். இதில் ரசவாதம் செய்யத் தேவையான வெவ்வேறு பாஷாணங்களைச் சுத்தி செய்து வைக்கவும் கற்பாறை சேமிப்புக் கிடங்காகவும் காலாங்கி /போகர் உபயோகித்தனர். இத்தனை வட்டமான குழிகளை எப்படித்தான் வெட்டினரோ? அக்காலத்திலேயே லேத்/ டைமண்ட் கட்டிங் டூல்ஸ் போன்ற நவீன உபகரணங்கள் இருந்தனவா என்ற சந்தேகம் உங்களுக்கு எழும்.
நீர், கல்லுப்பு, கரியுப்பு, வெடியுப்பு, நவச்சாரம், அன்னபேதி, மலைபேதி, மாங்கிசபேதி, கல்நாதம், கல்மத்தம், அரப்பொடி, கற்காந்தம், சிங்கிட்டம் ஆகிய 13 சரக்கு வகைகள் சம அளவு நிறுத்தி நன்றாகப் பொடித்துக் கொண்டு, பின்னர் அவற்றைப் பெரிய பாண்டத்தில் போட்டு அத்துடன் யானைப்பரி கந்தம் விட்டு, புலிக்கரடி ரத்தம் விட்டு, அத்துடன் கொள்ளு அவித்த நீரையும் விட்டு, கை படாமல் நாவற் மரத்தின் கம்பால் நன்றாகக் கிண்டி, இந்தக் கலவையை வெயிலில் வைக்க நன்கு தெளிந்து விடுமாம். (யானை-குதிரை, புலி-கரடி ஆகியவற்றின் ரத்தம் சேகரிக்கக் காட்டு மிருக வேட்டைக்குப் போனார்களோ என்று நினைக்க வேண்டாம். ரத்தம் என்ற பெயருடன் பாஷாணங்கள் உள்ளதைப் பற்றி சித்தர் பாடல் சொல்கிறது. மிருகங்கள், பட்சிகள் பெயர் கொண்ட நிறைய பாஷாணங்கள் உண்டு.)
பாறையில் குழியோ/குகையோ வெட்ட வேண்டிய இடத்தில் அளவு குறித்துக் கொண்டு இந்தத் தெளிந்த திரவத்தை ஊற்ற வேண்டும். அப்படி ஊற்றியதும் ஒரு சாமத்திற்குள் ஊற்றப்பட்ட அப்பகுதியானது இளகிப் பொங்கி பொலபொலவென உப்பைப்போல கசிந்து உருகும். இப்படியாக தேவையற்ற கற்பாறைகளைக் குடைந்து வெட்டியெடுக்க வேண்டும். குகையின் அளவு சரியானது என்று தோன்றியதும், தேன்-தண்ணீர்-பால்-சிறுகரந்தை சாறுகளைச் சம அளவில் சேர்த்து குழியை/குகையை நன்றாகத் தேய்த்துக் கழுவிவிட்டால் கொடுமையான அந்த உவர் கசிவு தன்மை நீங்கிடும். கைகளுக்கும் உளிக்கும் அதிக வேலை தராமல் மிகச் சுலபமாகப் பாறைகளைப் பேதிக்கச்செய்து பெயர்த்தனர்! செதுக்கபட வேண்டிய பாறைகள் ஒரே மாதிரியான அடர்த்தி இருக்காது. சில சமயங்களில் மெல்லிய உளி பட்டு அது பின்னப்படுவதுண்டு. அதுபோன்ற தருணங்களில் இந்த யுக்தியைக் கையாண்டனர்.
இப்படித்தான் நுணுக்கமான குடைவரை கோவில்களையும் சிற்பங்களையும் அமைத்தனர். அக்காலத்திலே ஸ்தபதிகள் இந்த நுட்பத்தைச் சிற்பங்கள் செதுக்கவும் கட்டடவியலிலும் பெருமளவில் பயன்படுத்தினர். அதிக உஷ்ணத்தோடு தாக்கும் மின்னலுக்குக் கற்பாறைகளை உருக்கிடவும், பல கனிமங்களின் கலவையால் அமையப்பெற்ற அதன் அணுக் கட்டமைப்பைக் குலைத்து வடிவத்தையே மாற்றவும் சக்தி உண்டு என்றால் பாருங்களேன்!
அண்மைக்காலமாக திரு.பிரவீன் மோகன் என்பவர் வரலாற்றுப் பாரம்பரிய கோவில்களுக்குச் சென்று அங்குள்ள கட்டடவியலை ரசித்துக் காணொளி பதிவேற்றி வருகிறார். அதில் அவர் சில சூட்சுமமான சந்தேகங்கள் எழுப்புவதைக் கண்டேன். பெரும்பாலான சந்தேகங்களுக்கு அவர் விடைகாண வேண்டுமென்றால் நம் சித்தர் நூல்களைப் படித்து ஆராய்ந்தாலே போதும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக