சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நாகபட்டினம் பகுதியில் மூன்று விதமான பௌத்த மார்க்கங்கள் பின்பற்றப்பட்டன என்று பழைய திபெத் மற்றும் சோழ ஆவணங்கள் மூலம் அறிகிறோம். இதில் எனக்கு எப்போதுமே சந்தேகம் இருந்துள்ளது. என்னுடைய பழைய பதிவில் காஞ்சி பௌத்த விஹாரம் பற்றி விவரித்தபோது, திருமழிசை மருந்தீசர் கோயிலுக்குள் தூணின் உத்தரத்தில் விநாயகர் சிலை அருகே ஒரு புத்தர் சிலை பூணூலோடு காட்சி தந்தது. அதற்கு எவ்விதத்திலும் மஞ்சள் குங்குமம் பூசப்படாமல் அது அதுவாக இருந்தது. அங்கே இந்தச் சிலை இருப்பது ஆச்சரியம் என்று அப்பதிவில் சொல்லியிருந்தேன். அது உங்களுக்கு நினைவுள்ளதா?
முதல் மார்க்கம் சைவ நெறியை அடியொட்டியும், இரண்டாவது சித்தரிஷிகள் பயிலும் யோக மார்க்கம் என்பதும், மூன்றாவது மார்க்கம் குருமார்கள்/ஆசான்கள் போதிப்பது என்பதாகும். இதைப்பற்றி வீரசோழியம் என்ற பழைய தமிழ் இலக்கண நூல் குறிப்பிட்டுள்ளது. நாகபட்டினத்தில் சூடாமணி விஹாரம் கட்டவும், காயாரோகணேஸ்வரர் சுவாமி கோயிலுக்கும் ஸ்ரீவிஜயா- சுமத்ராவின் மன்னன் பெரும் நிதி வழங்கினான் என்பது கல்வெட்டுச் செய்தி.
கடந்த 18 ஆம் நூற்றாண்டு வரை நாகையில் கடலிலிருந்து பார்த்தால் துறைமுகப் பட்டினத்தையொட்டி அடுக்கு தளங்கள் கொண்ட ஒரு நெடிய சீன கோபுரம் கம்பீரமாகத் தெரிந்தது என்று ஆங்கிலேயரின் ஏட்டில் பதிவாகியுள்ளது. கடந்த 19 ஆம் நூற்றாண்டில் சீன கோபுர இடிபாடுகளுக்கு அடியில் நிலவரையிலிருந்து முன்னூறுக்கும் மேற்பட்ட புத்த விக்ரகங்கள் கண்டெடுக்கப்பட்டன என்பது ஆவணத்தில் உள்ளது. அதில் சில சிலைகளில் சிகை பூணூல் விபூதி வசைக்கோடுகள் உள்பட எல்லாமே இருந்துள்ளது ஆச்சரியம். சிலவற்றில் நாமமும் உள்ளதைப் பார்க்கும்போது பௌத்தம் என்பது சைவ-வைணவ நெறிகளையும் ஒரு காலத்தில் கொண்டிருந்தது என்பது புரிகிறது. ஒரு வெண்கல புத்தர் சிலையின் கீழே ‘வாழ்க வளம்! ஆகம (நிகாய) பண்டிதர்களுக்கு முக்தி அருள வந்த (புத்த) நாயகரைப் போற்று’ என்ற வரிகள் பொறிக்கப்பட்டுள்ளதாக அருங்காட்சியக ஆவணம் சொல்கிறது.
இன்றும் பௌத்த கொள்கைகளைப் போற்றும் மஹாயான மஹாபரிநிர்வாண சூத்திரம் நூலில் ‘ஆத்மனே தத்வம் (மெய்), ஆத்மனே நித்யம் (முடிவற்றது); ஆத்மனே குணம் (ஒழுக்கம்), ஆத்மனே சாஸ்வதம் (அழியாதது), ஆத்மனே துருவம் ( நிலையானது), ஆத்மனே சிவம் (சுபம்)” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே சத்திய சாதாசிவமான நித்திய சிவத்தைப் போற்றும் விதமாகவே அந்நூல் இருந்துள்ளது.
போகர் தன்னுடைய பெருநூலில், தன் குரு காலாங்கிநாதர் மேருவில் தசாவதார ரிஷிகளைத் தரிசிக்கும்போது பலராமரிஷிக்கு அடுத்தபடியாக பௌத ரிஷியாரிடமும் ஆசிபெற்றதாகச் சொல்லியுள்ளார். இராவணன் தான் புத்தபிரானாக அவதரித்தவர் என்று சொல்லும் சில நூல்களும் உண்டு. இலங்கையில் இது பெரிதும் நம்பப்படுகிறது. போகர் சொன்ன கூற்றுக்கும் ஈழ மக்களின் நம்பிக்கையும் ஒற்றுமை இருப்பதாகவே தெரிகிறது. ஆயினும் இது ஆய்வுக்குட்பட்டது.
நாகை என்றாலே காயாரோகணசுவாமி, நீலாயதாக்ஷி, தேவாரப் பதிகம், வேளாங்கண்ணி, நாகூர் தர்கா, கோரக்கர் சமாதி, புயல், வெள்ளம் என்பவையே நம் நினைவுக்கு வரும். ஆனால் நாகை @ நாகபட்டினம் அக்காலத்தில் உரகை எனப்பட்டது என்பதை கோரக்கர் தன் சந்திர ரேகையில் சொல்கிறார். அப்பகுதிக்கும் நாகலோகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது திண்ணம். அதனால்தான் நம் தக்ஷண பூமிக்குப் பின்புறமுள்ள தென்னமரிக்க தேசப்பகுதியில் உருகுவே /பராகுவே என்பவை மகாபலி சக்கரவர்த்தியின் பாதாள லோகமாகவே அந்நாளில் கருதப்பட்டது. பெயரில் ராகு என்பது இணைந்து வரும். ஆக, உரகையில் சிவபௌத்த விஹாரம் இருந்தது என்ற விஷயம் இக்காலத்தில் புதுமையாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக