நமக்கு யாரேனும் தீவினை செய்திருந்தால் அது உடனே நமக்கு உணர முடியாமல் போகலாம். படிப்படியாக வாரங்களிலோ/ மாதங்களிலோ அது வேலை செய்ய ஆரம்பித்து நம் கெடு தசா-புக்தி சுற்று வரும்போது வினையின் உச்சம் தெரியும். அஷ்டகர்ம வினைகளில் ஏதேனும் ஒன்று நமக்கு யாரேனும் செய்திருந்தால் அதிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?
அனுதினமும் பஞ்சாட்சரம் / ஷடாட்சரம் ஜெபித்து வந்தும், முடிந்த வரை அனைத்து ஜீவராசிகளுக்கு உணவளித்தாலே போதும், நம்மை பீடித்த செய்வினைகள் போகும் என்று பலர் கருதுவதுண்டு. இது மட்டுமே போதும் என்றால் பாதிப்புக்குள்ளான அனேகர் தக்க தீர்வு காண பல இடங்களுக்குப் படையெடுக்க வேண்டாமே. ஆனால், அது அப்படியல்ல! சித்தர்கள் அளித்த உபாயத்தைக் கையாண்டாலே போதும். நேற்றுதான் ஒரு நண்பர் இதுபற்றி என்னிடம் கருத்து கேட்டார். அவருக்கு நான் சொன்னதை இங்கே பதிவிடுகிறேன்.
௧) இயன்ற வரை நாம் யாருக்கும் மனத்தால்/ வாக்கால்/ உடலால் தீங்கு செய்யாமல் இருக்க வேண்டும்.
௨) நாள்பட்ட உடல்/மன ரீதியான பிரச்சனைகளுக்கு யாரையேனும் சந்தேகத்துடன் பார்த்தாக வேண்டிய அவசியமில்லை. எப்போதும் செய்வினை நினைப்பாகவே இருந்தால் அதுவே மனநோயாக மாறும்.
௩) தினமும் உடற்பயிற்சி/ பிராணாயாமம் மற்றும் தியானம் செய்யவேண்டும்.
௪) திருநீறு பூசி கிழக்குமுகம் அமர்ந்து தினமும் அந்தி-சந்தி மந்திரங்கள் ஜெபிக்க வேண்டும்.
௫) செவ்வாய் /வெள்ளி கிழமைகளில் விளக்கேற்றிய பின் தூபம் போடும்போது வெண்கடுகு ஒரு சிட்டிகை அதில் போடவும். வீடு முழுவதும் அப்புகையானது தீவினைகளை, எதிர்மறை சக்திகளை விரட்டும்.
௬) தினமுமோ /வெள்ளிக் கிழமையிலோ காலையில் வீடு முழுதும் கோமியம் தெளிக்கவும். தினமும் காலையில் வீட்டு வாயிற்படியில் மஞ்சள் நீர் தெளிக்கவும்.
௭) வீட்டு நிலைப்படி வாசக்கால் உள்ளே நுழையும்போது மேலே ஒரு சிறிய கருடக்கிழங்கைக் கட்டித் தொங்க விடவும். அது மாதக் கணக்கில் எல்லா திருஷ்டி/தீவினைகளையும் வீட்டுக்குள் அண்டாமல் தடுக்கும். வெகு சீக்கிரத்தில் அது காய்ந்துபோனால், தாக்குதலில் அடிவாங்கியது என்பது பொருள். அப்போது மீண்டும் புதிதாக ஒன்று வாங்கிக் கட்டவும்.
அ) வீட்டின் உள்ளே நான்கு மூலைகளிலும் (வடகிழக்கு, வடமேற்கு, தென்மேற்கு, தென்கிழக்கு) தரையில் சிறிய பிளாஸ்டிக் கிண்ணத்தில் கல் உப்பு வைக்கவும். வாரமொரு முறை சனிக்கிழமை காலையில் அதை பாத்ரூமில் கொட்டிவிட்டுப் புதிய உப்பு வைக்கவும்.
௯) வீட்டை இருவேளையும் பெருக்குங்கள். எல்லா இடங்களிலும் தலைமுடி, அழுக்கு துணிகள் இருந்தால் அது தரித்திரம். வாசலில் போட்ட கோலம் பூசிய மஞ்சள் மங்களகரமாக இருக்கட்டும்.
ய) எப்போதும் அழுகை, சாபம், ஒப்பாரி, சண்டை, வசனங்கள் நீங்களும் பேசவேண்டாம், டிவி சீரியலிலும் பார்க்கவேண்டாம். அந்த மாதிரி வசனங்கள் வந்தால் mute செய்திடுங்கள். விளக்கு வைக்கும் நேரத்தில் அதுவும் கூடாது. சூரிய அஸ்தமன காலத்தில் மனமும் உடலும் பாதிக்கும்.
யக) திருநீறணிந்து காலை /மாலை ஒரு பதினைந்து நிமிடமாவது பதிகம்/ பாசுரம்/ சஷ்டி கவசம் என எதையேனும் பாராயணம் செய்யுங்கள். உங்கள் இஷ்ட தெய்வத்தை/ குலதெய்வத்தை நினைத்து மந்திர உருவேற்றுங்கள். சித்தர்களை/ மஹான்களை நினைத்திடுங்கள்.
ய௨) எறும்பு, காக்கை, நாய், பசு ஆகியவற்றுக்கு உணவு படைத்திடுங்கள். அதுவே லட்ச போஜனத்திற்கு சமம்.
ய௩) சக்திக்கேற்ப ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள் அல்லது அதற்கான நிதி தாருங்கள். இவை அனைத்துமே ஊழ்வினைகளையும் செய்வினைகளையும் துடைக்கும்.
இவை எல்லாமே உங்களுக்கு ரட்சையாக இருந்து காக்கும் என்பது உறுதி. செய்வினை /பில்லி சூனியம் என்று எதுவுமே இல்லை நம்பவேண்டாம் என்று சொல்லித் திரிய வேண்டாம். அது அவரவர் தனிநபர் கொள்கையாக இருந்துவிட்டுப் போகட்டும். அவை பொய் என்றால் அஷ்டகர்ம வினைகளுக்கான உபாயங்களை உரைத்த அகத்தியர், காலாங்கி, போகர், புலிப்பாணி முதல் ஆதிசங்கரர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், வரை எல்லோருமே பொய்யுரைத்ததாக ஆகிவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக