அநேக சித்தர்கள் தங்களுடைய நூல்களைத் தம் அனுமதியின்றி விதியாளி அல்லாதவர்க்குக் கொடுத்தால், கொடுத்தவனுக்குச் சாபம் வந்து சேரும் என்று சொல்லியிருப்பார்கள். அந்நூலை நேர்மையற்று வாங்கியவனுக்கு அந்நூல் பயனற்றதாய்ப் போகும் என்பது சித்தர் வாக்கு. அவனுக்கு உடல்நலம் குன்றிப்போவதுமுண்டு.
போகர் போன்ற ஒரு சில சித்தர்கள்தான் தங்கள் நூலுக்கு எவ்வித சாபமுமில்லை என்று சொல்லியிருப்பார்கள். ஏன்? சில மறைப்பான விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியதால் இயற்றிய சித்தருக்கே கூட சாபம் வருவதுண்டு. அத்தகைய சமயத்தில் தான் நூலியற்றிய உண்மை நோக்கத்தை விளக்கிச் சொல்லி அதற்கான சாப நிவர்த்தியைத் தன் குரு, பரமகுரு, பரமேஷ்டிகுரு ஆகியோரிடம் பெற்றபின் நூலை அரங்கேற்றுவதுதான் போகருடைய செயல்பாடு. நூலைப் பொய்யென இகழ்ந்தாலோ, அதைத் தந்திரமாக வாங்கித் தீயவர்களுக்கு அளித்தாலோ கடுமையான சாபம் உண்டு.
சுமார் அறுபது ஆண்டுகளுக்குமுன் பழனியில் ஒரு சித்த குடும்பத்தில் ‘போகர் பன்னீராயிரம்’ நூல் கைப்பிரதி இருந்தது. அவ்வூர் வைத்தியர் ஒருவர் அதை வாசிக்க எடுத்துச் சென்று அதைப் பின்னாளில் இலங்கையில் யாருக்கோ நான்காயிரம் ரூபாய்க்கு அவசர நிதி தேவைக்காக விற்றுவிட்டார். அப்படியாக மோசஞ்செய்த அந்த வைத்தியர் பிற்பாடு நொடிந்து போய் மிகவும் துன்பப்பட்டார் என்று அந்தச் சித்த குடும்பத்தினர் என்னிடம் சொன்னது நினைவிலுள்ளது.
இதை எதற்காகச் சொன்னேன் என்றால், நந்தீஸ்வரர் அருளிய நிகண்டு நூலின் சில பாடல்கள் இதுபோன்ற சாபத்தைபற்றிச் சொல்கின்றன. ஈசன் உமையாளுக்குச் சொல்ல அதை உமையாள் நந்திக்குச் சொல்ல, பிற்பாடு அதை மூத்த சித்தர்கள் வழியே பரப்பியதையும் அவர் உரைத்துள்ளார். அருளப்பட்ட விரிவான வடமொழி நூல்களின் சாரத்தைச் சக்தியவள் தமிழில் நந்திக்கு உரைத்தவற்றை உலகோர் நலனுக்காக அதை உள்ளது உள்ளபடியே தமிழில் வடித்து அருளிய நயத்தை விளக்கியுள்ளார். தன்னுடைய அனுமதியும் ஆசிகளுமின்றி இந்நூலை வெளியிட்டால் பாழும் நரகமே வாய்க்கும் என்று சாபமிட்டுள்ளார்.
ஆதலால் கண்ணில் பட்ட எல்லா சித்த நூல்களையும் உரையாசிரியரானவர் தன் போக்கில் படித்து ஆர்வக்கோளாறில் அதைப் பிறரறியச் செய்தால், உரையாசிரியர்க்கு வெகு சாபம் வந்து சேரும். என் மட்டில் நான் இதுவரை இயற்றிய சுருக்கமான நூலுரைகளைப் போகரே பணிக்காத வரை, அவரே சில சூட்சுமங்களை விளக்காத வரை நானாகத் துணிந்து எதையும் எழுத முற்பட்டதில்லை. சில சமயங்களில் சித்தர் உரைத்த பாடலில் வரும் அஷ்டசித்தி, யோகம், சமாதி பற்றிய நுட்பமான வரிகளுக்குப் பொருள் தெரியாதபோது சில மகான்களே கனவிலும்/ நேரிலும் அவற்றைச் செய்துகாட்டி எனக்கு விளக்கியதுண்டு.
ஆகவே, அதீத ஆர்வத்தில் எல்லா நூல்களையும் படிப்பதோ மறைப்புப் பொருளை வெளியிடுவதோ கூடாது. சித்தர் ஆசியுடன் அதை வாசிக்கும் பிராப்தம் நமக்குக் கிட்டினால் பாதகமில்லை. சிலர் ஒரு வேகத்தில் எல்லா சித்தர் நூல்களையும் வாங்கிவைத்து அதில் ஒரு பக்கத்தைக்கூட இதுவரை புரட்டிப்பார்த்து வாசிக்க முடியாமல் பல வருடங்களாய் அடுக்கில் தூசியை ஊதித் துடைப்பதுண்டு. சித்தர் இசைந்தாலே அந்நூலை வாசிக்கப் பிராப்தம் அமையும். ஓம் நமசிவாய!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக