நேற்றைய பதிவில் திருவள்ளுவரைப்பற்றி பார்த்தோம். இன்று திரணாக்கிய முனிவர் பற்றி காண்போம். ஆமா, இவன் என்ன புதுசா சொல்லப் போறான்? என்று நீங்கள் நினைக்கலாம். சித்தர் போகர் உரைத்த பாடல்களின் வாயிலாக கண்டறியபட்டதை மட்டுமே இங்கே இடுகிறேன்.
போகர் எழாயிரத்தை தன் சீடர் புலிப்பாணிக்காக இயற்றினார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதில் ஒவ்வொரு சித்தரைப் பற்றி பல குறிப்புகள் தருகிறார். அவருக்காக உரைத்ததை நாமும் அறிந்து கொள்வோமே!
ஜமதக்னிக்கும் குறத்திக்கும் பிறந்த புத்திரனான திரணாக்கிய முனிவர் தமிழ்ச் சங்கத்தில் இடம் பெற்றவர். 'பிரதிலோமன்' என்றால் தந்தை உயர்குடி, தாய் தாழ் குலம். இவர் சமணம் தழுவியவர். (போகர் ஜாதி பற்றி சொன்னதற்காக என்னிடம் சண்டைக்கு வராதீர்!) அவருக்கு தலைமுறைகள் பதினேழு, அவர் வாழ்ந்த காலங்கள் தொள்ளாயிரத்து எண்பது ஆண்டுகள், அவ்வப்போது பல நூறாண்டுகள் சமாதியில் இருந்துவிட்டு வருவதுண்டு. அதுபோல் மொத்தம் இருபத்திரண்டு முறை சமாதியில் இருந்துவிட்டு வந்தார். அப்படிப் பார்த்தால் மொத்த காலங்கள் பல்லாயிரம் வருடங்களைத் தாண்டும்.
இவருடைய ஆத்மார்த்த சீடன்தான் சமால்தனி முனிவர். திரணாக்கியருக்கு பத்தாண்டுகளாக இருந்த தலைநோவை அகத்தியரிடம் சங்கப் புலவர்கள் எடுத்துக் கூற, அகத்தியர் தன் சீடர் பொன்னுரங்கனோடு (தேரையர்) சென்று தீர்த்து வைத்தார். திரணாக்கியரின் பேரன்தான் வரரிஷி. பின்னாளில் 'அகத்தியம்' என்ற இலக்கண நூலுக்கு அடுத்தபடியாக தொல்காப்பியம் இலக்கண நூலை தந்ததும் திரணாக்கியரே.
போகர் பாடலின்படி அவர் சமணத்திற்கு மாறும் வரை வேறு என்ன நூல்கள் எல்லாம் செய்தார் என்று இங்கே தெரியவில்லை. 'பிரபுலிங்க லீலை' என்ற நூலை இயற்றினார் என்று சொல்கிறார். ஆனால் நாம் கேள்விப்பட்ட வரை இது சிவபிரகாசர் இயற்றிய நூல். திரணாக்கியர் வேறு என்ன பெயர்களில் இயற்றினார் என்று போகரின் நூலில் அறியமுடியவில்லை.
இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், இவரை சமணர் என்று சொன்ன போகர், திருவள்ளுவரை அப்படிச் சொல்லவில்லை. வள்ளுவ குலம் என்று சொல்லியுள்ளார். திருக்குறளில் சைவ சமய சுவடு மறைப்பாக இருப்பதால் பிற்காலத்து ஆய்வாளர்கள் திருவள்ளுவரையும் சமணர் என்று முத்திரை அடித்து, இன்றுவரை அதையே ஏற்றுள்ளோம். ஆக, ஔவையார் போன்ற சித்தர்கள் ஆங்காங்கே சைவ சமய நூல்கள் பற்றி குறிப்புகள் தந்ததால் திருவள்ளுவர் சமணர் அல்ல என்று தெளிவடைந்தோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக