சந்தைத் தெருவில் நேற்று மாலை ஓர் இளம் பெண் அவளுடைய மகனுடன் நடைபாதை கடைக்கு வந்தாள். அவள் நாலு வீட்டில் வேலை செய்து குடும்ப பாரத்தைச் சுமக்கிறாள் என்பது அவளுடைய பேச்சில் தெரிந்தது. மஞ்சள் கிழங்கு மற்றும் கரும்பு விற்கும் இடத்தில் நின்றாள்.
“அம்மா, அம்மா இதோ கரும்பு.. எனக்கு முழு கரும்பு வாங்கிகுடு” என்றான் ஐந்து வயது மகன்.
“அண்ணே! முழு கரும்பு, மஞ்சள் கொத்து தோரணம் எல்லாம் எவ்ளோ?” என்று கேட்டாள்.
“மஞ்சள் கிழங்கு இருபத்தஞ்சு, கரும்பு அறுவது, தோரணம் பதினஞ்சு, பழம் கிலோ அம்பது” என்று பதில் வந்தது.
“அம்மா, இந்த கரும்புதான் வேணும்” என்று அச்சிறுவன் தானே பெரிய கரும்பு ஒன்றைக் கட்டிலிருந்து தேர்ந்தெடுத்தான்.
“அது வெல அதிகம்டா. அம்மா கையில் அவ்ளோ காசு இல்ல. மத்த ஜாமான் வாங்கணுமில்ல... இப்போ ஒரு துண்டு வாங்கித்தறேன்” என்று அவன் கோபிக்காதவாறு எடுத்துச் சொன்னாள்.
“ம்ம்.. போ.. என்ன ஏமாத்தர.. இதுதான் வேணும்” என்று அடம்பிடிக்க ஆரம்பித்தான்.
“டேய், உன் அப்பனை வேலைக்கு யாரும் கூப்பிடல. சும்மாதான் குந்திகினு இருக்கு. அது வேலைக்குப்போய் காசு கொடுத்தா இதெல்லாம் வாங்கித் தருவேன். நான் வேலை செய்யற வூட்ல நாளைக்குத்தான் இனாம் தருவாங்க.. ரேஷன் கடையில் குடத்த கரும்ப முந்தாநேத்தே நீ தின்னுட்டே.. இன்னும் வேணுமா? இருமல் வரும்டா...” என்றாள்.
“எனக்கு தீவாளிக்கும் சொக்கா எடுக்கல இனிப்பும் வாங்கித்தறலே” என்று அழ ஆரம்பித்தான்.
“என் கண்ணு இல்ல... அவங்க வூட்ல எல்லாம் நாளைக்கு குடுக்குற கரும்பு உனக்குத்தான்” என்று இவள் கெஞ்சி சமாதானப் படுத்தினாள். அவன் மௌனமாகி முகத்தில் ஏமாற்றமும் கண்களில் நீரும் இருந்தன.
“கரும்பு அம்பது ரூவா போட்டு தரேன். வாங்கிக்கோ. அது கம்மியில்ல” என்றார் கரும்புக்காரர்.
“இல்லணா .. பத்து ரூபாய்க்கு ஒரு துண்டு தாங்க” என்று கேட்டு வாங்கினாள்.
“எம்மா... இஸ்கேல்ல விட இத்துனூண்டு இருக்கு. வேணாம் போ” என்று கோபத்தில் கைகால் உதறினான்.
இவனிடம் இனி கெஞ்ச முடியாது என்று நினைத்து அவன் முதுகில் ஒன்று வைத்தாள். அவன் கண்களில் நீர் தாரையாக வழிந்தது. தரதரவென இழுத்துக்கொண்டு கூட்டத்தில் மறைந்தாள். அவள் தன்மானமும் வைராக்கியமும் கொண்டவள் என்பது புரிந்தது.
‘கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை’ என்று ஔவையார் பாடியது என் நினைவுக்கு வந்தது. சிறு பிராயத்தில் குழந்தைகள் கொண்டாடி மகிழும் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் வழி இல்லையென்றால் என்ன சொல்வது? அந்த வடு அவனுடைய நினைவில் ஆழமாகப் பதிந்துவிடும். இறைவா, தை பிறந்தது, இனி வழி பிறக்கட்டும்! வாழ்க்கை ஏற்றம் பெறட்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக