திருமுறைகளைச் சற்றே ஆழமாகத் துழாவிப் பார்த்து, அக்காலத்தில் கோயிலில் நிலவிய சம்பிரதாயங்கள் பற்றி அப்பர் சுவாமிகள் சொன்ன மெய்யான கருத்து என்ன என்பதை அறிய விழைந்தேன். அதை எல்லாம் படித்து இங்கே எளிய தொகுப்பாக இட்டேன்.
நான்கு வேதங்களும், ஆறு அங்கங்களும், பதினெட்டுப் புராணங்களும், இருபத்தெட்டு ஆகம நூல்களும், இன்ன பிற நூல்களுமாய் அமைந்த உருவமே தில்லை அம்பலமாகும். "ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்" என்றார் அப்பர் பெருமான்.
"வெந்தநீறு அருங்கலம் விரதிகட்கெலாம்
அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆறங்கம்
திங்களுக்கு அருங்கலம் திகழும் நீள்முடி
நங்களுக்கு அருங்கலம் நமச்சிவாயவே"
இதன் பொருள், விரதம் இருக்கும் சான்றோர்களுக்குத் திருநீறும், அந்தணர்களுக்கு நான்மறை ஆறங்கம் ஓதுதலும், பிறைக்குச் சிவபெருமானுடைய நீண்ட அழகிய சடையும், எம்மைப்போன்ற அடியார்களுக்குத் திருவைந்தெழுத்தும் சிறந்த அணியாகும்.
வேதங்களை ஓதும் அந்தணர்கள், அந்த வேதங்களைக் காக்கும் ஆறு அங்கங்களையும் நன்கு அறிந்தவர்களாக முறையாக ஓத வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக, மறைகளுடன் அங்கங்களையும் சேர்த்து அருமறை ஆறங்கம் என்று அப்பர் பெருமான் கூறியுள்ளார். வேதத்தின் ஆறு அங்கங்கள், சிட்சை, கல்பம், வியாகரணம், நிருத்தம், சந்தம், சோதிடம் ஆகியவைதான்.
திருமுறைக்குத் தவறாகப் பொருள் கூறும் புலவர்களுக்குச் சிவஅபராதம் உண்டு என்றும் அறிய முடிகிறது. வெளிப்படையாகச் சொல்லவேண்டிய சொல்லின் பொருளை வேண்டுமென்றுத் திரித்துச் சொன்னால் அது மீளா பாவம்.
'விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்' என்ற பதிகம் பாடுகையில், சனகாதி முனிவர்கள் நால்வர்க்கு அவன் நான்கு வேதங்களை வெளிப்படுத்தி அருளினான் என்பதாகச் சொல்கிறார்.
அதுபோல் அவர் குறிப்பிட்ட ஆகமங்களும் கிரியைகளும் சைவ சமயத்தின் அடிப்படை நூல்களாகும். சிவபெருமானால் அருளிச் செய்யப் பெற்ற இருபத்தி எட்டு ஆகமங்கள் என்ன? அவை:
கௌசிக முனிவருக்கு உபதேசிக்கப்பட்டவைகள்
1. காமிகம் 2. யோகஜம் 3. சித்தியம் 4. காரணம் 5. அஜிதம்.
பரத்வாஜ முனிவருக்கு உபதேசிக்கப்பட்டவைகள்
1. தீப்தம் 2. சூட்சம் 3. சகஸ்ரம் 4. அம்சமான் 5. சுப்ரபேதம்
கௌதம முனிவருக்கு உபதேசிக்கப்பட்டவைகள்
1. ரௌரவம் 2. மகுடம் 3. விமலம் 4. சர்வோத்தரம் 5. விபவம்
அகஸ்திய முனிவருக்கு உபதேசிக்கப்பட்டவை:
1. புரோத்கீதம் 2. வீரம் 3. பாரமேஸ்வரம் 4. கிரணம் 5. பேதம் 6. வாதுளம் 7. விஜயம் 8. நிசுவாசம் 9. சுவாயம்புவம் 10. அனலம் 11. உத்ர காமீ 12. பூர்வ காரணா 13. லளிதம்
இப்படியாக ஆகம முறையின்படி கட்டப்பட்ட கோவில்களில் சிலா பிரதிஷ்டை, தினசரி பூஜை, திருப்பணிகள், கும்பாபிஷேகங்கள் என எல்லாவற்றையும் செய்தனர். முழுக்க ஆகம விதிகளின்படி அந்நாளில் ரிஷிகள், அரசர்கள், ஏனைய பெரியோர்களால், சிற்ப சாஸ்திரத்தின் வழி வந்த ஸ்தபதிகள் எனச் சேர்ந்து திருக்கோயிலுக்குத் தொண்டாற்றினர். அருளப்பட்ட ஒவ்வொரு பூசை/ஆகமம் கிரியைகளுக்கு ஏற்ப தொடர்பின்றி மந்திரங்கள் ஓதினாலும் சிவ அபராதம் உண்டு என்பதும் தெரிகிறது.
ஆகமங்கள்படி வேத மந்திரங்ளையும் உபசாரங்களையும் இறைவனுக்குச் செய்யவேண்டும் என்றும், அதை அனுபவித்து ஏற்கும் இறைவனின் பெருமைகளையும் திருவிளையாடல்களையும் திருமுறைப் பதிகங்களால்தான் பண்ணிசைத்துப் புகழமுடியும் என்பதையும் அப்பர் அடிகள் உரைத்துள்ளார். அப்பர் சுவாமிகள் ஸ்ரீருத்ரம் மற்றும் வேதமந்திரங்களை அறிந்திருக்கும் சாத்தியமுண்டு என்பது அவருடைய பதிகங்களில் இடம்பெறும் சொற்றொடரில் காண முடிகின்றது. ஆகவேதான் வேத ஆகம மந்திரத்தை மரபு வழுவாமல் தமிழில் மொழியாக்கம் செய்ய முடியாது என்பதை அவருடைய 4,5,6 ஆகிய திருமுறைகளிலுள்ள சில பதிகங்கள் உணர்த்துகின்றன. அதில் வேள்வியொடு வேத கோஷமும் அதன்பின் பண்ணிசையும் உண்டு என்பதைத் தெளிவாக்கியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக