‘ராசிக் கல் மோதிரம் பலன் தருமா, அதை நம்பி அணியலாமா?’ என்று ஒரு நண்பர் சந்தேகம் கேட்டிருந்தார்.
ஒருவருடைய ஜாதகத்தில் நடப்பு திசை-புக்தி அடிப்படையில் ஜோசியர் பலவீனமான சில கோள்களின் சக்தியைக் கூட்ட வெவ்வேறு நிறத்தில், கேரட்டில் ஓபன் கட்டிங் வைத்த வெள்ளி-தங்கம் மோதிரம் அணியச் சொல்வதுண்டு. ஆனால் அந்த ஜாதகருக்கு அவருடைய மூதாதையர்களின் வம்ச சாபம்/ ஊழ்வினை /தோஷங்கள் நீங்கியதா என்று சொல்லமாட்டார். அவை எல்லாம் சுத்தமாக நீங்காமல் என்னதான் விலையுயர்ந்த மோதிரக்கல் அணிந்தாலும் அது வேலை செய்யாது அல்லது எதிர்மறையாக வேலை செய்யும். வம்ச சாபங்களை குலதெய்வம் எப்போது நீக்கி அருள்வாளோ அப்போது இதுபோன்ற கற்கள் பலன் தரும். ஜோசியர் கணித்துச் சொன்ன காலகட்டம் முடிந்தும் யோகம் வராதபோது பொறுமையிழந்து பரிகாரம் / ராசிக்கல்லை நாடுவோர் அதிகம்.
தேகத்தில் சில நோய்கள் இருந்து அதற்கான மருந்துண்ணாமல் மேலோட்டமாக உடலின் சக்தியைக்கூட்ட சப்ளிமென்ட்ஸ் எடுத்துக் கொண்டால் ஒரு பலனும் இருக்காது. சில சமயம் உடல் இளைக்கும். ஓடியோடி பரிகாரங்கள் செய்தும் ஏற்றம் தெரியாமல் இருக்கும். அதுபோல்தான் இதுவும். பெரிய அளவில் திகிலான வம்ச வினைகள் எதுவும் இல்லாதபோது மோதிரம் போட்டுக்கொண்ட ஒரு மண்டலத்திலேயே ஏற்றம் காணலாம். ஆனால் இது எல்லோருக்கும் பொருந்தி அமையாது. அதுபோல் சாபம்/ பிராரப்தம் எதுவும் இல்லாமல் திருப்திகரமாகவும் சுமுகமாகவும் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கும் ஒருவருக்கு அவசியமில்லாமல் மோதிரக் கல் சிபாரிசு செய்தால் அதனால் பலன் இருக்காது அல்லது அது எதிர்மறையாக வேலை செய்யலாம்.
ஆகவே ஜோதிடர்கள் தங்களிடமோ தாங்கள் சொல்லும் கடையிலோ கற்கள் பதித்த மோதிரம் வாங்கச் சொன்னால், நீங்கள் இருமுறையாவது யோசிக்க வேண்டும். நீங்கள் போடும் பிரத்தியேக மோதிரக் கல்லுக்கு சக்தியூட்டுவது கோள்கள், கோள்கள் யோகத்தைத் தரலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வது உங்கள் குலதெய்வம் என்பதை மறவாதீர். அணிந்தபின் வேண்டாமெனில் மோதிர உலோகத்தை விற்றுக்கொள்ளலாம் ஆனால் கற்களுக்கு ரீசேல் மதிப்பு இல்லை. ராசிக்கல் வாங்கும்முன் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு பூ கட்டிப் போட்டுப்பார்ப்பது உசிதம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக