About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 16 ஜனவரி, 2021

பாணியின் பெருமை!

முருகனை சிலை ரூபமாய் செய்வித்துப் பிரதிஷ்டை செய்தால் தன் காலத்திலும், தன் காலத்துக்குப் பின்னும் என்றென்றும் அவ்விடம் வரும் பக்தகோடிகள் ஞான மார்க்கத்தில் மனதைச் செலுத்தி முருகன் கிருபைக்கும் அருளுக்கும் பாத்திரமாகி முக்தி பெறலாம். அப்படி உய்ய ஆலய வழிபாடே சாலச்சிறந்தது என்றெண்ணி தனது வைத்திய வாதத் தொழில் திறமையாலும், முருகனின் அனுகிரகத்திலும் நவபாஷாணங்களை ஒன்றாகக் கட்டி, அழகான விக்ரகம் செய்து அதற்குத் தண்டபாணி என்று நாமகரணம் செய்வித்து, தன் ஆசிரமத்திற்கு அருகில் உள்ள பழநி மலையின் மீது நிறுவினார். அதன்பின் சேரர்கோன் காலத்தில் சேர அரசனால் முழுமையாக இக்கோயில் கட்டப்பட்டது என்று கல்வெட்டுகளில் கூறப்படுகிறது.

வைய்யாபுரி நாட்டில் போகருடைய பெருமைகளையும் மகிமைகளையும் அறிந்த அங்குள்ள மலைவாழ் மக்கள், தினந்தோறும் வந்து முருகனை தரிசிக்கலாயினர். தன்னை தரிசிக்க வரும் மக்களுக்குள்ள பிணிகளைத் தீர்த்தும், உபதேசங்களைச் செய்தும், இறை வழிபாடும் நடத்தி வந்தார்.
‘பாணி’ என்றால் ‘கொண்டவன்’ என்று பொருள்படும். கையில் கம்புடன் நின்ற முருகனுக்குத் தாகம் எடுத்ததால் பாணி என்ற பின்னொட்டுடன் தண்டபாணி என்ற பெயர் வந்ததாகக் கதை அளக்கக் கூடாது. தண்டாயுதபாணி, சக்ரபாணி, சாரங்கபாணி, ஷங்கபாணி, பினாகபாணி, கோதண்டபாணி, வஜ்ரபாணி என இரு சொற்கள் இணைந்த பெயர்களின் அர்த்தம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். அவன் நிராயுதபாணியாக களத்தில் நிற்கிறான், அவனுடன் போர் புரியாதே என்று மகாபாரதத்தில் வரும் வர்ணனையின் பொருள் விளங்கியதா? எந்த ஆயுதமும் கையில் இல்லாமல் அவன் நிர்-ஆயுத-பாணியாக நிற்கிறான் என்பதாகும்.
புலிப்பாணி என்ற பெயரும் அப்படித்தான் வந்தது. நைனாத்தே உடையாருக்கு மிருக வசிய மந்திரத்தைப் போகர் சொல்லிக்கொடுத்தார். முருகனுக்கு அபிஷேக தீர்த்தத்தை விரைவில் கொண்டுவர பணித்தபோது, சீடர் பொய்கைக்குப்போய் நீர் முகர்ந்து வரும்போது பானை உடைந்துவிட, உடனே புலியை வரவைத்து அதன்மீது அமர்ந்து சுரைக்காய் குடுவையில் நீர் கொண்டு வந்ததால், போகர் அவருக்குப் புலிப்பாணி என்று பெயர் சூட்டினார். அதாவது வேங்கையை வாகனமாகக் கொண்டு அமர்ந்து வந்தவன் என்பது பொருள்.
ஆக, பாணியின் உள்ளர்த்தம் என்ன என்பது இப்போது உங்களுக்கு நன்கு விளங்கியிருக்கும்! வஜ்ரவேலுடன் இருக்கும் முருகனுக்கு வஜ்ரபாணி என்ற பெயருமுண்டு. அதேபோல் திபெத் பௌத்த ஆலயத்தில் புத்தரை வஜ்ரபாணியாக உருவகப்படுத்தி இருப்பார்கள்.
போகரின் சமாதி பிரவேசத்திற்குப்பின் பழநி மலைமீதுள்ள நவபாஷாண முருகன் சிலைக்குப் புலிப்பாணி நித்திய பூசைகளையும் பதினாறு வகை (சோடச) உபசாரங்களும் ஆகம முறைப்படி செய்து வந்தார். அதற்கென பூசை விதிகள் நூலையும் இயற்றினார்.
“பாரப்பா மலையதுவின் உச்சியிலே
பாங்கான போகருட சமாதியருகே
கட்டான பாடாணவகை எட்டோடொன்று
காணவே சேர்த்துவார்த்த சிலைதானும்
நண்ணவே பிரதிட்டைதான் செய்து
நவிலுவேன் பூசை சோடசமுஞ்செய்ய
ஆற்றினேன் பூசைவிதிகள் தானும்
ஆரப்பா அறிவார்க் களாருமில்லை.”
பல கோயில்களில் அபிஷேகம் அலங்காரம் அர்ச்சனை நைவேத்தியம் ஆராதனை உற்சவம் என்ற அளவில் ஆறு வகை உபசாரங்களுடன் நிறுத்திக் கொள்வதுண்டு. இன்னும் சில ஆலயங்களில் தச உபசாரம் வரை செய்வதுண்டு.
-எஸ்.சந்திரசேகர்


வெள்ளி, 15 ஜனவரி, 2021

நீண்டகால லீஸ்!

நாளை விடியும்போது சூரிய கிரணங்களைக் காண்போம் என்ற உறுதியான நம்பிக்கையுடன் இன்றிரவு உறங்கப் போனாலும் காலையில் நிச்சயம் உயிருடன் எழுவோமா என்பது நம் கையிலில்லை. ஆகவே காலம் தாழ்த்தாமல் முக்கிய பணிகளை இன்றே இக்கணமே செய்து முடிக்க முடிந்தால் நன்று. நேர நிர்வாகம் மட்டுமே போதாது, நமக்கு மூச்சையும் நிர்வகிக்கத் தெரிய வேண்டும்.

வெளியே விட்ட மூச்சை மீண்டும் உள்ளே வாங்காமல் போனால் .... சிவம் சவம் ஆகும். சுவாசி வாசி என்று ஓடிய கால்கள் சிவசிவ என நின்று போகும். சிவனும் சக்தியும் ஒரேடியாக இந்த ஊனுடம்பு வீட்டைக் காலி செய்துகொண்டு புறப்பட்டு விடுவார்கள். குடியிருந்த தெய்வம் போனபின் ஐம்பூதம் இந்த பாழும் மண்டபத்தை இடித்துத் தள்ளிவிட்டுப் போய்விடும்.
ஆகவே சிவசக்தி குடியிருக்க நீண்ட கால லீஸ் பீரியட் போட்டால் ஆலகால கண்டன் தேகத்தைக் காப்பான். வாசியன் வாசித்துக்கொண்டு இருக்கும்வரை நாம் சுவாசித்துக் கொண்டு இருக்கலாம். திருச்சிற்றம்பலம்!
அதனால்தான் நம் சித்தர்கள் காயகற்பங்கள் உண்டு தம் தேகத்தை வலுவாக்கி, வாசி ஓட்ட மாத்திரையை அளவாகப் பூட்டி, சமாதியில் அமர்ந்து, தம்முள் அகத்தீயைக் கண்டுணர்ந்து, சச்சிதானந்தத்தில் லயித்து, சிவசக்தியை வேண்டிய காலம்வரை குடியிருக்கச் செய்தனர்.
போகர் தன்னுடைய நூலில் பூரக/கும்பக/ரேச்சக சுற்றின் மாத்திரைக் காலத்தை உரைக்கிறார். அதைப் படிப்போர், "சார், ஒவ்வொரு பாட்டுல ஒவ்வொரு மாதிரி இருக்கே? எந்த ratio வை எடுத்துக்கணும்?" என்று கேட்பதுண்டு.
இசையில், 1) சவுக்க காலம் (அ) கீழ்க்காலம், 2) மத்திம காலம் 3) துரித காலம் (அ) மேல்காலம் உள்ளதுபோல் இதற்கும் உண்டு. ஆக, சாதகரின் பயிற்சி நிலைக்கேற்ப மாத்திரையின் காலப்பிரமாண அளவை ஆசான்தான் தீர்மானிக்க வேண்டும். அதாவது அதிகமான மாத்திரை அளவு என்றால் மிக நீளமான ஓட்டம் (Advance level) என்பதைப் புரிந்து கொள்க.
உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன். மந்திராலய பிருந்தாவன சமாதியில் அமர்ந்த ஸ்ரீராகவேந்திரர் ஓட்டும் உள்மூச்சு அளவு நீண்ட நேரம் போனதைக் கணக்கிட்டேன். ஒரு சுற்றே தோராயமாகத் தொண்ணூறு நிமிடங்களுக்கு நீடித்தது. அதாவது ஒருநாளில் 12-14 வரை உள்மூச்சு ஓடினால் அதிகம். இதற்கு என்ன அர்த்தம்? ஒவ்வொரு ஆறாதார சக்கரத்திலும் ஹம்ச ஜெபம் சேதாரமின்றி நிலைத்து நடக்கிறது. திருமூலரும் இதைத்தான் சொன்னார், தில்லை அம்பலம் உணர்த்துவதும் இதுவே!
மாத்திரை அளவைக் கேட்கும்போதே நமக்கு மூச்சு வேகமாக ஓடும், நாடித் துடிப்பும் எகிறும்!
- எஸ்.சந்திரசேகர்


வியாழன், 14 ஜனவரி, 2021

ராசிக்கல்லே தடைக்கல்லாக!

‘ராசிக் கல் மோதிரம் பலன் தருமா, அதை நம்பி அணியலாமா?’ என்று ஒரு நண்பர் சந்தேகம் கேட்டிருந்தார்.

ஒருவருடைய ஜாதகத்தில் நடப்பு திசை-புக்தி அடிப்படையில் ஜோசியர் பலவீனமான சில கோள்களின் சக்தியைக் கூட்ட வெவ்வேறு நிறத்தில், கேரட்டில் ஓபன் கட்டிங் வைத்த வெள்ளி-தங்கம் மோதிரம் அணியச் சொல்வதுண்டு. ஆனால் அந்த ஜாதகருக்கு அவருடைய மூதாதையர்களின் வம்ச சாபம்/ ஊழ்வினை /தோஷங்கள் நீங்கியதா என்று சொல்லமாட்டார். அவை எல்லாம் சுத்தமாக நீங்காமல் என்னதான் விலையுயர்ந்த மோதிரக்கல் அணிந்தாலும் அது வேலை செய்யாது அல்லது எதிர்மறையாக வேலை செய்யும். வம்ச சாபங்களை குலதெய்வம் எப்போது நீக்கி அருள்வாளோ அப்போது இதுபோன்ற கற்கள் பலன் தரும். ஜோசியர் கணித்துச் சொன்ன காலகட்டம் முடிந்தும் யோகம் வராதபோது பொறுமையிழந்து பரிகாரம் / ராசிக்கல்லை நாடுவோர் அதிகம்.
தேகத்தில் சில நோய்கள் இருந்து அதற்கான மருந்துண்ணாமல் மேலோட்டமாக உடலின் சக்தியைக்கூட்ட சப்ளிமென்ட்ஸ் எடுத்துக் கொண்டால் ஒரு பலனும் இருக்காது. சில சமயம் உடல் இளைக்கும். ஓடியோடி பரிகாரங்கள் செய்தும் ஏற்றம் தெரியாமல் இருக்கும். அதுபோல்தான் இதுவும். பெரிய அளவில் திகிலான வம்ச வினைகள் எதுவும் இல்லாதபோது மோதிரம் போட்டுக்கொண்ட ஒரு மண்டலத்திலேயே ஏற்றம் காணலாம். ஆனால் இது எல்லோருக்கும் பொருந்தி அமையாது. அதுபோல் சாபம்/ பிராரப்தம் எதுவும் இல்லாமல் திருப்திகரமாகவும் சுமுகமாகவும் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கும் ஒருவருக்கு அவசியமில்லாமல் மோதிரக் கல் சிபாரிசு செய்தால் அதனால் பலன் இருக்காது அல்லது அது எதிர்மறையாக வேலை செய்யலாம்.
ஆகவே ஜோதிடர்கள் தங்களிடமோ தாங்கள் சொல்லும் கடையிலோ கற்கள் பதித்த மோதிரம் வாங்கச் சொன்னால், நீங்கள் இருமுறையாவது யோசிக்க வேண்டும். நீங்கள் போடும் பிரத்தியேக மோதிரக் கல்லுக்கு சக்தியூட்டுவது கோள்கள், கோள்கள் யோகத்தைத் தரலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வது உங்கள் குலதெய்வம் என்பதை மறவாதீர். அணிந்தபின் வேண்டாமெனில் மோதிர உலோகத்தை விற்றுக்கொள்ளலாம் ஆனால் கற்களுக்கு ரீசேல் மதிப்பு இல்லை. ராசிக்கல் வாங்கும்முன் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு பூ கட்டிப் போட்டுப்பார்ப்பது உசிதம்!
-எஸ்.சந்திரசேகர்


கறவை மாடுகளைப் பேணவேண்டும்!

இன்று மாட்டுப் பொங்கல்! கால்நடைகள் இருந்தால்தானே அதை வைத்துக் கொண்டாட முடியும்? ரிஷபத்தையும் கோமாதாவையும் பேணிப் பாதுகாக்க வேண்டும்.

ஒரே ஒரு உயிரினம்தான் - மொத்த தற்சார்பும், விவசாயமும் இதில் அடங்கும் ..

1. சந்தையில் காய்கறிகளை விற்ற காசில் பாதி டெம்போ வாடகைக்கே சரியா போகுது தம்பி.
மாட்டுவண்டி எங்க தாத்தா ???
மாடு வேணுமே பா..!!
2. நிலத்தை ஒருமுறை உழுது போட டிராக்டருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 1000 தர வேண்டியிருக்கு மாப்ளே.
ஏர் வைத்து உழுது பார்க்கலாம் ல மாமா ?
மாடு வேணுமே பா..!!
3. DAP (Di ammonium phosphate), Urea, Phosphorous னு ஆயிரக்கணக்கில் செலவு ஆகிறது.
மாட்டு எரு, பஞ்சகவ்யம், அமிர்தகரைசல்னு பயன்படுத்தலாமே ?
மாடு வேணுமே பா..!!
4. நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு எரிவாயு செலவே மாதம் ரூ.700 ஆகிறது.
மாட்டு சாணத்தை வைத்து இயங்கும் Gobar gas plant என்ன ஆயிற்று ?
மாடு வேணுமே பா..!!
5. நஞ்சு னு தெரிந்தும் ஏதேதோ ரசாயனங்களை வீட்டிற்குள் தெளிக்கிறீர்களே -
மாட்டு சாணம் பயன்படுத்தலாமே ??
மாடு வேணுமே பா..!!
உழவெனும் வாழ்வியலில் மாட்டின் பங்கினை உணர்ந்த கார்ப்ரேட் வியபாரிகள், "மாடுகளை" விவசாயிகளிடம் இருந்து பிரிக்கமால் வருடம் முழுவதும் உழவு செய்யத்தக்க பருவ சூழல்களை கொண்ட இந்நிலப்பரப்பில் உழவை வைத்து வணிகம் செய்ய இயலாது என்று திட்டமிட்டு 19ம் நூற்றாண்டிலேயே இந்நிலப்பரப்பு முழுவதும் பசுவதை கூடங்கள் (cow slaughter houses) அமைத்து (சுதந்திரத்துக்கு பிறகும் இருந்தன, இன்றளவும் இருக்கின்றன; மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா 2வது இடம் as per 2019 data) - பின்னர் அதற்கான மாட்டிறைச்சி சந்தையும் சமகாலத்தில் மேற்கத்திய நாடுகளில் உருவாக்கப்பட்டன.
விவசாய புரட்சியில் மாட்டின் மீதான நமது தேவைகளை குறைக்க உரம், டிராக்டர் என அனைத்திற்கும் இந்த ஒன்றிய அரசால் மானியம் வழங்கப்பட்டது. மாடு என்னும் உயிரினம் பின்னர் பால் உற்பத்திக்காக மட்டுமே பயன்படுத்த பட்டது. அதுவும் கிடாரி (பெண்) கன்றுகள் மட்டுமே வளர்க்கப்பட்டது. காளை கன்றுகள் எல்லாம் அடி மாட்டிற்குத்தான். இனப் பெருக்கத்திற்கு எதை பயன்படுத்துவோம் என்ற சிந்தனை இன்றி காளைகளை விற்றதால் இன்று சினை ஊசியை வைத்து பெரும் லாபம் ஈட்ட காத்திருக்கிறது வணிக கும்பல்..
சினை ஊசி ஏன் போடனும் - இயற்கையாகவே இனப்பெருக்கம் செய்யலாமே ?
காளை மாடு வேணுமே பா..!!
ஒரே ஒரு உயிரினம்தான் - மொத்த தற்சார்பும், விவசாயமும் இதில் அடங்கும்.
அனைவருக்கும் மாட்டுப் பொங்கல் தின வாழ்த்துக்கள் ..
- யாரோ ஒரு விவசாயி.


பாறைகளைக் குடைந்தது எப்படி?

'சித்தர்களின் அறிவியல் பங்களிப்பு' (வெளியீடு: விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோயம்புத்தூர்) என்ற என் பழைய நூலிலிருந்து ஒரு சுவாரசியமான பகுதியை இங்கே பதிவிடுகிறேன்.

வேட்டு வைக்காமல், துளைகளிட்டுப் பிளக்காமல் ஒரு குன்றைத் தகர்க்கவோ குடையவோ சித்தர்கள் திறன் பெற்றிருந்தனர். மிக இறுக்கமான அணு கட்டமைப்பு கொண்ட எப்படியாகப்பட்ட பொருளையும் வலுவிழக்கச் செய்துள்ளனர். பூம்பாறை/ சதுரகிரியில் பூநீறு மற்றும் இதர பாஷாணங்களை போகர் சேகரித்தார். அப்பகுதியில் சிறிய/ பெரிய வட்டமான துளைகள் 1 அடி முதல் 3 அடி விட்டமுள்ள குழிகள் நேர்த்தியாக உள்ளதைக் காணலாம். இதில் ரசவாதம் செய்யத் தேவையான வெவ்வேறு பாஷாணங்களைச் சுத்தி செய்து வைக்கவும் கற்பாறை சேமிப்புக் கிடங்காகவும் காலாங்கி /போகர் உபயோகித்தனர். இத்தனை வட்டமான குழிகளை எப்படித்தான் வெட்டினரோ? அக்காலத்திலேயே லேத்/ டைமண்ட் கட்டிங் டூல்ஸ் போன்ற நவீன உபகரணங்கள் இருந்தனவா என்ற சந்தேகம் உங்களுக்கு எழும்.
நீர், கல்லுப்பு, கரியுப்பு, வெடியுப்பு, நவச்சாரம், அன்னபேதி, மலைபேதி, மாங்கிசபேதி, கல்நாதம், கல்மத்தம், அரப்பொடி, கற்காந்தம், சிங்கிட்டம் ஆகிய 13 சரக்கு வகைகள் சம அளவு நிறுத்தி நன்றாகப் பொடித்துக் கொண்டு, பின்னர் அவற்றைப் பெரிய பாண்டத்தில் போட்டு அத்துடன் யானைப்பரி கந்தம் விட்டு, புலிக்கரடி ரத்தம் விட்டு, அத்துடன் கொள்ளு அவித்த நீரையும் விட்டு, கை படாமல் நாவற் மரத்தின் கம்பால் நன்றாகக் கிண்டி, இந்தக் கலவையை வெயிலில் வைக்க நன்கு தெளிந்து விடுமாம். (யானை-குதிரை, புலி-கரடி ஆகியவற்றின் ரத்தம் சேகரிக்கக் காட்டு மிருக வேட்டைக்குப் போனார்களோ என்று நினைக்க வேண்டாம். ரத்தம் என்ற பெயருடன் பாஷாணங்கள் உள்ளதைப் பற்றி சித்தர் பாடல் சொல்கிறது. மிருகங்கள், பட்சிகள் பெயர் கொண்ட நிறைய பாஷாணங்கள் உண்டு.)
பாறையில் குழியோ/குகையோ வெட்ட வேண்டிய இடத்தில் அளவு குறித்துக் கொண்டு இந்தத் தெளிந்த திரவத்தை ஊற்ற வேண்டும். அப்படி ஊற்றியதும் ஒரு சாமத்திற்குள் ஊற்றப்பட்ட அப்பகுதியானது இளகிப் பொங்கி பொலபொலவென உப்பைப்போல கசிந்து உருகும். இப்படியாக தேவையற்ற கற்பாறைகளைக் குடைந்து வெட்டியெடுக்க வேண்டும். குகையின் அளவு சரியானது என்று தோன்றியதும், தேன்-தண்ணீர்-பால்-சிறுகரந்தை சாறுகளைச் சம அளவில் சேர்த்து குழியை/குகையை நன்றாகத் தேய்த்துக் கழுவிவிட்டால் கொடுமையான அந்த உவர் கசிவு தன்மை நீங்கிடும். கைகளுக்கும் உளிக்கும் அதிக வேலை தராமல் மிகச் சுலபமாகப் பாறைகளைப் பேதிக்கச்செய்து பெயர்த்தனர்! செதுக்கபட வேண்டிய பாறைகள் ஒரே மாதிரியான அடர்த்தி இருக்காது. சில சமயங்களில் மெல்லிய உளி பட்டு அது பின்னப்படுவதுண்டு. அதுபோன்ற தருணங்களில் இந்த யுக்தியைக் கையாண்டனர்.
இப்படித்தான் நுணுக்கமான குடைவரை கோவில்களையும் சிற்பங்களையும் அமைத்தனர். அக்காலத்திலே ஸ்தபதிகள் இந்த நுட்பத்தைச் சிற்பங்கள் செதுக்கவும் கட்டடவியலிலும் பெருமளவில் பயன்படுத்தினர். அதிக உஷ்ணத்தோடு தாக்கும் மின்னலுக்குக் கற்பாறைகளை உருக்கிடவும், பல கனிமங்களின் கலவையால் அமையப்பெற்ற அதன் அணுக் கட்டமைப்பைக் குலைத்து வடிவத்தையே மாற்றவும் சக்தி உண்டு என்றால் பாருங்களேன்!
அண்மைக்காலமாக திரு.பிரவீன் மோகன் என்பவர் வரலாற்றுப் பாரம்பரிய கோவில்களுக்குச் சென்று அங்குள்ள கட்டடவியலை ரசித்துக் காணொளி பதிவேற்றி வருகிறார். அதில் அவர் சில சூட்சுமமான சந்தேகங்கள் எழுப்புவதைக் கண்டேன். பெரும்பாலான சந்தேகங்களுக்கு அவர் விடைகாண வேண்டுமென்றால் நம் சித்தர் நூல்களைப் படித்து ஆராய்ந்தாலே போதும்.
- எஸ்.சந்திரசேகர்


அபாயம் நீக்கும் உபாயம்!

நமக்கு யாரேனும் தீவினை செய்திருந்தால் அது உடனே நமக்கு உணர முடியாமல் போகலாம். படிப்படியாக வாரங்களிலோ/ மாதங்களிலோ அது வேலை செய்ய ஆரம்பித்து நம் கெடு தசா-புக்தி சுற்று வரும்போது வினையின் உச்சம் தெரியும். அஷ்டகர்ம வினைகளில் ஏதேனும் ஒன்று நமக்கு யாரேனும் செய்திருந்தால் அதிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?
அனுதினமும் பஞ்சாட்சரம் / ஷடாட்சரம் ஜெபித்து வந்தும், முடிந்த வரை அனைத்து ஜீவராசிகளுக்கு உணவளித்தாலே போதும், நம்மை பீடித்த செய்வினைகள் போகும் என்று பலர் கருதுவதுண்டு. இது மட்டுமே போதும் என்றால் பாதிப்புக்குள்ளான அனேகர் தக்க தீர்வு காண பல இடங்களுக்குப் படையெடுக்க வேண்டாமே. ஆனால், அது அப்படியல்ல! சித்தர்கள் அளித்த உபாயத்தைக் கையாண்டாலே போதும். நேற்றுதான் ஒரு நண்பர் இதுபற்றி என்னிடம் கருத்து கேட்டார். அவருக்கு நான் சொன்னதை இங்கே பதிவிடுகிறேன்.
௧) இயன்ற வரை நாம் யாருக்கும் மனத்தால்/ வாக்கால்/ உடலால் தீங்கு செய்யாமல் இருக்க வேண்டும்.
௨) நாள்பட்ட உடல்/மன ரீதியான பிரச்சனைகளுக்கு யாரையேனும் சந்தேகத்துடன் பார்த்தாக வேண்டிய அவசியமில்லை. எப்போதும் செய்வினை நினைப்பாகவே இருந்தால் அதுவே மனநோயாக மாறும்.
௩) தினமும் உடற்பயிற்சி/ பிராணாயாமம் மற்றும் தியானம் செய்யவேண்டும்.
௪) திருநீறு பூசி கிழக்குமுகம் அமர்ந்து தினமும் அந்தி-சந்தி மந்திரங்கள் ஜெபிக்க வேண்டும்.
௫) செவ்வாய் /வெள்ளி கிழமைகளில் விளக்கேற்றிய பின் தூபம் போடும்போது வெண்கடுகு ஒரு சிட்டிகை அதில் போடவும். வீடு முழுவதும் அப்புகையானது தீவினைகளை, எதிர்மறை சக்திகளை விரட்டும்.
௬) தினமுமோ /வெள்ளிக் கிழமையிலோ காலையில் வீடு முழுதும் கோமியம் தெளிக்கவும். தினமும் காலையில் வீட்டு வாயிற்படியில் மஞ்சள் நீர் தெளிக்கவும்.
௭) வீட்டு நிலைப்படி வாசக்கால் உள்ளே நுழையும்போது மேலே ஒரு சிறிய கருடக்கிழங்கைக் கட்டித் தொங்க விடவும். அது மாதக் கணக்கில் எல்லா திருஷ்டி/தீவினைகளையும் வீட்டுக்குள் அண்டாமல் தடுக்கும். வெகு சீக்கிரத்தில் அது காய்ந்துபோனால், தாக்குதலில் அடிவாங்கியது என்பது பொருள். அப்போது மீண்டும் புதிதாக ஒன்று வாங்கிக் கட்டவும்.
அ) வீட்டின் உள்ளே நான்கு மூலைகளிலும் (வடகிழக்கு, வடமேற்கு, தென்மேற்கு, தென்கிழக்கு) தரையில் சிறிய பிளாஸ்டிக் கிண்ணத்தில் கல் உப்பு வைக்கவும். வாரமொரு முறை சனிக்கிழமை காலையில் அதை பாத்ரூமில் கொட்டிவிட்டுப் புதிய உப்பு வைக்கவும்.
௯) வீட்டை இருவேளையும் பெருக்குங்கள். எல்லா இடங்களிலும் தலைமுடி, அழுக்கு துணிகள் இருந்தால் அது தரித்திரம். வாசலில் போட்ட கோலம் பூசிய மஞ்சள் மங்களகரமாக இருக்கட்டும்.
ய) எப்போதும் அழுகை, சாபம், ஒப்பாரி, சண்டை, வசனங்கள் நீங்களும் பேசவேண்டாம், டிவி சீரியலிலும் பார்க்கவேண்டாம். அந்த மாதிரி வசனங்கள் வந்தால் mute செய்திடுங்கள். விளக்கு வைக்கும் நேரத்தில் அதுவும் கூடாது. சூரிய அஸ்தமன காலத்தில் மனமும் உடலும் பாதிக்கும்.
யக) திருநீறணிந்து காலை /மாலை ஒரு பதினைந்து நிமிடமாவது பதிகம்/ பாசுரம்/ சஷ்டி கவசம் என எதையேனும் பாராயணம் செய்யுங்கள். உங்கள் இஷ்ட தெய்வத்தை/ குலதெய்வத்தை நினைத்து மந்திர உருவேற்றுங்கள். சித்தர்களை/ மஹான்களை நினைத்திடுங்கள்.
ய௨) எறும்பு, காக்கை, நாய், பசு ஆகியவற்றுக்கு உணவு படைத்திடுங்கள். அதுவே லட்ச போஜனத்திற்கு சமம்.
ய௩) சக்திக்கேற்ப ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள் அல்லது அதற்கான நிதி தாருங்கள். இவை அனைத்துமே ஊழ்வினைகளையும் செய்வினைகளையும் துடைக்கும்.
இவை எல்லாமே உங்களுக்கு ரட்சையாக இருந்து காக்கும் என்பது உறுதி. செய்வினை /பில்லி சூனியம் என்று எதுவுமே இல்லை நம்பவேண்டாம் என்று சொல்லித் திரிய வேண்டாம். அது அவரவர் தனிநபர் கொள்கையாக இருந்துவிட்டுப் போகட்டும். அவை பொய் என்றால் அஷ்டகர்ம வினைகளுக்கான உபாயங்களை உரைத்த அகத்தியர், காலாங்கி, போகர், புலிப்பாணி முதல் ஆதிசங்கரர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், வரை எல்லோருமே பொய்யுரைத்ததாக ஆகிவிடும்.
- எஸ்.சந்திரசேகர்


இதில் என்ன வியப்பு?

‘இந்தியர்கள் 2500 வருடங்களுக்கு முன்பே கண்ணாடி பாசிமணிகளை உபயோகித்தனர்’ என்பதை இப்போது நிதானமாகச் சொல்கின்றனர். அதுபற்றிய இன்றைய செய்திப்படம் தான் இங்கே உள்ளது. அக்காலத்திலேயே கண்ணாடியை உருக்கிக் காய்ச்சி, அதில் காற்றை ஊதி மணிகளாக்கி, கயிறு கோர்த்து மாலைகளாகத் தொடுக்கும் யுக்தியை மேற்கத்தியர்களுக்கு முன்பாகவே இந்தியர்கள் அறிந்திருந்தனர் என்பதுதான் இப்பெட்டிச் செய்தி.

பழைய பதிவுகளில் போகருடைய பாடல்களைப் பார்த்து அலசிவிட்ட நமக்கு இதெல்லாம் வியப்பூட்டும் ஒரு செய்தியே அல்ல. பூநீறு கலந்த பாஷாணங்களைக் கொண்டு பளிங்கு மற்றும் பல வண்ணங்களில் குண்டு மணிகள், ரவைகள், செயற்கை ரத்தினங்கள், பீங்கான், கண்ணாடி பாத்திரங்கள் என பலவற்றையும் போகர் கண்டுபிடித்தார். இந்த நுட்பத்தை 2500 வருடங்களுக்கு முன்பே மக்கள் பயன்பாட்டுக்கும் அறிமுகம் செய்தார். அதைக்கொண்டு இன்னும் பல அதிநவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கினார். அப்போதிலிருந்து சீனா, பாரதம், மற்றும் மேற்கத்திய நாடுகளில் இவை பிரபலமானது.
என்னதான் இலக்கிய சான்றுகளும் தொல்லியல் ஆய்வுக்கு உதவும் என்றாலும் சன்மார்க்கம் சார்ந்த சித்த இலக்கியங்கள் ஆய்வுக்கு ஏற்றுக் கொள்ளப்படாது. ஆனால் பளிங்கு என்ற சொல் மணிமேகலை காப்பியத்தில் உள்ளதாகப் பெட்டிச் செய்தியில் குறிப்பு வருகிறது. மகாபாரதம் காலந்தொட்டே ஸ்படிகம்/ கண்ணாடி மணிகளைப் பற்றிய குறிப்பு இலக்கியங்களில் நிறைய உள்ளன.
கலி யுகம் முதலே விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு நம் போகர் பெருமானே சூத்திரதாரி! சித்தனின் மொழிப் புலமைக்கான அளவீடுகளின் படி, தமிழில் இயற்றியது போக வடமொழியிலும் அவரே இது குறித்து வேறு பெயரில் நூலியற்றி இருந்தாலும் ஆச்சரியமில்லை.
-எஸ்.சந்திரசேகர்


பெயர்ச்சி!

குரு பகவான் பெயர்ச்சி ஆகியுள்ளார். இவன் அவன் வீட்டில் உள்ளான், அவன் இவனைப் பார்க்கிறான், அது பகை வீடு, இது நட்பு வீடு, இவன் அங்கு மறைந்தான், என ஏதோவொன்று ஜெனனகால ஜாதகத்தில் இருக்கத்தான் செய்யும். அவரவர் ஜாதக கட்டங்கள் அனுகூலமாக உள்ளதா இல்லையா என்பதைப் பற்றி அறிந்துகொள்ளத் துடிப்பார்கள். பெயர்ச்சியின் பலன் சூப்பர்/ சுமார்/ மோசம் என்ற அளவில் ராசிகளை வகைப்படுத்தி டிவியில் வரும் ஜோதிட கணிதக்ஞர்கள் சொல்வது ஒவ்வொரு பெயர்ச்சிக்கும் வாடிக்கையாகிவிட்டது.

மெகா சீரியலுக்கு அடுத்தபடியாக ராசி பலன்கள் வரிசையில் நிற்கிறது. ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு, அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி, குரு பார்க்கக் கோடி நன்மை, என்பது ஜோதிட சொல்லாடல். தேவ குரு பார்க்காவிட்டால் தான் நாம் என்ன செய்ய முடியும்? இன்னும் சிலர் வேறுபாடு அறியாமல் ஆல் அமர்ந்த மேதா தட்சிணாமூர்த்தியையே வியாழ குரு நிலைக்குத் தாழ்த்துவர்.
குருவின் ஆசிகள் பூரணமாக இருந்தால் வம்சாவளியில் ஏற்றத்தைக் காட்டும். பூட்டனின் கல்வி/வாழ்க்கைத் தரத்தை விட பாட்டனின் நிலையில் முன்னேற்றம் உண்டு, பாட்டனை விட அப்பனின் நிலையும், அப்பனைவிட மகனின் நிலையில் உயர்வடைவது என்பது ஏற்றமான விஷயம். ஆனால் சில வம்சங்களில் இது நேர்மாறாக இருக்கும். நாங்கெல்லாம் வாழ்ந்து கெட்ட குடும்பம் என பீற்றிக்கொண்டு பழங்கதை அலசிப் பொழுதைக் கழிப்போருண்டு. ஞான சீலன் இருக்கும் இடத்தில் முகஸ்துதிக்குக் குறைவேயில்லை. ஆனால் பாட்டன் அளவுக்குப் பெயரன் ஏன் சோபிக்கவில்லை என்றால் வாங்கி வந்த வரம் அத்தனைச் சிறப்பானது என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கேற்றாற்போல் அந்த வம்சத்தில் சந்ததிகளை வளர்ப்பதும், ஞானம் புகட்டுதலும், நற்பண்புகள் விதைப்பதும் கீழ்த்தரமாக அமைந்து விடுவதுண்டு.
ஆகவே கிரகங்களின் பெயர்ச்சி என்பது அவ்வப்போது வந்துபோகும் நிகழ்வு. தினசரி பலன்களைப் பார்த்துவிட்டு அன்றாட பணிகளைச் செய்வோருண்டு. என்னத்தைச் சொல்ல? வாழ்க்கைப் பருவங்களில் அவையவை விதிப்படி நடந்துகொண்டுதான் இருக்கும். கிரகப் பெயர்ச்சியின் கெடு பலன்களின் தாக்கத்தைக் குறைக்கவும் அதைத் தாக்குப்பிடிக்கவும் அந்தந்த கிரகத்திற்குப் பிரீத்தி செய்வதும், குலதெய்வத்தை வேண்டுவதுமே சரியான தீர்வு.

பதிகம் உரைக்கும் உண்மை!

திருமுறைகளைச் சற்றே ஆழமாகத் துழாவிப் பார்த்து, அக்காலத்தில் கோயிலில் நிலவிய சம்பிரதாயங்கள் பற்றி அப்பர் சுவாமிகள் சொன்ன மெய்யான கருத்து என்ன என்பதை அறிய விழைந்தேன். அதை எல்லாம் படித்து இங்கே எளிய தொகுப்பாக இட்டேன்.

நான்கு வேதங்களும், ஆறு அங்கங்களும், பதினெட்டுப் புராணங்களும், இருபத்தெட்டு ஆகம நூல்களும், இன்ன பிற நூல்களுமாய் அமைந்த உருவமே தில்லை அம்பலமாகும். "ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்" என்றார் அப்பர் பெருமான்.
"வெந்தநீறு அருங்கலம் விரதிகட்கெலாம்
அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆறங்கம்
திங்களுக்கு அருங்கலம் திகழும் நீள்முடி
நங்களுக்கு அருங்கலம் நமச்சிவாயவே"
இதன் பொருள், விரதம் இருக்கும் சான்றோர்களுக்குத் திருநீறும், அந்தணர்களுக்கு நான்மறை ஆறங்கம் ஓதுதலும், பிறைக்குச் சிவபெருமானுடைய நீண்ட அழகிய சடையும், எம்மைப்போன்ற அடியார்களுக்குத் திருவைந்தெழுத்தும் சிறந்த அணியாகும்.
வேதங்களை ஓதும் அந்தணர்கள், அந்த வேதங்களைக் காக்கும் ஆறு அங்கங்களையும் நன்கு அறிந்தவர்களாக முறையாக ஓத வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக, மறைகளுடன் அங்கங்களையும் சேர்த்து அருமறை ஆறங்கம் என்று அப்பர் பெருமான் கூறியுள்ளார். வேதத்தின் ஆறு அங்கங்கள், சிட்சை, கல்பம், வியாகரணம், நிருத்தம், சந்தம், சோதிடம் ஆகியவைதான்.
திருமுறைக்குத் தவறாகப் பொருள் கூறும் புலவர்களுக்குச் சிவஅபராதம் உண்டு என்றும் அறிய முடிகிறது. வெளிப்படையாகச் சொல்லவேண்டிய சொல்லின் பொருளை வேண்டுமென்றுத் திரித்துச் சொன்னால் அது மீளா பாவம்.
'விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்' என்ற பதிகம் பாடுகையில், சனகாதி முனிவர்கள் நால்வர்க்கு அவன் நான்கு வேதங்களை வெளிப்படுத்தி அருளினான் என்பதாகச் சொல்கிறார்.
அதுபோல் அவர் குறிப்பிட்ட ஆகமங்களும் கிரியைகளும் சைவ சமயத்தின் அடிப்படை நூல்களாகும். சிவபெருமானால் அருளிச் செய்யப் பெற்ற இருபத்தி எட்டு ஆகமங்கள் என்ன? அவை:
கௌசிக முனிவருக்கு உபதேசிக்கப்பட்டவைகள்
1. காமிகம் 2. யோகஜம் 3. சித்தியம் 4. காரணம் 5. அஜிதம்.
பரத்வாஜ முனிவருக்கு உபதேசிக்கப்பட்டவைகள்
1. தீப்தம் 2. சூட்சம் 3. சகஸ்ரம் 4. அம்சமான் 5. சுப்ரபேதம்
கௌதம முனிவருக்கு உபதேசிக்கப்பட்டவைகள்
1. ரௌரவம் 2. மகுடம் 3. விமலம் 4. சர்வோத்தரம் 5. விபவம்
அகஸ்திய முனிவருக்கு உபதேசிக்கப்பட்டவை:
1. புரோத்கீதம் 2. வீரம் 3. பாரமேஸ்வரம் 4. கிரணம் 5. பேதம் 6. வாதுளம் 7. விஜயம் 8. நிசுவாசம் 9. சுவாயம்புவம் 10. அனலம் 11. உத்ர காமீ 12. பூர்வ காரணா 13. லளிதம்
இப்படியாக ஆகம முறையின்படி கட்டப்பட்ட கோவில்களில் சிலா பிரதிஷ்டை, தினசரி பூஜை, திருப்பணிகள், கும்பாபிஷேகங்கள் என எல்லாவற்றையும் செய்தனர். முழுக்க ஆகம விதிகளின்படி அந்நாளில் ரிஷிகள், அரசர்கள், ஏனைய பெரியோர்களால், சிற்ப சாஸ்திரத்தின் வழி வந்த ஸ்தபதிகள் எனச் சேர்ந்து திருக்கோயிலுக்குத் தொண்டாற்றினர். அருளப்பட்ட ஒவ்வொரு பூசை/ஆகமம் கிரியைகளுக்கு ஏற்ப தொடர்பின்றி மந்திரங்கள் ஓதினாலும் சிவ அபராதம் உண்டு என்பதும் தெரிகிறது.
ஆகமங்கள்படி வேத மந்திரங்ளையும் உபசாரங்களையும் இறைவனுக்குச் செய்யவேண்டும் என்றும், அதை அனுபவித்து ஏற்கும் இறைவனின் பெருமைகளையும் திருவிளையாடல்களையும் திருமுறைப் பதிகங்களால்தான் பண்ணிசைத்துப் புகழமுடியும் என்பதையும் அப்பர் அடிகள் உரைத்துள்ளார். அப்பர் சுவாமிகள் ஸ்ரீருத்ரம் மற்றும் வேதமந்திரங்களை அறிந்திருக்கும் சாத்தியமுண்டு என்பது அவருடைய பதிகங்களில் இடம்பெறும் சொற்றொடரில் காண முடிகின்றது. ஆகவேதான் வேத ஆகம மந்திரத்தை மரபு வழுவாமல் தமிழில் மொழியாக்கம் செய்ய முடியாது என்பதை அவருடைய 4,5,6 ஆகிய திருமுறைகளிலுள்ள சில பதிகங்கள் உணர்த்துகின்றன. அதில் வேள்வியொடு வேத கோஷமும் அதன்பின் பண்ணிசையும் உண்டு என்பதைத் தெளிவாக்கியுள்ளார்.


வா'சிவா'சி

வால்மீகர் திருவாய் மலர்ந்தருளிய நூலில் இப்பாடல் தெளிவாக உள்ளதால் பொருளை விளக்கிச்சொல்ல எதுவுமில்லை. இருந்தாலும் புதிதாய் நட்பில் வந்தவர்களின் புரிதலுக்காக மேலோட்டமாக ...

வாசி என்பது பிங்கலை (ரவிகலை), இடகலை (சசிகலை) வழியே உள்ளே வெளியே வந்துபோகும் (பூரகம்/ரேச்சகம்) மூச்சு. சித்தனானவன் இவ்வுலகமே சிவமென்று சிந்தையில் தெளிவாக இருப்பான். (அண்டத்தில் இருப்பது பிண்டத்திலும் இருக்கும் என்பதால் நம்முள் சிவன் கோயில் கொண்டுள்ளான்.) அவனுக்கு நந்தியெம்பெருமான் தூலதேகமாகவும், கண் மூக்கு வாய் செவி என்பவை நான்முகனாகவும், ஆறாதாரத்தில் விநாயகனே மூலத்திலிருந்து புறப்படும் மூச்சாகவும், சிவசக்தியே ஒளிரும் சூரிய சந்திரராகவும் உள்ளதை நீ அறிந்திட வேண்டும்.
ஆகவே நம் தேகத்தில் சிவனும் சக்தியும் நிலைத்து வாசம் செய்ய வேண்டும் என்றால் நம் உயிர் நிலைத்து இருக்க வேண்டுமென்றால் வாசியோகம் பயில வேண்டும். அதற்குத் தக்கபடி நம் மூச்சை அதிகம் செலவு செய்யாமல் நிதானமாக ஆழமாக சுவாசித்து உடலைப் பேணுவது அவசியம்.
அதுபோல் அவசியமின்றி நம் கண்களைத் திறந்து வைத்து அதுவழியே உயிரொளியை வீணாக்காமல் முடிந்தவரை கண்களை மூடி அகவொளியைக் காணவேண்டுமென சித்தர் பாடல்கள் சொல்கின்றன.


குரு-சிஷ்ய பரம்பரை!

மூலமரபு சித்தர்களின் பரம்பரையில் எண்ணற்ற சீடர்கள் இடம் பெறுவர். சீடர்களே தங்கள் குருமார்களைத் தேர்ந்தெடுக்கிறார்களா? இல்லை. குருவானவர் தன்னுடைய மரபின் வழியில் வரும் சீடனானவன் அகத்தியர் வகுத்த தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் என்ற கோட்பாடுகளை விதிப்பார். அதன்படி இருக்கப் பெற்றால் யோகம், ஆகாமம், வாதம், கற்பம், ஜாலம், வைத்தியம், அஷ்டமாசித்தி, சமாதி மற்றும் நூலியற்றும் புலமை என பலவற்றையும் கற்றுத் தருவார்.

அதில் பல விஷயங்கள் மறைப்புமிக்க ரகசியமாகவும், வெட்டவெளிச்சமாக்கிய சங்கதிகளும் இருக்கும்.
மூல மரபின் சிஷ்ய பரம்பரையில் வரும் சித்தர்கள் யார்யார் என்பதை அகத்தியரோ, புசுண்டரோ, திருமூலரோ, காலாங்கிநாதரோ, போகரோ ஓரளவுக்கு உரைத்திருப்பார்கள். ஆனால் எல்லா பெயர்களும் இருக்கும் என்று சொல்லமுடியாது. இன்னாருக்கு இவர் இத்தனையாவது சீடர் என்பதை வேறொருவர் தன்னுடைய நூலில் புலப்படுத்தியிருப்பார். இது ஒரு கண்ணாமூச்சி விளையாட்டாகத் தொடர்ந்து ஓடும்.
குரு-சீடர் உறவு என்பது தகப்பன்-மகன் உறவுபோல் இருந்தது என்றால் மிகையில்லை. பூட்டன், பாட்டன், மகன், பேரன், கொள்ளுப்பேரன் என்றபடி சீடர்கள் தம் உறவு நிலைகளைப் பெரிதும் மதித்தனர். அப்படியொரு செய்திதான் இங்கே அம்பிகானந்தர் அருளிய ஞானோபதேசம் நூலிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளேன்.
‘பாட்டர் திருமூலருக்கு மூன்றாம்பேரன்
பாங்கான போகருக்கு நாலாம்பிள்ளை
தாட்டிகமாய் அம்பிகா னந்தனென்பேர்
தாயான அம்பிகையைத் தானேபோற்றி’
மூலமரபில் அகத்தியர் வழியில் திருமூலர் காலாங்கி போகர் வரிசையில் எண்ணற்ற சீடர்கள் வந்தனர். போகர் தன்னுடைய ஆத்மார்த்த சீடராகப் புலிப்பாணியை வைத்தார். அவ்வரிசையில் அடுத்ததாகக் கருவூரார் கொங்கணர் அம்பிகானந்தர் இடைக்காடர் என்று சிஷ்ய பரம்பரைப் பட்டியல் நீளும். இவர்களுடன் நாகராஜன் (எ) பாபாஜியும் சீடராக இருந்தார் என்பது நாம் அறிந்ததே.
அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் பின்பற்றும் மடங்கள், சைவ சமய ஆதீனங்கள் போன்றவற்றில் பெரும்பாலும் குரு பரம்பரை இருக்கும். ஒருவருக்குப் பின் இன்னொருவர் மடாதிபதியாக பொறுப்பேற்பார். ஆனால் சித்த வம்சத்தில் போகர் காலத்திலேயே குருமார்கள் அனைவரும் சமாதியில் நிலைத்தும், வெளியே வந்தும் இயல்பாகப் பணிகளை மேற்கொண்டனர் என்பது விளங்குகின்றது.
கலியுகத்தின் பிரதம பாதத்தின் பிற்பகுதியில் அநேக சித்தர்கள் நீண்ட சமாதிக்குப் போனதால் தலையாய சீடர் வம்சத்தினரால் குருவின் ஆதீனம் நிறுவப்பட்டு அவ்வழியில் எண்ணற்றோர் பீடாதிபதிகளாக வந்து போயினர். இன்றும் தொடர்கின்றனர். தமிழகத்தில் இன்றைக்கு மூத்த சித்தர்களின் பெயரிலுள்ள பல ஆதீனங்களின் சிஷ்ய பரம்பரை வம்சாவளியினரே பீடாதிபதியாக உள்ளனர்.
- எஸ்.சந்திரசேகர்



வெளியிட்டால் சாபமுண்டு!

அநேக சித்தர்கள் தங்களுடைய நூல்களைத் தம் அனுமதியின்றி விதியாளி அல்லாதவர்க்குக் கொடுத்தால், கொடுத்தவனுக்குச் சாபம் வந்து சேரும் என்று சொல்லியிருப்பார்கள். அந்நூலை நேர்மையற்று வாங்கியவனுக்கு அந்நூல் பயனற்றதாய்ப் போகும் என்பது சித்தர் வாக்கு. அவனுக்கு உடல்நலம் குன்றிப்போவதுமுண்டு.

போகர் போன்ற ஒரு சில சித்தர்கள்தான் தங்கள் நூலுக்கு எவ்வித சாபமுமில்லை என்று சொல்லியிருப்பார்கள். ஏன்? சில மறைப்பான விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியதால் இயற்றிய சித்தருக்கே கூட சாபம் வருவதுண்டு. அத்தகைய சமயத்தில் தான் நூலியற்றிய உண்மை நோக்கத்தை விளக்கிச் சொல்லி அதற்கான சாப நிவர்த்தியைத் தன் குரு, பரமகுரு, பரமேஷ்டிகுரு ஆகியோரிடம் பெற்றபின் நூலை அரங்கேற்றுவதுதான் போகருடைய செயல்பாடு. நூலைப் பொய்யென இகழ்ந்தாலோ, அதைத் தந்திரமாக வாங்கித் தீயவர்களுக்கு அளித்தாலோ கடுமையான சாபம் உண்டு.
சுமார் அறுபது ஆண்டுகளுக்குமுன் பழனியில் ஒரு சித்த குடும்பத்தில் ‘போகர் பன்னீராயிரம்’ நூல் கைப்பிரதி இருந்தது. அவ்வூர் வைத்தியர் ஒருவர் அதை வாசிக்க எடுத்துச் சென்று அதைப் பின்னாளில் இலங்கையில் யாருக்கோ நான்காயிரம் ரூபாய்க்கு அவசர நிதி தேவைக்காக விற்றுவிட்டார். அப்படியாக மோசஞ்செய்த அந்த வைத்தியர் பிற்பாடு நொடிந்து போய் மிகவும் துன்பப்பட்டார் என்று அந்தச் சித்த குடும்பத்தினர் என்னிடம் சொன்னது நினைவிலுள்ளது.
இதை எதற்காகச் சொன்னேன் என்றால், நந்தீஸ்வரர் அருளிய நிகண்டு நூலின் சில பாடல்கள் இதுபோன்ற சாபத்தைபற்றிச் சொல்கின்றன. ஈசன் உமையாளுக்குச் சொல்ல அதை உமையாள் நந்திக்குச் சொல்ல, பிற்பாடு அதை மூத்த சித்தர்கள் வழியே பரப்பியதையும் அவர் உரைத்துள்ளார். அருளப்பட்ட விரிவான வடமொழி நூல்களின் சாரத்தைச் சக்தியவள் தமிழில் நந்திக்கு உரைத்தவற்றை உலகோர் நலனுக்காக அதை உள்ளது உள்ளபடியே தமிழில் வடித்து அருளிய நயத்தை விளக்கியுள்ளார். தன்னுடைய அனுமதியும் ஆசிகளுமின்றி இந்நூலை வெளியிட்டால் பாழும் நரகமே வாய்க்கும் என்று சாபமிட்டுள்ளார்.
ஆதலால் கண்ணில் பட்ட எல்லா சித்த நூல்களையும் உரையாசிரியரானவர் தன் போக்கில் படித்து ஆர்வக்கோளாறில் அதைப் பிறரறியச் செய்தால், உரையாசிரியர்க்கு வெகு சாபம் வந்து சேரும். என் மட்டில் நான் இதுவரை இயற்றிய சுருக்கமான நூலுரைகளைப் போகரே பணிக்காத வரை, அவரே சில சூட்சுமங்களை விளக்காத வரை நானாகத் துணிந்து எதையும் எழுத முற்பட்டதில்லை. சில சமயங்களில் சித்தர் உரைத்த பாடலில் வரும் அஷ்டசித்தி, யோகம், சமாதி பற்றிய நுட்பமான வரிகளுக்குப் பொருள் தெரியாதபோது சில மகான்களே கனவிலும்/ நேரிலும் அவற்றைச் செய்துகாட்டி எனக்கு விளக்கியதுண்டு.
ஆகவே, அதீத ஆர்வத்தில் எல்லா நூல்களையும் படிப்பதோ மறைப்புப் பொருளை வெளியிடுவதோ கூடாது. சித்தர் ஆசியுடன் அதை வாசிக்கும் பிராப்தம் நமக்குக் கிட்டினால் பாதகமில்லை. சிலர் ஒரு வேகத்தில் எல்லா சித்தர் நூல்களையும் வாங்கிவைத்து அதில் ஒரு பக்கத்தைக்கூட இதுவரை புரட்டிப்பார்த்து வாசிக்க முடியாமல் பல வருடங்களாய் அடுக்கில் தூசியை ஊதித் துடைப்பதுண்டு. சித்தர் இசைந்தாலே அந்நூலை வாசிக்கப் பிராப்தம் அமையும். ஓம் நமசிவாய!
- எஸ்.சந்திரசேகர்


நல்மனமும் நல்வாக்கும்!

பாரத பூமியில் இறையருள் பெற்ற சீலர்கள் அநேகர் உண்டு. அவர்கள் எல்லோர் நாவிலும் கலைவாணியின் அருள்வாக்கும் தன்வந்த்ரியின் சுகப்படுத்தும் ஆற்றலும் நிரம்ப உண்டு. இவர்கள் எல்லோரும் ஒவ்வொருவரின் வாழ்விலும் காரணமின்றி வந்து போவதில்லை. யாரிடம் போனால் தீர்வு கிடைக்கும் என்று விதிக்கப்பட்டுள்ளதோ அத்தகையவரிடம் தக்க நேரம் வரும்போது அந்த விதியாளிக்கு ஆலோசனை கிட்டும்.

அப்படிப்பட்ட ஒருவர்தான் அண்மையில் மறைந்த திருநெல்வேலியைச் சேர்ந்த பெரியவர், ஜோதிடர் கந்தையா பிள்ளை அவர்கள், வயது 94. இவர் காணாபத்திய வழிபாடும் உபாசனையும் செய்தவர். தொலைபேசியிலும் நேரிலும் யார் தங்கள் பிரச்சனைகளைக் கூறித் தீர்வு கேட்டாலும் அதற்கு அக்கணமே பிள்ளையாரை வணங்கிட, அவர் இவருடைய ஆக்ஞையில் வந்து உணர்த்துவதை அருள்வாக்காகச் சொன்னவர். மூன்றாவது கண் நிகழ்ச்சியிலும் அவருடைய எபிசொட் வந்தது.
என் வாசகர்கள்/ நண்பர்கள் சிலர் என்னிடம் தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு கேட்கும்போது ஐயாவின் நம்பரைத் தந்து அவரை அணுகிக் கேட்குமாறு பரிந்துரை செய்தேன். அவர் தனக்கு வாய்த்த சக்தி மூலம் இச்சமூகம் பயனுற ஒரு சேவையாக ஆற்றிவந்தார். இவரைக் கடந்த ஐந்தாண்டுகளாக அறிவேன்.
ஒரு சமயம் என் நண்பருக்காக அவரைத் தொடர்பு கொண்டு கேள்விகள் கேட்கலாம் என பேசும்போது, அவர் என்னைப் பற்றி விசாரித்தார். தானாகவே சில தகவல்களைச் சொன்னார். "தம்பி, 'அ' எழுத்தில் பெயர் தொடங்கும் மூத்த சித்தர் உன்னுடன் இருந்து உனக்கு வழிகாட்டி அருள்கிறார், சித்த நூல்களை எழுதுவதால் பலருடைய கண் திருஷ்டி விழும் என்றாலும் அது தானாக அகன்றிட உன் குலதெய்வம் காத்தருள்வாள்" என்று அப்போது சொன்னார்.
அவர் பேசியவை எல்லாமே இன்றும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவருடன் தொடர்பில் இருந்தது ஒரு பேறு. ஓம் சாந்தி!









Adisankara!

 

மீனாட்சியின் ஆனந்தம்!

ஆர்யாம்பா பெற்ற உன்னத சங்கரா 

அகிலம் போற்றும் உன் சச்சரித்திரா

அகண்ட ஞானவொளி ஜீவன்முக்தா

அகமகிழ ஆட்கொண்ட அம்ருதகவிதா

அற்புத நடையில் சௌந்தர்யலஹரி

அபாரமாய் வடித்த க்ருதி பஞ்சரத்னா

ஆனந்தம் தர அஷ்டகமும் புஜங்கமும்

ஆத்மார்த்தம் உரைக்க பஜகோவிந்தம்

அத்வைத தத்துவ மஹாதேவ ரூபா

ஆம்னாயம் நிறுவிய வேதாந்த சாரா

அழகழகு உன் வர்ணனைகள் சிறப்பு

ஆசி தந்தோம் விஜயீபவ சர்வக்ஞா!


-எஸ்.சந்திரசேகர்

வழி பிறக்கட்டும்!

சந்தைத் தெருவில் நேற்று மாலை ஓர் இளம் பெண் அவளுடைய மகனுடன் நடைபாதை கடைக்கு வந்தாள். அவள் நாலு வீட்டில் வேலை செய்து குடும்ப பாரத்தைச் சுமக்கிறாள் என்பது அவளுடைய பேச்சில் தெரிந்தது. மஞ்சள் கிழங்கு மற்றும் கரும்பு விற்கும் இடத்தில் நின்றாள்.

“அம்மா, அம்மா இதோ கரும்பு.. எனக்கு முழு கரும்பு வாங்கிகுடு” என்றான் ஐந்து வயது மகன்.
“அண்ணே! முழு கரும்பு, மஞ்சள் கொத்து தோரணம் எல்லாம் எவ்ளோ?” என்று கேட்டாள்.
“மஞ்சள் கிழங்கு இருபத்தஞ்சு, கரும்பு அறுவது, தோரணம் பதினஞ்சு, பழம் கிலோ அம்பது” என்று பதில் வந்தது.
“அம்மா, இந்த கரும்புதான் வேணும்” என்று அச்சிறுவன் தானே பெரிய கரும்பு ஒன்றைக் கட்டிலிருந்து தேர்ந்தெடுத்தான்.
“அது வெல அதிகம்டா. அம்மா கையில் அவ்ளோ காசு இல்ல. மத்த ஜாமான் வாங்கணுமில்ல... இப்போ ஒரு துண்டு வாங்கித்தறேன்” என்று அவன் கோபிக்காதவாறு எடுத்துச் சொன்னாள்.
“ம்ம்.. போ.. என்ன ஏமாத்தர.. இதுதான் வேணும்” என்று அடம்பிடிக்க ஆரம்பித்தான்.
“டேய், உன் அப்பனை வேலைக்கு யாரும் கூப்பிடல. சும்மாதான் குந்திகினு இருக்கு. அது வேலைக்குப்போய் காசு கொடுத்தா இதெல்லாம் வாங்கித் தருவேன். நான் வேலை செய்யற வூட்ல நாளைக்குத்தான் இனாம் தருவாங்க.. ரேஷன் கடையில் குடத்த கரும்ப முந்தாநேத்தே நீ தின்னுட்டே.. இன்னும் வேணுமா? இருமல் வரும்டா...” என்றாள்.
“எனக்கு தீவாளிக்கும் சொக்கா எடுக்கல இனிப்பும் வாங்கித்தறலே” என்று அழ ஆரம்பித்தான்.
“என் கண்ணு இல்ல... அவங்க வூட்ல எல்லாம் நாளைக்கு குடுக்குற கரும்பு உனக்குத்தான்” என்று இவள் கெஞ்சி சமாதானப் படுத்தினாள். அவன் மௌனமாகி முகத்தில் ஏமாற்றமும் கண்களில் நீரும் இருந்தன.
“கரும்பு அம்பது ரூவா போட்டு தரேன். வாங்கிக்கோ. அது கம்மியில்ல” என்றார் கரும்புக்காரர்.
“இல்லணா .. பத்து ரூபாய்க்கு ஒரு துண்டு தாங்க” என்று கேட்டு வாங்கினாள்.
“எம்மா... இஸ்கேல்ல விட இத்துனூண்டு இருக்கு. வேணாம் போ” என்று கோபத்தில் கைகால் உதறினான்.
இவனிடம் இனி கெஞ்ச முடியாது என்று நினைத்து அவன் முதுகில் ஒன்று வைத்தாள். அவன் கண்களில் நீர் தாரையாக வழிந்தது. தரதரவென இழுத்துக்கொண்டு கூட்டத்தில் மறைந்தாள். அவள் தன்மானமும் வைராக்கியமும் கொண்டவள் என்பது புரிந்தது.
‘கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை’ என்று ஔவையார் பாடியது என் நினைவுக்கு வந்தது. சிறு பிராயத்தில் குழந்தைகள் கொண்டாடி மகிழும் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் வழி இல்லையென்றால் என்ன சொல்வது? அந்த வடு அவனுடைய நினைவில் ஆழமாகப் பதிந்துவிடும். இறைவா, தை பிறந்தது, இனி வழி பிறக்கட்டும்! வாழ்க்கை ஏற்றம் பெறட்டும்!



Kindle மின்னூல்கள்

இந்தப் புத்தாண்டு தொடக்கத்தில் அமேசான் கிண்டில் தளத்தில் வெளியான என் மின்னூல்கள். கிண்டில் சந்தாதாரர்கள் வாசிக்கலாம். இவற்றை அச்சு நூலாக வெளியிடவில்லை.

ஒரு சிலை மூன்று கொலை (ASIN: B08RWDTQ2S)
கடவுச்சொல் (ASIN: B08SQRR5SB)
எதற்கும் அஞ்சேல்! (ASIN: B08SLCTX43)






தெய்வத்தை ஒதுக்கிப் பார்க்கணுமா?

இரு இரு... முதலில் ஆரிய கடவுள் திராவிட கடவுள் என்றாய் (எங்கள் கொள்ளுபாட்டன் தலைமுறை).. அப்புறம் சமஸ்கிருத கடவுள் தமிழ் கடவுள் என்று பிரித்தாய் (எங்கள் பாட்டன் தலைமுறை) ... அப்புறம் சிறுதெய்வம் பெருந்தெய்வம் என்று பிரித்தாய் ( எங்கள் அப்பா தலைமுறை).. அப்புறம் வடநாட்டு கடவுள் தென்னாட்டு கடவுள் என்று பிரித்தாய்.. வேத கடவுள் கிராம கடவுள் என்று பிரித்தாய்.. இப்படி எங்கள் தெய்வங்களை கூறுபோட்டு கூறுபோட்டு அவை வேறு தெய்வம் இவை வேறு தெய்வம் என்று குறுக்கிக் கொண்டே வந்தாய்.. கடைசியாக எஞ்சியது மாரியம்மன் கருப்பனார் எங்கள் குலதெய்வங்களும் முருகனும் தான்.. இவை சூத்திர தெய்வங்கள் என்று பார்ப்பனர் சாடியதாகச் சொன்னாய்.

இப்போது முருகனை ஒதுக்கு என்று கூறுகிறாய் கந்த சஷ்டி கவசத்தை விமர்சிக்கிறாய்.. குலதெய்வத்தை ஒதுக்கு மாரி முனி கருப்பனை ஒதுக்கு, என்றும், அவை பார்ப்பனர் பிடியில் உள்ளது என்றும் சில கம்யூனிஸ்ட் திராவிட விஷமிகள் பேசவும் புத்தகம் போடவும் ஆரம்பித்துவிட்டனர், இன்று அப்படிப்பட்ட ஒரு நூல் என் கைக்கு வந்தது (இது இந்த தலைமுறைக்கு).
நிற்க, வழக்கம்போல இவர்கள் வெளிநாட்டு (முதலாளிகளின்) தெய்வங்களை விமர்சிப்பது இல்லை. இவை தற்செயலாக நடப்பது போல தெரியவில்லை பல்வேறு தரப்பினர் ஆங்காங்கே பேசி வைத்துக்கொண்டு ஒருங்கே செயல்படுகிறார்கள். உஷார் மக்களே உஷார், இந்த கைக்கூலி கும்பல் எதெல்லாம் தவறு என்கிறதோ அவை எல்லாம் சரி, எவன் எல்லாம் கெட்டவன்கிறதோ அவனெல்லாம் தான் உத்தமன்.


அடையாளம் இழக்கும் போகர்!

சீனாவில் போகர் கூடுவிட்டுக்கூடு பாய்ந்து ஒரு முதியவர் உடலில் பிரவேசித்தார். திடீரென்று தத்துவம் பேசும் ஒரு முதியவர் வரவே அது யாரென குவாங்சு நகரத்தினர் அறியாததால் அவரை ‘மூதறிஞர்’ (Laotzu லாவோட்சு) என்று அழைத்தனர். உண்மையான பெயர் தெரியவில்லை. வேற்று தேகத்தோடு அவர் அங்கு இருந்ததை “பரங்கியர் தேசத்தில் பன்னீராயிரம் வருடங்கள் இருந்தேனே” என்று கூறியுள்ளார். தான் சீனப்பிரஜை என்றால் பரங்கியர் தேசம் என்று சொல்லியிருப்பாரா? தேகத்தால் சீனராக இருந்தாலும் உள்ளே இருப்பது நம் சிவசித்தர் தானே? ஆனால் கூடுவிட்டுக்கூடு பாய்ந்ததை அவர் எந்த நூலிலும் வெளிப்படுத்தியதில்லை.

சீன வரலாற்றுச் செய்திபடி லாவோட்சு பதிமூன்று பிறவிகள் எடுத்தார் என்றும், ஒவ்வொரு பிறவியும் சுமார் 900 முதல் 1000 வருடங்கள் வரை நீடித்ததாகச் சீன வரலாற்றுப் பக்கங்களில் படித்தேன். அப்படி என்றால் மேலே போகரின் கூற்று சரிதான்! அகத்தியர் வாக்கில் “பூமிதனில் கணநேரம் தங்கா பாலகா, பரங்கியர் தேசத்தில் (போயாங் என) பெயர்க்கொண்ட சித்து” என்று போகரைப் பாராட்டும்போது மேலேயுள்ள உண்மை வலுப்பெறுகின்றது.
தமிழிலும் சீனத்திலும் பல நெடிய நூல்களை இயற்றினார். நம் கழகத்து நூலாசிரியர்களைப் போலவே அந்த நாட்டிலும் சிலர் உள்ளனர். லாவோட்சுவின் படைப்பு எதுவும் அவருடையதே இல்லை, இங்குமங்கும் யாரோ எழுதியதை எல்லாம் கோர்வையாகச் சேகரித்துத் தொகுத்த ஒரு நூல்தான் அது என்போர் உண்டு. நம்முடைய கட்டுரையாளர்கள்/ சொற்பொழிவாளர்கள் / யூடியூப் காணொளிகள் எல்லாம் போகரைச் சீனர் எனச் சொல்லி வருவதுகூட தவறில்லை ஆனால் அவரை மயன் வம்ச விஸ்வகர்ம பொற்கொல்லர் என்று சொல்லாமல் குயவன், வண்ணான் என்று தத்தம் போக்கில் பரப்புரை செய்கின்றனர். அந்தச் சீன தேகத்து முதியவர் வேண்டுமானால் குயவராகவோ வண்ணாராகவோ வாழ்ந்திருக்கலாம்.
அவருடைய தாவோதிஜெங் என்ற சீன நூலிலுள்ள பாடல்கள் எல்லாமே தத்துவம் மதம் யோகம் சார்ந்தே உள்ளது. அதனூடே தற்காப்பு நெறிகளும் அடங்கும். பல பாடல்களில் வேதம்/உபநிடதம் கோடிட்டுக் காட்டும் துவைத்தம்/அத்வைத்தம் சான்றுகளும், கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்த கீதையும், அருணகிரி நாதருக்கு முருகன் உபதேசித்த மொழியும் சற்றும் மாறாமல் அப்படியே வந்து போகின்றன. தான் ஆதியில் முருகனாய் கிருஷ்ணனாய் வந்து போன அவதாரச் சுவடு இங்கே பாடல்களில் வெளிப்படுகிறது. ஆறாம் காண்டத்தில் போகர் தன்னுடைய குலத்தைப்பற்றிச் சொன்னாலும், யாரோ எங்கோ சொன்னதை இன்னும் நம் மக்கள் பரப்பிக்கொண்டு இருப்பார்கள்.
சிவசித்தர்களுக்குச் சாதியில்லை, அவர்கள் எல்லோரும் ஒரே குலம் ஒரே மொழி. அவர்களுடைய சாதிகளை அறிந்துகொண்டு என்ன செய்யப்போகிறோம் என்று தூய தமிழ் நேசர்கள் வரிந்து கட்டிக்கொண்டு விமர்சிப்பார்கள். ஒவ்வொரு சித்தருடைய பிறப்பு /சாதி/ தலைமுறை / சமாதி பற்றிப் பல பாடல்களில் உரைத்த போகருக்கு நம் கலிகால மக்களின் எண்ணங்கள் பற்றி எதுவும் தெரியாது பாருங்கள்!