About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

செவ்வாய், 15 மே, 2018

சௌகார் ஜானகி : The legend

பழம்பெரும் நடிகைகளில் இவர் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்துபவர். 1949ல் 'ஷவ்காரு' என்ற தெலுங்கு படத்தில் என்.டி.ராமாராவுக்கு இணையாக முதலில் அறிமுகம் ஆனார். நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களைவிட அனுபவத்திலும் வயதிலும் பெரியவர். அவர் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் சாவித்திரி அவர்கள் வாய்ப்பு கேட்டு சென்னைக்கு வந்தார்.
சௌகார் அவர்கள் பள்ளிப்படிப்பைத் தாண்டாதவர் என்றாலும் வீட்டிற்கே ஆசிரியரை வரவைத்து கற்றுக்கொண்டவர். அவுர் பேசும் ஆங்கிலம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஓர் ஆங்கில இதழுக்காக அவரை பன்னிரண்டு ஆண்டுகளுக்குமுன் பேட்டி கண்டபோது பல விஷயங்களைப் பேசினார்.
"நீ பெரிய பெண்ணாகி விட்டாய் இனி உனக்கு திருமணம்தான்" என்று தன் தந்தை சொன்னாராம். வேண்டாவெறுப்பாக ஏற்றுக்கொண்டு 1947ல் திருமணம் நடந்தது. அவருடைய கணவர் ரேடியோ மெக்கேனிக். பெரிய சம்பாத்தியம் என்று ஏதுமில்லை. அப்போது இவர் வானொலியில் A grade artiste ஆக இருந்தேன் என்றார். அதன் பிற்பாடு ஒலிச்சித்திரம் மூலம் பிரபலமாகி, அவருடைய dialogue delivery அருமையாய் இருக்கவே, விஜயா புரோடக்ஷன்ஸ் இவரை 'ஷவ்காரு' படத்திற்கு ஒப்பந்தம் செய்து அது வெற்றிகண்டது.
Image may contain: 2 people, closeup
அவருக்குப் பிற்பாடு வந்த சாவித்திரி நீர் குமிழிபோல் வந்து காணாது போய்விட்டார். ஆனால் சௌகார் ஜானகி அவர்கள் 65 ஆண்டுகளாக இன்னும் நடித்து வருகிறார்கள். எல்லா முன்னணி கதாநாயகர்களோடு நடித்து விட்டார். உரையாடலில் அவர் சொன்ன சில விஷயங்கள்:
1. பெண்ணுக்கு சுதந்திரம் வேண்டியதுதான் ஆனால் அது கல்வி மற்றும் முன்னேற்றத்தில் மட்டும் இருக்கவேண்டும். மண வாழ்க்கை, உடை, சகவாச பழக்கம் எல்லாமே நம் போக்கில் போகக் கூடாது. அதை அவர்களிடமே விட்டுவிட வேண்டும். இள வயதில் இவை நமக்குப் பிடிக்காதுதான். ஆனால் அதுதான் பாதுகாப்பு. பெரியவர்கள் பேச்சைக் கேட்க வேண்டும். பிறகு விதிவிட்ட வழி.
2. சம்பாதிப்பது பெரிதல்ல, அதை எப்படி பயன்படுத்தி, முதலீடு செய்து, எதிர்காலத்திற்கு பாதுகாப்பாக வைக்கிறோம் என்பது முக்கியம்.
3. நடிப்பு மட்டுமே எனக்குத் தெரியும். அதனால் அதை மட்டும் செய்வேன். தயாரிப்பாளர் ஆவதோ, படம் எடுப்பதோ, இயக்குனர் ஆவதோ இதெல்லாம் ஒரு நடிகை சிந்திக்கக் கூடாது. தனக்கு என்ன தெரியுமோ அதில் ஸ்திரமாக இருக்கவேண்டும். எனக்கு வசனம் பேச/ நடிக்க வரும், சமைக்க வரும், தோட்டக்கலை பிடிக்கும். அதைத்தாண்டி என் நேரத்தையும் பணத்தையும் சினிமாவில் போட விரும்பமாட்டேன்.
4. சினிமாத்துறையில் கத்திமீது நடப்பதுபோல் போக வேண்டும். நம் மனோபலம் முக்கியம்.
5. நம்மைச் சுற்றி இருப்போரை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அவர் பட்டுத்தெரிந்து கொண்டதை நாமும் பாடமாக ஏற்க வேண்டும். பேராசை படாமல், அளவான உயர்வு நோக்கி Measured stepsல் வாழ்க்கை பயணித்தால் போதும். வெற்றி தானே வரும்.
6. Discipline தேவை. நல்ல பழக்கங்கள், உணவு கட்டுப்பாடு, உடல் ஆரோக்கியம் பேணவேண்டும். நம்மை நம்பி ஒரு குடும்பம் உள்ளதை மறக்கக் கூடாது.
7. கண்ணில் பட்ட எல்லாவற்றுக்கும் ஆசைப்படக் கூடாது. அது உண்மையல்ல என்பதை நம் ஆழ்மனம் நமக்கு உணர்த்தும், நாம் செவி மடுத்துக் கேட்க வேண்டும். Wavering mind is bad.
8. வீட்டில் சமைத்தபின் சாப்பாட்டை ஸ்டுடியோவிற்கு கேரியரில் கொண்டுவருவேன். கைக்குழந்தையோடு வருவேன். இப்படியெல்லாம் எதிர்நீச்சல் போட்டு இன்று கொள்ளுப்பாட்டியாக நான் வளர்ந்துள்ளேன்.
9.படவாய்ப்பு குறைந்தபோது கிடைத்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டேன். கவுஹாத்தி பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றேன். Arizona State University யில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றேன்.
10. அமெரிக்காவில் என் பிள்ளை வீட்டில் இருந்தபோது பொழுது போகவில்லை என்பதால் அருகே ஒரு உணவகத்தில் Indian cuisines சமைக்கப் போனேன். நான் நடிகை என்பது அங்கு தெரியாமல் இருந்தது. ஆனால் நம்மூர் ஆசாமி யாரோ என்னைப் பார்த்துவிட்டு, "சௌவ்காரின் பரிதாப நிலை. ஓட்டலில் வேலைசெய்து பிழைப்பு நடத்துகிறார்" என்று தமிழ் பத்தரிகையில் வதந்தி பரப்பிவிட, 'ஐயோ பாவம், அவ்ளோ சம்பாதிச்சதை என்ன செய்தாளோ?" என்று விமர்சனம் வரும் அளவுக்கு மக்கள் மனதை அது மாற்றிவிடுகிறது. Rumour mill is grinding fiction என்றார்.
11. சென்னையில் Cenotaph Roadல் இருந்த மிகப்பெரிய வீட்டை இனியும் என்னால் பராமரிக்க முடியாது என்பதால் விற்றுவிட்டேன். எல்லாவித பூஞ்செடிகளும் தோட்டத்தில் போட்டிருந்தேன்' என்றார். முத்தாய்ப்பாக, Enjoy a peaceful life என்றார். தற்போது பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார் என்று அறிகிறேன்.

என்ன நண்பர்களே! இந்த 87 வயது இளம்பெண் பேசியதைக் கேட்கும்போது நமக்கே தன்னம்பிக்கையும் உத்வேகமும் வருகிறது அல்லவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக