பூச்சிகளின் 'சேற்றுழவு' Mud puddling பற்றி நான் கேள்விப்பட்டதோடு சரி ஆனால் இதுவரை பார்த்ததில்லை. நேற்று பெய்த மழைக்குப்பிறகு இன்று வெயில் அடிக்கவே, என்றும் காணாத அளவில் பட்டாம்பூச்சிகள் தற்சமயம் பறந்து கொண்டிருகிறது. அதில் மஞ்சள், ஆரஞ்சு, பிரவுன், நீலம் கலந்த சிவப்பு என இன்னும் பல நிறங்கள் இருந்தன. வடகிழக்கிலிருந்து பட்டாளமாக மேற்கு தென்மேற்கு நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.
பூந்தொட்டியிலும், தெருவில் மண்தரையிலும் போய் அமர்ந்து எல்லாமே மிகவும் கண்ணும் கருத்துமாய் தங்கள் நீளமான Proboscis குழாய்கள் மூலம் எதையோ உறிஞ்சிக் கொண்டிருந்தது. நீர் குடிக்கிறதோ என்று நினைத்தேன், ஆனால் ஈரமான மண்ணின் மேல்புறம் படர்ந்திருந்த வெள்ளை உப்புக்களையும் மற்ற தாது நுண் சத்துக்களைகும் பொறுமையாக உறிஞ்சி விட்டு பறந்து போனது. இவற்றை உடலில் ஏற்றிக்கொண்டு தன் மரபின் சந்ததிகளுக்கு சத்துக்களை வழங்கிட ஓயாமல் பாடுபடுகிறது. அப்படியே சேற்றையும் பிரித்து உழுது விடுகிறது. ஓசையின்றி மௌனமாக ஒரு முக்கியப் பணியை செய்கிறது.
'கன பாடி' கொண்ட கட்சியின் கரைவேட்டிகள் ஊர் குளத்தை தூர்வாரி ஒரு பாண்ட் மண் அள்ளுவதற்குள் கேமிராக்களும், தொண்டர்களும் வந்து ஸ்டன்ட் காட்டுகிறார்கள். ஆனால், அரை கிராம் எடை கூட இல்லாத பட்டாம்பூச்சி எத்தனை பெரிய விஷயத்தை செய்கிறது. ஈசன் சிருஷ்டித்த எல்லாவற்றிலும் தன் சக்தியை வைத்துள்ளான். என்ன விந்தை, என்ன விந்தை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக