என் கண்ணோட்டத்தில் சீக்கிய மதம் நிறைய நல்ல நெறிமுறைகளைக் கொண்டுள்ளது. ஏன், இந்து மதத்தில் என்ன இல்லை, அதில் இல்லாதவையா? என்று உங்கள் மனம் இக்கணம் என்னைக் கேட்க நினைக்கும். உண்மை நம் மதத்தில் எல்லாமே வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் அனுதினமும் செயல் முறையில் இவை எல்லாவற்றையும் நாம் கடைப்பிடிப்பதில்லை என்பதை ஷண்மதம் போற்றும் நான் ஒப்புக்கொள்ள வேண்டும்.
நான் படித்த பள்ளி மற்றும் கல்லூரி அந்த சீக்கிய மத சூழலில் இருந்ததால் இதெல்லாம் எனக்குப் பிடித்தது என்று சொல்லவும் முடியாது. உண்மையிலேயே, சகோதரத்துவமும், பரோபகாரமும் இம்மதத்தினரிடம் நான் கண்டேன். மனதால் வாக்கால் உடலால் இவர்கள் தீமைசெய்ய முன்வர மாட்டார்கள். அதைத்தாண்டி செய்தால் அது விதி, வினைப்பயனே.
அனைத்து குருத்வாரா கோயில்களிலும் காலணிகள் கழட்டி அதற்கென இடத்தில் வைத்துவிட்டு, கால்களை நீரில் கழுவியபின், தலையில் கைக்குட்டையோ/துணியோ பக்தி/மரியாதை வெளிப்படுத்தும் விதமாக போட்டு மறைத்துக்கொண்டு ‘குரு க்ரந்த சாஹிப்’ நூல் வைத்துள்ள மைய மண்டபத்தில் வழிபடுவார்கள். 'ஜப்ஜி' - நாமஜெபம் செய்தபின் 'லங்கர்' என்ற பொது உணவுக்கூடத்திற்கு வருவார்கள்.
அங்கே தட்டை எடுத்துக்கொண்டு வந்து தரையில் வரிசையில் அமர்ந்து கொள்ள, சப்பாத்தி/ரொட்டி-தால், சோறு-லஸ்ஸி பரிமாறப்படும். சப்பாத்தியை மட்டும் நாம் கைநீட்டி வாங்கிக்கொள்ள வேண்டும். ஏன்? கூடையிலிருந்து அதை எடுத்துக் கொடுப்பவரின் முகத்தை உண்பவர் காணவேண்டும். வயிறு குளிர உணவிட்டவரை மானசீக நன்றியுடன் பார்க்கத்தான் இந்த முறை. இங்கே தள்ளுமுள்ளு இல்லை, மோதல் இல்லை. அமைதியாக நடக்கும். யாரும் இங்கே உணவை வீணாக்குவதில்லை (கூடாது) என்பார்கள். அதனால் வேண்டியதை மட்டும் பெற்றுக்கொள்ளலாம். உண்டபின் தட்டுகளை பொது இடத்தில் சுத்தம்செய்யப் போடுவார்கள்.
நம்மூர் கோயில்களில் இலையில் அன்னத்தை உருட்டித் தள்ளிக்கொண்டு போவார்கள். அது கொஞ்சம் வெளியே உருண்டுபோய் அடுத்த இலையிலும் விழும். அதற்கு தொன்னை பிரசாதம் எவ்வளவோ மேல்!
சீக்கியனாகப் பட்டவன் ஐந்து அனுஷ்டானங்களைப் பின்பற்றவேண்டும். அவை: கச்சா (பருத்தி உள்ளாடை), கேஷ் (வெட்டாத கேசம்), கர்ரா (சீப்பு), கங்கா (கங்கணம்), கிர்பான் (பாதுகாப்பு கத்தி). இன்று எல்லோரும் கத்தி வைத்துக்கொள்ள முடியாது. சில சீக்கிய மதகுருமார்கள் இதை வைத்திருப்பதை நாம் பார்த்துள்ளோம். சீக்கியர்கள் கடும் உழைப்பாளிகள். அவர்கள் சமூகத்தில் பிச்சைக்காரர்கள் யாருமில்லை. தினமும் உணவு வழங்கப்படுவதால் ‘உணவுக்காக யாசிக்கிறேன்’ என்று யாரும் சொல்லமுடியாது. யார் வேண்டுமானாலும் வந்து உணவருந்தலாம். சாதி, மதம், இனம், மொழி, அந்தஸ்து, என்று ஏதுமில்லை. இங்கே சிறப்பு தரிசன சீட்டோ, முக்கியஸ்த பக்தர்கள் என்றோ எதுமில்லை. அனைவரும் சமம்! நீங்களும் ஒருமுறை போய்வாருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக