ஒவ்வொருவரும் ஆன்மிகத்தில் முன்னேற்றம் பெற முயற்சி செய்து, அதற்கான வழிகளை யார் சொன்னாலும், அது எங்கு கண்ணில் பட்டாலும் படித்து விடுவது இயல்பு. ஒரு விஷயம் சொல்கிறேன். எனக்குக் கிடைத்த அதே உணர்வும் இறை அனுபவமும் அப்படியேதான் உங்களுக்கும் நடக்க வேண்டும் என்றில்லை. திருமூலர் முதல் கடைக்கோடி சித்தர் வரை அந்த மார்க்கத்தைப் பற்றி ஆய்ந்து சொல்லியுள்ளார்கள். அது சித்தமரபு ஆகம நெறிகளை பின்பற்றி நடப்பவர்களுக்குப் பொருந்தும். ஆனால் நமக்கு அது அப்படியே நடக்காதபோது உடனே ஏமாந்து போய்விடக் கூடாது.
பால் காய்ச்சினால் அது பொங்கி வழிவது இயல்பு. ஆனால் சிலர் காய்ச்சும்போது அது பொங்கி ஒரு கட்டத்தில் ஏடுகட்டி நின்றுவிடும், வழியாது. சிலர் கரண்டி போட்டு கிண்டிக்கொண்டே இருக்க அது பொங்காது. சிலர் அதன் தலையில் தண்ணீர் தெளிக்க பொங்குவது அடங்கி கொதித்துக் கொண்டிருக்கும். சில சமயம் அடிபிடிக்கும். சல சமயம் அடி பிடிக்காது ஆனால் பாலில் பச்சிலை வாடை போன்று வரும். சில சமயம் காய்ச்சும்போதே 'டப்...டுப்' என்ற சப்தத்தோடு பால் உடையும். ஆக, பால் காய்ச்சும் விஷயத்திலேயே இத்தனை விதங்களும் முடிவுகளும் உள்ளதென்றால் சுயம்தேடலில் எத்தனைவித ஆய்வுகளும் முடிவுகளும் வெளிப்படும்! கணக்கே இல்லை. ஆனால் எல்லோர்க்கும் ஓர் அனுபவம் கிட்டியது. அது பொய் அல்ல.
பால் காய்ச்சுவதில் ஏன் இத்தனை அனுபவங்கள்? பாத்திரம் சன்னம்/கனம், சிறியது/பெரியது, பாத்திரம் மாசுபட்டது, தீயின் அளவு, கரண்டியின் தரம், தெளித்த நீரின் தன்மை, கால்நடை உண்ட தீவனத்தின் கலவை, கால்நடைக்கு போட்ட ஊசிமருந்தின் விளைவு, இப்படி எத்தனையோ விஷயத்த்தைச் சார்ந்தது. தீயில் கோளாறு என்று ஒருபோதும் குறை சொல்லமுடியாது. மற்றவை எல்லாமே பாண்டம் / பண்டம் மற்றும் அதன் சகவாச தொடர்பில் உள்ள பொருள்களின் தன்மைக்கு ஏற்ப அமைகிறது என்பதை அறிகிறோம்.
இப்படித்தான் நமக்குள் இறை உணர்வு வந்து வெளிப்படும் அனுபவங்கள் இருக்கும். சில சமயம் சித்தர் சொன்னபடி நீண்ட நெடிய பயிற்சியின்றி சுருக்க முடிவை எட்டிடலாம். இன்னும் சிலர் பல காலங்களாக முயன்றும் புருவ மத்தியில் ஜோதி காணாது 'டார்ச்' அடிச்சுதான் பார்க்கணுமோ என்று நகைச்சுவையாகப் பேசுவார்கள். ஒருவர் ஒரு தத்துவத்தைச் சொன்னால் அது நமக்கு புதிதுபோல் தென்படும், ஆனால் இல்லை. பால் காய்ச்சிய விதத்தை அறிந்து தக்கபடி செயல்படுவதுபோல் ஆன்மிக முன்னேற்றத்திலும் வெற்றி கொள்ளலாம். நாம்தான் பாண்டம், நம் மனதை சுத்தி செய்வதும் மாசுபடுத்துவதும் நம்மைச் சுற்றியுள்ள விஷயங்கள் என்பது புலப்படும்.
ஊரில் எங்கள் பாட்டிக்கு மைசூர்பாகு செய்ய வராது. கடைசிவரை அவர் அதன் நெளிவு சுழிவுகளைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டமலே போய்ச்சேர்ந்தார். கண்பார்வை தீர்க்கமாக இருந்தது என்றாலும், எப்போதும் அதிக முதிர்பதத்தில் சர்க்கரைப்பாகு காய்ச்சி தவறு செய்வார். "பாட்டி மைசூர்பாகு ஏன் கல்லு போல இருக்கு?' என்று கேட்பேன், "ரேசன்ல வாங்கின சர்க்கரையில ஏதோ கோளாறு போலிருக்குடா... அடுத்த வாட்டி மளிகைக் கடையில் போய் வாங்கணும்" என்று தன்மீது தவறில்லாததுபோல் பேசுவார். இதுவும் ஓர் அனுபவமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக