விஸ்வகர்மா படைத்த ஐந்து அடிப்படை தொழில்கள் பற்றி இதற்கு முந்தைய பதிவுகளில் பார்த்தோம். இவர்கள் எல்லோருமே சமூக கட்டுமானம் மற்றும் வாழ்வாதாரம் காத்து தத்தம் பணிகளைச் செய்தனர். அப்படிப் பார்த்தால் இன்றுவரை இந்த ஐந்து பிரிவுகள் மட்டுமே இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் அப்படி இல்லாமல் எண்ணிலடங்காத அளவில் மற்ற ஜாதிகள், பிரிவுகள் உட்பிரிவுகள் இருக்கிறது. இதெல்லாம் காலப்போக்கில் எப்படி வந்தன?
ஒரு நண்பர் கீழ்கண்ட அருமையான கேள்வியைக் கேட்டிருந்தார் . அதன் சாரம் கீழே தந்துள்ளேன்.
கம்மாளர் மட்டும்தான் அடிப்படை என்றால் பிராமணர், ஷத்ரியர், வைசியர், சூத்திரர் பிரிவுகளும் அப்போதே வந்ததா? இன்று செட்டியார், கோனார், வன்னியர், முதலியார், நாடார், ரெட்டியார், பிள்ளை, வண்ணான், நாவிதர் என்று பல்வேறு ஜாதி அமைப்புகளும் அதில் உட்பிரிவுகளும் உள்ளதே, இவர்கள் எல்லோரும் எங்கிருந்து வந்தனர்? இவர்கள் எல்லோருக்குமே கோத்திரம் உண்டா? அப்படி என்றால் விஸ்வகர்ம மானசீக புத்திரர்களின் முகத்தில் வந்த ரிஷிதானே இவர்களுக்கும் மூலமாக இருக்கவேண்டும்? விஸ்வகர்மா தொழிலுக்கு துணைபோகும் இவர்கள் தங்களை ஏன் விஸ்வகர்மா குலம் என்று சொல்லிக் கொள்வது இல்லை?
அவர் கேட்ட கேள்விகள் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. இதைப் பற்றி பின்னொரு சமயம் அகண்ட பதிவாக நாம் பார்ப்பதற்கு முன், அதற்கான சில சுருக்கமான பதில்களைத் தந்துவிடுகிறேன். உங்களுக்கும் சஸ்பென்ஸ் விலகும்.
ஐந்தொழில்கள் படைக்கப்படும்போதே இவை எல்லாமே பிரம்மனிடமிருந்து படைக்கப்பட்டது. பஞ்ச முகங்கள் தோன்றும்போதே அதற்கான ரிஷிகளும் தோன்றினர். அந்தந்த ரிஷிகளின் வழியே பல பிரிவுகள் தோன்றி வாழ்வாதாரத்திற்கு உபகாரமாக இருந்தது. கல்வி, நெசவு, விவசாயம், உணவு, வைத்தியம், ஆருடம், நீதிநெறி, காவல், நிர்வாகம், பொதுசேவை, சமயத்தொண்டு, கலைகள், என்று எத்தனையோ ஜாதிகள் சமுதாயம் சார்ந்த பல வேலைகளைச் செய்து வந்தது. இவர்களுக்கும் ரிஷி கோத்திரம் உண்டு. தற்போது இதை யாரும் அவ்வளவாக தெரிந்துக் கொள்ளாததால் 'சிவ கோத்ரம்' 'விஷ்ணு கோத்ரம்' என்று மட்டும் சொல்லும் அளவுக்கு வந்துவிட்டது. 'கோத்ரம் என்றாலே பிராமணர்கள் சங்கதி' என்று காலப்போக்கில் இவர்களாகவே முடிவுசெய்து பழியை அவர்கள் தலையில் போட்டுவிட்டனர்.
காலபோக்கில் பல சாம்ராஜ்யங்களின் படையெடுப்பு மற்றும் விரிவாக்கம் ஆகும்போது மன்னர்கள் அதில் தேர்ந்தெடுத்த சில பிரிவுகளுக்கு சலுகையும் கூடுதல் பணிகளையும் தந்து கௌரவப் படுத்தினர். பின்னாளில் அந்த வம்சாவளியினர் தங்கள் மூதாதையர் குலத்தொழில் மறந்து புதிய பரிமாணத்தில் வாழ்ந்து வருகின்றவர்கள் உண்டு. அது அவர்களுக்கேகூட தெரியாது.
பஞ்சமுகத்திலிருந்து தோன்றிய ரிஷிகளின் வழியிலேயே ஏனைய மற்ற ஜாதிகளும் வருகிறது. அந்த ரிஷிகளில் சில பெயர்கள் 'சப்த ரிஷி' குழுவில் இடம்பெறுகிறது. யுகம்தோறும் ஒவ்வொரு மனு ( 1 மன்வந்திர =71 மகாயுகங்கள்= 71* 4 யுகங்கள்) சுழற்சி மாறும்போதும் இந்த சப்த ரிஷி அங்கத்தினர்கள் மாறுகிறார்கள் என்று புராணங்கள் சொல்கிறது. இதைப் பொருத்தே பல பிராமணர்களின் கோத்ரம் வருகிறது. விஸ்வகர்மா ஐந்து ரிஷி கோத்ரம் இவர்களுக்கு வருவதில்லை. உண்மையில் இந்த சப்தரிஷிகள் பிராமணர்கள் இல்லை. வேறு வர்ணத்தவர்கள்.. ஞான தவ தர்மநெறி வலிமையால் பிராமண அந்தஸ்து அடைந்தனர். பிராமணன் என்றால் பிரம்மத்தை உணர்ந்தவன் என்று சுருக்கமாகச் சொல்லலாம். காலமாற்றத்தில்ல் இவர்களிலும் பல உட்பிரிவுகள் வந்தன.
மாற்றத்தில் இந்த வம்சாவளி ஒரு சமூக பிரிவாகவே மாறிவிட்டது. அப்படித்தான் மற்ற ஜாதிப் பிரிவுகளும். அதனால் பிறப்பால்தான் வர்ணங்கள் வருவதான ஒரு மாயை நமக்கு வந்து நிலைத்து விடுகிறது!
ஆக, ஐந்தொழில் மற்றும் மற்ற பிரிவுகள், கோத்திரம் மற்றும் ரிஷி மூலம் பற்றி இப்போது ஓரளவுக்கு சுமாராகப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக