குரு பகவான் பெயர்ச்சி ஆகியுள்ளார். இவன் அவன் வீட்டில் உள்ளான், அவன் இவனைப் பார்க்கிறான், அது பகை வீடு, இது நட்பு வீடு, இவன் அங்கு மறைந்தான், என ஏதோவொன்று ஜெனனகால ஜாதகத்தில் இருக்கத்தான் செய்யும். அவரவர் ஜாதக கட்டங்கள் அனுகூலமாக உள்ளதா இல்லையா என்பதைப் பற்றி அறிந்துகொள்ளத் துடிப்பார்கள். பெயர்ச்சியின் பலன் சூப்பர்/ சுமார்/ மோசம் என்ற அளவில் ராசிகளை வகைப்படுத்தி டிவியில் வரும் ஜோதிட கணிதக்ஞர்கள் சொல்வது ஒவ்வொரு பெயர்ச்சிக்கும் வாடிக்கையாகிவிட்டது.
மெகா சீரியலுக்கு அடுத்தபடியாக ராசி பலன்கள் வரிசையில் நிற்கிறது. ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு, அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி, குரு பார்க்கக் கோடி நன்மை, என்பது ஜோதிட சொல்லாடல். தேவ குரு பார்க்காவிட்டால் தான் நாம் என்ன செய்ய முடியும்? இன்னும் சிலர் வேறுபாடு அறியாமல் ஆல் அமர்ந்த மேதா தட்சிணாமூர்த்தியையே வியாழ குரு நிலைக்குத் தாழ்த்துவர்.
குருவின் ஆசிகள் பூரணமாக இருந்தால் வம்சாவளியில் ஏற்றத்தைக் காட்டும். பூட்டனின் கல்வி/வாழ்க்கைத் தரத்தை விட பாட்டனின் நிலையில் முன்னேற்றம் உண்டு, பாட்டனை விட அப்பனின் நிலையும், அப்பனைவிட மகனின் நிலையில் உயர்வடைவது என்பது ஏற்றமான விஷயம். ஆனால் சில வம்சங்களில் இது நேர்மாறாக இருக்கும். நாங்கெல்லாம் வாழ்ந்து கெட்ட குடும்பம் என பீற்றிக்கொண்டு பழங்கதை அலசிப் பொழுதைக் கழிப்போருண்டு. ஞான சீலன் இருக்கும் இடத்தில் முகஸ்துதிக்குக் குறைவேயில்லை. ஆனால் பாட்டன் அளவுக்குப் பெயரன் ஏன் சோபிக்கவில்லை என்றால் வாங்கி வந்த வரம் அத்தனைச் சிறப்பானது என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கேற்றாற்போல் அந்த வம்சத்தில் சந்ததிகளை வளர்ப்பதும், ஞானம் புகட்டுதலும், நற்பண்புகள் விதைப்பதும் கீழ்த்தரமாக அமைந்து விடுவதுண்டு.
ஆகவே கிரகங்களின் பெயர்ச்சி என்பது அவ்வப்போது வந்துபோகும் நிகழ்வு. தினசரி பலன்களைப் பார்த்துவிட்டு அன்றாட பணிகளைச் செய்வோருண்டு. என்னத்தைச் சொல்ல? வாழ்க்கைப் பருவங்களில் அவையவை விதிப்படி நடந்துகொண்டுதான் இருக்கும். கிரகப் பெயர்ச்சியின் கெடு பலன்களின் தாக்கத்தைக் குறைக்கவும் அதைத் தாக்குப்பிடிக்கவும் அந்தந்த கிரகத்திற்குப் பிரீத்தி செய்வதும், குலதெய்வத்தை வேண்டுவதுமே சரியான தீர்வு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக