நாளை விடியும்போது சூரிய கிரணங்களைக் காண்போம் என்ற உறுதியான நம்பிக்கையுடன் இன்றிரவு உறங்கப் போனாலும் காலையில் நிச்சயம் உயிருடன் எழுவோமா என்பது நம் கையிலில்லை. ஆகவே காலம் தாழ்த்தாமல் முக்கிய பணிகளை இன்றே இக்கணமே செய்து முடிக்க முடிந்தால் நன்று. நேர நிர்வாகம் மட்டுமே போதாது, நமக்கு மூச்சையும் நிர்வகிக்கத் தெரிய வேண்டும்.
வெளியே விட்ட மூச்சை மீண்டும் உள்ளே வாங்காமல் போனால் .... சிவம் சவம் ஆகும். சுவாசி வாசி என்று ஓடிய கால்கள் சிவசிவ என நின்று போகும். சிவனும் சக்தியும் ஒரேடியாக இந்த ஊனுடம்பு வீட்டைக் காலி செய்துகொண்டு புறப்பட்டு விடுவார்கள். குடியிருந்த தெய்வம் போனபின் ஐம்பூதம் இந்த பாழும் மண்டபத்தை இடித்துத் தள்ளிவிட்டுப் போய்விடும்.
ஆகவே சிவசக்தி குடியிருக்க நீண்ட கால லீஸ் பீரியட் போட்டால் ஆலகால கண்டன் தேகத்தைக் காப்பான். வாசியன் வாசித்துக்கொண்டு இருக்கும்வரை நாம் சுவாசித்துக் கொண்டு இருக்கலாம். திருச்சிற்றம்பலம்!
அதனால்தான் நம் சித்தர்கள் காயகற்பங்கள் உண்டு தம் தேகத்தை வலுவாக்கி, வாசி ஓட்ட மாத்திரையை அளவாகப் பூட்டி, சமாதியில் அமர்ந்து, தம்முள் அகத்தீயைக் கண்டுணர்ந்து, சச்சிதானந்தத்தில் லயித்து, சிவசக்தியை வேண்டிய காலம்வரை குடியிருக்கச் செய்தனர்.
போகர் தன்னுடைய நூலில் பூரக/கும்பக/ரேச்சக சுற்றின் மாத்திரைக் காலத்தை உரைக்கிறார். அதைப் படிப்போர், "சார், ஒவ்வொரு பாட்டுல ஒவ்வொரு மாதிரி இருக்கே? எந்த ratio வை எடுத்துக்கணும்?" என்று கேட்பதுண்டு.
இசையில், 1) சவுக்க காலம் (அ) கீழ்க்காலம், 2) மத்திம காலம் 3) துரித காலம் (அ) மேல்காலம் உள்ளதுபோல் இதற்கும் உண்டு. ஆக, சாதகரின் பயிற்சி நிலைக்கேற்ப மாத்திரையின் காலப்பிரமாண அளவை ஆசான்தான் தீர்மானிக்க வேண்டும். அதாவது அதிகமான மாத்திரை அளவு என்றால் மிக நீளமான ஓட்டம் (Advance level) என்பதைப் புரிந்து கொள்க.
உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன். மந்திராலய பிருந்தாவன சமாதியில் அமர்ந்த ஸ்ரீராகவேந்திரர் ஓட்டும் உள்மூச்சு அளவு நீண்ட நேரம் போனதைக் கணக்கிட்டேன். ஒரு சுற்றே தோராயமாகத் தொண்ணூறு நிமிடங்களுக்கு நீடித்தது. அதாவது ஒருநாளில் 12-14 வரை உள்மூச்சு ஓடினால் அதிகம். இதற்கு என்ன அர்த்தம்? ஒவ்வொரு ஆறாதார சக்கரத்திலும் ஹம்ச ஜெபம் சேதாரமின்றி நிலைத்து நடக்கிறது. திருமூலரும் இதைத்தான் சொன்னார், தில்லை அம்பலம் உணர்த்துவதும் இதுவே!
மாத்திரை அளவைக் கேட்கும்போதே நமக்கு மூச்சு வேகமாக ஓடும், நாடித் துடிப்பும் எகிறும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக