மூலமரபு சித்தர்களின் பரம்பரையில் எண்ணற்ற சீடர்கள் இடம் பெறுவர். சீடர்களே தங்கள் குருமார்களைத் தேர்ந்தெடுக்கிறார்களா? இல்லை. குருவானவர் தன்னுடைய மரபின் வழியில் வரும் சீடனானவன் அகத்தியர் வகுத்த தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் என்ற கோட்பாடுகளை விதிப்பார். அதன்படி இருக்கப் பெற்றால் யோகம், ஆகாமம், வாதம், கற்பம், ஜாலம், வைத்தியம், அஷ்டமாசித்தி, சமாதி மற்றும் நூலியற்றும் புலமை என பலவற்றையும் கற்றுத் தருவார்.
அதில் பல விஷயங்கள் மறைப்புமிக்க ரகசியமாகவும், வெட்டவெளிச்சமாக்கிய சங்கதிகளும் இருக்கும்.
மூல மரபின் சிஷ்ய பரம்பரையில் வரும் சித்தர்கள் யார்யார் என்பதை அகத்தியரோ, புசுண்டரோ, திருமூலரோ, காலாங்கிநாதரோ, போகரோ ஓரளவுக்கு உரைத்திருப்பார்கள். ஆனால் எல்லா பெயர்களும் இருக்கும் என்று சொல்லமுடியாது. இன்னாருக்கு இவர் இத்தனையாவது சீடர் என்பதை வேறொருவர் தன்னுடைய நூலில் புலப்படுத்தியிருப்பார். இது ஒரு கண்ணாமூச்சி விளையாட்டாகத் தொடர்ந்து ஓடும்.
குரு-சீடர் உறவு என்பது தகப்பன்-மகன் உறவுபோல் இருந்தது என்றால் மிகையில்லை. பூட்டன், பாட்டன், மகன், பேரன், கொள்ளுப்பேரன் என்றபடி சீடர்கள் தம் உறவு நிலைகளைப் பெரிதும் மதித்தனர். அப்படியொரு செய்திதான் இங்கே அம்பிகானந்தர் அருளிய ஞானோபதேசம் நூலிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளேன்.
‘பாட்டர் திருமூலருக்கு மூன்றாம்பேரன்
பாங்கான போகருக்கு நாலாம்பிள்ளை
தாட்டிகமாய் அம்பிகா னந்தனென்பேர்
தாயான அம்பிகையைத் தானேபோற்றி’
மூலமரபில் அகத்தியர் வழியில் திருமூலர் காலாங்கி போகர் வரிசையில் எண்ணற்ற சீடர்கள் வந்தனர். போகர் தன்னுடைய ஆத்மார்த்த சீடராகப் புலிப்பாணியை வைத்தார். அவ்வரிசையில் அடுத்ததாகக் கருவூரார் கொங்கணர் அம்பிகானந்தர் இடைக்காடர் என்று சிஷ்ய பரம்பரைப் பட்டியல் நீளும். இவர்களுடன் நாகராஜன் (எ) பாபாஜியும் சீடராக இருந்தார் என்பது நாம் அறிந்ததே.
அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் பின்பற்றும் மடங்கள், சைவ சமய ஆதீனங்கள் போன்றவற்றில் பெரும்பாலும் குரு பரம்பரை இருக்கும். ஒருவருக்குப் பின் இன்னொருவர் மடாதிபதியாக பொறுப்பேற்பார். ஆனால் சித்த வம்சத்தில் போகர் காலத்திலேயே குருமார்கள் அனைவரும் சமாதியில் நிலைத்தும், வெளியே வந்தும் இயல்பாகப் பணிகளை மேற்கொண்டனர் என்பது விளங்குகின்றது.
கலியுகத்தின் பிரதம பாதத்தின் பிற்பகுதியில் அநேக சித்தர்கள் நீண்ட சமாதிக்குப் போனதால் தலையாய சீடர் வம்சத்தினரால் குருவின் ஆதீனம் நிறுவப்பட்டு அவ்வழியில் எண்ணற்றோர் பீடாதிபதிகளாக வந்து போயினர். இன்றும் தொடர்கின்றனர். தமிழகத்தில் இன்றைக்கு மூத்த சித்தர்களின் பெயரிலுள்ள பல ஆதீனங்களின் சிஷ்ய பரம்பரை வம்சாவளியினரே பீடாதிபதியாக உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக